293. தலைவி கூற்று
பாடியவர்: கள்ளில்
ஆத்திரையன்.
கள்ளில் என்பது தொண்டை நாட்டிலுள்ள ஒரூர். இவர் புறநானூற்றில் இரண்டு பாடல்களும்
(175, 389), குறுந்தொகையில் ஒருபாடலும் (294), நற்றிணையில் ஒருபாடலும் (293) இயற்ரியுள்ளார்.
திணை: மருதம்.
கூற்று : பரத்தையிற்
பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்கத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்: பரத்தையிடமிருந்து
பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “தலைவன் இங்கு இருப்பது பரத்தைக்குத் தெரியுமானால், அவள்
இங்கு வந்து அவனைக் கொண்டு செல்வள்” என்று தலைவி கூறுகிறாள்.
கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி யருமன் மூதூ ரன்ன
அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை
தித்திக் குறங்கின் ஊழ்மா றலைப்ப
வருமே சேயிழை யந்திற்
கொழுநற் காணிய அளியேன் யானே.
கொண்டு
கூட்டு:
கள்ளின்
கேளிர் ஆத்திரை உள்ளூர்ப் பாளை தந்த பஞ்சியம் குறுங்காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதூர் அன்ன சேயிழை அயவெள் ஆம்பல் அம்பகை நெறித்தழை தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப, அந்தில்
கொழுநன் காணிய வரும். யான் அளியேன்.
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதூர் அன்ன சேயிழை அயவெள் ஆம்பல் அம்பகை நெறித்தழை தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப, அந்தில்
கொழுநன் காணிய வரும். யான் அளியேன்.
அருஞ்சொற்பொருள்: கேளிர் = நண்பர்கள்; கள்ளின் கேளிர் = கள்
குடிக்கும் வழக்கம் உள்ளவர்களின் கூட்டம்; ஆத்திரை = யாத்திரை; பாளை = பனை, தெங்கு முதலியவற்றின் பூவை மூடிய
மடல்; பஞ்சி = நார்; இரும் = பெரிய; பெண்ணை
= பனை; பெயர்தல் = திரும்பி வருதல்; அயம்
= நீர், குளம்; தித்தி
= தேமல்; குறங்கு = துடை;
ஊழ் = முறை; ஊழ்மாறு
= முறையே மாறி மாறி; அலைத்தல் = அசைத்தல்; சேயிழை = செம்பொன்னாலான அணிகலன்களை அணிந்த
பெண்; அந்தில் = அவ்விடம்; கொழுநன் = கணவன்.
உரை: ஆதி
அருமனுக்குரிய பழைமையான ஊரில், கள் குடிக்கும் விருப்பத்தோடு செல்பவர்கள், கள்ளைக் குடித்துவிட்டுத் திரும்பும் பொழுது அங்கு
உள்ள பாளை ஈன்ற நாரையுடைய
சிறிய காய்களைக்கொண்ட, உயர்ந்த கரிய பனையின் நுங்கையும் கொண்டு
செல்வர். அதைப்போல், செம்பொன்னால்
செய்த சிறந்த அணிகலன்களை அணிந்த பரத்தை,
நீரில் வளர்ந்த வெண்ணிறமான ஆம்பலின் அழகிய நிறம் மாறுபட்ட முதிர்ந்த
தழைகளால் தைக்கப்பட்ட தழையுடை, அவளின் தேமலை உடைய துடையில்
முறையே மாறி மாறி அசைய, அவ்விடத்திலே தலைவனைக் காணும்
பொருட்டு வருவாள். நான் இரங்கத் தகுந்தவள்.
சிறப்புக் குறிப்பு: பனை
மரத்தில் உள்ள கள்ளை உண்ணச் சென்றோர், அதனை உண்ணுவது மட்டுமல்லாமல்
நுங்கைப் பறித்து பனைமரத்திற்கு கேடு விளைவித்ததைப் போலத் தலைவனைக் காண வரும் பரத்தை, அவனைக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல், தன்னைப் பழிப்பாள் என்று தலைவி எண்ணுகிறாள்.
No comments:
Post a Comment