Monday, December 7, 2015

117. தோழி கூற்று

117. தோழி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 50 –இல் காணலாம். திணை: நெய்தல்.
கூற்று: வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில்  ஈடுபட்டிருந்தனர். களவொழுக்கம் தொடர்வதால், ஊரில் அலர் தோன்றியது. ஆனால், அதைக் கண்டு தலைவன் வருந்தவில்லை. அவன் அஞ்சவும் இல்லை. சில நாட்களாக அவன் தலைவியைக் காணவரவில்லை. பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி தன் வருத்தத்தை தோழியிடம் கூறுகிறாள். தலைவி தன் வருத்தத்தைக் கூறும்பொழுது, தலைவன் அவளைக் காணவந்து, ஒருமறைவிடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். அவன் வரவை அறிந்த தோழி, அவன் காதுகளில் கேட்குமாறு, தலைவிக்கு ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே. 

கொண்டுகூட்டு: மாரி ஆம்பல் அன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டுகண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் கயிறு அரி எருத்திற் கதழும் துறைவன் வாராதமையினும் அமைகவிலைஞர் கைவளையே சிறியவும் ஈண்டு உள.

அருஞ்சொற்பொருள்: மாரிமழைக் காலம்; ஆம்பல் = அல்லி மலர்; பார்வல் = பார்த்தல்; பருவரல் = துன்பம்; ஈர் = ஈரமான; ஞெண்டு = நண்டு; கண்டல் = தாழை; அளை = வளை; செலீயர் = செல்வதற்காக; அண்டர் = இடையர்; அரிதல் = அறுத்தல்; எருத்து = எருது; கதழுதல் = விரைதல்; துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்; விலைஞர் = விற்பவர் ; ஈண்டு = இங்கே.

உரை: தோழி! மழைக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தை உடைய கொக்கின் பார்வைக்கு அஞ்சிய, துன்பத்தையுடைய, ஈரமான நண்டு, தாழை வேரில் உள்ள வளைக்குள் செல்லுவதற்காக, இடையர் கட்டிய கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல, விரைந்து செல்லும் இடமாகிய கடற்கரை நிலத்தின் தலைவன், இங்கே வாராமல் இருந்தாலும் இருக்கட்டும். இங்கே, வளையல் விற்பவர்களிடம் சிறிய அளவுள்ள வளையல்களும் உள்ளன.
     

சிறப்புக் குறிப்பு: தலைவன்  வராததால் உன் உடல் மெலிந்தால் நீ முன்பு அணிந்த வளையல்கள் உனக்குப் பொருந்தா. ஆனால், அந்நிலையிலும், உன் மெலிவு பிறருக்குத் தெரியாமல் இருப்பதற்காக, உன் மெலிந்த கைகளுக்கு ஏற்ற சிறிய வளையல்களும் வளையல் விற்பவர்களிடம் உள்ளன.” என்பது திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் விரைவில்  செய்வான் என்ற நோக்கத்தோடு தோழி கூறியதாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment