123.
தோழி கூற்று
பாடியவர்: ஐயூர் முடவனார். இவர் ஐயூர் என்னும்
ஊரினர். இவர் முடவராக இருந்தார் என்பது, தாமான் தோன்றிக்கோனைச் சென்றடைந்து, வண்டியை
இழுத்துச் செல்வதற்குக் காளைமாடுகள் வேண்டும் என்று இவர் பாடிய பாடலிலிருந்து
(புறநானூறு - 399) தெரியவருகிறது. இவர் ஆதன் எழினியையும், சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், பாண்டியன்
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் பாடியுள்ளார். இவர் அகநானூற்றில் ஒருசெய்யுளும் (216),
குறுந்தொகையில் மூன்று செய்யுட்களும் (123, 206, 322), நற்றிணையில் இரண்டு செய்யுள்களும் (206, 344) இயற்றியுள்ளார். இவர் பாடல்கள் அனைத்தும் மிகுந்த இலக்கிய
நயமுடையவை.
திணை: நெய்தல்.
திணை: நெய்தல்.
கூற்று: பகற்குறியிடத்து
வந்த தலைமகனைக் காணாத தோழி அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து தலைமகட்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும்
தலைவியும் கடற்கரைச் சோலையில் சந்தித்து மகிழ்வது வழக்கம். ஒருநாள் தலைவனைக் காணத் தலைவியும் தோழியும் வருகிறார்கள். தலைவன் மறைவான இடத்தில் இருக்கிறான், முதலில்,
அவன் வரவில்லை என்று தோழி நினைக்கிறாள். பின்னர்,
அவன் வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்கிறாள். அவன் கேட்கவேண்டும் என்பதற்காக, “ தலைவர் வருவதற்குக்
காலம் தாழ்த்தினால், மீன் பிடிக்கச் சென்ற நமது தமையன்மார் வந்துவிடுவார்கள்.
ஆகவே, நாம் இன்று தலைவரைப் பார்க்க முடியாது போலிருக்கிறதே!”
என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.
இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.
கொண்டு
கூட்டு:
நிலவுக்
குவித்தன்ன வெண்மணல் ஒருசிறை, இருள் திணிந்தன்ன
ஈர்ந்தண் கொழுநிழல் கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில்
புலம்ப இன்னும் வாரார்.
பன்மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே வரூஉம் .
பன்மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே வரூஉம் .
அருஞ்சொற்பொருள்: திணிதல் = செறிதல்; ஈர் = ஈரம்; தண் = குளிர்ச்சி; கொழு
= செழித்த; சிறை = பக்கம்;
கோடு = கிளை; புலம்பு
= தனிமை; பன்மீன் = பலவகையான
மீன்கள்; ஐயர் = தமையன்மார்; திமில் = மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் படகு.
உரை: நிலவை
எல்லாம் ஒன்றாகக் குவித்து வைத்ததைப் போல் உள்ள வெண்மணல் பரப்பின் ஒரு பக்கத்தில், இருள் செறிந்த ஈரமும் குளிர்ச்சியும் உள்ள கொழுமையான நிழலையுடைய, கரிய கிளைகளோடு கூடிய புன்னைமரங்கள் அடர்ந்த பூஞ்சோலையில் நாம் தனித்திருக்க,
தலைவர் இன்னும் வரவில்லை. பலவகையான மீன்களை வேட்டையாடச்
சென்ற நமது தமையன்மாரின் படகுகள் விரைவில் திரும்பி வந்துவிடும் போலிருக்கிறது.
சிறப்புக்
குறிப்பு:
தமையன்மார்
வந்தால் தலைவனும் தலைவியும் அந்தப் பூஞ்சோலையில் சந்திக்க முடியாது என்பது குறிப்பு.
No comments:
Post a Comment