85.
மருதம் - தோழி கூற்று
பாடியவர்: வடம
வண்ணக்கன் தாமோதரனார். இவர் இயற்பெயர் தாமோதரனார். இவர் வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டில்
குடியேறியதால் ‘வடம’ என்ற அடைமொழி இவர் பெயரோடு
சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர் பொன்னின்
தரத்தைப் பரிசோதனை செய்யும் தொழிலைச் செய்ததனால் ‘வண்ணக்கனார்’
என்று அழைக்கப்பட்டார்.
இவர் புறநானூற்றில் 172 - ஆம் பாடலையும்
குறுந்தொகையில் 85-ஆம் பாடலையும் இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: தலைவன்
தன் மனைவியைப் பிரிந்து பரத்தையரோடு வாழ்கிறான். அவன் தன் இல்லத்திற்குத் திரும்பிவர விரும்புகிறான். தன் மனைவி (தலைவி)கோபமாக இருப்பாள்
என்பதை உணர்ந்த தலைவன், பாணன் ஒருவனைத் தன் மனைவியிடம் தூதுவனாக அனுப்புகிறான். அந்தப்
பாணன், “தலைவன் மிகவும் இனிமையானவன். அவன்
உன்மீது மிகுந்த அன்புடையவன்.” என்று தலைவியிடம் கூறுகிறான்.
அதைக் கேட்ட தோழி, “ இதெல்லாம் இவனுடைய வெறும்
வாய்ப்பேச்சு. இவன் சொல்லுவதைபோல் தலைவனின் செயல் இல்லையே
!” என்று தலைவியிடம் கூறுகிறாள். தலைவி தலைவனை
ஏற்க மறுக்கிறாள்.
யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே.
கொண்டுகூட்டு: உள்ளூர்க்
குரீஇத் துள்ளுநடைச் சேவல், சூல்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம் பொதிக்
கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன், பாணன் வாயே யாரினும் இனியன் பேரன்பினனே.
அருஞ்சொற்பொருள்: உள்ளூர் = ஊர்
உள்
(ஊருள் என்பது முன்பின் மாறி உள்ளூர் என்று வந்தது) குரீஇ = குருவி; சூல்
= கருப்பம்; பேடை = பெண்குருவி;
ஈனுதல் = பெறுதல்; ஈனில்
= ஈனுவதற்காக அமைக்கப்பட்ட இல்லம் (முட்டை இடுவதற்காக
அமைக்கப்பட்ட கூடு); இழைத்தல் = செய்தல்,
அமைத்தல்; தேம் = தேன்;
பொதிதல் = நிறைதல்; தீ
= இனிமை; கழை = தண்டு;
நாறா = மணமில்லாத; கொழுதல்
= கோதியெடுத்தல்; யாணர் = புதுவருவாய்; ஊரன் = மருதநிலத்
தலைவன்; வாய் = சொல்; வாயே = சொல்லில் மட்டும்.
உரை: ஊரினுள்
இருக்கும் பெண்குருவியின் துணையாகிய ஆண்குருவி துள்ளிய நடையை உடையது. அந்த ஆண்குருவி, கருப்பம் முதிர்ந்த தன் துணையாகிய பெண்குருவி
முட்டை இடுவதற்காக ஒரு கூட்டை அமைப்பதற்குத் தேன் போன்ற இனிமை நிறைந்த தண்டுகளையுடைய கரும்பின் மணமில்லாத பூக்களைக் கோதியெடுக்கும்.
அத்தகைய குருவிகள் வாழும் ஊரனாகிய தலைவன் புதுவருவாயை உடையவன்.
அந்தத் தலைவனிடமிருந்து தூதுவனாக வந்த பாணன், ”தலைவன் எல்லாரினும் இனிமையானவன்; உன்மீது மிகுந்த அன்புடையவன்.”
என்று தலைவியிடம் கூறுகிறான். “இந்தப் பாணன் சொல்லுவது
பேச்சளவில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாமே தவிர, தலைவன் உண்மையில்
அத்தகையவன் அல்லன்” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.
விளக்கம்: முட்டையிடும்
இடம் மெதுவாக இருத்தல் கருதி, சேவல் கரும்பின் பூவைக் கோதியது
என்று தோன்றுகிறது. பறவைகளும் தங்கள் துணையிடம் பேரன்பு காட்டும்
ஊருக்குத் தலவனுக்கு அந்தப் பண்பு இல்லையே என்பது குறிப்பு.
தேன் போன்ற இனிமையுடைய கரும்பின்
தண்டுகள் இருக்க,
மணமும் நன்னிறமும் இல்லாத கரும்பின் பூவைக் குருவி கோதுவது, அறத்தோடு கூடிய இன்பத்தைத் தரும் தலைவி (மனைவி)
இல்லத்தில் இருக்கும்பொழுது அவள்மேல் அன்பின்றி, அறநெறியிலிருந்து தவறி வாழும் அன்பில்லாத பரத்தையரைத் தலைவன் விரும்பினான்
என்பதை உள்ளுறை உவமமாகக் குறிக்கிறது.
அன்பினனே என்பதில் ஏகாரம்
அசைநிலை;
வாயே என்பதில் ஏகாரம் பிரிநிலை (பலவற்றுள் ஒன்றைப் பிரித்துக் கொள்வது).
No comments:
Post a Comment