277. தோழி கூற்று
பாடியவர்: ஓரிற்
பிச்சையார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில்
காணப்படுகிறது.
அறிவர் பெறும் உணவை ”ஓரிற் பிச்சை” என்று சிறப்பித்ததால் இவர் ஓரிற் பிச்சையார் என்று பெயர் பெற்றார்.
திணை: பாலை.
கூற்று : தலைமகன்
பிரிந்தவழி,
அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது.
கூற்று
விளக்கம்: தலைவன்
முன்பனிக்காலத்தில் வருவதாகக் கூறிசென்றான். ”முன்பனிக் காலம்
எப்பொழுது வரும்?” என்று தோழி அறிவரைக் கேட்கிறாள்.
ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது
ஓரிற் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவ தென்றி
அக்கால் வருவரெங் காத லோரே.
கொண்டு
கூட்டு:
மின்இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை, எக்கால் வருவது என்றி, அக்கால் வருவர் எம்
காதலோர். நீ ஆசில் தெருவில்,
நாயில் வியன்கடைச்
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஓரில் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பிற் பெறீஇயரோ!
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஓரில் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பிற் பெறீஇயரோ!
அருஞ்சொற்பொருள்: ஆசு = குற்றம்; வியன் = அகன்ற;
கடை = வாயில்; அமலை
= உருண்டை; இழுது = வெண்ணெய்;
ஆர = மிக (வயிறு நிரம்ப);
மாந்துதல் = உண்ணுதல்; அற்சிரம்
= அச்சிரம் = முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்); வெய்ய
= விரும்பத் தக்க; சேமச் செப்பு = நீரைச் சேமித்து வைக்கும் பாத்திரம்; கடைப்பெயல்
= கடை + பெயல் = இறுதியில்
பெய்யும் மழை; வாடை = குளிர் காலம்
(ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்); எக்கால் = எ + கால் = எப்பொழுது; அக்கால் = அ+கால் = அப்பொழுது.
உரை: (அறிவ!)
மின்னலைப் போன்ற இடையை உடைய தலைவி நடுங்கும்படி வரும், குளிர் காலத்தின் இறுதி மழை பெய்யும் காலம்,
எப்பொழுது வரும் என்று
கூறுவாயாக! அப்பொழுது, எம்முடைய தலைவர்
வருவர். நீ, குற்றமற்ற தெருவில்,
நாய் இல்லாத அகன்ற வாசலில்,
செந்நெல் சோற்று
உருண்டையுடன் மிக வெண்மையான வெண்ணெயோடு கலந்து ஒரு வீட்டில் இடும் பிச்சையைப் பெற்று, வயிறு நிரம்ப உண்டு, முன்பனிக் காலத்திற்குரிய
விரும்பத் தக்க வெப்பத்தை உடைய நீரை, வெந்நீரைச் சேமித்து
வைக்கும் பாத்திரத்தில் பெறுவாயாக!
சிறப்புக்
குறிப்பு:
துறவு உள்ளமும், முக்காலத்தையும்
அறியும் ஆற்றலும் உடைய பெரியோர் அறிவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்,
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியி னாற்றிய அறிவன். (தொல். புறத்.20.)
என்று தொல்காப்பியம்
கூறுகிறது.
இவர் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்று கருதப்பட்டனர். இவர் எக்காலத்திலும், கற்பு முதலிய நல்லவற்றைக்
கற்பித்தலும் தீயவற்றைக் கடிதலும் செய்வர் என்றும் தொல்காப்பியத்தில்
கூறப்பட்டுள்ளது(தொல். கற்பு. 13).
தலைவன் தலைவியாகிய இருவரும் இவரது சொற்படி கேட்டு அதன் வழி
நடப்பர். இவர் துறவு உள்ளத்தினராதலால், இவர் துறவிகளைப் போல், ஒரு வீட்டில் மட்டும் பிச்சை
உணவைப் பெற்று உண்பவர் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.
வாடைக்காலத்தின் கடைசி மழை எப்பொழுது
வரும் என்று தோழி கேட்பதால் இப்பாடலில்
கூறப்பட்டுள்ள பருவம் வாடைக்காலம் என்று கருதப்படுகிறது.
சங்க காலத்தில், அந்தணர்களின் வீடுகளில் நாய்களும் கோழிகளும் இருப்பதில்லை என்று
பெரும்பாணாற்றுப்படையில் (மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – பெரும்பாணாற்றுப்படை
- 299) கூறப்பட்டுள்ளது. அதுபோல், இப்பாடலில்,
”ஆசில் தெருவில் நாயில் வியன்கடை” என்றது
நாய்கள் இல்லாத வீடுகள் என்ற பொருளில்
வந்துள்ளது.
No comments:
Post a Comment