Tuesday, May 9, 2017

342. தோழி கூற்று

342. தோழி கூற்று

பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : செறிப்பறிவுறுக்கப்பட்டான் வரைவின்கட் செல்லாது, பின்னும்வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி வரைவு கடாயது.
கூற்று விளக்கம்: தலைவியை அவள் பெற்றோர் காவலில் வைத்துள்ளார்கள். இனி, நீ அவளைக் காண்பது அரிது.” என்று தோழி தலைவனிடம் கூறினாள். அதற்குத் தலைவன், “நான் தொடர்ந்து அவளைச் சந்திக்க விரும்புகிறேன்பகலில் சந்திக்க முடியாவிட்டால், இரவில் சந்திப்பேன். ஆனால், எனக்கு உன் உதவி தேவை.” என்று தோழியிடம் கூறுகிறான். தலைவனின் கூற்றுக்கு மறுமொழியாகத் தோழி, “ இனியும் களவொழுக்கத்தைத் தொடர்வதைத் தலைவி விரும்பவில்லை. ஆகவே, நீ விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது.” என்று கூறுகிறாள்.

கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.


கொண்டு கூட்டு: கலை கைதொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்காவல் மறந்த கானவன், ஞாங்கர்கடியுடை மரம்தொறும் படுவலை மாட்டும் குன்ற நாட! பைஞ்சுனைக் குவளைத் தண்தழை இவள் ஈண்டு வருந்த, ”நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயம் தலைப்படாஅப் பண்பினை எனின் தகுமோ?
.
அருஞ்சொற்பொருள்: கலை = ஆண்குரங்கு; பெரும்பழம் = பலாப்பழம்; கானவன் = வேடன்; ஞாங்கர் = பின்னர்; கடி = பழத்தின் மணம்; நயந்தோர் = விரும்பியவர்; புன்கண் = துன்பம்; பயம் = பயன்; தலைப்படுதல் = மேற்கொள்ளுதல்.
உரை: ஆண்குரங்கு தன்கையால் தோண்டிய,  மணம் கமழ்கின்ற சுளைகளையுடைய பலாப்பழத்தை, காப்பதற்கு மறந்த வேடன், அதன்பின், பழத்தின் மணமுடைய  மரங்கள்தோறும் குரங்குகள் அகப்பட்டுக்கொள்ளுமாறு வலையை மாட்டிவைக்கும், மலையையுடைய நாட!  பசுமையான நீர்நிலையில் மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டிய, குளிர்ச்சியான தழையுடையை அணிந்த இத்தலைவி,  இங்கே துன்பத்திலிருக்க,  உன்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும் நல்வினைப் பயனைப் பெறுவதற்கான செயல்களை மேற்கொள்ளாதவனாக நீ இருப்பது உனக்குத் தகுமோ?


சிறப்புக் குறிப்பு: நயந்தோர் (விரும்பியவர்கள்)” என்று பன்மையில் கூறினாலும், இங்கே அது தலைவியைத்தான் குறிக்கிறது. பலாப்பழங்களைக் காவல் காப்பாதற்கு கானவன் மறந்த பொழுது, அவை குரங்குகள் உண்ணுவதற்கு எளிதாக இருந்தது. கானவன், இப்பொழுது வலைகளை மாட்டிப் பலாப்பழங்களை பாதுகாப்பதால், இனிமேல் குரங்குகள் அப்பழங்களை உண்ண முடியாது. அதுபோல், முன்பு களவொழுக்கத்தில் தலைவியைக் கூடி மகிழ்வது தலைவனுக்கு எளிதாக இருந்தது. இப்பொழுது, அவள் காவலில் வைக்கப்பட்டதால், இனிமேல் தலைவன் தலைவியைக் காண்பது அரிதாகும். இது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமமாகும்.

No comments:

Post a Comment