Tuesday, January 27, 2026

உங்கள் கவனத்திற்கு

 அன்பிற்குரிய வாசகர்களுக்கு,

வணக்கம்.

புதிய  பதிவுகள் அல்லது வாசகர்களுக்கு நான் கூறவிரும்பும் செய்திகளை https://updateinfo2024.blogspot.com என்ற பதிவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

ஆகவே, அவ்வப்பொழுது, https://updateinfo2024.blogspot.com என்ற பதிவிற்குச் சென்று என்னுடைய பதிவுகளைப் பற்றிய புதிய  செய்திகளைத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

பிரபாகரன்

Sunday, November 23, 2025

திருக்குறள் ஆவணப்பட வெளியீடு

 

அமெரிக்காவில் திருக்குறள் ஆவணப்பட வெளியீட்டு விழா

 

திருக்குறள் பற்றிய ஆவணப்படம் முதல் முறையாக ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு, ஜப்பானியம் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. சீனம், ஜெர்மன், ஸ்பேனிஷ், தமிழ் ஆகிய மொழிகளிலும் இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இதன் ஆங்கில வடிவம் நவம்பர் 16 ஆம் நாள் வாசிங்டன் அருகே உள்ள      வெர்ஜீனியாவில் உள்ள ஸ்டர்லிங் என்ற இடத்தில் திரையிடப்பட்டது. இதற்குத் திரைக்கதை எழுதியுள்ள டாக்டர் ஆர். பிரபாகரன் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் இப்பட்டதைத் தயாரித்துள்ளார். இவர் திருக்குறள் மாநாட்டை அமெரிக்காவில் நடத்தியவர்; திருக்குறள் தொடர்பான பல நூல்களை எழுதியவர்.

திருக்குறளின் மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் இன்றைய இளம் தலைமுறைத் தமிழர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் இப்படம் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. வள்ளுவர் பேணிய மனித சமத்துவம் இப்படத்தின் கருப்பொருளாகும்.

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையின் மாவட்ட ஆட்சியாளராக இருந்த எல்லிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீனில் மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள், உலகெங்கும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், மெய்நிகர் படப்பிடிப்புகள், முப்பாலையும் அழகுற முன்நிறுத்தும் காட்சிகள் முதலியன இடம் பெற்றுள்ளன.

ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் இ.ஜே.சுந்தர் பணியாற்றியதுடன் சில காட்சிகளிலும் நடித்துள்ளார். ‘தமிழ் இருக்கை’ என்ற அறக்கட்டளையின் ஆதரவில் வெளிவரும் இப்படத்தி்ற்கு அக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜானகிராமன் உறுதுணையாக உள்ளார்.

தேசிய விருதுபெற்ற இயக்குநர் திரு. அம்ஷன் குமார் படத்தைச் சிறப்பாக இயக்கியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படத்திற்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நடத்திய இவ்வெளியீட்டு விழாவில் டாக்டர் பிரபாகரன், திரு அம்ஷன் குமார், டாக்டர் இ.ஜே.சுந்தர் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டு உரையாற்றினர்.

வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த இவ்விழாவில் வர்ஜீனியா மாநில செனட்டர் திரு கண்ணன் சீனிவாசன் அவர்கள் இப்படத்தை வெளியிட்டுப் பாராட்டுரை வழங்கினார். இப்படத்தை https://youtu.be/brVgR-_JDoc என்ற இணைப்பில் யாரும் காணலாம்.

 

Tuesday, December 24, 2024

இரண்டு நாடகங்கள்

 

அன்பிற்குரிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

கோப்பெருஞ்சோழன் என்ற சோழ மன்னனும் பிசிராந்தையார் என்ற புலவரும், ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே சிறந்த நண்பர்களாக இருந்தார்கள்.  ஏதோ காரணத்தினால், கோபெருஞ்சோழனுக்கும் அவனுடைய இரண்டு மகன்களுக்கும் இடையே போர் தொடங்க இருங்தது. அப்பொழுது ஒரு புலவர், கோப்பெருஞ்சோழனுக்கு அறிவுரை கூறிப் போரைத் தடுத்து நிறுத்தினார். கோப்பெருஞ்சோழன் இயற்றியதாகவும் பிசிராந்தையார் இயற்றியதாகவும் புறநானூற்றில் பல பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்களில் உள்ள கருத்துகளோடு கறபனையும் கலந்து ”கோப்பெருஞ்சோழன்” என்று ஒரு  சிறு நாடகம் எழுதியுள்ளேன்.

மயிலுக்குப் போர்வை அளித்த வள்ளல் பேகனை பற்றிய புறநானூற்றுப் பாடல்களோடு  என்னுடைய கற்பனையும் கலந்து, “கொடை மடம் கொண்ட பேகன்” என்று ஒரு சிறு நாடகம் எழுதியுள்ளேன்.

இந்த இரண்டு நாடகங்களையும் https://sangamplays.blogspot.com என்ற வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். ஆர்வமும் நேரமும் இருந்தால் அவற்றைப் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

பிரபாகரன்

Thursday, July 25, 2024

 அன்புடையீர்,

வணக்கம்.

குறுந்தொகையில் உள்ள சில பாடல்களைத் தழுவி சில திரைப்படப் பாடல்கள் வந்துள்ளன. அதைப்போல், குறுந்தொகைப் பாடல்களைத் தழுவி, சிறுகதைகள் எழுத வேண்டும் என்று தோன்றியது. அந்த நோக்கத்தில், இதுவரை ஆறு சிறுகதைகள் எழுதியுள்ளேன். அந்தச் சிறுகதைகளுக்கான சுட்டி:

http://sangamstories.blogspot.com/

நேரமிருந்தால், இந்தச் சிறுகதைகளில் ஒரு சிலவற்றையாவது படித்து, உங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

அன்புடன்,

பிரபாகரன். 

Sunday, August 20, 2017

401. தலைவி கூற்று

401. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.
கூற்று விளக்கம்: ஒருநாள் தலைவி தலைவனோடு கூடி மகிழ்ந்தாள். அதன் பின்னர் சிலநாட்கள் தலைவனைக் காணவில்லை. தலைவனைக் காணாததால், தலைவியின் உடலில் மாற்றங்கள் தோன்றினதலைவியின் உடலில் தோன்றிய மாற்றங்களைக் கண்ட தலைவியின் தாய் அவளை வீட்டில் காவலில் வைத்தாள். காவலில் வைக்கப்பட்ட தலைவி, தான் இனித் தலைவனை சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகியதை நினைத்து வருந்துகிறாள்.

அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே. 

கொண்டு கூட்டு: அடும்பின் ஆய்மலர் விரைஇ, நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த, நீர்வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டுகடலிற் பரிக்குந் துறைவனொடு, மெய்தோய் நட்பு ஒருநாள் நக்கு விளையாடலும், கடிந்தன்று. ஐதேகம்ம!

அருஞ்சொற்பொருள்: அடும்பு = கடற்கரையில் வளரும் ஒருவகைக் கொடி; ஆய் = அழகு; விரைஇ = கலந்து; தொடை = மாலை; ஓரை = மகளிர் விளையாட்டு; ஞெண்டு = நண்டு; பரிதல்ஓடுதல்; நக்கு = நகைத்து; கடிந்தன்று = கடிந்தது = நீக்கியது; ஐதேகம்ம = ஐது+ஏகு+அம்ம; ஐது = வியப்புடையது; ஏகு - அசைநிலை; அம்ம வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்; மெய்தோய் நட்பு = உடலுடன் கூடிய நட்பு.


உரை: அடும்பினது அழகிய மலரைக் கலந்து தொடுத்த நெய்தல் மலர் மாலையை அணிந்த,  நீர் ஒழுகும் கூந்தலையுடைய,  ஓரை விளையாட்டு விளையாடும் மகளிரை அஞ்சி, ஈரத்தையுடைய நண்டு, கடலுக்குள் ஓடும் துறையையுடைய தலைவனோடு, அவனுடைய உடலைத் தொட்டுக் கூடி, நான் செய்த நட்பு, இனிமேல் ஒருநாள்கூட  அவனோடு சிரித்து விளையாட முடியாமல் தடுத்தது. இது வியத்தற்குரியது!

400. தலைவன் கூற்று

400. தலைவன் கூற்று
பாடியவர்: பேயனார்.
திணை: முல்லை.
கூற்று : வினைமுற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது.
கூற்று விளக்கம்தான் மேற்கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து, தேரில் வந்து தலைவியைக் கண்ட பின்னர், தலைவன், தேர்ப்பாகனை நோக்கி, ”இன்று நாம் விரைவாகத் தேரைச் செலுத்தாவிட்டால், என்னால் தலைவியைக் கண்டு, அவள் காமநோயைத் தீர்க்க முடியாது என்று கருதி, எனக்கு நீ நன்மை செய்ய விரும்பித் தேரை வெகு விரைவாகச் செலுத்தி, இங்கு கொண்டுவந்தாய். நீ  தேரை மட்டும் இங்கு கொண்டுவந்து தரவில்லை. என் தலைவியின் உயிரையே எனக்குத் தந்தாய்!” என்று பாராட்டுகிறான்.

சேயாறு செல்வா மாயின் இடரின்று
களைகலம் காமம் பெருந்தோட் கென்று
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய்
இன்று தந்தனை தேரோ
நோயுழந் துறைவியை நல்க லானே. 

கொண்டு கூட்டு: சேயாறு செல்வாமாயின், பெருந்தோட்கு காமம் இடர் இன்று களைகலம் என்று நன்று புரிந்து எண்ணிய மனத்தையாகி, முரம்புகண் உடைய ஏகிக் கரம்பைப் புதுவழிப் படுத்த, மதியுடை வலவோய்! நோயுழந்து உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?

அருஞ்சொற்பொருள்: சேய் = நெடுந்தூரம்; ஆறு = வழி; இடர் = துன்பம்; பெருந்தோள் = பெரிய தோளையுடைய தலைவி; முரம்பு = பருக்கைக்கற்கள் உள்ள மேட்டு நிலம்; கரம்பை = பாழ்நிலம்; வலவன் = தேர்ப்பாகன்; உழத்தல் = வருந்துதல்.; நல்குதல் = ஈதல் (தருதல்).

உரை: நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்வோமானால்பெரிய தோளையுடைய தலைவியின் காமநோயாகிய துன்பத்தை இன்று என்னால் களைய முடியாது என்று நினைத்துநன்மையை விரும்பிய மனமுடையவனாகிபருக்கைக் கற்கள் உள்ள மேட்டு நிலம் பிளக்கும்படி சென்று, பாழ் நிலத்திலே புதிய வழியைக் கண்டு தேரைச் செலுத்திய  அறிவிற் சிறந்த தேர்ப்பாகனே! காமநோயினால் வருந்தி வாழ்கின்ற தலைவியை, இறந்துபடாமல் உயிருடன் தருதற்குக் காரணமானதால், இன்று நீ தேரை மட்டுமா இங்கு கொண்டுவந்து தந்தாய்? இல்லை; என் தலைவியையே எனக்கு உயிருடன் தந்தாய்!

சிறப்புக் குறிப்பு: கரம்பைப் புது வழிப்படுத்தஎன்றது, இதற்குமுன் தேர் செல்லாத நிலத்தில் புதுவழியில் தேர்ப்பாகன் தேரைச் செலுத்தினான் என்பதைக் குறிக்கிறது. அவ்வாறு, புதுவழியில் தேரைச் செலுத்தியதால், தேர்ப்பாகனை, “ மதியுடை வலவோன்என்று தலைவன் பாராட்டுகிறான்.

399. தலைவி கூற்று

399. தலைவி கூற்று

பாடியவர்: பரணர்.
திணை: மருதம்.
கூற்று : வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திவந்தான். அதனால் வருத்தம் அடைந்த தலைவி, தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருக்கும் பொழுது பசலை நீங்குகிறது. அவர் என்னைவிட்டுப் பிரியும் பொழுது பசலை என்னைப் பற்றிக்கொள்கிறதுஎன்று கூறுகிறாள்.

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 

கொண்டு கூட்டு: பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கிவிடுவுழி விடுவுழிப் பரத்தலான்ஊருண் கேணி உண்துறைக் தொக்க பாசி அற்று.

அருஞ்சொற்பொருள்: கேணி = குளம்.

உரை: பசலையானது, தலைவர், நம்மைத் தொடுந்தோறும் தொடுந்தோறும் நம் உடலை விட்டு அகன்று, அவர் நம்மை விட்டுப் பிரியுந்தோறும் பிரியுந்தோறும் பரவுவதால், ஊரார் நீர் உண்ணும் குளத்தில், அவர்கள் நீரை உண்ணும் துறையில் திரண்டிருக்கும்  பாசியைப் போன்றது.

சிறப்புக் குறிப்பு: பசலைக்குப் பாசியை உவமையாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதாகவும் சிறப்பானதாகவும் உள்ளது. பாசி படர்ந்த குளத்தில் நீரை உண்ணுபவர்கள் பாசியை விலக்கி நீரை உண்பர். அவர்கள் கையால் நீரைத் தொட்டு, முகந்து குடிக்கும் பொழுது, பாசி விலகி இருக்கும். அவர்கள் நீரைக் குடித்து முடித்துக் கரையேறிய பிறகு பாசி மீண்டும் ஒன்று சேர்ந்துகொள்ளும். அதுபோல், தலைவனோடு இருக்கும் பொழுது பசலை விலகியும், தலைவன் பிரியும் பொழுது பசலை தலைவியைப் பற்றிக்கொண்டு அவள் உடலில் பரவுவதும் பசலையின் இயல்பு. பசலை என்பது, காமநோயால் உடலில் தோன்றும் நிறமாற்றத்தையும் பொலிவிழந்த நிலையையும் குறிக்கிறது. தலைவைனைத் திருமணம் செய்துகொண்டு அவனைவிட்டுப் பிரியாமல் வாழ்ந்தால் பசலை முழுமையாகத் தன்னைவிட்டு நீங்கும் என்பது  தலைவியின் கருத்து.
தலைவனின் பிரிவால், தலைவியின் உடலில்  பசலை உடனே பரவும் என்ற கருத்தைத் திருக்குறளிலும் காணலாம்.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.                                             (குறள் – 1186)

பொருள்: விளக்கொளி எப்பொழுது மறையும் என்று பார்த்துகொண்டிருந்து, அப்பொழுதே பரவக் காத்திருக்கும் இருளைப்போல், கணவன் என்னைத் தழுவுவதைச் சற்றே தளர்த்தும் சமயம் பார்த்து, பசலைநிறம் என் உடலில் பரவக் காத்திருக்கின்றது.

 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
 அள்ளிக்கொள் வற்றே பசப்பு.                                           (குறள் -  1187)

பொருள்: என் கணவனைத் தழுவிக்கொண்டு கிடந்த நான், பக்கத்தே சிறிது அகன்றேன். அவ்வளவிலேயே பசலை நிறம் என்னை அள்ளிக்கொள்வது போல் பற்றிகொண்டது.