356. செவிலி கூற்று
பாடியவர்: கயமனார்.
திணை: பாலை.
கூற்று : மகட்
போக்கிய (மகள் தன் காதலனுடன் உடன்போகியதால் வருந்திய) செவிலித்தாய்
உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவி செல்வச் சிறப்புள்ள குடும்பத்தில் பிறந்து
வளர்ந்தவள்.
அவள் மிகுந்த மென்மையானவள். அவள் தலைவனோடு பாலைநிலத்தில்
உடன்போனாள். தலைவி நீரற்ற, வெப்பம் மிகுந்த
பாலைநிலத்தில் செல்லும் வல்லமையை எவ்வாறு பெற்றாள் என்று செவிலித்தாய் வருந்துகிறாள்.
நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த
பாலும் பலவென உண்ணாள்
கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே.
கொண்டு
கூட்டு:
ஏந்திய செம்பொன் புனைகலத்து அம்பொரிக் கலந்த பாலும் பலவென உண்ணாள். கோல் அமை குறுந்தொடித் தளிர் அன்னோள், நிழல் ஆன்று
அவிந்த, நீர்இல் ஆரிடைக் கழலோன் காப்ப,
கடுகுபு போகி, அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெம் கலுழி தவ்வெனக் குடிக்கிய, தான் யாங்கு
வல்லுநள் கொல்?
அருஞ்சொற்பொருள்: ஆன்று = அடங்கி; அவிந்த = மறைந்த;
ஆரிடை = ஆர்+இடை = அரிய வழி; கடுகுபு = மிக விரைந்து; சுனை
= நீரூற்று; அறுசுனை = நீரில்லாத
சுனை; மருங்கு = பக்கம்; மறுகுபு = உலர்ந்து; வெவ்வெம் = மிகுந்த சூடுள்ள; கலுழி = கலங்கிய; தவ் –
ஓசைக் குறிப்பு; குடிக்கிய = குடிக்க; வல்லுநள் = வலிமை பெற்றவள்; கோல் = திரட்சி.
உரை: கையில் ஏந்திய செம்பொன்னால் செய்த பாத்திரத்தில், அழகிய பொரியோடு கலந்த, பாலைக் கொடுத்தாலும்,
அது அதிகமாக உள்ளது என்று கூறி, உண்பதை மறுப்பாள்.
திரண்ட, சிறிய வளையல்களை அணிந்த, தளிரைப் போன்றவள் என்மகள். அவள், நிழல் அடங்கி அற்றுப் போன, நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை
நிலத்தில், வீரக்கழலணிந்த தலைவன் தன்னைப் பாதுகாக்க, விரைந்து சென்று, நீர்வற்றிய சுனையின் பக்கத்தில்,
உலர்ந்து, மிக்க வெப்பத்தையுடைய கலங்கிய நீரை, நீர் வேட்கையால் தவ்வென்னும் ஓசையோடு குடிப்பதற்கு
எங்கிருந்து வலிமை பெற்றாள்?
சிறப்புக்
குறிப்பு: ”செம்பொற் புனைகலத்து ஏந்தியபால்”
என்றது தலைவியின் குடும்பத்தினர் செல்வந்தர்கள் என்பதைக் குறிக்கிறது. ”இத்தகைய செல்வம் நிரம்பிய இல்லத்தில் இருந்தவள்
பாலைநிலத்திற் செல்ல நேர்ந்ததே!” என்பதை எண்ணிச் செவிலித்தாய் வருந்துகிறாள் என்பது குறிப்பு. ”தளிரன்னோள்” என்றது
தலைவியின் மென்மையை குறிக்கிறது.
No comments:
Post a Comment