349. தலைவி கூற்று
பாடியவர்: சாத்தனார்.
திணை: நெய்தல்.
கூற்று : பரத்தைமாட்டுப்
பிரிந்துவந்து தலைமகன் கேட்கும் அண்மையனாகத் தோழிக்குக் கிழத்தி கூறியது.
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியைப் பிரிந்து பரத்தையரோடு சிலகாலம் இருந்தான். இப்பொழுது தலைவியோடு
வாழ விரும்பித் தன் வீட்டுக்கு வந்து, உள்ளே வராமல் வீட்டுக்கு
வெளியே நிற்கிறான். அவன் வரவை அறிந்த தோழி, “தலைவன் வந்தால், “நீ கவர்ந்த எம் பெண்மை நலத்தைத் திருப்பித்
தா” என்று கேட்போம்” என்று அவன் காதுகளில்
கேட்குமாறு கூறுகிறாள். அதற்கு மறுமொழியாக, “ஒருவருக்குக் கொடுத்த பொருளை திரும்பப்
பெறுவது, நம் உயிரை இழப்பதைவிடக் கொடியது” என்று தலைவி கூறுகிறாள்.
அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும்
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம்
கொள்வாம் என்றி தோழி கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்தவை தாவென் சொல்லினும்
இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.
கொண்டு
கூட்டு:
தோழி! “அடும்பு அவிழ்
அணிமலர் சிதைஇ, மீன் அருந்தும் தடம்தாள்
நாரை இருக்கும் எக்கர்த் தண்ணந் துறைவன் தொடுத்து, நம்நலம் கொள்வாம்” என்றி! கொள்வாம்! இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்து ”அவை தா” என்
சொல்லினும், நம் இன்னுயிர் இழப்பு இன்னாதோ?
அருஞ்சொற்பொருள்: அடும்பு = ஒருவகைக் கொடி; அவிழ்தல் = மலர்தல்;
தட = வளைந்த; தாள்
= கால்; எக்கர் = மணல்மேடு;
தண் = குளிர்ச்சியான; துறைவன்
= நெய்தல் நிலத்தலைவன்; தொடுத்து = வளைத்து.
உரை: தோழி! ”அடும்பங் கொடியில் மலர்ந்த அழகிய
மலரைச் சிதைத்து, மீனை உண்ணுகின்ற வளைந்த கால்களையுடைய
நாரை தங்கியிருக்கின்ற மணல் மேட்டையுடைய, குளிர்ந்த நீர்த்துறைத்
தலைவனை வளைத்து, நாம் இழந்த பெண்மை நலத்தைப் திரும்பப் பெறுவோம்”
என்று கூறுகின்றாய்! சரி, அவ்வாறே செய்வோம்.
ஆனால், தாம் உற்ற வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர் விரும்பிய பொருளைக் கொடுத்து,
பிறகு, அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித்
தருக என்று சொல்லுதலைக் காட்டிலும், நமது இனிய உயிரை இழத்தல், துன்பமுடையதாகுமோ?
ஆகாது.
No comments:
Post a Comment