29. குறிஞ்சி - தலைன் கூற்று
பாடியவர்: ஒளவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15 – இல் காண்க.
பாடலின்
பின்னணி: தலைவியைச் சந்திப்பதற்காக இரவு
நேரத்தில் தலைவன் வந்திருக்கிறான். தலைவிக்குப் பதிலாக
அங்கே தோழி வருகிறாள். “தலைவி வரவில்லையா?” என்று தலைவன் கேட்கிறான். “இனி, உன்னைச் சந்திக்கத் தலைவி வரமாட்டாள். நீ அவளை விரைவில்
திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள்” என்று
தோழி கூறுகிறாள். தலைவியைக் காண முடியவில்லையே என்ற வருத்தத்தையும்
ஏமாற்றத்தையும் தலைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் கருத்திற்கு
உடன்பட்டுத் தலைவி வரவில்லையே. அவள் வந்திருந்தால் மிகவும் நன்றாக
இருந்திருக்குமே! இப்பொழுது நான் என் செய்வேன்” என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறுகிறான்.
நல்லுரை
யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
அருஞ்சொற்பொருள்: நல்லுரை = நல் + உரை = நல்ல சொற்கள்;
இகத்தல் = நீங்குதல்; புல்லுரை
= புல் + உரை = பயனற்ற சொற்கள்
; தா = பரப்பு = மிகுதி;
நீர்க்கேற்ற = நீர்க்கு ஏற்ற = நீரை ஏற்ற (உருபு மயக்கம்); பெயல்
= மழை; பசுங்கலம் = பச்சை
மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம்; பூசல் = போராட்டம்; உயர் = உயர்ந்த
; கோடு = கிளை; மகவு
= விலங்கின் குட்டி; மந்தி = பெண்குரங்கு.
உரை: நெஞ்சே, நல்ல செய்திகள் கூறப்படவில்லை. பயனற்ற சொற்களே மிகுதியாகக்
கூறப்படுகின்றன. பெய்யும் மழையினால் நீர் நிரம்பி வழியும்,
பசு மண்ணாலாகிய பாத்திரத்தைப் போல, உள்ளத்தினால் பொறுக்க முடியாத,
ஆசை வெள்ளத்தில் நீந்திப் பெறுதற்கு அரியதை நீ பெற விரும்புகிறாய்.
உன்னுடைய போராட்டம் மிகவும் பெரியது. உயர்ந்த
மரக் கொம்பில் உள்ள, குட்டியை உடைய பெண் குரங்கு தன்
குட்டியால் தழுவப் பெற்று அமைதி அடைவது போல, மனம் பொருந்த,
உன் கருத்தைத் தழுவிக் கொண்டு, உன் வருத்தத்தைக்
கேட்டு உன் குறையை நிறைவேற்றுவாரை, நீ பெற்றால் அது மிகவும் பெருமைக்குரியது.
விளக்கம்: நல்லுரை
என்றது தன் விருப்பத்திற்கு இணங்கி இரவில் தலைவி தன்னைச் சந்திக்க வருவாள் என்னும்
செய்தியைக் குறிக்கிறது.
புல்லுரை என்றது ”தலைவி இரவு நேரத்தில் வரமாட்டாள்;
நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள்”
என்ற செய்தியைக் குறிக்கிறது. பசுங்கலம் நீரைத்
தாங்க முடியாமல் இருப்பது, தலைவனின் உள்ளம் ஆசை வெள்ளத்தைத்
தாங்க முடியாமல் தவிப்பதற்கு உவமை.
இனிய, எளிய பயன் நல்கும் பணி.மிக்க நன்றி ஐயா...
ReplyDelete