Monday, February 6, 2017

306. தலைவி கூற்று

306. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 - இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : காப்பு மிகுதியால் நெஞ்சு மிக்கதுவாய் சோர்ந்து கிழத்தி உரைத்தது. (நெஞ்சில் வருத்தம் மிகுதியானதால், தன் முயற்சியின்றியே வாய்ப்பேச்சில் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவது.)
கூற்று விளக்கம்: தலைவி யாரையோ காதலிக்கிறாள் என்பதை அறிந்த அவளுடைய பெற்றோர், அவளைக் காவலில் வைத்தார்கள். தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்யாததால், தலைவி தலைவன் மீது கோபமாக இருக்கிறாள். காவலில் வைக்கப்பட்டிருப்பதால், தலைவனைக் காணும் வாய்ப்பு தலைவிக்கு அரிதாக உள்ளது.  இருந்தாலும் எப்பொழுதாவது அவனைக் காணும் வாய்ப்புக் கிடைக்கிறது. இனி, தலைவனைக் கண்டால், அவனிடம் அன்பான இனிய சொற்களைப் பேசக்கூடாது என்று தலைவி மனவுறுதியுடன் இருக்கிறாள். ஆனால், அவனைக் கண்டவுடன், அவளையும் அறியாமல் அவனிடம் அன்பாகப் பேசுகிறாள். ஒருநாள், தலைவனைச் சந்தித்த பிறகு, “நான் இனி தலைவனிடம் அன்பாகப் பேசக் கூடாது என்று சொல்லியிருந்தாலும், நீ என் சொல்லை மறந்துவிட்டாயோ?” என்று தன் நெஞ்சைக் கடிந்துகொள்கிறாள்.

மெல்லிய இனிய மேவரு தகுந
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்
காமர் மாஅத்துத் தாதமர் பூவின்
வண்டுவீழ் பயருங் கானல்
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே. 


கொண்டு கூட்டு: என் நெஞ்சே! வாழி! மெல்லிய, இனிய மேவரு தகுந இவை மொழியாம் எனச் சொல்லினும், காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்  வண்டு பலவுடன் வீழ்பு அயரும் கானல் தண்கடல் சேர்ப்பனைக் கண்டபின் நீ அவை மறத்தியோ?

அருஞ்சொற்பொருள்: மேவருதல் = விரும்புதல்; மேவரு தகுந = விரும்பத் தக்கன; மொழியாம் = மொழியேம்; மறத்தியோ = மறத்துவிட்டாயோ; வாழிஅசைநிலை; காமர் = அழகு; மாஅத்து = மாமரத்தில்; அமர்தல் = பொருந்துதல்; அயர்தல் = செய்தல்; கானல் = கடற்கரைச் சோலை; சேர்ப்பன் = நெய்தல் நிலத்தலைவன்.  

உரை: என் நெஞ்சே! பிரிந்த தலைவர் வந்தவுடன் மென்மையான, இனிய, விரும்பத் தகுந்த சொற்களைக் கூறாதே என்று உனக்கு நான் சொல்லியிருந்தாலும்,  அழகிய மாமரத்தின், தாதுகள் பொருந்திய மலர்களில், வண்டுகள் பல ஒருங்கே வந்து விழும் சோலையையுடைய,  குளிர்ந்த நெய்தல் நிலத்தலைவனைக் கண்டவுடன், நான் கூறியவற்றை நீ மறந்துவிட்டாயோ?
சிறப்புக் குறிப்பு: ஒருபெண் தன்னுடைய காதலனைப் பிரிந்திருக்கும் பொழுது, அவன்மீது கோபமாக இருந்தாலும், அவனைக் கண்டவுடன் தன் கோபத்தை மறந்து அவனிடம் அன்பாகப் பேசிக் கூடி மகிழ விரும்புவது இயல்பு என்ற கருத்து திருக்குறளிலும்  கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் 
 கலத்தல் உறுவது கண்டு”                                                               (குறள், 1259.)
பொருள்: ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு அவரைத் தழுவினேன்.

            நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
            புணர்ந்து ஊடி நிற்போம் எனல்.                                                    (குறள் – 1260)

பொருள்: கொழுப்பைத் தீயில் இட்டாற் போல் உருகும் நெஞ்சினையுடைய என்னைப் போன்றவர்க்கு, என் காதலர் அருகில் வந்து கூடுங்கால், ஊடி எதிர்த்து நிற்போம் எனக் கருதுதல் இயலுமோ?

No comments:

Post a Comment