9. நெய்தல் - தோழி கூற்று
பாடியவர்: கயமனார். கயம் என்ற சொல்லுக்குப் பெருமை என்று
ஒருபொருள். ஆகவே, கயமனார்
என்பது பெரியவர் என்பதைக் குறிக்கும்.
இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடல் (254) மட்டுமல்லாமல்,
அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்களும் (7, 17, 145, 189, 195,
219, 221, 259, 275, 321, 383, 397), குறுந்தொகையில் நான்கு
பாடல்களும் (9
356, 378, 396), நற்றிணையில் ஆறு பாடல்களும் (12, 198, 279, 293, 305, 324) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: பரத்தையிடமிருந்து திரும்பி வந்த தலைவன், தலைவி அவன்
மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்து, தோழியைத் தனக்காகத் தலைவியிடம்
தூது போகச் சொல்கிறான். அதற்குத் தோழி, “நீ தலைவியைப் பிரிந்து, பரத்தையோடு இருந்து அவளுக்குப்
பல கொடுமைகளைச் செய்தாலும், நீ செய்த குற்றங்களுக்காக அவள் வெட்கப்பட்டு,
அவற்றை யாரிடமும் சொல்லாமல் மறைத்துக்கொண்டு, உன்மீது
அன்போடுதான் இருக்கிறாள்.” என்று கூறுகிறாள்.
யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.
அருஞ்சொற்பொருள்: யாய் = தாய்
(இங்கு தலைவியைக் குறிக்கிறது.); மாயோள்
= கருநிறமானவள்; மடை = பூண்;
மாண் = மாட்சிமை (அழகு);
செப்பு = ஒரு வகைப் பாத்திரம் (பெட்டி); தமி = தனிமை; வைகுதல் = இருத்தல் (வைத்தல்);
பெய்தல் = இடுதல்; சாய்தல்
= மெலிதல்; பாசு =பசுமை;
அடை = இலை ; நிவந்த
= உயர்ந்த; கணை = திரண்ட
வடிவு ; நெய்தல் = நெய்தல் மலர்;
இனம் = கூட்டம்; இரு
= கரிய; ஓதம் = வெள்ளம்
(நீர்ப்பெருக்கம்); மல்குதல் = பெருகுதல்; கயம் = குளம்
; மானுதல் = ஒத்தல்; துறைவன்
= நீர்த்துறைத் தலைவன்( நெய்தல் நிலத் தலைவன்);
கரத்தல் = மறைத்தல்; ஆடுதல்
= சொல்லுதல்.
உரை: தலைவி
கருநிறமானவள்; நற்பண்புகள் உடையவள். பூட்டப்பட்ட அழகான பெட்டியில் வைத்து அடைக்கப்பட்ட,
சூடப்படாத பூக்களைப் போலத் தனியளாக இருந்து அவள் இப்பொழுது உடல் மெலிந்தாள். கூட்டமாகிய
மீன்களை உடைய கரிய கழியின்கண் வெள்ளம் அதிகரிக்குந்தோறும், பசுமையான இலைகளுக்கு மேலே உயர்ந்து தோன்றும் திரண்ட காம்பை உடைய நெய்தற் பூக்கள், குளத்தில்
முழுகும் மகளிரது கண்களைப் போல் காட்சி அளிக்கின்றன. அத்தகைய குளிர்ந்த நீர்த்துறையை
உடைய தலைவனது கொடுமையை,
நம் முன்னே சொல்லுதற்கு நாணமுற்றுத் தலைவி மறைக்கிறாள்.
விளக்கம்: குளத்தில் குளிக்கும் பெண்களின் கண்களுக்கு நெய்தற் பூக்கள் உவமையாகவும்,
தலைவியின் மெலிந்த உடலுக்குப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டுத் தலையில்
சூடாமல் வாடிய பூ உவமையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பாடலில், முதற்
பொருளாக கடற்கரையும், கருப்பொருள்களாக நெய்தல் மலர்கள்,
மீன்கள் ஆகியவையும், உரிப்பொருளாகத் தலைவனின் பிரிவால்
வாடும் தலைவியும் குறிப்பிடப்பட்டிருப்பதால்,
இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
நான் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார். உங்கள் உரை மிக விரிவாகவும், ஆழமானதாகவும் உள்ளது.
ReplyDeleteஎனக்கு ஐயம் ஏற்படும்போது உங்கள் உரை மட்டுமே படிப்பேன். பாடலுக்கு ஏற்ப சரியான விளக்க உரை. நன்றி