126.
தலைவி கூற்று
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரது இயற்பெயர்
மாசாத்தியார். இவர் ஒக்கூர் என்னும் ஊரைச்
சார்ந்தவராதலால் ஒக்கூர் மாசாத்தியார் என்று அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில்
இயற்றிய ஒருபாடல் (279)
மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு பாடல்களையும்
( 324, 384), குறுந்தொகையில் ஐந்து பாடல்களையும் (126,
139, 186, 220, 275) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
திணை: முல்லை.
கூற்று: பருவங்கண்டு
அழிந்த
(வருந்திய) தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: கார்காலத்தில்
திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன், கார்காலம் வந்த பிறகும் வரவில்லை. அவன் வராததால்,
தலைவி வருந்துகிறாள். தலைவனின் பிரிவினால் வருந்தும்
தலைவி, தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.
கொண்டு
கூட்டு:
தோழி! இளமை பாரார் வளநசைஇச் சென்றோர் இவணும் வாரார். எவணரோ எனப் பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கு எயிறாக நறுந்தண் கார் நகுமே.
அருஞ்சொற்பொருள்: வளம் = செல்வம்; நசை = விருப்பம்;
இவண் = இங்கு; எவண்
= எங்கு; பெயல் = மழை; புறந்தந்த
= (பாதுகாத்த) வளர்த்த; தொகுமுகை
= வரிசையாகத் தொகுக்கப்பட்டுள்ள
மொட்டுக்கள்; இலங்குதல் = விளங்குதல்;
எயிறு = பல்; நறுமை
= மணம்; தண் = குளிர்ச்சி;
கார் = கார்காலம்.
உரை: இளமையின்
அருமையை எண்ணிப் பார்க்காமல், பொருள்மீது ஆசைப்பட்டுத் தலைவர்
என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் இன்னும் இங்கு வரவில்லை.
மழையினால் நன்கு வளர்ந்த முல்லைக் கொடியின் வரிசையாகத் தொகுக்கப்பட்ட அரும்புகளைத் தன் ஓளியுடன் விளங்கும் பற்களாகக்
கொண்டு, நறுமணம் மிக்க குளிர்ந்த கார்காலம், “அவர் எங்கு இருக்கிறாரோ?” என்று கேட்டு என்னைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது.
சிறப்புக் குறிப்பு: அணி
என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். உள்ளதை உள்ளவாறு கூறாமல்
அதைச் சற்று அழகுபடுத்திக் கூறுவது இலக்கணத்தில் அணி என்று அழைக்கப்படுகிறது.
இவ்வணி பலவகைப்படும்.
பண்பு , தொழில், பயன், உரு என்ற நான்றால்
ஒருபொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவதற்கு “உவமையணி”
என்று பெயர். ”பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கையான்”
என்று கம்பன் இராமனுடைய உடம்பைப் பொன்னுக்கும் கையைப் புயலுக்கும் ஒப்பிட்டுப்
பாடுவது உவமை அணிக்கு எடுத்துக் காட்டு.
உருவக அணி என்று
ஒரு அணியும் உள்ளது.
உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடின்றி உவமையையேப் பொருளாகக் கூறுவது
உருவக அணி. ”துன்பக் கடலகத்து அழுந்த வேண்டா” (சீவகசிந்தாமணி, விமலையாரிலம்பகம் -21) என்று துன்பத்தையே கடலாகப் புலவர்
உருவகப்படுத்திக் கூறியிருப்பது உருவக அணிக்கு எடுத்துக்காட்டு.
ஒருசெய்யுளில்
புலவர் ஒருபொருளை உருவகம் செய்துவிட்டு, அதற்குத் தொடர்புடைய
மற்றப் பொருட்களை அதற்கேற்ப உருவகம் செய்யாமல் விட்டுவிட்டால் அதற்கு “ஏகதேச உருவக அணி” என்று பெயர்.
பெருமைக்கும்
ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே
கட்டளைக் கல்.
( திருக்குறள் – 505, தெரிந்து தெளிதல்)
என்ற குறளில்
கருமத்தைக் கட்டளைக் கல்லாக உருவகம் செய்த புலவர் பெருமையையும் சிறுமையையும் பொன்னாகவோ
பிற பொருளாகவோ உருவகம் செய்யாமல் விட்டுவிட்டார். இது ஏகதேச உருவக
அணிக்கு எடுத்துக்காட்டு.
இப்பாடலில், “முல்லைத் தொகுமுகை இலங்கெயிறு ஆக நகுமே தோழி நறுந்தண் காரே.” என்பதில் முல்லைப் பூக்களின்
மொட்டுக்களைப் பெண்ணின் பற்களாக உருவகம் செய்த புலவர் கார்காலத்தை ஒருபெண்ணாக உருவகம்
செய்யாமல் விட்டுவிட்டதால், இது எகதேச உருவக அணி ஆகும்.
No comments:
Post a Comment