Sunday, November 6, 2016

263. தோழி கூற்று

263. தோழி கூற்று

பாடியவர்: பெருஞ்சாத்தனார்.  இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : "அன்னை வெறியாட்டெடுக்கக் கருதா நின்றாள்; இனி, யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?" எனத் தோழி, தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவி களவொழுக்கத்தை விரும்பவில்லை. அவள் தலைவனைத் திருமணம் செய்துகொள்ள ஆவலாக இருக்கிறாள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் மேற்கொள்ளாததால் தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். வருத்தத்தால் தலைவி உடல் மெலிந்தாள். தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்ட  தாய், வெறியாட்டு நடத்த முடிவெடுத்தாள். ஒருநாள் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக வந்து மறைவிடத்திலே நிற்கிறான். அவன் காதுகளில் விழுமாறு, தலைவியின் தாய் வெறியாட்டு நடத்தப் போவதைத் தோழி தலைவியிடம் உரைக்கிறாள். அந்தச் செய்தியைக் கேட்டால் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தலைவன் விரைவில் செய்வான் என்று தோழி எதிர்பார்க்கிறாள்.

மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்
நோதக் கன்றே தோழி மால்வரை
மழைவிளை யாடு நாடனைப்
பிழையே மாகிய நாமிதற் படவே. 

கொண்டு கூட்டு: தோழி! மால்வரை மழை விளையாடு நாடனைப் பிழையேமாகிய நாம் இதற்பட, மறிக்குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇச் செல் ஆற்றுக் கவலைப் பல்லியம் கறங்கத் தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா வேற்றுப் பெரும் தெய்வம் பலவுடன் வாழ்த்தி, ”இவள் பேஎய்க் கொளீஇயள் எனப் படுதல் நோதக்கன்று.

அருஞ்சொற்பொருள்: மறி = ஆட்டுக்குட்டி; குரல் = கழுத்து; பிரப்பு = தானியங்களை பலியாக வைத்தல்; இரீஇ = இருத்தி; கவலை = ஆற்றின் நடுவே உள்ள மணல்மேடு; பல்லியம் = பலவகையான இசைக்கருவிகள்; கறங்க = ஒலிக்க; தோற்றம் = வெளிப்படுதல் (சாமி வந்து ஆடுதல்); பேய்க் கொளீஇயள் = பேயால் கொள்ளப்பட்டவள்; நோதக்கன்று = வருந்தத் தக்கதாகும்; மால் = பெருமை; வரை = மலை.

உரை: தோழி! பெரிய மலையினிடத்து,  மேகம் விளையாடுகின்ற நாட்டிற்குத் தலைவனிடம் மாசற்ற கதல் கொண்டவர்களாகிய நாம், இக் களவொழுக்கத்திலே ஈடுபட்டிருக்கிறோம். அதை அறியாமல், ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து, அதன் குருதியோடு கலந்த தினையை பலியாக வைத்து, ஓடுகின்ற ஆற்று நடுவில் உள்ள மணல்மேட்டில், பலவகையான இசைக் கருவிகள் முழங்க, வெறியாட்டு நடத்தும்பொழுது, வேலன்மீது தெய்வம் வெளிப்படுதலை அன்றி,  நம்முடைய காம நோய்க்குப் பரிகாரம் ஆகாத,  வேறு பல பெருந்தெய்வங்கள் பலவற்றை ஒருங்கே வாழ்த்தி, இவள் பேயால் கொள்ளப் பட்டாள்.” என்று கூறுவது, வருந்துதற்கு உரியதாகும்.


சிறப்புக் குறிப்பு: தலைவியின் காமநோய்க்குப் பரிகாரம் தலைவன்தான். ஆகவே, இங்குவேற்றுப் பெருந்தெய்வம்என்று தோழி கூறியது வஞ்சப் புகழ்ச்சியாகத் தோன்றுகிறது

No comments:

Post a Comment