297. தோழி கூற்று
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக்
காரிக்கண்ணனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி
வரைவு மலிந்தது.
(மலிந்தது – திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவது)
கூற்று
விளக்கம்: தலைவனும்
தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்துவந்தார்கள். தலைவி தலைவனைக் காண முடியாத சூழ்நிலை உருவாகியது. தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விக்கத் தலைவியின் பெற்றோர்கள்
சம்மதிக்க மாட்டர்கள் என்பதைத் தோழி தெரிந்துகொண்டாள். ஆகவே, “இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே நீ செய்யக் கூடிய நல்ல செயல்.”
என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.
அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்
வைவார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர்
உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப்
புணர்ந்துடன் போதல் பொருளென
உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே.
கொண்டு
கூட்டு:
அவ்
விளிம்பு உரீஇய, கொடுஞ்சிலை மறவர் வை வார் வாளி விறல் பகை
பேணார் மாறுநின்று இறந்த ஆறுசெல் வம்பலர் உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் கல் உயர்
நனந்தலை நல்ல கூறி, புணர்ந்து உடன் போதல் பொருள்என அவர் உணரா ஊங்கு மன்ற உணர்ந்தேன்.
அருஞ்சொற்பொருள்: விளிம்பு = நாண்; உரீஇய = உருவி இழுத்துக்
கட்டிய; சிலை = வில்; வை = கூர்மை; வார் = நீண்ட; வாளி = அம்பு; விறல் = வலி; பேணல் = காத்தல்; மாறுநின்று = எதிரே
நின்று; வம்பலர் = வழிப்போக்கர்;
உவல் = தழை; பதுக்கை
= குவியல்; நனந்தலை = அகன்ற
இடம்.
உரை: மேல்
விளிம்பை இழுத்துக் கட்டிய கொடிய வில்லையுடைய மறவர்களின் கூர்மையான நீண்ட
அம்பின் வலிய பகையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளாமல், எதிரே நின்று இறந்த வழிப்போக்கர்கள்மீது, தழையை இட்டுவைத்த குவியல்கள், ஊரைப்போலத் தோன்றுகின்ற, மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற
பலை நிலத்தில், நல்ல சொற்களைக் கூறித் தலைவன் உன்னை
உடன்போக்கில் அழைத்துச் செல்வதுதான் அவன் செய்யத்தக்க செயல் என்று, அவன் உணர்வதற்கு முன்னர், நான் அதை உறுதியாக உணர்ந்தேன்.
No comments:
Post a Comment