362. தோழி கூற்று
பாடியவர்: வேம்பற்றூர்க்
கண்ணன் கூத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வெறிவிலக்கித்
தோழி அறத்தொடு நின்றது.
(வெறி = வெறியாட்டு).
கூற்று
விளக்கம்: தலைவனின்
பிரிவால் தலைவி உடல் மெலிந்தாள். அவள் உடல் வேறுபாட்டைக் கண்ட தாய்,
வேலனை அழைத்து தலைவியின் நோய்க்குக் காரணத்தை அறிந்துகொண்டு அதற்குப்
பரிகாரம் செய்வதற்காக வெறியாட்டு நடத்துகிறாள். அங்கு உடனிருந்த
தோழி, வெறியாட்டு நடத்துபவனை நோக்கி, “தலைவியின்
நோய்க்குப் பரிகாரமாக நீ இடும் இப்பலியை, அந்த நோய்க்குக் காரணாமாகிய
அவள் தலைவனின் மார்பும் உண்ணுமோ?” என்று கேட்டுத் தலைவியின் காதலை
வெளிப்படுத்துகிறாள் (அறத்தொடு நின்றாள்).
முருகயர்ந் துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.
கொண்டு
கூட்டு:
முருகு
அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன். பல்வேறு உருவின் சில் அவிழ்
மடையொடு, சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி, வணங்கினை கொடுத்தியாயின், அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும்
உண்ணுமோ பலியே!
அருஞ்சொற்பொருள்: அயர்தல் = விளையாடுதல் (வெறியாட்டு எடுத்தல்); வேலன் = முருகனைப் போல வேடமிட்டு வேலைக் கையிலேந்திக்
வெறியாட்டு நடத்துபவன்; முது = பேரறிவு;
சினவல் = கோபித்துக்கொள்ளுதல்; ஓம்பல் = தவிர்த்தல்; அவிழ்
= சோறு; மடை = பலி;
மறி = ஆட்டுக்குட்டி; அணங்கிய
= துன்புறுத்திய; சிலம்பு = மலை; சிலம்பன்= மலைக்குரியவன்
(தலைவன்); தார் = மாலை;
அகலம் = மார்பு.
உரை: முருகனுக்கு வெறியாட்டு நடத்தும் அறிவு மிகுந்த வேலனே, கோபம் கொள்வதைத் தவிர்ப்பாயாக.
உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். பல நிறங்ளையுடைய, சிலவகையான சோற்றையுடைய பலியோடு, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, இத்தலைவியினது மணமுள்ள நெற்றியைத் தடவி, முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக்
கொடுப்பாயானால், இவளைத் துன்புறுத்திய, வானத்தை அளாவிய பெரிய
மலைப்பக்கத்தையுடைய தலைவனது, ஒளிபொருந்திய மாலையை அணிந்த மார்பும், நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ?
சிறப்புக்
குறிப்பு:
”முது
வாய் வேலன்” என்பதற்கு முதுமை வாய்ந்த வெறியாட்டு நடத்துபவன் என்று பொருள்கொள்ளலாம். முதுசொல் என்பதற்கு குறிசொல்லுதல் என்று பொருள். அதனால்,
“முது வாய் வேலன்” என்பதற்குக் குறிசொல்லும் வாயையுடைய
வேலன் என்றும் பொருள் கொள்ளலாம். ”நுதல் நீவி” என்றது ஆட்டுக்குட்டியின் குருதி கலந்த மண்ணால் தலைவியின் நெற்றியைத் தடவுதல்
மரபு என்பதைக் குறிப்பதாக உ. வே. சாமிநாத
ஐயர் தம் நூலில் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment