270.
தலைவன் கூற்று
பாடியவர்: பாண்டியன்
பன்னாடு தந்தான். இவன் பலநாடுகளை வென்று பாண்டியநாட்டோடு இணைத்ததாகக் கருதப்படுகிறது. இவன் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று : வினைமுற்றிப்
புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடன் இருந்து கூறியது.
கூற்று
விளக்கம்: தலைவன்
கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிப் பொருள் தேடச் சென்றான். அவன் கூறியது போலவே, அவன் கார்காலத்தில் பொருளோடு திரும்பிவந்தான்.
தான் பொருள் தேடுவதில் வெற்றி அடைந்ததால் மகிழ்ச்சியுடன், அவன் தன் மனைவியோடு படுக்கையில் இருக்கிறான். அப்பொழுது
மேகம் மின்னலோடும் இடியோடும்கூடி மழை பெய்கிறது. தான் பொருள்
தேடுவதில் வெற்றி பெற்றதாலும், கார்காலத்திற்கு முன்னரே திரும்பி
வந்ததாலும், மனைவியோடு கூடி இருப்பதாலும் மகிழ்ச்சி அடைந்த தலைவன்
மேகத்தை நோக்கி, “மழையே நீ நன்றாகப் பெய்வாயாக” என்று வாழ்த்துகிறான்.
தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ
டிவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.
கொண்டு
கூட்டு:
யாம்
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு, இவளின் மேவினம்
ஆகிக், குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் நறுமென் கூந்தல்
மெல் அணையேம்; பெருவான்! இனி தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழ் உறை இனிய சிதறி ஊழின் கடிப்பு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்து
வாழியோ!
அருஞ்சொற்பொருள்: தாழ்
இருள்
= தங்கியிருக்கின்ற இருள்; துமித்தல் =
வெட்டுதல்; தண் = குளிர்ச்சி;
வீழ் = விழும்; உறை
= மழைத்துளி; ஊழின் = முறைப்படி;
கடிப்பு = குறுந்தடி; இகு
= இறக்கம், வீழ்ச்சி; வான்
= மேகம்; செய்வினை முடித்த = செய்யும் தொழிலில் வெற்றிபெற்ர (பொருள் தேடுவதில் வெற்றி
பெற்ற); செம்மல் = உள்ள நிறைவு;
மேவுதல் = விரும்புதல்.
உரை: நாம், பொருள் தேடுவதில் வெற்றி பெற்று நிறைவுடன்
கூடிய உள்ளத்தோடு, தலைவியோடு விரும்பிக் கூடி , மலர்ந்த குறுகிய காம்பை உடைய அன்றலர்ந்த குவளை மலர் மணக்கும் தலைவியின் அழகிய
கூந்தலாகிய மென்மையான படுக்கையில் உள்ளேம். ஆதலின், பெரிய மேகமே! இப்பொழுது, தங்கிய இருள் கெடும்படி மின்னி, குளிர்ச்சி உண்டாகும்படி விழுகின்ற துளிகளுள் இனியவற்றைச் சிதறி, முறையாக குறுந்தடியால் அடிக்கப்படும்
முரசைப் போல முழங்கி, பலமுறை இடித்து, மழையைப்
பெய்து வாழ்வாயாக!
சிறப்புக் குறிப்பு: பொருள்
தேடுவதில் வெற்றி அடைந்த தலைவன், தான் மேற்கொண்ட இல்லறத்துக்குரிய
பொருள் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தான். மேலும், தலைவியோடு கூடியிருப்பதால் இன்பமும் அடைந்தான். ஆகவே, மன நிறைவினால் மழையை
வாழ்த்துகிறான்.
No comments:
Post a Comment