285. தலைவி கூற்று
பாடியவர்: பூதத்
தேவனார்.
திணை: பாலை.
கூற்று: பருவம்
கண்டு வேறுபட்ட இடத்து வற்புறுத்தும் தோழிக்கு வன்புறை எதிரழிந்து தலைமகள் சொல்லியது. (வன்புறை - வற்புறுத்தல்; எதிரழிதல் – இசையாமல் வருந்துதல்).
கூற்று
விளக்கம்: தலைவன்
திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்துவிட்டது. அதை அறிந்த தலைவி வருத்தத்தால் உடல்
மெலிந்தாள். அப்பொழுது தோழி, "தலைவர்
விரைவில் வருவர்; நீ பொறுமையாக இரு."
என்று ஆறுதல் கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, "ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் நான் அவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அவர் இன்னும் வரவில்லை. ஆனால், அவர் வருவதாகக் கூறிய பருவம் இதுதான். அதில் ஐயமில்லை.”
என்று கூறுகிறாள்.
வைகல்
வைகல் வைகவும் வாரார்
எல்லா எல்லை எல்லையுந் தோன்றார்
யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர்
சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ்
புன்புறப் பெடையொடு பயிரி யின்புற
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
ஊனசைஇ யொருபருந் திருக்கும்
வானுயர் பிறங்கல் மலையிறந் தோரே.
எல்லா எல்லை எல்லையுந் தோன்றார்
யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர்
சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ்
புன்புறப் பெடையொடு பயிரி யின்புற
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
ஊனசைஇ யொருபருந் திருக்கும்
வானுயர் பிறங்கல் மலையிறந் தோரே.
கொண்டு
கூட்டு:
தோழி! இன்புற புன்புறப் பெடையொடு பல் ஊழ் பயிரி, இமைக்கண் ஏது ஆகின்றோ?
ஞெமைத்தலை ஊன் நசைஇ ஒருபருந்து இருக்கும் வான் உயர் பிறங்கல் மலை இறந்தோர், வைகல்
வைகல் வைகவும் வாரார்; எல்லா எல்லை எல்லையும் தோன்றார்; யாண்டுளர் கொல்? ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே!
அருஞ்சொற்பொருள்: வைகல் = நாள்தோறும், விடியல்; வைகவும்
= விடியவும்; எல் = பகல்;
ஈண்டு = இங்கே; ஊழ்
= முறை; பல்லூழ் = பல்
+ ஊழ் = பலமுறை; புற
= புறா; புன்புற = புல்லிய
புற = மெல்லிய சிறகுகளை உடைய புறா; பெடை
= பெண்புறா; பயிர்தல் = அழைத்தல்;
இமைக்கண் = இமைப்பொழுதில்; ஏது = எத்தகைய; ஏதாகின்றோ
= எத்தகைய இன்பத்தை அடைகிறது!; ஞெமை = ஒருவகை மரம்; தலை = உச்சி;
நசைஇ = விரும்பி; பிறங்கல்
= விளங்குதல்.
உரை: தோழி! இனிய ஆண் புறா, மெல்லிய சிறகுகளையுடைய பெண் புறாவொடு
கூடுவதற்காகப் பலமுறை அழைத்து, இமைப்பொழுதில் எத்தகைய
இன்பத்தை அடைகிறது! அங்கு உள்ள ஞெமை மரத்தின் உச்சியில்,
வழிப்போக்கர்களின் தசையை விரும்பி, ஒருபருந்து இருக்கின்ற, வானளவு உயர்ந்து
தோன்றும் மலையைக் கடந்து சென்ற தலைவர், நாள் தோறும் விடியற்
காலம் விடிந்து பகல் வரவும், அப்பகல் நேரத்தில் வாரார்;
எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் வாரார். இவர்
எங்கே இருக்கின்றாரோ? இங்கே இவர் திரும்பிவருவதாகக் கூறிய பருவம்
இதுதான்.
சிறப்புக் குறிப்பு: தலைவர்
தலைவியின் அருகே இல்லாவிட்டாலும், அவர் தன் நெஞ்சிற்கு அருகில் இருப்பதாக அவள்
நினைப்பதால், தலைவி “இவர் “ என்கிறாள்.
ஆண் புறா, பெண் புறாவை அழைத்து இன்புறுவதைத் தலைவரும் கண்டிருத்தல் கூடும். அதைக் கண்டும் தன்னை நினைந்து தலைவர் இன்னும் வரவில்லையே என்று தலைவி வருந்துகிறாள்.
No comments:
Post a Comment