272. தலைவன் கூற்று
பாடியவர்: ஒருசிறைப்
பெரியனார். இவர் ஒருசிறைப் பெயரினார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் நாஞ்சில் நாட்டைச் சார்ந்தவர். நாஞ்சில் வள்ளுவனைப் பாடுவதில் இவர் மிகுந்த
விருப்பமுடையவர். இவர் புறநானூற்றில்
ஒருபாடலும்
(137), குறுந்தொகையில்
ஒருபாடலும் (272) நற்றிணையில் ஒருபாடலும் (121) இயற்றியுள்ளார். திணை: குறிஞ்சி.
கூற்று: கழறிய (இடித்துரைத்த) பாங்கற்குக் கிழவன் (தலைவன்) உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவி
அவள் தமையன்மாரோடு இருக்கிறாள். அவர்கள் மிகவும் கொடியவர்கள்.
அதனால், தலைவியை மீண்டும் சந்திக்க முடியுமா
என்ற எண்ணத்தோடு, தலைவன் மிகுந்த வருத்தத்தோடு
இருக்கிறான். அவன் நிலையைக் கண்ட தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? நீ இவ்வாறு இருப்பது சரி அன்று.”
என்று கடிந்துரைக்கிறான். கடிந்துரைத்த
தோழனுக்குத் தலைவனின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.
தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன வுண்கண்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே.
கொண்டு கூட்டு: மாண்ட வில்லுடை வீளையர், கல்லிடுபு எடுத்த நனந்தலைக் கானத்து, இனம்தலைப் பிரிந்த புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர் சிலைமாண்
கடுவிசைக் கலை நிறத்து அழுத்தி, குருதியொடு பறித்த
செங்கோல் வாளி மாறுகொண்டன்ன உண்கண் நாறிருங் கூந்தல் கொடிச்சி தோள் தீண்டலும்
இயைவது கொல்லோ?
அருஞ்சொற்பொருள்: மாண்ட = மாட்சிமைப்பட்ட (சிறந்த); வீளை
= சீழ்க்கை (சீட்டி); இடுபு
= இட்டு; நனம் தலை = அகன்ற
இடம்; தலைப் பிரிதல் = கூட்டத்தைவிட்டுத்
தனித்துப் பிரிதல்; புன்கண் = துன்பம்; மடமான்
= இளம் பெண்மான்; நேர்பட = நேரில் இருக்க; ஐயர் = தமையன்மார்;
சிலை = ஒலி; மாண்
= மிகுதல்; கடு விசை = மிகுந்த
வேகம்; கலை = ஆண்மான்; நிறம் = மார்பு; வாளி =
அம்பு; செங்கோல் வாளி = சிவந்த
திரண்ட அம்பு; உண்கண் = மைதீட்டிய கண்;
நாறும் = மணக்கும்; கொடிச்சி
= குறிஞ்சி நிலப்பெண்.
உரை: நான்
விரும்பும் பெண்ணின் தமையன்மார், தங்கள் சிறந்த வில்லோடு,
சீழ்க்கை ஒலி எழுப்பிக்கொண்டு, கற்களை
வீசியதால், அகன்ற
இடத்தை உடைய காட்டில், தன் இனத்தினின்றும் பிரிந்து, துன்புறுகின்ற பெண்மான் எதிர்பட்டவுடன், ஒலி எழுப்பிக்கொண்டு மிகுந்த வேகத்தோடு செல்கின்ற ஆண்மானின்
மார்பில் சிவந்த திரட்சியை உடைய அம்பை அழுந்தச் செய்து, குருதியோடுகூடிய
அந்த அம்பைப் பிடுங்குவர்.
அந்த அம்பைப் போன்ற, ஒன்றை ஒன்று மாறுபட்டாற்
போன்ற மைதீட்டிய கண்களையும், மணம் வீசுகின்ற கரிய கூந்தலையும்
உடைய, தலைவியினுடைய தோள்கள், மீண்டும் ஒருமுறை தழுவுவதற்குக் கிடைக்குமோ?
சிறப்புக்
குறிப்பு:
பெண்மானின்
எதிரில் ஆண்மானைக் கொன்ற வல்லமை உடைய தமையன்மாரோடு இருக்கும் தலைவியை அடைவது அரிது
என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான். குருதியோடு கலந்த
சிவந்த அம்பு தலைவியின் சிவந்த கண்களுக்கு உவமை. தலைவியின்
அம்பு போன்ற கண்கள் தன்னை வருத்துவதாகவும் தலைவன் கூறுகிறான். அவளோடு முன்பு பழகியதால் அவள் கூந்தலின் நறுமணம் அவனுக்கு நினைவுக்கு
வருகிறது.
No comments:
Post a Comment