Tuesday, July 11, 2017

368. தலைவி கூற்று

368.  தலைவி கூற்று
பாடியவர்: நக்கீரனார்.
திணை: மருதம்.
கூற்று : வரைவுமலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குரிய முயற்சிகள் விரைவாக நடைபெறுகின்றன என்ற செய்தியைத் தோழி வழியாகக் கேள்விப்பட்ட  தலைவிஇதுவரை நான் என் அழகை இழந்து துன்புற்றேன். இனி, இடையீடின்றித் தலைவனோடு இன்பமாக இருக்கப் போகிறேன்என்று கூறுகிறாள்.

மெல்லிய லோயே மெல்லிய லோயே
நன்னாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற்
சொல்ல கிற்றா மெல்லிய லோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதில் நிலைமை முயங்குகம் பலவே. 

கொண்டு கூட்டு: மெல்லியலோயே! மெல்லியலோயேநல்நாள் நீத்த பழிதீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்  சொல்லகிற்றா? மெல்லியலோயே! சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கு  நாள்இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து  திண்கரைப் பெருமரம் போலத் தீதுஇல் நிலைமை பல முயங்குகம்.

அருஞ்சொற்பொருள்: மெல்லியலோய் = மெல்லிய இயல்பை உடையவளே; நீத்த = நீங்கிய; மாமை = அழகு; வன்பு = வலிமை; சொல்லகிற்றா = சொல்ல இயலாத; இடைப்படா = இடைவிடாமல்; நளிதல் = செறிதல்; நீத்தம் = வெள்ளம்.

உரை:  மெல்லிய இயல்பை உடையவளேமெல்லிய இயல்பை உடையவளே! நல்ல நாளில் நம்மை நீங்கிய நமது குற்றமற்ற அழகின் இயல்பை, நம் மனவலிமையால் பொறுத்துக்கொண்டிருந்தோமே அல்லாமல், அங்ஙனம் நீங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைச் சொற்களால், சொல்ல இயலாத நிலையில் இருந்தோம். சிறியோரும் பெரியோரும் வாழ்கின்ற ஊரில், நாள்தோறும் இடைவிடாமல் மிகுந்த வெள்ளம் வரும் கரையில்  உள்ள பெரிய மரத்தைப் போல,  தீங்கில்லாத நிலையிலிருந்து, பலமுறை தலைவரைத் தழுவுவோமாக.


சிறப்புக் குறிப்பு: நல் நாள்என்றது, தலைவனைக் கண்டு, கூடி மகிழ்ந்த நாளைக் குறிக்கிறது.  தன் அழகு மீண்டும் தன்னிடம் வந்து சேரும் என்பதால்  பழிதீர் மாமை என்றாள்.  வெள்ளத்தின் கரையிலுள்ள மரம் நீரால் குறைவின்றி வளம் பெறுவது போலத் தலைவனோடு இடையீடின்றி வாழும் வாழ்க்கையால் தான் இழந்த அழகைத் தலைவி பெறப்போகிறாள் என்பது குறிப்பு. தலைவியின் இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் வெள்ளம் பெருகிவரும் கரையில் உள்ள பெரியமரம் உவமை.  ”தீதில் நிலைமைஎன்றது அலர், மாமையை இழத்தல் முதலிய, தீங்குகள் இல்லாத நிலைமையைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment