319. தலைவி கூற்று
பாடியவர்: தாயங்
கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று : பருவ
வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிரழிந்து சொற்றது. (வன்புறை = தோழி வற்புறுத்தி ஆற்றுவிப்பது; எதிரழிதல் = ஆற்றுவிக்கவும் ஆற்றாது வருந்துதல்;
சொற்றது = சொல்லியது)
கூற்று
விளக்கம்: தலைவன்
திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் தலைவன் வராததால், தலைவி மனம் வருந்தி, உடல் மெலிந்து காணப்பட்டாள். அவள் நிலையைக் கண்ட தோழி, “ நீ பொறுமையாக இருக்க வேண்டும்.
தலைவர் விரைவில் வந்துவிடுவார்.” என்று தலைவிக்கு
ஆறுதல் கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, “அதோ பார்! மான்களும் யானைகளும் தங்கள் துணையோடுகூடி இன்பமாக
இருக்கின்றன. நான் மட்டும் தலைவனைப் பிரிந்து தனிமையில் தவிக்கிறேன்.
தலைவன் விரைவில் வராவிட்டல் என் நிலை என்ன ஆகும்?” என்று தன் துயரத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.
மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்
மாலைவந் தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்
என்னாந் தோழிநம் இன்னுயிர் நிலையே.
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்
மாலைவந் தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்
என்னாந் தோழிநம் இன்னுயிர் நிலையே.
கொண்டு
கூட்டு:
தோழி! மான் ஏறு மடப்பிணை தழீஇ மருள் கூர்ந்து, கானம்
நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும், கையுடை நன்மாப்
பிடியொடு பொருந்தி, மையணி மருங்கின் மலையகம் சேரவும், மாரி மாமழை மாலை வந்தன்று. பொன்நேர் மேனி நன்னலம் சிதைத்தோர் இன்னும்
வாராராயின், நம் இன் உயிர் நிலை என் ஆம்?
அருஞ்சொற்பொருள்: மான்ஏறு = ஆண்மான்; மடம் = இளமை; பிணை = பெண்மான்; மருள்
= மயக்கம்; கூர்தல் = மிகுதல்;
கானம் = காடு; நண்ணுதல்
= பொருந்துதல், இருத்தல்; கை = துதிக்கை; மா = யானை (இங்கு, ஆண்யானையைக் குறிக்கிறது);
பிடி = பெண்யானை; மை
= மேகம்; மருங்கு = பக்கம்;
நேர் – உவமை; வந்தன்று
= வந்தது; மாரி = கார்காலம்.
உரை: தோழி!, ஆண்மான்கள், இளம் பெண்மான்களைத் தழுவி,
மயக்கம் மிகுந்து, காட்டில் உள்ள, புதலில் மறைந்து ஒடுங்கவும், துதிக்கையையுடைய நல்ல ஆண்யானைகள்,
பெண் யானைகளோடு சேர்ந்து, மேகங்கள் பொருந்திய பக்கத்தையுடைய மலையை அடையவும், கார்காலத்துக்குரிய பெரிய மழை, மாலைக்காலத்தில்
வந்தது. பொன்னையொத்த எனது மேனியின், நல்ல அழகைக் கெடுத்த தலைவர், இன்னும் வராவிட்டால், நம்முடைய இனிய உயிரின் நிலை,
என்ன ஆகும்?
சிறப்புக் குறிப்பு: மழையைப்
பற்றிக் குறிப்பிட்டது கார்காலம் வந்தது என்பதைக் குறிக்கிறது. கையுடை நன்மா என்றது யானையைக் குறிக்கிறது. மழையை
அஞ்சி, மான் முதலிய
விலங்குகள் தம் துணையோடு ஒடுங்கின.
தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச்சென்ற
கார்காலம் வந்தது.
ஆனால் தலைவன் இன்னும் வரவில்லை. அதனால் தலைவி வருத்தம் அடைந்தாள்.
அது மட்டுமல்லாமல் மான்களும் யானைகளும் மற்ற விலங்குகளும் தங்கள் துணையோடு
கூடி மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது தான் மட்டும் தன் காதலனைப் பிரிந்து வாழ்கிறோமே
என்பதை நினைத்துத் தலைவியின் வருத்தம் இன்னும் அதிகரித்தது.
No comments:
Post a Comment