113. தோழி கூற்று
பாடியவர்: மாதீர்த்தனார். இப்பெயர் மாதீர்த்தன் என்றும் மாதீரத்தன் என்றும் சில பிரதிகளில் காணப்படுகிறது. இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: பகற்குறி
நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினாற் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.
கூற்று விளக்கம்: ஒரு
குறிப்பிட்ட இடத்தில் தலைவனும் தலைவியும் பகலில் சந்திப்பது வழக்கம். என்ன காரணத்திற்காகவோ, “காட்டற்றங்கரையில் உள்ள சோலை ஒன்றில் இனிமேல் தலைவியைச் சந்திக்கலாம்.“,
என்று அவர்கள் சந்திப்பதற்கு வேரொரு இடத்தைத் தோழி தலைவனிடம் குறிப்பிடுகிறாள்.
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.
கொண்டுகூட்டு: பொய்கை
ஊர்க்கும் அணித்து; சிறுகான் ஆறு பொய்கைக்குச்
சேய்த்தும் அன்று; பொழிலே இரைதேர் வெண்குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்று. யாம் எம் கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்; பெரும்பேதை
ஆண்டும் வருகுவள்.
சேய்த்தும் அன்று; பொழிலே இரைதேர் வெண்குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்று. யாம் எம் கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்; பெரும்பேதை
ஆண்டும் வருகுவள்.
அருஞ்சொற்பொருள்: அணித்து = அருகில் உள்ளது; பொய்கை = நீர்நிலை
(குளம்) ; சேய்த்து = தூரத்தில்
உள்ளது; கான் = காடு; குருகு = நாரை; துன்னல்
= நெருங்குதல்; பொழில் = சோலை; கூழை = கூந்தல்; எருமண் (கூந்தலில் அழுக்கு, எண்ணெய்ப்பசை
ஆகியவற்றை நீக்குவதற்குப் பெண்கள் பயன்படுத்தும் ஆற்றங்கரையில் உள்ள வண்டல் போன்ற கருமண்);
கொணர்தல் = கொண்டுவருதல்; சேறும் = செல்வோம்; ஆண்டு
= அங்கே; பேதை = பெண்
( தலைவி).
உரை: தலைவ! ஊருக்கு அருகே ஒரு பொய்கை உள்ளது.
அதற்கு அருகில் ஒரு சிறிய காட்டாறு உள்ளது. அங்கு
ஒரு சோலை உள்ளது. அப்பொய்கையிலும் ஆற்றிலும் உணவைத்
தேடுகின்ற, வெண்மையான நாரைகளை அன்றி, வேறு
எவ்வுயிரும், அந்தச் சோலைக்கு அருகில் வராது. நாங்கள் எமது கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு, எருமண்ணைக் கொண்டுவருவதற்காக அங்கேசெல்வேம்;
பெரிய பேதைமையையுடைய தலைவி, அங்கும் வருவாள்.
சிறப்புக்
குறிப்பு:
தலைவனும்
தலைவியும் சந்திக்கும் இடம் பாதுகாவல் இல்லாத இடமாக இருந்ததால், யாரும் வராத, பாதுகாவலான ஒரு இடத்தைத் தோழி குறிப்பிடுவதாகத்
தோன்றுகிறது.
No comments:
Post a Comment