292. தோழி கூற்று
பாடியவர்: பரணர்.
இவரைப்
பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி
இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது.
கூற்று
விளக்கம்: ஒருநாள், தலைவன் தலைவியைக் காண்பதற்காக இரவு நேரத்தில்
வந்து, வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறான். அவன் வந்திருப்பதை அறிந்த தோழி, “அன்றொருநாள் தலைவன்
விருந்தினரைப் போல் நம் வீட்டிற்கு வந்ததை நம் தாய் பார்த்துவிட்டாள். அதிலிருந்து, அவள் உன்னைக் கடுமையான காவலில்
வைத்திருக்கிறாள். அவள் நரகத்திற்குத்தான் போகப்போகிறாள்.”
என்று தலைவன் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள். தலைவியின் நிலையை அறிந்தால், தலைவன் திருமணத்திற்கான
ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தோழி எண்ணுகிறாள்.
மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே.
கொண்டு
கூட்டு:
ஒருநாள்
நகைமுக விருந்தினன் வந்தென, பகைமுக ஊரின் அன்னை துஞ்சல் இலள். மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான், பெண்கொலை
புரிந்த நன்னன் போல, வரையா நிரையத்துச் செலீஇயர்.
அருஞ்சொற்பொருள்: மண்ணுதல் = நீராடுதல்; நுதல் = நெற்றி;
ஒண்ணுதல் = ஒள்+நுதல்
= ஒளிபொருந்திய நெற்றி; அரிவை = இளம்பெண் (தலைவி); புனல்
= நீர்; பசுங்காய் = பச்சைக்காய்
(பச்சை மாங்காய்); ஒன்பதிற்று ஒன்பது =
எண்பத்து ஒன்று; நிறை = எடை;
வரையா = மீளமுடியாத; நிரையம்
= நரகம்; பகைமுகம் = போர்முனை.
உரை: ஒருநாள், மலர்ந்த முகத்துடன் விருந்தினனைப் போல் தலைவன்
வீட்டுக்குள் வந்ததைக் நம் அன்னை கண்டாள். அதுமுதல், பகைவரின் போர்முனையில் இருக்கும்
ஊர்மக்களைப் போல், அன்னை பல நாட்களாகத் தூங்காமல்
இருக்கிறாள். நீராடுவதற்காகச் சென்ற, ஒளிபொருந்திய
நெற்றியை உடைய பெண், அந்த நீர் கொண்டுவந்த பச்சை மாங்காயைத்
தின்ற குற்றத்திற்காக, அவள் தந்தை எண்பத்தொரு ஆண்யானைகளோடு, அவளது எடைக்கு
ஈடாகப் பொன்னால் செய்த பாவையையும் கொடுத்ததை ஏற்றுக்கொள்ளாமல், அப்பெண்ணைக் கொலைசெய்த நன்னனைப் போல, நம் அன்னை மீளமுடியாத
நரகத்திற்குச் செல்வாளாக!
சிறப்புக்
குறிப்பு:
சங்க
காலத்தில்,
ஓரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு ஏற்ற
விடுதிகள் இல்லை. தம்முடைய ஊருக்குப் புதிதாக வந்து, தங்க இடமில்லாமல் இருப்பவர்களுக்கு, அவ்வூரில்
இருப்பவர்கள் அவர்களை விருந்தினராக உபசரிப்பது வழக்கம். அவர்கள்,
தாம் உறங்குவதற்குகுன், தம் வீட்டுத்
திண்ணையில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களை உள்ளே வரவழைத்து
விருந்தளிப்பது வழக்கம். அவ்வாறு, ஒருநாள்
தலைவன் வழிப்போக்கனைப் போல் தலைவி வீட்டுக்கு வந்தான். அவன் வந்ததைத் தலைவியின்
தாய் கண்டாள். அதிலிருந்து அவள் தலைவியைக் கடுமையான காவலில்
வைத்தாள். தலைவியை அவள் தாய் காவலில் வைத்தது நன்னன் செய்த
பெண்கொலையைப் போன்ற கொடிய செயல் என்று தோழி கருதுகிறாள்.
சங்க காலத்தில், ஒவ்வொரு அரசனும் தன் நாட்டிலுள்ள ஒருமரத்தைக் காவல் மரமாக வைத்திருந்தான்.
அந்த மரத்தை வெட்டுவது, அந்த மரத்தின் கிளைகளை ஒடிப்பது,
அந்த மரத்தின் காய் அல்லது பழங்களை உண்ணுவது போன்ற செயல்கள்
பெருங்குற்றங்களாகக் கருதப்பட்டன. அத்தகைய குற்றங்களுக்குக் கடும் தண்டனைகள்
விதிக்கப்பட்டன. நன்னன் என்ற சிற்றரசனுக்கு மாமரம் ஒன்று காவல் மரமாக இருந்தது.
அவனுடைய காவல் மரத்திலிருந்து விழுந்த காய் ஒன்று ஆற்று நீரில் மிதந்து சென்றது.
அங்கு, குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத்
தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாட்கள் அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத்
தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேள்வியுற்ற நன்னன், அந்தப்
பெண்ணை அழைத்துவரச் சொன்னான். அப்பெண் செய்த குற்றத்திற்காக அவள் தந்தை
அப்பெண்ணின் எடைக்கு ஈடாகப் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும், எண்பத்தொரு யானைகளையும் நன்னனுக்குத் தண்டனையாக அளிப்பதாகக் கூறினான்.
நன்னன் அதை ஏற்க மறுத்து, அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன்
வேலையாட்களைப் பணித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். நன்னன் பெண்கொலை செய்தவன்
என்று பலராலும் பழிக்கப்பட்டான். அவன் செயலால் அவனது குலத்தினரும் நீங்காத பழி
உற்றனர். இச்செய்தி புறநானூற்றுப் பாடல் 151 – இல்
குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment