Tuesday, November 17, 2015

110. தலைவி கூற்று

110.  தலைவி கூற்று

பாடியவர்: கிள்ளிமங்கலங்கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 76 – இல் காணலாம்.
திணை: முல்லை.
 கூற்று - 1: பருவங்கண்டு அழிந்த (வருந்திய) தலைமகள் தோழிக்கு உரைத்தது.
கூற்று – 2: தலைமகனைக் கொடுமைகூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதுமாம் (வற்புறுத்தியதும்) ஆம்.
கூற்று விளக்கம் - 1: தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால், கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) கழிந்து இப்பொழுது வாடைக்காற்று வீசும் குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்) வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. தலைவி பிரிவினால் படும் துன்பத்தைத் தாங்க முடியாமல் இருக்கிறாள். “அவர் இனி வந்தாலும் வராவிட்டாலும் மிகுந்த வேறுபாடு இல்லை. நான் இறக்கப் போகிறேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
கூற்று விளக்கம் – 2: நம்மீது அன்புடையவரகத் தலைவர் இருந்தால் நம்மைத் துன்புறுத்தும் இவ்வாடைக்காலத்தில் வந்து அவர் நம் துன்பத்தைப் போக்க வேண்டும். இந்த வாடைகாற்று வீசும் காலத்தில் நமக்குப் பாதுகாப்பாக அவர் வராவிடின், அவர் இனி வந்தும் பயனில்லை என்று தோழி கூறியதாகவும் இபாடலுக்குப் பொருள் கொள்ளலாம். ஆனால், முதல் கூற்று (அதாவது, தலைவி கூறுவதாகக் கொள்வது) இரண்டாவது கூற்றைவிடச் சிறந்ததாகத் தோன்றுகிறது.

வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
யாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையொடு
என்னா யினள்கொல் என்னா தோரே. 

கொண்டு கூட்டு: தோழி ! நீர நீலப் பைம்போது உளரிப் புதல பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று  இன்னாது எறிதரும் வாடையொடு என் ஆயினள்கொல் என்னாதோர் வாராராயினும் வரினும் அவர்நமக்கு யார் ஆகியரோ?. 

அருஞ்சொற்பொருள்: பை = பசுமை; போது = அரும்பு; உளர்தல் = கோதுதல், தடவுதல்; புதல் = புதர்; பீலி = மயில் தோகை; பொறி = புள்ளி; கருவிளை = ஒருவகை மரம்; ஈங்கை = ஒரு செடி; ஊழ்த்தல் = மலர்தல்; துய் = பஞ்சு போன்ற மென்மை ; எறிதல் = வீசுதல்.


உரை: தோழி, நீரிலுள்ள, நீலமலர்களின் அரும்புகளை மலரச் செய்து, புதரில் உள்ள மயிற்பீலியின் ஒளிபொருந்திய புள்ளிகளைப் (கண்ணைப்) போன்ற கருவிளை மலரைஅசைத்து,  நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது சிவந்த அரும்புகள் மலர்ந்த, அழகிய நிறத்தையும்  மென்மையையும் உடைய மலர்களை உதிரச் செய்து, குளிர்ச்சியுடன் துன்பத்தைத் தருகின்ற வாடைக் காற்றினால், ”இவள் எத்தன்மையினள் ஆனாளோ”, என்று நினைந்து கவலையுறாத தலைவர், வாராவிட்டாலும், வந்தாலும், நமக்கு எத்தகைய உறவினராவர்? அவர் வருவதற்குள் நான் இறந்து விடுவேன்.

No comments:

Post a Comment