370. பரத்தை கூற்று
பாடியவர்:
வில்லக
விரலினார்.
திணை: .
மருதம்.
கூற்று : கிழத்தி
தன்னைப் புறனுரைத்தாள் (பி-ம். புறத்துரைத்தாள்)என்பது கேட்டுப் பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பச்சொல்லியது.
கூற்று
விளக்கம்: பரத்தை
தலைவனை விடாமல் தன்னோடு இருத்திக் கொண்டாள் என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை, ”தலைவன் என்னிடம் வருவதும் வராமல் இருப்பதும் அவன் விருப்பத்தைப் பொறுத்தது”
என்று தலைவியின் தோழியர்களுக்குக் கேட்கும்படி கூறுகிறாள்.
பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
கொண்டு
கூட்டு:
பொய்கை
ஆம்பல் அணி நிறம் கொழுமுகை வண்டு வாய் திறக்கும் தண்துறை ஊரனொடு இருப்பின் இரு மருங்கினம். கிடப்பின் வில்லக விரலின் பொருந்தி அவன் நல் அகம் சேரின் ஒரு
மருங்கினம்.
அருஞ்சொற்பொருள்: பொய்கை = நீர்நிலை; ஆம்பல் = அல்லி;
கொழுமுகை = மலரும் பருவத்தில் உள்ள அரும்பு;
ஊரன் = மருத நிலத்தலைவன். மருங்கு = உடல்; கிடப்பின்
= படுத்திருந்தால்; அகம் = மார்பு.
உரை: நீர்நிலையில் உள்ள ஆம்பலின், அழகிய நிறத்தையுடைய, மலரும் பருவத்தில் உள்ள அரும்புகளில்
வண்டுகள் மொய்த்து அவற்றின் இதழ்களைத் திறக்கும் குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய
மருத நிலத்தலைவனோடு நாம் இருந்தால், இரண்டு உடல்களை உடையவர்களாக இருப்போம். அவன் மார்பைத் தழுவிக்கொண்டு படுத்து உறங்கினால், வில்லை இறுகப் பிடித்த விரல்களைப் போல் ஒன்றுசேர்ந்து
ஓர் உடலை உடையவர்களாவோம்.
No comments:
Post a Comment