26.
குறிஞ்சி - தோழி கூற்று
பாடியவர்: கொல்லனழிசி. இவர் அழிசி என்னும் ஊரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவர் குறுந்தொகையில் நான்கு பாடல்களை (26, 138, 145, 240) இயற்றியுள்ளார். ஆனால், குறுந்தொகையில்
உள்ள 26 – ஆம் பாடலை இவர் இயற்றவில்லை என்று கூறுவோரும் உளர்.
பாடலின்
பின்னணி:
தலைவியும்
தலைவனும் சந்தித்தார்கள்;
பழகினார்கள். தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகக்
கூறினான். ஆனால், அதற்கான எந்த முயற்சிகளிலும்
அவன் ஈடுபடவில்லை. சில நாட்களாக அவன் தலைவியைச் சந்திக்கவும்
வரவில்லை. ஆகவே, தலைவி, உண்ணாமல், உறங்காமல், மனம் வருந்தி,
உடல் மெலிந்து காணப்படுகிறாள். தன் மகளின் உடல்
நிலையைக் கண்ட தாய், தலைவிக்கு என்ன ஆயிற்று என்று வருத்தப்படுகிறாள்.
கட்டுவிச்சியை அழைத்து, தலைவியின் நிலைக்கு என்ன
காரணம் என்று கேட்கிறாள். தலைவியின் நிலைக்குக் காரணம் தெய்வத்தால்
வந்த குற்றம் என்று கட்டுவிச்சி கூறுகிறாள். அதைக் கேட்ட தோழி,
“தலைவி ஒரு குறிஞ்சி நிலத்தலைவனோடு காதல் கொண்டாள்; அவனோடு பழகினாள், அவர்கள் காதலைப் பற்றி அந்த மலையில்
வாழும் குரங்குக்கூடத்
தெரியும். அந்தக் குரங்கு பொய் சொல்லாது” என்று கூறித் தலைவியின் களவொழுக்கத்தை அவளுடைய தாயாருக்குத் தெரிவிக்கிறாள்.
தோழி அறத்தொடு நின்றாள் என்பது அவள் செயலிலிருந்து தெரிகிறது.
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.
அருஞ்சொற்பொருள்: அற = முழுவதும்; கருங்கால் = கரிய அடிப்பக்கம்; வேங்கை = வேங்கை
மரம்; மேக்கு = மேல்; சினை = கிளை; தோகை = மயில்; தகாஅன் = தகுதியற்றவன்;
தேக்கொக்கு = தேன் + கொக்கு;
கொக்கு = மாமரம்; எயிறு
= பல்; துவர் = சிவப்பு;
வரை = மலை; ஆடுதல்
= விளையாடுதல்; வன்மை = வலிமை; பறழ் = சில விலங்குகளின் குட்டிக்குப் பொதுப்பெயர்; கடுவன்
= ஆண்குரங்கு.
உரை: அரும்புகள்
அனைத்தும் மலர்ந்த,
கரிய அடிப்பக்கத்தையுடைய வேங்கை மரத்தின்மேல் வளர்ந்த பெரிய
கிளையில், இருந்த மயிலானது, அதன்
மலரைக் கொய்யும் மகளிரைப் போலக் காட்சி அளித்தது. அத்தகைய நாட்டை
உடைய தலைவன், இவளுக்கு உரியவனாகும் தகுதி இல்லாதவன் என்பது போல,
தலைவியின் நோய்க்குக் காரணம் தெய்வத்தால் வந்த குற்றம்தான் என்று கட்டுவிச்சி
கூறினாலும், தேன் போன்ற இனிய மாங்கனியை உண்ணுகின்ற, முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் சிவந்த வாயையும் உடைய, மலைகளில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையாகிய, ஆண்
குரங்கும், அந்தக் கொடியவனாகிய தலைவனை அறியும். தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை, தான் கண்டதில்லை என்று
அந்த ஆண்குரங்கு பொய் சொல்லாது.
விளக்கம்: திருமணத்திற்கான
ஏற்பாடுகளைத் தலைவன் செய்யாமால் தலைவியைக் காத்திருக்கச் செய்து வருத்தியதால், அவனைத் தோழி ”கொடியவன்” என்று குறிப்பிடுகிறாள்.
சிறப்பான விளக்கம் ஐயா.மயிலும் மலரும் எதன் உவமையாக கூறப்பட்டுள்ளது?
ReplyDeleteஅன்பிற்குரிய மதி புகழேந்தி அவர்களுக்கு,
ReplyDeleteமயிலுக்கு மலரைக் கொய்யும் மலளிர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
அன்புடன்,
பிரபாகரன்