83.
குறிஞ்சி - தோழி கூற்று
பாடியவர்: வெண்பூதனார்:
இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில்
இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவியைப்
பிரிந்திருந்த தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்றும் அவன் விரைவில்
தலைவியின் இல்லத்திற்கு அவளைப் பெண்கேட்க வரப்போகிறான் என்றும் செவிலித்தாய் தோழிக்குத்
தெரிவித்தாள்.
அந்த மகிழ்ச்சியான செய்தியை, செவிலித்தாயை வாழ்த்துவது
போலத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என் றாளே.
கொண்டுகூட்டு: தம் இல்
தமது உண்டன்ன சினைதொறும் தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை அன்னை வரும் என்றாள். அவள் அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ!
ஓங்குமலை நாடனை அன்னை வரும் என்றாள். அவள் அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ!
அருஞ்சொற்பொருள்: அரும்பெறல் = பெறுதற்கரிய; அமிழ்தம் = சாவா மருந்து;
ஆர்பதம் = உண்ணும் உணவு; பெரும்பெயர் = மிகுந்த புகழ்; இல்
= இல்லம்; சினை = கிளை;
தீ = இனிமை; தூங்கும்
= தொங்கும்; பல = பலா;
ஓங்குமலை = உயர்ந்த மலை; நாடன் = குறிஞ்சிநிலத் தலைவன்; பெறீயரோ = பெறுவாளாக.
உரை: தமது
வீட்டில் இருந்து,
தமது முயற்சியால் தேடிய பொருளால் பெற்ற உணவை உண்ணுவதைப் போன்ற இனிய சுவையைத்
தரும் பழங்கள், கிளைகள் தோறும், தொங்குகின்ற
பலாமரங்களையுடைய, உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சிநிலத் தலைவன், தலைவியைத் திருமணம்
செய்துகொள்வதற்குத் தேவையான பொருளோடு வரப்போகிறான் என்று என் அன்னை கூறினாள்.
அவள் பெறுதற்கரிய அமிழ்தத்தை உணவாக உண்ணும், பெரும்புகழைடைய
துறக்கவுலகைப் (சுவர்க்கத்தைப்) பெறுவாளாக
!
விளக்கம்: ”தம்மில் தமது உண்டன்ன’“ என்பது, ”தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால், அம்மா வரிவை
முயக்கு.” என்ற குறளோடு
(குறள், 1107) ஒப்பு நோக்கத் தக்கது. களவொழுக்கத்தில் பெறும் இன்பம் “தம்மில் தமது உண்டன்ன”
இன்பம் தருவது அன்று என்பதும் கற்பொழுக்கமே அத்தகைய இன்பம் தரும் என்பதும்
இங்கு குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளன. “தீம்பழம் தூங்கும் ஓங்குமலை
நாடன்” என்றது தலைவனுடைய நாட்டின் வளத்தையும் அவன் செல்வச் சிறப்பையும்
குறிக்கிறது.
No comments:
Post a Comment