Monday, December 7, 2015

114. தோழி கூற்று

114. தோழி கூற்று

பாடியவர்: பொன்னாகனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: இடத்துய்த்து நீங்குந் தோழி தலைமகற்குக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள்.

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.

 கொண்டுகூட்டு: இயல்தேர்க் கொண்க நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென்.  அல்கலும் ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.
செல்கம் ,செலவியங் கொண்மோ!

அருஞ்சொற்பொருள்: பாவை = கோரை, பஞ்சு, பூந்த்தாது முதலியவற்றால் செய்த பதுமை (பொம்மை); குறி = குறிப்பிட்ட இடம்; இயலுதல் =  (நன்கு) செய்யப்படுதல்; கொண்கன் = நெய்தல் நிலத்தலைவன்; செல்கம் = செல்வோம்; செலவியங் கொண்மோ = செல்ல விடுவாயாக; அல்கல் = இராக்காலம்; ஆரல் = ஆரல் மீன்; நுதல் = நெற்றி.

உரை: நன்கு செய்யப்பட்ட தேரை உடைய நெய்தல் நிலத்தலைவ!  நெய்தல் நிலப்பரப்பில், எனது பாவையைப் படுக்கவைத்துவிட்டு, நீ இருக்குமிடத்து வந்தேன்.  இரவு வந்தவுடன்  ஆரல் மீனை உண்டதால், நிறைந்த வயிற்றை உடைய நாரைகள், என் மகளாகிய அப்பாவையின் நெற்றியை மிதிக்கும். ஆதலின், நான் அங்கே போகின்றேன்; தலைவியைச் சந்தித்து அளவளாவிய  பிறகு அவளை அங்கே போகும்படி நீ அனுப்பிவைப்பாயாக!


சிறப்புக் குறிப்பு: இளம்பெண்கள் சிறிய வீடுகட்டி, உணவு சமைத்து, பிள்ளைபெற்று, இல்லறம் நடத்துவதாகக் கற்பனை செய்து விளயாடுவது வழக்கம். இவ்விளையாட்டில், சிறுபெண்கள், பாவையைத் தங்கள் மகளாகக் கற்பனை செய்துகொள்வார்கள்

No comments:

Post a Comment