107. தலைவி கூற்று
பாடியவர்: மதுரைக் கண்ணனார்: இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே
சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று:
பொருள்
முற்றி வந்த
(பொருள் தேடிக்கொண்டுவந்த) தலைமகனையுடைய
கிழத்தி (தலைவி) காமமிக்க கழிபடர்
கிளவியாற் ( காம உணர்வு மிகுதிப்பட்டதால்) கூறியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடிக்கொண்டுவந்த தலைவன் திரும்பி வந்ததால், தலைவி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். நீண்ட நாட்களாக தன் கணவனைப் பிரிந்திருந்ததால், அவள்
அவனோடு மிகுந்த காமத்தோடு உறங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது,
பொழுது புலர்ந்தது. அதனால், சேவல் கூவியது. அந்தச் சேவல் தம்மை நள்ளிரவில்
உறக்கத்திலிருந்து எழுப்பியதாக நினைத்து,
”சேவலே!
நீ இறந்து படுவாயாக”
என்று தலைவி அந்தச் சேவலைக் கடிந்துகொள்கிறாள்.
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே.
கொண்டு
கூட்டு:
குவியிணர்த்
தோன்றி ஒண்பூ அன்ன தொகு செந்நெற்றிக் கணங்கொள் சேவல் ! நெடுநீர் யாணர் ஊரன் தன்னொடு வதிந்த ஏம இன்துயில்
எடுப்பியோய், நீ நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு அல்கு இரையாகிக்
கடுநவைப் படீஇயரோ !
கடுநவைப் படீஇயரோ !
அருஞ்சொற்பொருள்: குவி = குவிந்த; இணர் = கொத்து;
தோன்றி = செங்காந்தள்; ஒள்
= ஒளி; தொகுத்தல் = திரட்டிக்
கூட்டுதல் ; செ = சிவந்த; நெற்றி = கொண்டை; கணம்
= கூட்டம்; யாமம் = நள்ளிரவு;
இல் = வீடு; வெருகு
= காட்டுப் பூனை; அல்குதல் = தங்குதல்; அல்கு இரை = சில
நாட்கள் வைத்து உண்ணும் உணவு; கடுத்தல் = மிகுதல்; நவை = துன்பம்; நெடுநீர்
= ஆழமான நீர்; யாணர் = புது
வருவாய்; வதிந்த = தங்கிய; ஏமம் = பாதுகாவல்; எடுப்புதல் = எழுப்புதல்.
உரை: குவிந்த
கொத்துக்களையுடைய செங்காந்தளின் ஒளிபொருந்திய
பூவைப் போன்ற,
ஒன்றுசேர்ந்த சிவந்த கொண்டையையுடைய, தன்
கூட்டத்தோடு கூடி உள்ள சேவலே ! ஆழமான நீர்நிலைகளால்
உண்டாகும், புது வருவாயையுடைய, ஊரையுடைய
தலைவனோடு (என் கணவனோடு) நான் சேர்ந்து,
இன்பத்தைத் தரும் பாதுகாப்பான இனிய உறக்கத்திலிருக்கும் பொழுது,
எம்மை எழுப்பினாய். அதனால், நீ செறிந்த இருளையுடைய நள்ளிரவில், வீட்டிலுள்ள எலிகளை உண்ணுவதற்கு
எதிர்பார்த்திருக்கும் காட்டுப் பூனையின் குட்டிக்கு, சிலநாள்
வைத்துண்ணும் உணவாகி, மிக்க துன்பத்தை அடைவாயாக !
No comments:
Post a Comment