307. தலைவி கூற்று
பாடியவர்: கடம்பனூர்ச்
சாண்டிலியனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடைக்
கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியை விட்டுப் பிரிந்து சென்று சிலமாதங்கள் கழிந்தன. தலைவி வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் வருத்தத்தைக்
கண்ட தோழி, “ நீ இவ்வாறு வருந்தக் கூடாது. உன் தலைவன் எப்பொழுது வரமுடியுமோ அப்பொழுது வருவான். அதுவரை நீ பொறுமையாக இருப்பதுதான் நல்லது.” என்று தலைவிக்கு
அறிவுரை கூறுகிறாள். தலைவி, “அவர் பிரிந்து
சென்று பல மாதங்கள் கழிந்தன. அதோ பார்! மீண்டும் ஒருமுறை மூன்றாம் பிறை வந்துவிட்டது. நான் எத்துணைக்
காலம்தான் பொறுமையாக இருக்க முடியும்? அவர் என்னை மறந்துவிட்டார்
என்று நினைக்கிறேன்.”” என்று தோழிக்கு மறுமொழி கூறுகிறாள்.
வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி
வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்
தழுங்க னெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.
கொண்டு
கூட்டு:
வளையுடைத்து
அனையது ஆகிப் பலர்தொழச் செவ்வாய் வானத்து “ஐ” எனத் தோன்றி, இன்னம் பிறந்தன்று பிறை! களிறு தன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது நிலைஉயர்
யாஅம் தொலையக் குத்தி, வெள்நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து அழுங்கல் நெஞ்சமொடு
முழங்கும் அத்த நீளிடை அழப் பிரிந்தோர், மறந்தனர் கொல்லோ? அன்னோ!
அருஞ்சொற்பொருள்: வளை = சங்கு வளையல்; செவ்வாய் வானம் = சிவந்த மாலைநேரத்து வானம்; ஐ என = விரைவாக; பிறை = வளர்மதியின் மூன்றாம்
பிறை; அன்னோ = ஐயோ; தாம் – அசைநிலை; உயங்கு நடை
= சோர்வுற்ற நடை; மடப்பிடி = இளம் பெண்யானை; நோனாது = தாங்காது;
யாஅம் = யா மரம்; வெண்ணார்
= வெண்மையான நார் (நீர்ப்பசை இல்லாத உலர்ந்த பட்டை);
அழுங்கல் = வருத்தம்; அத்தம்
= பாலை நிலம்; நீளிடை = நீண்ட
வழி.
உரை: சங்கு
வளையல் உடைந்ததைப் போன்ற தோற்றத்தோடு, பலரும் தொழ,
சிவந்த வானத்தில், மாலைநேரத்தில், மூன்றாம் பிறை விரைந்து பிறந்து தோன்றியது. ஆண்யானை,
வருந்திய நடையையுடைய தனது துணையாகிய
இளம் பெண்யானைக்கு நீர் வேட்கையினால் தோன்றிய வருத்தத்தைத் தாங்க முடியாமல்,
உயர்ந்து நிற்கும் யாமரத்தை அழியும்படிக் கொம்பாற் குத்தி, பசையற்ற வெண்ணிறமான பட்டையை உரித்தெடுத்தது.
அப்பட்டையில் ஈரமில்லாததால், தன் வெறுங்கையையே
சுவைத்தது. பெண்யானையின் நீர்வேட்கையைத் தீர்க்க முடியாததால்,
வருந்தும் நெஞ்சோடு, ஆண்யானை தன் கையை
(துதிக்கையை) மேல் நோக்கி உயர்த்திப் பிளிறியது.
அத்தகைய பாலை நிலத்தில், நீண்ட வழியில் செல்லும்போது,
நாம் அழும்படி நம்மைப்பிரிந்து சென்ற தலைவர், நம்மை
மறந்தனரோ? ஐயோ!
சிறப்புக்
குறிப்பு:
இங்கு
பிறை என்றது வளர்மதியின் மூன்றாம் பிறையைக் குறிக்கிறது. சங்க காலத்தில் மூன்றாம் பிறையை வைத்து மாதங்களைக் கணக்கிடுவது வழக்கிலிருந்ததாகத்
தெரிகிறது. “இன்னம் பிறந்தன்று பிறையே” என்றது மீண்டும் ஒரு மாதம் கழிந்ததை நினைத்துத் தலைவி வருந்துவதைக் குறிக்கிறது.
பாலைநிலத்தில்
நீர் கிடைப்பது அரிது.
அங்குள்ள யானைகள் யாமரத்தின் பட்டையைப் பிளந்து, அதிலிருந்து வரும் நீரைக் குடித்துத் தம் நீர் வேட்கையைத் தீர்த்துக் கொள்வது
வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது.
தலைவர் சென்ற
இடத்தில்,
ஆண்யானை தன் துணையாகிய பெண்யானையின் நீர் வேட்கையைத் தீர்க்க முயல்வதைக்
கண்ட பிறகாவது, தலைவருக்குத் தன் நினைவு வராதா என்று தலைவி எண்ணுகிறள்.
இது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.
குறுந்தொகையில்
உள்ள பாடல்கள் நான்கு அடி முதல் எட்டு அடிகளைக் கொண்டவை. இந்தப் பாடலும் 391 – ஆம் பாடலும் ஒன்பது அடிகளைக் கொண்டவை
என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment