Sunday, July 23, 2017

372. தோழி கூற்று

372. தோழி கூற்று 
பாடியவர்: விற்றூற்று மூதெயினனார்.
திணை: நெய்தல்.
கூற்று : இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்பத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண்பதற்காக, இரவில், தலைவியின் வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறான். தோழி, “ இவ்வூரில் அலர் பெருகியதுஎன்று கூறி, விரைவில் தலைவன் தலைவியை மணந்துகொள்வது இன்றியமையாதது என்று கருத்தை வலியுறுத்துகிறாள்.

பனைத்தலைக்
கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர்பதங் கொள்ளா வளவை
அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே. 

கொண்டு கூட்டு: பனைத்தலைக் கருக்குடை நெடுமடல், குருத்தொடு மாய,
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் கணங்கொள் சிமையம் அணங்கும் கானல்,
ஆழி தலை வீசிய அயிர்ச் சேற்று அருவிக் கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை புலர்பதம் கொள்ளா அளவைஇவ் அழுங்கல் ஊர் அலர் எழுந்தன்று

அருஞ்சொற்பொருள்: வளி = காற்று; குப்பை = குவியல்; சிமையம் = சிகரம்; அணங்கும் = வருத்தும்; கானல் = கடற்கரைச் சோலை; ஆழி = கடல்; அயிர் = நுண்மனல்; சேறு = எருமண்; கூழை = கூந்தல்; எக்கர் = மணல்மேடு; குழீஇய = குவிக்கப்பட்ட; பதுக்கை = குவியல்; புலர்பதம் = காயும் பதம்; அளவை = சமயம்; அழுங்கல் = ஆரவாரம்.

உரை: பனையின் உச்சியிலுள்ள, கருக்கையுடைய நீண்ட மட்டையானது குருத்தோடு மறையும்படி, கடுமையான காற்றால் குவிக்கப்பட்ட,  உயர்ந்த வெண்மையான  மணற்குவியல்கள், தொகுதியான சிகரங்களையுடையனவாய், தனித்திருப்பவரை வருத்துகின்ற கடற்கரையில், கடல் அலைகள் கருமணல் பொருந்திய சேற்றை, அருவிபோல் கொண்டுவந்து சேர்க்கும். கூந்தலுக்கு இட்டுத் தேய்த்துக் குளிக்குமாறு மணல் மேட்டில் கடல் அலைகள் குவித்த  கருமண் குவியல் உலர்ந்து காயும் பக்குவத்தை அடைவதற்குமுன்,  இந்த ஆரவாரத்தையுடைய ஊரில், அலர் எழுந்தது.


சிறப்புக் குறிப்பு: செய்யுளில் அளவுக்குமேல் வரும் அசையுஞ் சீரும் கூன் எனப்படும். இச்செய்யுளில், பனைத்தலை என்பது கூன். அதனால், அது செய்யுளின் முதலடிக்கு முன்னே உள்ளது. பதுக்கை புலர்பதம் கொள்ளா அளவை அலர் எழுந்தன்று என்றது, தலைவன் வந்துசென்ற சுவடு மறைவதற்குள் அலர் எழுந்தது என்பதைக் குறிக்கிறது. சேறு என்றது கூந்தலிலுள்ள எண்ணெய்ப்பசை, சிக்கு முதலியன போகும் பொருட்டுப் பெண்கள் பழங்காலத்தில் தம் தலையில் தேய்த்துகொள்ளும் எருமண்னைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment