84.
பாலை - செவிலி கூற்று
பாடியவர்: மோசிகீரனார்.
இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 59-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: பொழுது
புலர்ந்தது.
வீட்டில் தலைவியைக் காணவில்லை. தலைவியின் தாய்
“என் மகளைக் காணவில்லையே. அவள் எங்கே போயிருப்பாள்?
உனக்குத் தெரியுமா?” என்று செவிலித்தாயைக் கேட்கிறாள்.
செவிலித்தாய், “அப்படியா? அவளைக் காணவில்லையா? ஐயோ ! எனக்குத்
தெரியாதே.” என்கிறாள். அப்பொழுது,
தோழி அங்கே ஓடிவருகிறாள். தலைவியின் தாய்
“ என் மகளைக் காணவில்லையே! அவள் உன்னிடம் ஏதாவது
சொன்னாளா? அவள் எங்கே இருக்கிறாள் என்று உனக்காவது தெரியுமா?”
என்று பதட்டத்துடன் கேட்கிறாள். “எனக்கு இப்பொழுது
தான் தெரியும். நேற்று இரவு, தலைவி தன்
காதலனோடு இந்த ஊரைவிட்டுச் சென்றதாகவும், அவர்கள் இருவரும் போவதைச்
சிலபெண்கள் பார்த்ததாகவும் கேள்விப்பட்டேன்.
அதைச் சொல்லத்தான் நான் ஓடோடி வந்தேன்.” என்று
தோழி கூறுகிறாள். தலைவியின் தாய் செய்வதறியாது
மனம் கலங்குகிறாள். ”உன்னோடுதானே நேற்று
இரவு படுத்திருந்தாள். அவள் போனது உனக்குத் தெரியாதா?”
என்று தாய் குழப்பத்தோடு செவிலித்தாயைக் கேட்கிறாள். ”நேற்று இரவு அவள் என்னோடு படுத்து இருந்தபொழுது நான் அவளைத் தழுவிக்கொண்டு
படுத்திருந்தேன். அவள் என்னைவிட்டு விலகிச் சற்றுத் தள்ளிப் படுத்தாள்.
நான் அவளை மீண்டும் தழுவினேன். அப்பொழுது அவள்,
’எனக்கு வியர்க்கிறது’ என்று கூறினாள்.
அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பது எனக்கு அப்பொழுது புரியவில்லை;
இப்பொழுது புரிகிறது. வீட்டைவிட்டுத் தலைவனோடு
போவதற்கு நான் அவளைத் தழுவியது அவளுக்கு இடையூறாக இருந்தது போலும்.” என்று செவிலித்தாய் கூறுகிறாள்.
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே.
-
கொண்டுகூட்டு: கழல்தொடி
ஆஅய் மழைதவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியள். பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள். அது துனியாகுதல் இனி அறிந்தேன்.
ஆம்பல் மலரினும் தான் தண்ணியள். பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள். அது துனியாகுதல் இனி அறிந்தேன்.
அருஞ்சொற்பொருள்: பெயர்தல்
= மீளுதல்; பெயர்த்து
= மீண்டும்; முயங்குதல் = தழுவுதல்; வியர்த்தனென் = வியர்வை
அடைந்தேன்; இனி = இப்பொழுது; துனி = வெறுப்பு; கழல்தொடி
= கழலுமாறு அணியப்பட்ட தோள்வளை; ஆஅய் =
ஆய் , கடையெழு வள்ளல்களில் ஒருவன்; மழை = மேகம்; பொதியில்
= பொதிய மலை; வேங்கை = ஒருவகைப்
பூ; காந்தள் = ஒருவகைப் பூ; நாறி = மணந்து; ஆம்பல்
= ஆம்பல் மலர்; தண்ணியள் = குளிர்ச்சியானவள்.
உரை: கழலுமாறு
அணிந்த தோள் வளையையுடைய ஆய் என்னும் வள்ளலின், மேகங்கள் தவழும் பொதியின் மலையில்
பூக்கும் வேங்கை மலரையும் காந்தள் மலரையும் போல மணத்தையும், ஆம்பல்
மலரைக் காட்டிலும் குளிர்ச்சியையும் உடையளாகிய என்மகள், யான்
ஒருமுறை தழுவியதோடு நிறுத்தாமல் மீண்டும் தழுவும்பொழுது, ”எனக்கு வியர்க்கிறது.”
என்று கூறினாள்; நான் தழுவியது அவளுக்கு
வெறுப்பை உண்டாக்கியதற்குக் காரணத்தை அவள் அவ்வாறு கூறியபொழுது நான் அறிந்திலேனாயினும்
இப்பொழுது அறிந்தேன்.
விளக்கம்: செவிலித்தாய்
தலைவியைத் தன் அருகில் தூங்க வைப்பதும், தூங்கும் பொழுது அவளை
அன்போடு தழுவிக்கொள்வதும் வழக்கம். ” பெயர்த்தனென்” என்றதால் அன்றிரவு முன்பு ஒருமுறை
தழுவினாள் என்பது தெரியவருகிறது. அவ்வாறு தழுவிய பழக்கத்தால்
செவிலித்தாய் மீண்டும் ஒருமுறை தலைவியைத் தழுவ முயன்றாள். ”வியர்த்தனென்” என்று தலைவி கூறியது “என்னைத் தழுவாதே” என்று தலைவி செவிலித்தாயை நோக்கிக் கூறியதைக் குறிக்கிறது. தலைவி செவிலித்தாயிடம் தன்னைத் தழுவ வேண்டாம் என்று கூறியதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கலாம். ஒன்று, தலைவி தலைவனோடு இரவில்
யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டுச் செல்லுவதற்குத் திட்டமிட்டிருக்கலாம். செவிலித்தாய் அவளைத் தழுவினால் அவளைவிட்டுப் பிரிந்து செல்லுவது கடினம்.
ஆகவே, தலைவி “எனக்கு வியர்க்கிறது;
என்னைத் தழுவாதே.” என்று கூறியிருக்கலாம்.
மற்றொரு காரணம், அவள் தலைவனால் தழுவப்படுவதை மட்டுமே
விரும்பியிருக்கலாம்.
பொதிய மலைக்கு உரியவன்
ஆய். அவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். ”மழைதவழ் பொதியில்” என்றது, காந்தளும்
வேங்கையும் வளமாக வளர்தற்குரிய மழை பொதிய மலையில் உண்டு என்பதைக் குறிக்கிறது.
தலைவியோடு நெருங்கிப் பழகி, தினமும் அவளோடு தூங்கும் பழக்கம் உள்ளவளாதலால், செவித்தாய்க்குத்
தலைவியின் உடலின் நறுமணத்தையும் தண்மையையும் நன்கு அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.
குறிஞ்சிநிலத்திற்குரிய மலர்களாகிய வேங்கை, காந்தள்
ஆகியவற்றின் மணத்தை செவிலித்தாய் நன்கு அறிந்தவளாதலால் அவற்றைத் தலைவியின் உடலில் இயற்கையாக
உள்ள மணத்திற்கு உவமையாகக் கூறினாள். ஆம்பல்மலர் தண்ணீரில் உள்ள
மலராகையால் செவிலித்தாய் அதைத் தலைவியின் உடலின் குளிர்ச்சிக்கு உவமையாகக் கூறினாள்.
No comments:
Post a Comment