Sunday, March 19, 2017

327. தலைவி கூற்று

327. தலைவி கூற்று
பாடியவர்: அம்மூவனார்.
திணை: . குறிஞ்சி.
கூற்று : கிழவன் கேட்கும் அண்மையனாக அவன் மலையினின்று வரும் ற்றிற்கு  உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண்பதற்காகத் தலைவியின் வீட்டுக்கு வந்து, வேலிக்கு வெளியே நிற்கிறான். அவன் வரவை அறிந்த தலைவி, அவன் காதுகளில் கேட்குமாறு, ஆற்றை நோக்கித் தலைவன் தனக்குச் செய்த கொடுமையைப் பற்றிக் கூறுகிறாள்.

நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின்
நயனில ராகுதல் நன்றென உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்
நின்னிலை கொடிதால் தீய கலுழி
நம்மனை மடமகள் இன்ன மென்மைச்
சாயலள் அளியள் என்னாய்
வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே. 

கொண்டு கூட்டு: தீய கலுழிநம் மனை மடமகள், இன்ன மென்மைச்  சாயலள்; அளியள்.” என்னாய்சிலம்பு புல்லென வாழை தந்தனை. ”நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின் நயன்இலர் ஆகுதல் நன்றுஎன உணர்ந்தகுன்ற நாடன் தன்னினும் நின்னிலை நன்றும் கொடிது.

அருஞ்சொற்பொருள்: நல்குதல் = அருள் செய்தல்; நல்கூர்ந்தார் =  வறுமையுற்றோர் (இங்கு, தலைவனின் அன்பைப் பெறாத வறியவர்); வயின் = இடம்; நயன் = அன்பு; நன்றும் = மிகவும்; கலுழ் = நீர்ப்பெருக்கம் (இங்கு காட்டாற்றில் வரும் வெள்ளத்தைக் குறிக்கிறது); மடமகள் = இளம்பெண்; அளியள் = இரங்கத் தக்கவள்; சிலம்பு = மலைப் பக்கம்; புல் = இழிவு; புல்லென = புல் + என  = பாழாகும்படி (அழகு இழக்கும்படி).

உரை: தீமை இழைக்கின்ற வெள்ளப் பெருக்கோடு வருகின்ற காட்டாறே!   நாம் செல்லும் வழியின் அருகில் உள்ள வீட்டில் உள்ள இளம்பெண், இவ்வாழையைப் போன்ற  மெல்லிய சாயலை உடையவள், இரங்கத் தக்கவள் என்று கருதாமல், மலைப்பக்கம் அழகு இழக்கும்படி  அங்கே வளர்ந்த வாழை மரத்தை நீ பெயர்த்துக் கொண்டுவந்தாய். அதனால், தாம் அருள் செய்வதால் வாழ்கின்ற வறியோரிடம்அன்பு இல்லாதவராக இருப்பது நல்லது என்று உணர்ந்த குன்ற நாடனது (தலைவனது)  நிலையைக் காட்டிலும்,  உனது இயல்பு மிகவும் கொடியது.

326. தலைவி கூற்று

326. தலைவி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: நெய்தல்.
கூற்று : சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் தலைவியின் வீட்டுக்கு வந்து, வேலிக்கு வெளியே, மறைவான இடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். அவன் வந்திருப்பது  தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். ”தலைவன் ஒருநாள் என்னைப் பிரிந்தால்கூட, எனக்கு அதனால் உண்டாகும் துன்பம் பலநாள் என்னை வருத்துகிறது.” என்று தலைவி தலைவனுக்குக் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள்.

துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்
கடலாடு மகளிர் கான லிழைத்த
சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒருநாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே. 

கொண்டு கூட்டு: தோழி! துணைத்த கோதைப் பணைப் பெருந்தோளினர் கடலாடு மகளிர் கானல் இழைத்த சிறுமனைப் புணர்ந்த நட்புதுறைவன் ஒருநாள் துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னாமைத்து

அருஞ்சொற்பொருள்: துணைத்த = இரண்டிரண்டு மலர்களாக வைத்துக்  கட்டிய; கோதை = மாலை; பணை = மூங்கில்; கானல் = கடற்கரைச் சோலை; இழைத்த = செய்த; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; துறப்பின் = பிரிந்தால்; இன்னாமைத்து = துன்பத்தை உடையது.
உரை: தோழி! இரண்டிரண்டு மலர்களாக வைத்துக் கட்டிய மாலையை அணிந்த, மூங்கிலைப் போன்ற, பருத்த தோளையுடைய, கடல்நீரில் விளையாடும் மகளிரோடு சேர்ந்து, கடற்கரைச் சோலையிலே சிறிய மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்த பொழுது,  நான் நெய்தல் நிலத்தலைவனைக் கண்டு கூடிய நட்பு, அத்தலைவன் ஒருநாள் என்னைப் பிரிந்தால்,  பல நாட்ளுக்குத் தொடர்ந்துவரும் துன்பத்தைத் தருவதாக உள்ளது.

சிறப்புக் குறிப்பு: பிரிவு நேராத வண்ணம், திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று தலைவி தலைவனுக்குக் குறிப்பாக உணர்த்துகிறாள்.

325. தலைவி கூற்று

325. தலைவி கூற்று
பாடியவர்: நன்னாகையார்.
திணை: நெய்தல்.
கூற்று : பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றதை அறிந்த தோழி, தலைவிக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தாள்.  “தான் பிரிந்து செல்லப் போவதாகத் தலைவன் பலகாலம் சொல்லிக்கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அவ்வாறு என்னிடம் சொன்ன பொழுது, அவன் மீண்டும் பொய் சொல்லுவதாக நினைத்து, என் பக்கத்தில் நில்லாமல் போ என்று சொன்னேன். அவன் உண்மையாகவே என்னைப் பிரிந்து சென்றுவிட்டான். எனக்கு ஆதரவாக இருந்த அவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ?” என்று தலைவி வருத்தத்தோடு தோழியிடம் கூறுகிறாள்

சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்
மாயச் செலவாச் செத்து மருங்கற்று
மன்னிக் கழிகென் றேனே அன்னோ
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே. 

கொண்டு கூட்டு: சேறும் சேறும் என்றலின் பண்டைத் தன் மாயச் செலவாச் செத்து மருங்கு அற்று மன்னிக் கழிகஎன்றேன். அன்னோஆசு ஆகு எந்தை யாண்டுளன் கொல்லோஎன் முலைஇடை நிறைந்துகருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்று.

அருஞ்சொற்பொருள்: சேறும் = செல்லுவேன்; மாயச் செலவு = பொய்ச் செலவு (போகாமலே போகப் போவதாகப் பொய் சொல்லுவது); செத்து = எண்ணி; மருங்கு = பக்கம்; மன்னுதல் = நிலைபெறுதல்; ஆசு = பற்றுக் கோடு; எந்தை = என் தந்தை போன்ற என் தலைவன்.

உரை: ”உன்னைப் பிரிந்து செல்லப் போகிறேன்; உன்னைப் பிரிந்து செல்லப் போகிறேன்.” என்று தலைவன் பலகாலமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அவ்வாறு சொல்லும் பொழுது, அவன் முன்பு போலப் பொய் சொல்லுகிறான் என்று எண்ணி, “என் பக்கத்திலிருந்து ஒரேயடியாக நிலைபெற்று நீங்குக.” என்றேன்.    ஐயோ!  நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ! அவனது பிரிவால் அழுத என் கண்ணீரால் என் முலைகளின் இடையிலுள்ள இடம் நிறைந்து, கரிய காலையுடைய வெண்ணிறமான நாரை, உணவை உண்ணும் பெரியகுளம் போல ஆயிற்று.

324. தோழி கூற்று

324. தோழி கூற்று
பாடியவர்: கவை மகனார்.
திணை: நெய்தல்.
கூற்று : செறிப்பறிவுறுக்கப்பட்டு, "இரா வாரா வரைவல்" என்றாற்கு த் தோழி அது மறுத்து வரைவு கடாயது. (இரா வாரா இரவில் வந்து; வரைவல்திருமணம் செய்துகொள்வேன்)
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பகலில் சந்தித்துக் களவொழுக்கத்தில் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவியின் தாய்க்குத் தலைவியின் காதலைப் பற்றித் தெரிய வந்ததால், தாய் அவளை வீட்டில் காவலில் வைக்கவேண்டும் என்று முடிவு செய்தாள். அதை அறிந்த தோழி, “ தலைவியின் தாய் அவளை வீட்டில் காவலில் வைக்கப் போகிறாள். ஆகவே, இனிமேல் நீ அவளைக் காண இயலாது. நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்வதுதான் முறையான செயல்.” என்று தலைவனிடம் கூறுகிறாள். அதற்குத் தலைவன், “ நான் எவருக்கும் தெரியாமல் தலைவியை இரவில் சந்திக்க விரும்புகிறேன். அதற்குப் பிறகு, நான் அவளைத் திருமணம் செய்துகொள்வேன்.” என்று கூறுகிறான். தலைவனின் கூற்றுக்கு தோழியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையின் உயங்கும் யானது
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே. 
கொண்டு கூட்டு: பெரும! நீ நின் நயனுடைமையின், கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றைவழிவழக்கு அறுக்கும் கானலம் பெருந்துறைஇனமீன் இருங்கழி நீந்தி வருதி. இவள் தன் மடன் உடைமையின் உயங்கும். யான் கவைமக நஞ்சு உண்டாங்கு என் நெஞ்சத்தான் அது அஞ்சுவல்!
அருஞ்சொற்பொருள்: கொடுங்கால் = வளைந்த கால்; கோள்வல் = கொல்லுதலில் வல்லமை பெற்ற; ற்றை – விலங்குகளின் ஆணுக்குப் பொதுப்பெயர் (இங்கு ஆண் முதலையைக் குறிக்கிறது); வழக்கு அறுதல் = போய் வருதலைத் தடுத்தல்; கானல் = கடற்கரைச் சோலை; இனமீன்மீன் இனம்; நயன் = அன்பு; மடன் = அறியாமை;  உயங்குதல் = வருந்துதல்; கவை மகவு = இரட்டைக் குழந்தைகள்; பெரும = தலைவ.
உரை: தலைவ!  நீ உனது அன்புடைமையால், வளைந்த கால்களையுடைய, கொல்லுதலில் வல்ல ஆண்முதலைவழிச்செல்வோரைச் செல்ல விடாது போய்வருதலைத் தடுக்கும் கடற்கரைச் சோலைகளையுடைய பெரிய கடற்றுறையில், திரளாக மீன்களை உடைய கரிய கழியை நீந்திக் கடந்து வருவாய். தலைவி, உன் வலிமையை  அறியாததால் வருந்துவாள். நான்  என் மனத்தினுள்ளே,  இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால், இருவருக்காகவும் ஒரு தாய் வருந்துவது போல, நீ அவ்வாறு வருவதை நினைத்து அஞ்சுவேன்.

சிறப்புக் குறிப்பு: நீ உன் அன்பினால் தலைவியைக் காணபதற்காக  வர விரும்புகிறாய். நீ வருவதைத் தடுப்பது முறை அன்று. நீ வரும் வழியில் உனக்கு இன்னல்கள் நேரலாம். அதை எண்ணித் தலைவி வருந்துவாள். அதனால், நீ இரவில் வருவது சரி அன்று. உங்கள்  இருவருக்கும் துன்பமுண்டாகும் இந்நிலையில், இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால், அவர்கள்  இருவருக்காகவும் இரங்கும் தாயைப் போல, நான் உங்கள் இருவருக்காகவும் வருந்துவேன். ஆகவே, ”நீ விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது.” என்று தோழி தலைவனுக்கு குறிப்பால் உணர்த்துகிறாள்.  

323. தலைவன் கூற்று

323.  தலைவன் கூற்று
பாடியவர்: பதடி வைகலார்.
திணை: முல்லை.
கூற்று : வினை முற்றினான் பாகற்கு உரைத்தது. (வினை முற்றினான் = செயலை முடித்தவன்)
கூற்று விளக்கம்: தலைவன் தன் பணியை முடித்துத் திரும்பி வருகிறான். “தலைவியைப் பிரிந்திருக்கும் நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள் அல்ல; நான் தலைவியைக் காண மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். ஆகவே, தேரை விரைவாகச் செலுத்துக.” என்று தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.

எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே. 

கொண்டு கூட்டு: பாணர் படுமலை பண்ணிய எழாலின்  வானத்து எழும் சுவர் நல்லிசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் அரிவை தோள் இணைத் துஞ்சிக் கழிந்த நாளே இவண் வாழும் நாள்எல்லாம் எவனோ? பதடி வைகல் !
அருஞ்சொற்பொருள்: பதடி = பதர்; வைகல் = நாள்; படுமலை = படுமலைப் பாலை (ஒரு பண்); எழால் = யாழ்; சுவர் = உச்ச ஒலி; வீழ = போல (உவம உருபு); பசுமுகை = பசுமையான மொட்டு; நாறும் = மணக்கும்; அரிவை = பெண் (தலைவி);  துஞ்சுதல் = உறங்குதல்.
உரை: பாணர்கள் படுமலைப் பாலை என்னும் பண்ணை வாசிக்கும் பொழுது, யாழின் இசையிலிருந்து தோன்றிய, உச்ச ஒலி வானத்தில் எழுந்து ஒலிப்பது போல, இனிய ஓசையுடன் மழை பெய்த கொல்லையில் மலர்ந்த முல்லையின், பசுமையான  அரும்பின் தாதைப் போன்ற நறுமணம் வீசுகின்ற நல்ல நெற்றியையுடைய, தலைவியின் தோள்களில் உறங்கிக் கழித்த நாட்களே இவ்வுலகில் வாழும் நாட்களாகும்; மற்ற  நாட்கள் எல்லாம், என்ன பயனை உடையன?  அவை பதர் போன்ற பயனற்ற நாட்களாகும்.

சிறப்புக் குறிப்பு: ”இவண் வாழுநாள்என்றது தலைவியைத் தழுவி உறங்கிய நாட்களையும் ,”எல்லாம்”  என்றது தலைவியைத் தழுவி உறங்காத நாட்களையும் குறிக்கின்றன. தலைவியைத் தழுவி உறங்காத நாட்கள் இன்பம் இல்லாதிருப்பதால் பதடி வைகல்என்றான். கொல்லையில் பெய்த மழையின் ஓசைக்குப் படுமலைப் பாலையின் இசை உவமை.

322. தலைவி கூற்று

322.  தலைவி கூற்று
பாடியவர்: ஐயூர் முடவனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன் வரவுணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது.  (இயற்பட மொழிதல் = தலைவனின் இயல்பைச் சிறப்பித்துக் கூறுதல்)  
கூற்று விளக்கம்: தலைவன் வரவுக்காகத் தலைவி காத்திருக்கிறாள். தலைவன் குறித்த நேரத்தில் வராததால், தோழி, “தலைவனின் தன்மை வேறு; நம்முடைய தன்மை வேறு. இருவர் தன்மையும் ஒத்தவை அல்ல. அவனுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை.” என்று  அவன் இயல்பைப் பழித்துக் கூறுகிறாள். தலைவன் வருகையை அறிந்த தலைவி, “அவன் வராவிட்டால், நாம் அவன் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வோம். அங்குப் போய், அவனோடு கூடிப் பழகுவோம்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவி
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
மருவின் இனியவு முளவோ
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே. 
கொண்டு கூட்டு: தோழி! கானவர் எடுப்ப, அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி வெரீஇ, இனம் தீர்ந்து கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து மனையுறை வாழ்க்கை வல்லியாங்குமருவின் இனியவும் உளவோஒல்வாங்கு நடந்து செல்வாம்!
அருஞ்சொற்பொருள்: அமர் = விருப்பம்; ஆமான் = காட்டுப்பசு; செவி = காது; குழவி = கன்று; வெரீஇ = அஞ்சி; கானம் = காடு; நண்ணிய = அருகே உள்ள; ஓம்ப = பாதுகாக்க; மரீஇ = கலந்து (பழகி); அவண் = அவ்விடம்; நயந்து = விரும்பி; வல்லியாங்கு = வலிமையைப் பெற்றது போல; மருவுதல் = கலத்தல்; ஒல்வாங்கு = இயன்ற அளவு.
உரை: தோழி! காட்டில் உள்ள வேட்டுவர் ஒலி எழுப்பியதால், விரும்பத் தகுந்த கண்களையுடைய  காட்டுப் பசுவின் அழகிய காதுகளையுடைய கன்று, அஞ்சித் தன் இனத்தினின்றும் பிரிந்து சென்று, காட்டின் அருகே உள்ள சிறிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தது. அவ்வூரில் உள்ள இளைஞர்கள்  அந்தக் கன்றைப் பாதுகாத்து வளர்த்தனர். அந்தக் கன்று அந்த இளைஞர்களோடு கூடிப் பழகியது. பின்னர், அவ்விடத்தையே விரும்பி, காட்டில் வாழ்வதைவிட வீட்டில் வாழும்  வாழ்க்கையில் வன்மை பெற்றது. அது போலக் கூடிப் பழகுதலைவிட, இனியதும் உளதோ?  அதனால், நாமும் நம்மால்  இயன்ற அளவு நடந்து, தலைவன் இருக்கும் இடத்திற்குச் செல்வோம்.

சிறப்புக் குறிப்பு: காட்டுப்பசுவின் கன்று, காட்டில் வாழும் வாழ்க்கையைவிட, சிறுகுடியில் உள்ள இளைஞர்களோடு கூடிப் பழகி, வீட்டில் வாழும் வாழ்க்கையை விரும்புவதைப் போல், தலைவன் இயல்பு  தன் இயல்பிலிருந்து மாறுபட்டதானாலும்  அவனோடு பழகி, அவன் இயல்புகளைப் பெற்று வாழவேண்டும் என்று தலைவி விரும்புகிறாள் என்பது குறிப்பு. சிறுவயதில் பெற்றோரின் வீட்டில் வளர்ந்து பழக்கப்பட்ட தலைவி, திருமணத்திற்குப் பிறகு, தலைவன் வீட்டிற்குச் சென்று, அவனோடும் அவன் சுற்றத்தாரோடும் ஒத்து வாழ்வதை விரும்புகிறாள் என்பதைத் தலைவனுக்குத் தெரிவிக்கும் வகையில், அவன் காதுகளில் கேட்குமாறு, காட்டுப் பசுவின் கன்றைப் பற்றிக் கூறுகிறாள் என்றும் பொருள் கொள்ளலாம்.

321. தோழி கூற்று

321. தோழி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி, கிழத்திக்கு நொதுமலர் (அயலார்) வரையுமிடத்து, "அறத்தொடு நிற்பேன்" என்றது.
கூற்று விளக்கம்: இப்பாடலில், தலைவியைத் தலைவன் அல்லாத வேறொருவருக்குத் திருமணம் செய்விப்பதைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. அதனால், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கூற்று பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இப்பாடலின் பின்னணியை, வேறொருவிதமாகக் கற்பனை செய்யலாம்.

 தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வருகிறார்கள். தலைவன் இரவில் வந்து தலைவியைச் சந்திக்கிறான். ”இரவில் தலைவன் வரும் வழியில் அவனுக்கு இன்னல்கள் நேரலாம் என்பதை நினைத்தால் எனக்கு அச்சமாக இருக்கிறது. இந்த நிலையில் களவொழுக்கத்தை எவ்வளவு காலம் நீடிப்பது?” என்று கூறித் தலைவி தன் மனநிலையைத் தோழியோடு பகிர்ந்துகொள்கிறாள். அதற்குத் தோழி, “ நீ வருந்தாதே! இனியும் களவொழுக்கத்தை நீடிப்பது முறையன்று. நான் உன் களவொழுக்கத்தை உன் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தப் போகிறேன் (அறத்தொடு நிற்கப் போகிறேன்). உனக்கு அதில் விருப்பம் உண்டு என்று நான் நினைக்கிறேன்.” என்று தோழி கூறுகிறாள்.

மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை
மன்ற மரையா இரிய ஏறட்டுச்
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே. 

கொண்டு கூட்டு: மடவரல் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை  மலைச் செஞ்சாந்தின், ஆர மார்பினன்சுனைப்பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்நடுநாள் நம் மனை வந்து பெயரும்மன்ற மரையா இரிய, ஏறு அட்டுச் செங்கண் இரும்புலி குழுமும். அதனால்மறைத்தற் காலையோ அன்று. அன்னை! வாழி! நம் கதவே திறப்பல்வேண்டு!

அருஞ்சொற்பொருள்: செஞ்சாந்து = செந்நிறமான சந்தனம்; ஆரம் = முத்து மாலை; சுரும்பு = வண்டு; கண்ணி = தலையில் சூடப்படும் மாலை; நடுநாள் = நள்ளிரவு; மடவரல் = இளமை; அரிவை = இளம்பெண் ; அமர்தல் = ஒன்றுதல், பொருந்துதல்; மரையா = காட்டுமான்; இரிதல் = ஓடுதல்; ஏறு = பல விலங்கினங்களின் ஆணுக்குப் பொதுவான பெயர்; அட்டு = அழித்து; குழுமுதல் = முழங்குதல்; காலை = சமயம்; கதவு திறப்பல்மறைவாக இருந்ததை வெளிப்படுத்துவேன்; வேண்டு = விரும்புவாயாக; அன்னைஇங்கு தலைவியைக் குறிக்கிறது.
உரை: இளமை பொருந்திய பெண்ணே (தலைவியே)! உனது  மார்பைத் தழுவும் இனிய தலைவன், மலையில் உண்டாகிய செஞ்சந்தனத்தையும் முத்து மாலையையும் அணிந்த மார்பினன்; சுனையில் மலர்ந்த, குவளை மலர்களைத் தொடுத்து, வண்டுகள் மொய்க்கின்ற  மாலையாகத் தலையில் அணிந்தவன். அவன் நம் வீட்டிற்கு நள்ளிரவில் வந்து, திரும்பிச் செல்கிறான். அந்த நேரத்தில், பொதுவிடத்தில் உள்ள  மரையாவானது ஓட, அதன் ஆணைக்கொன்று, சிவந்த கண்களையுடைய பெரிய புலி முழங்கும். அதனால், நம் களவொழுக்கத்தை மறைக்கும் காலம் இது அன்று. தலைவியே! நீ வாழ்க! நமது களவொழுக்கத்தை  நான் வெளிப்படுத்துவேன்; நீயும் அதையே நீ விரும்புவாயாக.

சிறப்புக் குறிப்பு: தலைவன் இரவில் வரும்பொழுது அவனுக்கு இன்னல்கள் நேரிடலாம். அதனால், தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தைத் தொடராமல், திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று தோழி எண்ணுவதால், அவள் அறத்தொடு நிற்கப் போவதாகக் கூறுகிறாள்.  கதவு திறப்பல்என்பது ஒரு மரபுத் தொடர். அது, பிறர் அறியாதவாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த  களவொழுக்கத்தை பிறர் அறியுமாறு வெளிப்படுத்துவேன் என்ற பொருளை உடையது

Wednesday, March 8, 2017

320. தலைவி கூற்று

320. தலைவி கூற்று

பாடியவர்: தும்பிசேர் கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 61 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : அலரஞ்சி யாற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண வந்து வீட்டுக்கு வெளியே நிற்கிறான். “நான் என் தலைவனோடு ஒருநாள்கூடக் கூடி மகிழ்ந்தது இல்லை. ஆனால், இவ்வூரில் உள்ள மக்கள் அதற்குள்  அலர் பேசத் தொடங்கிவிட்டனர்.” என்று தலைவன் காதுகளில் கேட்குமாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள். தான் கூறுவதைத் தலைவன் கேட்டால், அவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தலைவி எண்ணுகிறாள்.

பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள்
நக்கதோர் பழியு மிலமே போதவிழ்
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்
புன்னையஞ் சேரி யிவ்வூர்
கொன்னலர் தூற்றுந்தன் கொடுமை யானே. 

கொண்டு கூட்டு: பெருங்கடல் பரதவர் கொள்மீன் உணங்கல் அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு,  நிலவுநிற வெண்மணல் புலவ, பலவுடன் எக்கர்தொறும் பரக்கும் துறைவனொடு, ஒருநாள் நக்கதோர் பழியும் இலம். போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் புன்னை அம் சேரி இவ்வூர் தன் கொடுமையான் கொன்அலர் தூற்றும்.

அருஞ்சொற்பொருள்: பரதவர் = நெய்தல் நிலமக்கள் (மீனவர்கள்); கொள்மீன் = பிடித்துக் கொண்டுவந்த மீன்; உணங்கல் = வற்றல் (கருவாடு); கழி = கடலோர நீர்நிலை; இற = இறால் மீன்; வாடல் = வற்றல்; புலவு = புலால் நாற்றம்; எக்கர் = மணல்மேடு; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; நகுதல் = நகைத்தல் (மகிழ்ச்சியோடு இருத்தல்); போது = அரும்பு; இணர் = கொத்து; மரீஇய = மருவிய (பொருந்திய); இமிழ்தல் = ஒலித்தல்; பொங்கர் = மரக்கொம்பு; புன்னை = ஒருவகை மரம்; கொன் = வீணே; அலர் = பழிச்சொற்கள்.

உரை: பெரிய கடலிலிருந்து மீனவர்கள்  பிடித்துக் கொண்டுவந்த மீனின் வற்றலோடு (கருவாட்டோடு), நீந்துதற்கு அரிய கழிநீரிலிருந்து அவர்கள் கொண்டுவந்த, இறாமீனின் வாடிய வற்றலும், நிலவைப் போன்ற நிறத்தைக் கொண்ட வெண்மையான மணலில் புலால் நாற்றம் வீசும். இத்தகைய  பல இடங்கள் மணல்மேடு தோறும் பரவி இருக்கின்ற துறையையுடைய தலைவனோடு, ஒரு நாள்கூட மகிழ்ந்து இருந்ததாக ஒருபழியும் இல்லாதவர்கள் நாம். அவ்வாறு இருக்க, மொட்டுக்கள் மலர்கின்ற, பொன்போன்ற பூங்கொத்துக்கள் பொருந்திய, வண்டுகள் ஒலிக்கின்ற, கிளைகளை உடைய புன்னைமரங்கள் உள்ள சேரிகளில் வாழும் இவ்வூரார், தம்மிடத்தில் உள்ள  கொடுந்தன்மையால் நம்மை வீணே பழித்துரைக்கிறார்கள்.

சிறப்புக் குறிப்பு: மீனவர்கள்  கடலிலிருந்து பிடித்துக் கொண்டுவந்த  மீனும், கழியிலிருந்து  கொண்டுவந்த இறால் மீனும்  மணல் முழுவதும் நாற்றத்தைப் பரப்புகின்றன என்றது, தலைவன் தன்னோடு கொண்ட நட்பால் ஊர் முழுதும்அலர் பரவியது என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது.

319. தலைவி கூற்று

319. தலைவி கூற்று

பாடியவர்: தாயங் கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று : பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிரழிந்து சொற்றது. (வன்புறை = தோழி வற்புறுத்தி ஆற்றுவிப்பது; எதிரழிதல் = ஆற்றுவிக்கவும் ஆற்றாது வருந்துதல்; சொற்றது = சொல்லியது)
கூற்று விளக்கம்: தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் தலைவன் வராததால், தலைவி மனம் வருந்தி, உடல் மெலிந்து  காணப்பட்டாள். அவள் நிலையைக் கண்ட தோழி, “ நீ பொறுமையாக இருக்க வேண்டும். தலைவர் விரைவில் வந்துவிடுவார்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, “அதோ பார்! மான்களும் யானைகளும் தங்கள் துணையோடுகூடி இன்பமாக இருக்கின்றன. நான் மட்டும் தலைவனைப் பிரிந்து தனிமையில் தவிக்கிறேன். தலைவன் விரைவில் வராவிட்டல் என் நிலை என்ன ஆகும்?” என்று தன் துயரத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்
மாலைவந் தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்
என்னாந் தோழிநம் இன்னுயிர் நிலையே. 

கொண்டு கூட்டு: தோழி! மான் ஏறு மடப்பிணை தழீஇ மருள் கூர்ந்துகானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்கையுடை நன்மாப் பிடியொடு பொருந்திமையணி மருங்கின் மலையகம் சேரவும்மாரி மாமழை மாலை வந்தன்று. பொன்நேர் மேனி நன்னலம் சிதைத்தோர் இன்னும் வாராராயின்நம் இன் உயிர் நிலை என் ஆம்?

அருஞ்சொற்பொருள்: மான்ஏறு = ஆண்மான்; மடம் = இளமை; பிணை = பெண்மான்; மருள் = மயக்கம்; கூர்தல் = மிகுதல்; கானம் = காடு; நண்ணுதல் = பொருந்துதல், இருத்தல்; கை = துதிக்கை; மா = யானை (இங்கு, ஆண்யானையைக் குறிக்கிறது); பிடி = பெண்யானை; மை = மேகம்; மருங்கு = பக்கம்; நேர்உவமை; வந்தன்று = வந்தது; மாரி = கார்காலம்.

உரை: தோழி!,  ஆண்மான்கள்,  இளம் பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிகுந்து,  காட்டில் உள்ள,  புதலில் மறைந்து ஒடுங்கவும்,  துதிக்கையையுடைய நல்ல ஆண்யானைகள், பெண் யானைகளோடு சேர்ந்து, மேகங்கள் பொருந்திய  பக்கத்தையுடைய மலையை அடையவும், கார்காலத்துக்குரிய பெரிய மழை, மாலைக்காலத்தில் வந்தது. பொன்னையொத்த எனது மேனியின்,  நல்ல அழகைக் கெடுத்த தலைவர், இன்னும் வராவிட்டால், நம்முடைய இனிய உயிரின் நிலை, என்ன ஆகும்?
சிறப்புக் குறிப்பு: மழையைப் பற்றிக் குறிப்பிட்டது கார்காலம் வந்தது என்பதைக் குறிக்கிறது. கையுடை நன்மா என்றது யானையைக் குறிக்கிறது. மழையை அஞ்சி,  மான் முதலிய விலங்குகள் தம் துணையோடு ஒடுங்கின.

தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச்சென்ற கார்காலம் வந்தது. ஆனால் தலைவன் இன்னும் வரவில்லைஅதனால் தலைவி வருத்தம் அடைந்தாள். அது மட்டுமல்லாமல் மான்களும் யானைகளும் மற்ற விலங்குகளும் தங்கள் துணையோடு கூடி மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது தான் மட்டும் தன் காதலனைப் பிரிந்து வாழ்கிறோமே என்பதை நினைத்துத் தலைவியின் வருத்தம் இன்னும் அதிகரித்தது

318. தலைவி கூற்று

318. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : கிழவன் கேட்கும் அண்மையனாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வருகிறார்கள். ஒருநாள், தலைவன் தலைவியைக் காண்பதற்காக வந்து, அவள் வீட்டிற்கு வெளியே நிற்கிறான். “நாங்கள் முதலில் சந்தித்த பொழுது,” நான் ஒருபொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்.” என்று தலைவன் சூளுரைத்தான் (சத்தியம் செய்தான்). பிரியாமல் இருக்க வேண்டுமானால் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அவன் கூறிய சூளுரையை நிறைவேற்றுவது அவன் கடமை. அவனிடத்தில் அதைப் பற்றி நான் எதுவும் கூறவேண்டியது இல்லை.” என்று கூறி, விரைவில் தலைவன் தன்னைத்  திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தலைவனுக்குத் தலைவி குறிப்பாக உணர்த்துகிறாள்.

எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின்
நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறியயர் களத்தினில் தோன்றுந் துறைவன்
குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்
றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவிப்
பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட்
பிழையா வஞ்சினஞ் செய்த
கள்வனும் கடவனும் புணைவனுந் தானே. 


கொண்டு கூட்டு: எறிசுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்வெறிஅயர் களத்தினில் தோன்றும் துறைவன்குறியானாயினும் குறிப்பினும், பிறிதொன்று அறியாற்கு யான் உரைப்பலோ! எய்த்த இப் பணையெழில் மென்தோள் அணைஇய அந்நாள் பிழையா வஞ்சினஞ் செய்த கள்வனும் கடவனும் புணைவனும் தானே!
அருஞ்சொற்பொருள்: எறிதல் = அழித்தல்; கலித்த = தழைத்த (மிகுந்த); இலங்குதல் = விளங்குதல்; வீ = பூ; ஞாழல் = ஒரு வகை மரம்; புன்னை = ஒருவகை மரம் (புலிநகக் கொன்றை); தாஅய் = பரவி; வெறி அயர் களம் = வெறியாட்டு நடைபெறும் இடம்; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; குறி = குறிப்பு; பிறிது ஒன்று = வேறொன்று (இங்கு, தலைவியைத் தலைவன் அல்லாத பிறர்க்கு  மணம் செய்விப்பதைக் குறிக்கிறது); எய்த்த = மெலிந்த; பணை = மூங்கில்; எழில் = அழகு; வஞ்சினம் = சூள் (சத்தியம்); கடவன் = கடமைப்பட்டவன்; புணைவன் = தெப்பம் போன்றவன் (பாதுகாவலாக இருப்பவன்).
உரை: தன்னை நெருங்குகின்றவரைக் கொல்லுகின்ற சுறாமீன்கள் நிறைந்த, விளங்குகின்ற கடற்கரை, மணம் கமழும் ஞாழற்பூவோடு புன்னை மலரும் பரவி, வெறியாடும் இடத்தைப் போலத் தோன்றுகிறது. அத்தகைய  துறையையுடைய தலைவன், என்னைத் திருமணம் செய்துகொள்ளும் குறிக்கோள் உடையவனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேறு எவராவது என்னைத் திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்பதை அறியாத அவனுக்கு,  நான் அதைப்பற்றிக் கூற வேண்டுமா? மூங்கிலைப் போன்ற, அழகையுடைய என் மெல்லிய தோள்கள் இப்பொழுது மெலிந்தன. அவை மெலியாது அழகுடன் இருந்த பொழுது, என்னைத் தழுவிய அந்த நாளில்,  தான் தவறு செய்ய மாட்டேன் என்று சூளுரைத்த, வஞ்ச நெஞ்சுடையவனும்,  தான் உரைத்த சூளுரையை நிறைவேற்றும் கடமை உடையவனும், துன்பக் கடலைக் கடப்பதற்கு நமக்கோர் பாதுகாவலாக (தெப்பம் போல்) இருப்பவனும் அத்தலைவனே ஆவான்.

சிறப்புக் குறிப்பு: ”எய்த்த தோள்என்றது தலைவன் திருமணம் செய்துகொள்ளாமல் களவொழுக்கத்தைத் தொடர்வதால் தன் தோள்கள் மெலிந்தன என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது. தன் சூளுரைக்கேற்பத் தலைவன் நடந்து கொள்ளாததால் அவனைக் கள்வன் என்று தலைவி கூறுகிறாள். தலைவன் கள்வனாயினும் அவனைத் தட்டிக்கேட்டு அவனுக்குத் தண்டனை அளிப்பார் எவரும் இல்லாததால், தானே தன் சூளுரையை நிறைவேற்றும் கடமையை உடையவன் என்றும். தலைவனைத் தவிர வேறு எவரும் தனக்கு உதவி செய்ய முடியாததால் தலைவனைப்புணையன் (தெப்பம் போன்றவன்)” என்று தலைவி கூறுகிறாள்.

317. தோழி கூற்று

317. தோழி கூற்று

பாடியவர்: மதுரைக் கண்டரதத்தன். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி தலைவனை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதைக் கண்ட தோழி, “ இப்பொழுது குளிர்காலம் வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாக வாடைக் காற்றும் வீசுகிறது. இந்தக் குளிர்காலத்தில் தலைவன் உன்னைவிட்டுப் பிரிந்திருக்க மாட்டான். அவன் விரைவில் வந்துவிடுவான்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி யயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்
தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக
வடபுல வாடைக் கழிமழை
தென்புலம் படருந் தண்பனி நாளே. 


கொண்டு கூட்டு: புரிமட மரையான் கருநரை நல்ஏறுதீம்புளி நெல்லி மாந்தி, அயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்து உயிர்த்து, ஓங்குமலைப் பைஞ்சுனை பருகும் நாடன்கைம்மிக வடபுல வாடைக்கு அழிமழை தென்புலம் படரும் தண்பனி நாள், நம்மைவிட்டு அமையுமோ

அருஞ்சொற்பொருள்: புரிதல் = விரும்பல்; மடப்பம் = இளமை; மரையான் = ஒருவகை மான்; ஆன் = எருமை, மான் ஆகியவற்றின் பெண்; தீம்புளி = இனிப்புள்ள புளிப்பு; மாந்துதல் = உண்ணுதல்; பாய்தல் = பரவுதல்; மா = அழகு; வெய்து உயிர்த்து = வெப்பமுள்ள பெருமூச்சுவிட்டு; கைம்மிக = அளவுக்கு மீறி (அதிகமாக); மழை = மேகம்; அழிமழை = சிதைந்த மேகம்.
உரை: விரும்பத்தக்க இளம் மரையான் இனத்தைச் சார்ந்த, கருமையும் வெண்ணிறமும் கலந்த மயிரை உடைய நல்ல ஆண்,  இனிய புளிப்பையுடைய நெல்லிக்கனியைத் தின்று, அருகில் உள்ள,  தேன் நிறைந்த அழகிய மலர்கள், அசையும்படி வெப்பமாக மூச்சை விட்டு,  உயர்ந்த மலையிலுள்ள பசுமையான தண்ணீரைக் குடிக்கின்ற நாட்டையுடைய தலைவன், மிகுதியாக வீசும், வடக்கிலிருந்து வந்த வாடைக்காற்றால் சிதைந்த மேகம்,  தெற்கு நோக்கிச் செல்லும், குளிர்ந்த பனிக்காலத்தில், நம்மைப் பிரிந்து தனிமையாக வாழ்வானோ?
சிறப்புக் குறிப்பு: நெல்லிகனியைத் தின்றால் புளிப்பும் இனிமையும் தோன்றுவதால் தீம்புளி நெல்லிஎன்றாள். உண்ணும் பொழுது நெல்லிக்கனி அதில் இனிமையும் புளிப்பும் கலந்திருப்பதுபோல், களவொழுக்கத்தில் இன்பமும் துன்பமும் கலந்திருக்கிறது. நெல்லிக்கனியை உண்ட பிறகு நீரைக் குடித்தால், அது இனிமையாக இருப்பதுபோல், திருமணத்திற்குப் பிறகு இல்லறமும் இனிமையாக அமையும் என்று தோழி குறிப்பாகக் கூறுகிறாள்.  

காட்டிலுள்ள மரையான்  முதலிய விலங்குகள் மலரால் மூடப்பட்ட சுனைநீரைக் குடிக்கும்பொழுது  அம்மலர்களைத் தம் மூச்சுக் காற்றால் விலகச் செய்து அதன் பிறகு நீரைக்குடிப்பது வழக்கம் என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

316. தலைவி கூற்று

316.  தலைவி கூற்று
பாடியவர்: தும்பிசேர் கீரனார்.
திணை: நெய்தல்.
கூற்று : "வரைவிடை வேறுபடுகின்றாய்" என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அதனால் தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவள் கைவளையல்கள் நெகிழ்ந்து, உடல் மெலிந்து காணப்படுகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, “தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நீ மிகவும் வருந்துகிறாய் போலும். எப்படியாவது, பிரிவைப் பொறுத்துகொள்ள முயற்சி செய். தலைவன் விரைவில் வந்துவிடுவான்.” என்று ஆறுதல் கூறுகிறாள். “தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற காலம் கடந்தது. ஆனால், அவன் இன்னும் வரவில்லை. அவன் என்னைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று எனக்கு அளித்த உறுதிமொழிகள் எல்லாம் பொய்யாயின. என் வருத்தத்தின் காரணத்தை என் தாய் அறிந்துகொள்வாளோ என்று நான் அஞ்சுகிறேன். அவள் அறிந்து கொண்டால், நான் உயிர் வாழ மாட்டேன்.” என்று தலைவி கூறுகிறாள்.
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
ஓரை மகளி ரோராங் காட்ட
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே.

கொண்டு கூட்டு: தோழி! வாழி! உரவுக்கடல் பொருத விரவு மணல் அடைகரை ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரிஓங்குவரல் விரிதிரை களையும் துறைவன் சொல்லோ, பிற ஆயின. ஆய்வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும் நோய்மலி வருத்தம் அன்னை அறியின் விளியாது உளெனோ?
அருஞ்சொற்பொருள்: ஆய்வளை = அழகிய வளையல்கள்; உளெனோ = உயிரோடு இருப்பேனோ; ஞெகிழ்தல் = கழலுதல்; அயர்வு = வருத்தம்; நிறுப்பவும் = நிலைக்கச் செய்யவும்; நோய் = துன்பம்; மலிதல் = மிகுதல்; விளியாது = இறவாது; உரவு = வலி; விரவுதல் = கலத்தல்; அடைகரை = மணல் அடைந்த கரை (கரை ஓரம்); ஒரை = சிறுமியர் விளையாட்டு; ஓராங்கு = ஒரேயடியாக; ஆட்ட = துன்புறுத்த; ஆய்தல் = வருந்துதல்; அலவன் = நண்டு ; துனை = விரைவு; பரிதல் = ஓடுதல்; பிற ஆயின = பொய்யாயின.
உரை: தோழி! நீ வாழ்க! வலிய கடல் அலைகள் மோதுவதால், மணல் பரவியுள்ள கடற்கரையில், பெண்கள் ஒரை என்னும் விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து, அங்குள்ள நண்டு ஒன்றைத் துன்புறுத்துகிறார்கள். அதனால், வருத்தமடைந்த அந்த நண்டு, துன்பத்தோடு விரைந்து ஓடுகிறது. உயர்ந்து வருகின்ற விரிந்த அலை, அந்த நண்டைக் கொண்டு சென்று, அந்த நண்டின் துன்பத்தை நீக்குகிறது. அத்தகைய, துறையையுடைய தலைவன் சொன்ன சொற்கள் பொய்யாயின. அதனால், என் கையிலுள்ள அழகிய வளையல்கள் நெகிழ்ந்தன; உடலில் சோர்வு நீங்காமல் நிலைத்தது. இவ்வாறு என் காமநோயால் எனக்கு உண்டான மிகுந்த வருத்தத்தை என் தாய் அறிவாளாயின், நான் இறவாமல் உயிரோடு இருப்பேனோ?

சிறப்புக் குறிப்பு: மகளிர் துன்புறுத்திய பொழுது, அவர்களுக்கு அஞ்சி விரைந்து ஓடிய நண்டை, அம்மகளிர் கையில் அகப்படாதவாறு அலை கொண்டு சென்றது. அதனால், அந்த நண்டின் துன்பம் தீர்ந்தது.  அதுபோல், தனது காமநோயால் உண்டாகிய மிகுந்த வருத்தத்தையும், ஊரார் கூறும் அலரால் தோன்றிய வருத்தத்தையும், களவொழுக்கத்தைத் தாய் அறிந்து கொள்வாளோ என்ற அச்சத்தையும், தலைவன் தன்னைத் திருமணம் செய்துகொண்டு, போக்க வேண்டும் என்று தலைவி விரும்புகிறாள்.