325. தலைவி கூற்று
பாடியவர்: நன்னாகையார்.
திணை: நெய்தல்.
கூற்று : பிரிவிடை
ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றதை அறிந்த தோழி, தலைவிக்கு ஆறுதல் கூறுவதற்காக
வந்தாள். “தான் பிரிந்து
செல்லப் போவதாகத் தலைவன் பலகாலம் சொல்லிக்கொண்டிருந்தான். ஒருநாள்
அவன் அவ்வாறு என்னிடம் சொன்ன பொழுது, அவன் மீண்டும் பொய் சொல்லுவதாக
நினைத்து, என் பக்கத்தில் நில்லாமல் போ என்று சொன்னேன்.
அவன் உண்மையாகவே என்னைப் பிரிந்து சென்றுவிட்டான். எனக்கு ஆதரவாக இருந்த அவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ?” என்று தலைவி வருத்தத்தோடு தோழியிடம் கூறுகிறாள்.
சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்
மாயச் செலவாச் செத்து மருங்கற்று
மன்னிக் கழிகென் றேனே அன்னோ
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே.
கொண்டு
கூட்டு:
சேறும்
சேறும் என்றலின் பண்டைத் தன் மாயச் செலவாச் செத்து ”மருங்கு அற்று மன்னிக் கழிக” என்றேன். அன்னோ! ஆசு ஆகு எந்தை
யாண்டுளன் கொல்லோ? என் முலைஇடை நிறைந்து, கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்று.
அருஞ்சொற்பொருள்: சேறும் = செல்லுவேன்; மாயச் செலவு = பொய்ச்
செலவு (போகாமலே போகப் போவதாகப் பொய் சொல்லுவது); செத்து = எண்ணி; மருங்கு
= பக்கம்; மன்னுதல் = நிலைபெறுதல்;
ஆசு = பற்றுக் கோடு; எந்தை
= என் தந்தை போன்ற என் தலைவன்.
உரை: ”உன்னைப்
பிரிந்து செல்லப் போகிறேன்;
உன்னைப் பிரிந்து செல்லப் போகிறேன்.” என்று தலைவன்
பலகாலமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அவ்வாறு சொல்லும்
பொழுது, அவன் முன்பு போலப் பொய் சொல்லுகிறான் என்று எண்ணி,
“என் பக்கத்திலிருந்து ஒரேயடியாக நிலைபெற்று நீங்குக.” என்றேன். ஐயோ! நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் இப்பொழுது எங்கே
இருக்கின்றானோ! அவனது பிரிவால் அழுத என் கண்ணீரால் என் முலைகளின் இடையிலுள்ள இடம் நிறைந்து,
கரிய காலையுடைய வெண்ணிறமான நாரை, உணவை உண்ணும்
பெரியகுளம் போல ஆயிற்று.
No comments:
Post a Comment