321. தோழி கூற்று
பாடியவர்: இவர்
பெயர் தெரியவில்லை.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி, கிழத்திக்கு நொதுமலர் (அயலார்)
வரையுமிடத்து, "அறத்தொடு நிற்பேன்" என்றது.
கூற்று
விளக்கம்:
இப்பாடலில்,
தலைவியைத் தலைவன் அல்லாத வேறொருவருக்குத் திருமணம் செய்விப்பதைப் பற்றிய
குறிப்பு எதுவும் இல்லை. அதனால், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும்
கூற்று பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இப்பாடலின் பின்னணியை,
வேறொருவிதமாகக் கற்பனை செய்யலாம்.
தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில்
தங்கள் காதலைத் தொடர்ந்து வருகிறார்கள். தலைவன் இரவில் வந்து
தலைவியைச் சந்திக்கிறான். ”இரவில் தலைவன் வரும் வழியில் அவனுக்கு
இன்னல்கள் நேரலாம் என்பதை நினைத்தால் எனக்கு அச்சமாக இருக்கிறது. இந்த நிலையில் களவொழுக்கத்தை எவ்வளவு காலம் நீடிப்பது?” என்று கூறித் தலைவி தன் மனநிலையைத் தோழியோடு பகிர்ந்துகொள்கிறாள். அதற்குத் தோழி, “ நீ வருந்தாதே! இனியும் களவொழுக்கத்தை நீடிப்பது முறையன்று. நான் உன்
களவொழுக்கத்தை உன் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தப் போகிறேன் (அறத்தொடு
நிற்கப் போகிறேன்). உனக்கு அதில் விருப்பம் உண்டு என்று நான்
நினைக்கிறேன்.” என்று தோழி கூறுகிறாள்.
மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை
மன்ற மரையா இரிய ஏறட்டுச்
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே.
கொண்டு
கூட்டு:
மடவரல்
அரிவை!
நின் மார்பு அமர் இன் துணை மலைச் செஞ்சாந்தின், ஆர மார்பினன்; சுனைப்பூங் குவளைச் சுரும்பு ஆர்
கண்ணியன்; நடுநாள் நம் மனை வந்து பெயரும். மன்ற மரையா இரிய, ஏறு அட்டுச் செங்கண் இரும்புலி குழுமும். அதனால், மறைத்தற் காலையோ அன்று. அன்னை! வாழி! நம் கதவே திறப்பல்! வேண்டு!
அருஞ்சொற்பொருள்: செஞ்சாந்து = செந்நிறமான சந்தனம்; ஆரம் = முத்து
மாலை; சுரும்பு = வண்டு; கண்ணி = தலையில் சூடப்படும் மாலை; நடுநாள் = நள்ளிரவு; மடவரல்
= இளமை; அரிவை = இளம்பெண்
; அமர்தல் = ஒன்றுதல், பொருந்துதல்;
மரையா = காட்டுமான்; இரிதல்
= ஓடுதல்; ஏறு = பல விலங்கினங்களின்
ஆணுக்குப் பொதுவான பெயர்; அட்டு = அழித்து;
குழுமுதல் = முழங்குதல்; காலை = சமயம்; கதவு திறப்பல்
= மறைவாக இருந்ததை வெளிப்படுத்துவேன்;
வேண்டு = விரும்புவாயாக; அன்னை – இங்கு தலைவியைக் குறிக்கிறது.
உரை: இளமை
பொருந்திய பெண்ணே
(தலைவியே)! உனது மார்பைத் தழுவும் இனிய தலைவன், மலையில் உண்டாகிய செஞ்சந்தனத்தையும் முத்து மாலையையும் அணிந்த மார்பினன்; சுனையில் மலர்ந்த, குவளை மலர்களைத் தொடுத்து, வண்டுகள் மொய்க்கின்ற மாலையாகத் தலையில் அணிந்தவன். அவன் நம் வீட்டிற்கு
நள்ளிரவில் வந்து, திரும்பிச் செல்கிறான். அந்த நேரத்தில், பொதுவிடத்தில் உள்ள மரையாவானது ஓட, அதன் ஆணைக்கொன்று,
சிவந்த கண்களையுடைய பெரிய புலி முழங்கும். அதனால்,
நம் களவொழுக்கத்தை மறைக்கும் காலம் இது அன்று. தலைவியே! நீ வாழ்க! நமது களவொழுக்கத்தை
நான் வெளிப்படுத்துவேன்; நீயும் அதையே நீ விரும்புவாயாக.
சிறப்புக்
குறிப்பு:
தலைவன்
இரவில் வரும்பொழுது அவனுக்கு இன்னல்கள் நேரிடலாம். அதனால்,
தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தைத் தொடராமல், திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று தோழி எண்ணுவதால், அவள் அறத்தொடு நிற்கப் போவதாகக் கூறுகிறாள். ”கதவு திறப்பல்” என்பது ஒரு மரபுத் தொடர். அது, பிறர் அறியாதவாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த களவொழுக்கத்தை பிறர் அறியுமாறு வெளிப்படுத்துவேன்
என்ற பொருளை உடையது.
No comments:
Post a Comment