Tuesday, November 17, 2015

112. தலைவி கூற்று

112.  தலைவி கூற்று

பாடியவர்: ஆலத்தூர் கிழார். இவர் ஆலத்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (112, 350), புறநானூற்றில் ஐந்து பாடல்களும் (34, 36, 69, 225, 324) இயற்றியுள்ளார்
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்த வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்துகிறான். அதனால் வருந்திய தலைவி, “ நான் ஊரார் பழிச்சொற்களுக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்தால் என் காமம் குறைந்துவிடும். காமத்தை முழுமையாக விட்டுவிட்டால் என்னிடம் எஞ்சியிருப்பது நாணம் ஒன்றுதான். என் பெண்மை நலன் தலைவனால் நுகரப்பட்டு சிறிதளவே எஞ்சி உள்ளது.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே.

கொண்டுகூட்டு: தோழி! கௌவை அஞ்சிற் காமம் எய்க்கும்எள் அறவிடினே உள்ளது நாணே; அவர் உண்டஎன் நலன், பெருங்களிறு வாங்க, முரிந்துநிலம் படாஅ நாருடை ஒசியல் அற்றே; கண்டிசின்

அருஞ்சொற்பொருள்: கெளவை = பழிச்சொல்; எய்த்தல் = தேய்தல், குறைதல்; எள் = இகழ்ச்சி; அறவிடுதல் = முற்றாக நீக்குதல்; ஒசியல் = ஒடிந்த மரக்கிளை; கண்டிசின் = காண்பாயாக.

உரை: தோழி! பிறர் கூறும் பழிச்சொற்களுக்கு அஞ்சினால், காமம் குறையும்.  பிறருடைய பழிச்சொற்கள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் காமத்தை விட்டுவிடவேண்டும். அவ்வாறு காமத்தை விட்டுவிட்டால், என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே ஆகும்; தலைவர் நுகர்ந்த எனது பெண்மை நலம், பெரியகளிறு உண்ணும் பொருட்டு வளைக்க, வளைந்து,  நிலத்தில் விழாமல் நாருடன் ஒட்டிக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் ஒடிந்த கிளையைப் போன்றது.    இதனை நீ  காண்பாயாக!


சிறப்புக் குறிப்பு: தலைவனுக்குக் களிறும், தலைவியின் பெண்மை நலத்திற்கு ஒடிந்த கிளையும் உவமை. தலைவையின் பெண்மை நலன் தலைவனால் நுகரப்பட்டிருந்தாலும், தலைவன் தன்னை மணந்துகொள்வான் என்று தலைவி நினைப்பதால், அவள் பெண்மை நலன், முற்றிலும் முறிந்து கீழே விழாத கிளையைப்போல் சற்று எஞ்சியிருக்கிறது என்று தலைவி நினைக்கிறாள்

111. தோழி கூற்று

111. தோழி கூற்று

பாடியவர்: தீன்மதி நாகனார்.    இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.  
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்த வழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்குத் தலைவன் காலம் தாழ்த்துகிறான். அதனால், தலைவி வருந்துகிறாள். வருத்தத்தால், தலைவி உடலில் மாற்றங்கள் தோன்றியுள்ளன. ஒருநாள், தலைவன் தலைவியைக் காணவந்திருக்கிறான், அவன் வேலிப்புறத்தில் நின்றுகொண்டிருக்கிறான். அவன் வந்திருப்பதை அறிந்த தோழி, “உன்னுடைய உடலில் காணும் வேறுபாடுகளைக் கண்டு, அவற்றிற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள உன் தாய் வெறியாட்டக்காரனை அழைக்கப் போகிறாள். அவன் இந்த வேறுபாடுகள் தெய்வத்தால் வந்தன என்று கூறுவான். இந்த நகைச்சுவையான காட்சிகளைக் காண்பதற்குத் தலைவன் நம் இல்லத்திற்கு சிறிது வந்து செல்ல வேண்டும்.” என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள்.

மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.

கொண்டுகூட்டு: தோழி! மென்தோள் நெகிழ்த்த செல்லல், வேலன் வென்றி நெடுவேள் என்னும், அன்னையும் அதுவென உணரும் ஆயின், ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந்தன்ன கேழ் இரும் துறுகல் கெழும் மலைநாடன்  நம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே வல்லே வருக.

அருஞ்சொற்பொருள்: நெகிழ்த்த = மெலியச் செய்த; செல்லல் =  துன்பம்; வேலன் = வெறியாட்டம் ஆடுபவன்; வென்றி = வெற்றி; வேள் = முருகன்; ஆயிடை = அப்பொழுது; கூழை = குறுகியது, குட்டையானது ; இரு = கருமையான ; பிடி = பெண்யானை; கரத்தல் = மறைத்தல்; கேழ் = நிறம்; துறுகல் = பாறை (குண்டுக்கல்) ; கெழு = பொருந்திய; வல்லே = விரைவில்; நகை = சிரிப்பு; காணிய = காண்பதற்கு.

உரை: தோழி! உன்னுடைய மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம், வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று வெறியாட்டாளன் சொல்லுவான். நம் தாயும்,  அதுவென்றே நினைப்பாளாயின், அப்பொழுது, சிறிய கருமையான பெண்யானை, தன் கையை மறைத்துப் படுத்திருப்பது போல் காட்சி அளிக்கும் கரிய நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டின் தலைவன்,  நம் வீட்டில் உள்ளவர்களின் பெரிய நகைக்கிடமான செய்கையைக் காணும் பொருட்டு, சிறிது நேரம், இங்கே விரைந்து வந்து செல்வானாக.


சிறப்புக் குறிப்பு:   தும்பிக்கையை மறைத்துக்கொண்டு படுத்திருக்கும் சிறிய யானையைப் போல் பாறை காட்சி அளிப்பதை ஆராய்ந்து அறிபவர்களுக்குத்தான் அதன் உண்மைத் தோற்றம் தெரியும் அதுபோல், ஆராயமல் காண்பவர்க்குத் தலைவியின் நிலைக்கு முருகன் காரணம் என்பதும்  ஆராய்வார்க்கு, அவள் தலைவன்மீது கொண்ட காதல்தான் காரணம் என்பதும் புலனாகும் என்பது குறிப்பு. ”இல்லோர் பெருநகைஎன்றது, தலைவியின் தாயும் மற்றவர்களும், தலைவியின் வேறுபட்ட நிலைக்குக் காரணம் தெரிந்துகொள்வதற்காக வேலனை அழைத்து வெறியாட்டம் நடத்துவது, கட்டுவிச்சியை அழைத்துக் குறிசொல்லச் சொல்லுவது போன்ற நிகழ்ச்சிகளைக் குறிக்கிறது

110. தலைவி கூற்று

110.  தலைவி கூற்று

பாடியவர்: கிள்ளிமங்கலங்கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 76 – இல் காணலாம்.
திணை: முல்லை.
 கூற்று - 1: பருவங்கண்டு அழிந்த (வருந்திய) தலைமகள் தோழிக்கு உரைத்தது.
கூற்று – 2: தலைமகனைக் கொடுமைகூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதுமாம் (வற்புறுத்தியதும்) ஆம்.
கூற்று விளக்கம் - 1: தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால், கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) கழிந்து இப்பொழுது வாடைக்காற்று வீசும் குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்) வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. தலைவி பிரிவினால் படும் துன்பத்தைத் தாங்க முடியாமல் இருக்கிறாள். “அவர் இனி வந்தாலும் வராவிட்டாலும் மிகுந்த வேறுபாடு இல்லை. நான் இறக்கப் போகிறேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
கூற்று விளக்கம் – 2: நம்மீது அன்புடையவரகத் தலைவர் இருந்தால் நம்மைத் துன்புறுத்தும் இவ்வாடைக்காலத்தில் வந்து அவர் நம் துன்பத்தைப் போக்க வேண்டும். இந்த வாடைகாற்று வீசும் காலத்தில் நமக்குப் பாதுகாப்பாக அவர் வராவிடின், அவர் இனி வந்தும் பயனில்லை என்று தோழி கூறியதாகவும் இபாடலுக்குப் பொருள் கொள்ளலாம். ஆனால், முதல் கூற்று (அதாவது, தலைவி கூறுவதாகக் கொள்வது) இரண்டாவது கூற்றைவிடச் சிறந்ததாகத் தோன்றுகிறது.

வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
யாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையொடு
என்னா யினள்கொல் என்னா தோரே. 

கொண்டு கூட்டு: தோழி ! நீர நீலப் பைம்போது உளரிப் புதல பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று  இன்னாது எறிதரும் வாடையொடு என் ஆயினள்கொல் என்னாதோர் வாராராயினும் வரினும் அவர்நமக்கு யார் ஆகியரோ?. 

அருஞ்சொற்பொருள்: பை = பசுமை; போது = அரும்பு; உளர்தல் = கோதுதல், தடவுதல்; புதல் = புதர்; பீலி = மயில் தோகை; பொறி = புள்ளி; கருவிளை = ஒருவகை மரம்; ஈங்கை = ஒரு செடி; ஊழ்த்தல் = மலர்தல்; துய் = பஞ்சு போன்ற மென்மை ; எறிதல் = வீசுதல்.


உரை: தோழி, நீரிலுள்ள, நீலமலர்களின் அரும்புகளை மலரச் செய்து, புதரில் உள்ள மயிற்பீலியின் ஒளிபொருந்திய புள்ளிகளைப் (கண்ணைப்) போன்ற கருவிளை மலரைஅசைத்து,  நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது சிவந்த அரும்புகள் மலர்ந்த, அழகிய நிறத்தையும்  மென்மையையும் உடைய மலர்களை உதிரச் செய்து, குளிர்ச்சியுடன் துன்பத்தைத் தருகின்ற வாடைக் காற்றினால், ”இவள் எத்தன்மையினள் ஆனாளோ”, என்று நினைந்து கவலையுறாத தலைவர், வாராவிட்டாலும், வந்தாலும், நமக்கு எத்தகைய உறவினராவர்? அவர் வருவதற்குள் நான் இறந்து விடுவேன்.

109. தோழி கூற்று

109. தோழி கூற்று

பாடியவர்:  நம்பி குட்டுவர். இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (109,243), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (236, 243) இயற்றியுள்ளார்
திணை: நெய்தல்.
 கூற்று: சிறைப்புறம் தம் வேறுபாடு கண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்றத் தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கு காலம் கடத்துகிறான்அதனால் தலைவி வருந்திகிறாள். வருத்தத்தால்  அவள் நெற்றி தன் அழகை இழந்து காணப்படுகிறது. அதைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர். தலைவியைக் காணவந்த தலைவன் காதில் கேட்குமாறு, அலர் பற்றிய செய்தியைத் தோழி  கூறுகிறாள்.

முடக்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே. 

கொண்டு கூட்டு: முடக்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை புணரி இகுதிரை தரூஉந் துறைவன் புணரிய இருந்த ஞான்றும் இன்னது மன்னோ நன்னுதற் கவினே. 

அருஞ்சொற்பொருள்: முடம் = வளைவு; முடக்கால் = முடம் + கால் = வளைந்த கால்; இறவு = இறால் மீன் (இறா மீன்); முடங்குதல் = வளைதல்; புறம் = முதுகு; கிளை = இனம்; புணரி = கடல்; இகுதல் = விழுதல்; துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்; புணரிய = அளவளாவிய; ஞான்று = பொழுது; இன்னது = இத்தன்மையது; மன் = கழிவுக்குறிப்பு ( இரங்கத் தக்கது); கவின் = அழகு.


உரை: வளைந்த காலையுடைய இறாமீனின், வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை,  கடலில் தோன்றும் அலைகள், கொண்டுவந்து தருகின்ற கடற்கரையையுடைய தலைவனோடு அளவளாவி இருந்தபொழுதும், உன்னுடைய நல்ல நெற்றியின் அழகு, பிறர் அலர் கூறும்படி அழகை இழந்து இத்தகையதாயிற்று; இது இரங்கத் தக்கதாகும்!

108. தலைவி கூற்று

108. தலைவி கூற்று

 பாடியவர்: வாயிலான் தேவனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 103 – இல் காணலாம்.
திணை: முல்லை.
 கூற்று: பருவங்கண்டு அழிந்த (வருந்திய) தலைமகள் தோழிக்குக் கூறியது.
கூற்று விளக்கம்: கார்காலம் வந்தும் தலைவன் இன்னும் திரும்பிவரவில்லை. அத்தகைய கார்காலத்தில், ஒருநாள் மாலைப்பொழுதில், தன் கணவனின் பிரிவை நினைத்துத் தலைவி வருந்துகிறாள். தான் இனி உயிர் வாழ மாட்டேன் என்று தோழியிடம் கூறுகிறாள்.
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே.

கொண்டு கூட்டு: தோழி ! மழை விளையாடும் குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயிற் படரப் புறவிற் பாசிலை முல்லை ஆசில் வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல் யானே.

அருஞ்சொற்பொருள்: மழை = மேகம்; சிறுகுடி = சிற்றூர்; கறவை = பாற்பசு; வயின் = இடம்; புறவு = முல்லை நிலம்; பாசிலை = பசுமையான இலை; ஆசில் = ஆசு + இல்; ஆசு = குற்றம்; வான் = சிறப்பு; செவ்வான் = செ+வான் = சிவந்த வானம்; செவ்வி = அழகு; உய்யேன் = உயிர் வாழேன்.

உரை: தோழி! மேகங்கள் விளையாடும் மலையைச் சார்ந்த சிற்றூரில், மேய்வதற்காகச் சென்றிருந்த கறவைப் பசு தன் கன்றை நோக்கிச் செல்லுகிறது. சிவந்த முல்லை நிலத்தில், பசுமையான இலைகளையுடைய முல்லையினது குற்றமற்ற சிறந்த பூக்கள், சிவந்த வானத்தில் உள்ள விண்மீன்கள் போல் அழகாகக் காட்சி அளிக்கின்றனஇத்தகைய கார்காலத்தில், மாலைநேரத்தில், என் தலைவர் என்னோடு இல்லாததால் நான் உயிர் வாழ மாட்டேன் போலிருக்கிறது. 

சிறப்புக் குறிப்பு: மழை விளையாடும் குன்றுஎன்றது கார்காலம் வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. கறவைப் பசு தன் கன்றை நினைத்துச் செல்லுவதும் முல்லைப் பூ பூத்திருப்பதும்  மாலை நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள். சிவந்த முல்லை நிலத்தில் வெண்ணிறமான முல்லைப் பூக்கள் பூத்திருப்பது, சிவந்த வானத்தில் விண்மீன்கள் தோன்றியதுபோல் காணப்படுவதால், “செவ்வான் செவ்வி கொண்டன்றுஎன்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.

107. தலைவி கூற்று

107. தலைவி கூற்று

பாடியவர்: மதுரைக் கண்ணனார்: இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
 கூற்று: பொருள் முற்றி வந்த (பொருள் தேடிக்கொண்டுவந்த) தலைமகனையுடைய கிழத்தி (தலைவி) காமமிக்க கழிபடர் கிளவியாற் ( காம உணர்வு மிகுதிப்பட்டதால்) கூறியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடிக்கொண்டுவந்த தலைவன் திரும்பி வந்ததால், தலைவி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். நீண்ட நாட்களாக தன் கணவனைப் பிரிந்திருந்ததால், அவள் அவனோடு மிகுந்த காமத்தோடு உறங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது, பொழுது புலர்ந்தது. அதனால், சேவல் கூவியது. அந்தச் சேவல் தம்மை நள்ளிரவில் உறக்கத்திலிருந்து எழுப்பியதாக நினைத்து,  ”சேவலே! நீ இறந்து படுவாயாகஎன்று தலைவி அந்தச் சேவலைக் கடிந்துகொள்கிறாள்.

குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே. 

கொண்டு கூட்டு: குவியிணர்த் தோன்றி ஒண்பூ அன்ன தொகு செந்நெற்றிக் கணங்கொள் சேவல்நெடுநீர் யாணர் ஊரன் தன்னொடு வதிந்த ஏம இன்துயில் எடுப்பியோய்நீ நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு அல்கு இரையாகிக்
கடுநவைப் படீஇயரோ !

அருஞ்சொற்பொருள்: குவி = குவிந்த; இணர் = கொத்து; தோன்றி = செங்காந்தள்; ஒள் = ஒளி; தொகுத்தல் = திரட்டிக் கூட்டுதல் ; செ = சிவந்த; நெற்றி = கொண்டை; கணம் = கூட்டம்; யாமம் = நள்ளிரவு; இல் = வீடு; வெருகு = காட்டுப் பூனை; அல்குதல் = தங்குதல்; அல்கு இரை = சில நாட்கள் வைத்து உண்ணும் உணவு; கடுத்தல் = மிகுதல்; நவைதுன்பம்; நெடுநீர் = ஆழமான நீர்; யாணர் = புது வருவாய்; வதிந்த = தங்கிய; ஏமம் = பாதுகாவல்எடுப்புதல் = எழுப்புதல்.


உரை: குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளின் ஒளிபொருந்திய  பூவைப் போன்ற, ஒன்றுசேர்ந்த சிவந்த கொண்டையையுடைய, தன் கூட்டத்தோடு கூடி உள்ள சேவலே ! ஆழமான நீர்நிலைகளால் உண்டாகும், புது வருவாயையுடைய, ஊரையுடைய தலைவனோடு (என் கணவனோடு) நான் சேர்ந்து, இன்பத்தைத் தரும் பாதுகாப்பான இனிய உறக்கத்திலிருக்கும் பொழுது, எம்மை எழுப்பினாய். அதனால், நீ செறிந்த இருளையுடைய நள்ளிரவில்வீட்டிலுள்ள எலிகளை உண்ணுவதற்கு எதிர்பார்த்திருக்கும் காட்டுப் பூனையின் குட்டிக்கு, சிலநாள் வைத்துண்ணும் உணவாகி, மிக்க துன்பத்தை அடைவாயாக

106. தலைவி கூற்று

106.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
 கூற்று: தலைமகள் தூதுகண்டு கிழத்தி தோழிக்குக் கூறியது.
கூற்று விளக்கம்: பரத்தையை விரும்பித் தலைவியைப் பிரிந்து வாழும் தலைவன் தன் குற்றத்தை உணர்ந்தான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். அவளிடம் தனக்குள்ள உண்மையான அன்பைக் கூறி, அவளோடு மீண்டும் வாழ்வதற்கு அவள் சம்மதத்தைப் பெற்றுவருமாறு தூதுவனை அனுப்புகிறான். தூதுவன் சொல்லியவற்றைக் கேட்ட தலைவி, ”என் கணவன் அவனுடைய குற்றத்தை உனர்ந்துவிட்டான். என் மீது உண்மையான அன்புடையவனாக இருக்கிறான்.” என்று நினைக்கிறாள். ”திருமணம் ஆனபொழுது நான் எப்படி என் கணவரோடு அன்பாக இருந்தேனோ, அப்படியேதான் இன்னும் இருக்கிறேன்.” என்று தூதுவனிடம் சொல்லப் போவதாகத் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.  

புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே. 

கொண்டு கூட்டு: தோழி ! வாழி ! புல்வீழ் இற்றிக் கல்  இவர் வெள்வேர் வரையிழி அருவியின் தோன்றும் நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று. நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு தான் மணந்த அனையம் என தூது விடுகம். 

அருஞ்சொற்பொருள்: புல் = புல்லிய (சிறிய); வீழ் = விழுது; இற்றி = ஒரு வகை மரம் ; கல் = மலை; இவர் = படர்கின்ற; வரை = மலை; இழிதல் = இறங்குதல்; கிளவி = சொல்; வயின் = இடம்.

உரை: தோழி, சிறிய விழுதையுடைய இற்றிமரத்தின், மலையில் படர்கின்ற வெண்மையான வேர், மலைப்பக்கத்தில் விழுகின்ற அருவியைப்போலத் தோன்றும் நாட்டையுடைய தலைவன், தன் குற்றமற்ற நெஞ்சில் நினைத்துக் கூறிய சொற்களை உரைக்கும் தூதுவன், நம்மிடத்து வந்துள்ளான்.  நாமும், நெய்யைப் பெய்த தீயைப்போல, அந்தத் தூதுவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு, ”அவர் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையிலேதான் இன்னும் உள்ளேன் என்று கூறித் தூதுவிடுவோம்.

சிறப்புக் குறிப்பு: இற்றியின் விழுது அருவி போலத் தோன்றுவதைப் போல், பரத்தையர் தன்மீது காட்டும் அன்பை உண்மையான அன்பு என்று எண்ணித் தலைவன் மயங்கினான் எனபது குறிப்பு. நெய்யை ஏற்றுக்கொண்டு, தீ நன்கு எரிவதுபோல், தானும் தலைவனை ஏற்றுக்கொண்டு, இன்பமாக வாழலாம் என்று தலைவி எண்ணுவதாகத் தோன்றுகிறது. தீயில் இட்ட நெய், தீயிலிருந்து வெளிப்படாதது போல், தலைவனை ஏற்றுக்கொண்டு, இனி அவன் தன்னைவிட்டுப் பிரியாது வாழலாம் என்றும் தலைவி எண்ணுவதாகக் கருதலாம்.


105. தலைவி கூற்று

105.  தலைவி கூற்று 

பாடியவர்: நக்கீரர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78-இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
 கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். அவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்திருப்பதாகத் தலைவி எண்ணினாள். ஆனால், நெடுங்காலமாகியும் தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளைச் செய்யவில்லை. அவனோடு தான் நட்பு கொண்டது தவறோ என்று எண்ணித் தலைவி வருந்துகிறாள். ”தலைவனோடு எனக்குள்ள நட்பு நினைவளவிலே நின்று என்னைத் துன்புறுத்துகிறது.” என்று தலைவி தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.
.
கொண்டு கூட்டு: புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக் கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரலை அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பு ஆகின்று.

அருஞ்சொற்பொருள்: புனவன் = குறிஞ்சிநிலத்தைச் சார்ந்தவன் (குறவன்); துடவை = தோட்டம் ; கடி = புதியது; குரல் = தானியங்களின் கதிர்; மஞ்ஞை = மயில்; ஆடுமகள் = வெறியாட்டம் ஆடும் பெண் (தேவராட்டி); வனப்பு = அழகு ; வெய்து உற்று = வெம்மையுற்று; சூர் = அச்சம் தரும் தெய்வம்; மலிதல் = மிகுதல்; கேண்மை = நட்பு, உறவு.

உரை: குறவனுடைய தோட்டத்தில் விளைந்த, பொன்னைப் போன்ற சிறு தினையின் வளமான கதிர், புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் படைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. அதைத் தெரியாமல் உண்ட மயில், தன் தவற்றை உணர்ந்தவுடன்வெறியாட்டம் ஆடும் பெண் அழகாக ஆடுவதைப்போல் ஆடி  வெப்பமுற்று நடுங்கும். அத்தகைய அச்சம்தரும் தெய்வம்  வாழும் மலை நாடனோடு நான் கொண்ட நட்பு, எனக்கு நீர் நிறைந்த கண்களோடு அதை நினைத்து நான் துன்புறுவதற்குக் காரணமாகியது.


சிறப்புக் குறிப்பு:    குறிஞ்சி நிலத்தில் உள்ளவர்கள், விதைத்த தினையிலிருந்து தோன்றிய முதற் கதிரைத் தெய்வத்துக்குப் படைப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறதுதெய்வத்துக்கிட்ட பலியை இனியது என்று கருதி, அறியாது உண்ட மயில் பின்பு நடுங்கியது என்றது, தன் தகுதிக்கு மேற்பட்டவனின் நட்பை இனியது என்று எண்ணி, அறியாமல் அவனைக் காதலித்ததால் தலைவி நடுக்கமுற்றாள் என்பதைக் குறிக்கிறது.  தலைவிக்குத்   தலைவனோடு கூடிய நட்பு, அவளுக்குக் கண்ணீர் பெருகச் செய்யும் துன்பத்தைத் தந்து, நினைவளவிலே நின்றதேயன்றி இன்பத்தைத் தந்து, திருமணம் நடைபெறும் அளவுக்கு முற்றவில்லை என்பது தலைவியின் கருத்தாகத் தோன்றுகிறது