Sunday, February 21, 2016

160. தலைவி கூற்று

160. தலைவி கூற்று

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 77 –இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கித் தோழி, வரைவரென ஆற்றுவிப்புழித் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்:  திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன், தான் திரும்பி வருவதாகக் குறிப்பிட்ட காலத்தில் வரவில்லை. தோழி, “அவர் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்வார். பொறுமையாக இரு.” என்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, “இதுவரை அவர் வரவில்லை. இனி அவர் வந்து எப்படித் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்?” என்று கேட்கிறாள்.


நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரவே. 

கொண்டு கூட்டு: நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன கொடுவாய்ப் பேடையொடு தடவின் ஓங்குசினைக் கட்சியில் பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமத்துப் பெருந்தண் வாடையும் வாரார். தோழி! நம் காதலர் வரவு இஃதோ?

அருஞ்சொற்பொருள்: அன்றில் = ஆணும் பெண்ணும் எப்பொழுதும் இணைந்திiருக்கும் பறவை; இறவு = இறால் மீன் ; கொடுவாய் = வளைந்த வாய்; பேடை = பெண்பறவை; தடவு = தடா மரம் ; ஓங்கல் = உயர்ச்சி; சினை = கிளை; கட்சி = பறவைக்கூடு; கையறுதல் = செயலறுதல்; நரல் = ஒலி; நள் = செறிவு; யாமம் = நடுஇரவு; வாடை = வடக்கிலிருந்து வரும் குளிர் காற்று; வாரார் = வரமாட்டார்.

உரை: தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறாமீனைப் போல் வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு, தடா மரத்தின் உயர்ந்த கிளையில் உள்ள கூட்டிலிருந்து கொண்டு, பிரிந்தவர் செயலற்று வருந்துமாறு  ஒலிக்கின்ற, இருள் செறிந்த நள்ளிரவில் மிகுந்த குளிர்ச்சியையுடைய வாடைக்காற்று வீசும் கூதிர் காலத்திலும், தலைவர் வரவில்லை. நம் தலைவர் என்னை மணந்து கொள்வது இதுதானோ?

சிறப்புக் குறிப்பு: ஆண் அன்றில் தன் துணையாகிய பெண் அன்றிலோடு மகிழ்ந்து எழுப்பும் ஒலியைக் கேட்டு, ”இப்பறவை பெற்ற பேறு நமக்குக் கிடைக்கவில்லையே!” என்று தன் துணையைப் பிரிந்தவர் வருந்துவராகையால் “‘பிரிந்தோர் கையற நரலும்என்றாள்.


வாடைக்காலம் வந்தும் தலைவர் வரவில்லை. அவர் இனியும் வருவார் என்று எப்படி நம்ப முடியும்? திருமணம் விரைவில் நடைபெறும் என்று நீ கூறுகிறாய். அது எப்படி நிகழும்?” என்று தோழியை நோக்கித் தலைவி வருத்தத்தோடு கேட்கிறாள்.

159. தோழி கூற்று

159. தோழி கூற்று

பாடியவர்: வடம வண்ணக்கண் பேரிசாத்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 81 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று - 1: தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது.
 கூற்று - 2: உயிர் செல வேற்றுவரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம்.
கூற்று விளக்கம் -1:  தலைவியும் தலைவனும் தங்கள் காதலைக் களவொழுக்கத்தில் தொடர்ந்து வந்தார்கள். ஒருநாள் தலைவியின் பெற்றோர்கள் அவளை வீட்டில் காவலில் வைத்தார்கள். வழக்கம்போல், அவளைக் காண வந்த தலைவன், தலைவியின் வீட்டுக்கு வெளியே உள்ள வேலிக்கு அருகில்  நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அவன் காதுகளில் விழுமாறு தோழிதலைவி காவலில் வைக்கப்பட்டிருக்கிறாள். இவ்வூரில் உள்ள அறிவில்லாத மக்கள் அவள் துயரத்தை உணராதவர்களாக உள்ளனர்என்று கூறுகிறாள். இவ்வாறு கூறுவதால் தலைவியின் நிலையை உணர்ந்து, தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தோழி எதிர்பார்க்கிறாள்.

கூற்று விளக்கம் - 2: தலைவி திருமணத்திற்கான பருவம் அடைந்தாள். அவளுடைய திருமணத்தைப் பற்றி, அவள் பெற்றோர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்அவளுடைய பெற்றோர்கள் அவளைத் தலைவன் அல்லாத வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்வித்தால், அவள் நிலை என்ன ஆகும்? அவள் உயிரையே விட்டுவிடுவாள். அவளுடைய துயரத்தை அறியாத இவ்வூர் மக்கள் அறிவில்லாதவர்கள். தலைவன் இதை உணர்ந்து, அவளைத் திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சிகளை விரைவில் எடுக்க வேண்டும் என்று மறைமுகமாகத் தலைவி தோழியிடம், தலைவன் காதில் கேட்குமாறு கூறுவதாகவும் இப்பாடலைக் கருதலாம்

இந்த இரண்டு கூற்றுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இப்பாடலைத் தலைவியின் கூற்றாகக் கருதுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஒருபெண் தன்னுடைய இடையைப் பற்றியும் மார்பகங்களைப் பற்றியும் தானே பெருமையாகப் பேசமாட்டாள்.  ஆகவே, இப்பாடலைத் தோழியின் கூற்றாகக் கருதுவதே சிறந்ததாகத் தோன்றுகிறது. தலைவி காவலில் வைக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அவளுடைய பெற்றோர்கள் அவளை வேறொருவருக்குத் திருமணம் செய்விக்கக் கூடும் என்ற கருத்தையும் தோழியே கூறுவதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறதுது.

தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொ டுசாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே. 

கொண்டு கூட்டு: தழையணி அல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, அம்மெல் ஆகம்  நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின;
இப்பேதை  ஊர் பூங்குழை யாங்கு ஆகுவள்கொல் என்னும் அவல நெஞ்சமொடு உசாவா
கவலை மாக்கட்டு.

அருஞ்சொற்பொருள்: அல்குல் = அடிவயிறு, இடை; தாங்கல் செல்லா = பொறுத்துக்கொள்ள முடியாத; நுழை = நுண்மை; நுசுப்பு = இடை; எவ்வம் = துன்பம்; ஆகம் = மார்பு; வீங்கி = பருத்து; கொம்மை = திரட்சி, பெருமை; வரி = தேமல்; செப்பு = சிமிழ், ஒருவகைப் பாத்திரம்; எதிர் = ஒப்பு; பூங்குழை = காதில் அணிகின்ற பூப்போன்ற அனிகலன்;  அவலம் = கவலை; உசாவுதல் = கேட்டல், ஆராய்தல்; மாக்கட்டு = மக்களை உடையது; பேதைமை = அறிவின்மை.

உரை: தான் அணிந்திருக்கும் தழையாடையைக் கூடத் தாங்க முடியாத நுண்மையான சிறிய இடைக்குத் துன்பம் உண்டாகும்படி, இந்தப் பெண்ணின் அழகிய மெல்லிய மார்பில், மிகுதியாகப் பருத்து, திரண்டு உருண்டு தேமலோடுகூடிய முலைகள் செப்பைபோல் (குவிந்த பாத்திரங்களைப் போல்) உள்ளன. ”காதில் பூப்போன்ற அணிகலன்களை அணிந்த இந்தப் பெண் எத்தகைய நிலையை அடைவாளோ?”, என்று கவலையோடு கேட்காத மக்களை உடையது இந்த அறிவற்ற ஊர்

சிறப்புக் குறிப்பு: பேதை ஊர்என்றது அவ்வூரில் வாழும் அறிவற்ற மக்களைக் குறிக்கிறது என்றாலும், தோழி செவிலித்தாய் போன்றவர்கள் தனது காதலை உணர்ந்து தன்னைத் தலைவனுக்கு த் திருமணம் செய்விப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதனால் அவளுக்கு அவர்கள் மீது உள்ள சினத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

நலம்புனைத்துரைத்தல்என்ற அதிகாரத்தில் தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுவதைத் திருவள்ளுவர் வெகு அழகாகச் சித்திரிக்கிறார். அந்த அதிகாரத்தில் உள்ள ஒருபாடல் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.                                                  (குறள் – 1115)

(பொருள்: இவள் தன் இடையின் மென்மையைக் கருதாது, அனிச்சப்பூவின் காம்பைக் கிள்ளாமல் தன் தலையில் அணிந்தாள். காம்போடு கூடிய அந்தப் பூவின் எடையைத் தாங்காமல் இவள் இடை முறிந்துவிடும். ஆதலால், இனி இவள் இடைக்கு மங்கலப் பறைகள் முழங்கா. அமங்கலப் பறைகளே முழங்கும்.)

158. தலைவி கூற்று

158. தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் இரவில் வந்து தலைவியைச் சந்தித்துப் பழகிவருகிறான். ஒருநாள் அவன் இரவில் வரும்பொழுது பெரியமழை பெய்தது. அந்த மழையினால் அவன் வருகைக்குத் தடை ஏதும் ஏற்படுமோ என்று தலைவி வருந்துகிறாள்அவன் வந்ததை அறிந்த தலைவி, அவன் காதில் கேட்குமாறு, மழையே!  நீ இமயத்தையே அசைக்கும் இடி முழக்கத்தோடு பெருமழை பெய்து, துணைவரைப் பிரிந்திருக்கும் பெண்டிரை வருத்துகிறாயே! உனக்கு இரக்கம் இல்லையா?” என்று கேட்கிறாள். 


நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர் அளியர் பெண்டிர் இஃதெவனோ. 

கொண்டு கூட்டு: நெடுவரை மருங்கில் பாம்புபட இடிக்கும் கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇ, காலொடு வந்த கமம் சூல் மாமழை! ஆர் அளி இலையோ?  நீ பேரிசை இமயமும் துளக்கும் பண்பினை;  பெண்டிர் துணையிலர்; அளியர். இஃது எவனோ?

அருஞ்சொற்பொருள்: வரை = மலை; மருங்கு = பக்கம்; பட = இறந்து பட; விசை = வேகம்; கடுவிசை = மிகுந்த வேகம்; உரும் = இடி; கழறுதல் = இடித்தல்; அளைஇ = கலந்து; கால் = காற்று; கமம் = நிறை, சூல் = கருப்பம்; மாமழை = பெரிய மழை; ஆர்தல் = பொருந்துதல்; அளி = இரக்கம்; இசை = புகழ்;  துளக்கும் = அசைக்கும்; அளியர் = இரங்கத் தக்கவர்கள்.

உரை: உயர்ந்த மலைப்பக்கத்திலுள்ள பாம்புகள் இறக்கும்படி இடிக்கின்ற மிகுந்த  வேகத்தையுடைய இடியின் முழக்கத்தோடு கலந்து, காற்றோடு வந்த,  நிறைந்த நீரைக் கருவாகக் கொண்ட பெரிய மழையே!  இயல்பாகவே உன்னிடம் உள்ள மிகுந்த இரக்கம் இப்பொழுது உன்னிடம் இல்லையோ?  நீ, பெரிய புகழையுடைய இமயமலையையும் அசைக்கும் தன்மையை உடையாய். தங்கள் துணைவரைப் பிரிந்திருக்கும் மகளிர் உன்னைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் இரங்கத் தக்கவர்கள்; அங்ஙனம் இருப்ப, இவ்வாறு நீ அவர்களை வருத்துவது  ஏன்?


சிறப்புக் குறிப்பு: பெருமழையினால் தலைவன் துன்புறுவானோ என்றும் அதனால் அவன் வருவானோ வரமாட்டானோ என்றும் அஞ்சிய தலைவி தான் அஞ்சியதைத் தலைவனுக்கு உணர்த்துகிறாள். அது மட்டுமல்லாமல், தன் மெல்லியல்பால், தானும் இந்தப் பெருமழையினால் அஞ்சியதையும் தலைவனுக்குத் தெரிவிக்கிறாள். இவ்வாறு இடி, மழை போன்றவற்றைக் கண்டு அஞ்சித் துணையில்லாமல் வாழ்வதைவிடத், தலைவனைத் திருமணம் செய்துகொண்டு வாழவதையே அவள் விரும்புவதையும் தலைவனுக்கு மறைமுகமாகக் கூறுகிறாள்.

157. தலைவி கூற்று

157. தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: பூப்பெய்திய தலைமகள் உரைத்தது.
கூற்று விளக்கம்: பூப்பு எய்திய தலைவி, அதை வெளிப்படையாகக் கூற விரும்பாமல், “கோழி கூவியது. பொழுதும் விடிந்தது. இனி, அடுத்த சில நாட்களுக்குத் தலைவரோடு படுத்து இன்பம் நுகரமுடியாதேஎன்று நினைத்து வருந்துகிறாள்.


குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூஉ நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே. 

கொண்டு கூட்டு: குக்கூ என்றது கோழி.  அதன் எதிர் தோள்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்று என என் தூஉ நெஞ்சம் துட்கு என்றன்று.

அருஞ்சொற்பொருள்: கோழி = சேவற்கோழி; துட்கு = அச்சம்; தூ = தூய்மை; தோய்தல் = கலத்தல் (தழுவுதல்); வைகறை = விடியற்காலம்.

உரை: கோழி குக்கூவென்று கூவியது. அதைக் கேட்டவுடன், விடியற் பொழுது வந்தது என்பதை நான் உணர்ந்தேன். என் தலைவர் என் தோளைத் தழுவிக்கொண்டு படுத்திருந்தார். வாளால் ஒரு பொருளை வெட்டினால் அது எப்படிப் பிளவுபடுமோ, அதுபோல், அந்த விடியற் காலம், தோளைத் தழுவியிருந்த என் தலைவரை, என்னிடம் இருந்து பிரியச்செய்யும் என்று என் மாசற்ற மனம் அஞ்சியது.

சிறப்புக் குறிப்பு: பெண்கள் பூப்பெய்திய பிறகு மூன்று நாட்களுக்கு அவர்கள் வீட்டில் உள்ள மற்றவர்களைத் தொடாமல் விலகி இருப்பார்கள். அவ்வாறு விலகி இருக்கும்பொழுது கணவனுடன் படுத்து உறங்க மாட்டர்கள். கோழி கூவியவுடன் தலைவி விழித்துக் கொண்டாள். தான் பூப்பெய்தியதை உணர்ந்தாள். இனி மூன்று நாட்களுக்குக் கணவனோடு உறங்க முடியாது என்பதை எண்ணி வருந்துகிறாள் என்று பொருள் கொள்ளலாம்.  ”கோழி கூவியதுஎன்பது  இடக்கரடக்கலாகப் (சொல்லத்தகாதவற்றை மறைத்துச் சொல்லுவது) பூப்பெய்தியதைக் குறிக்கும் மரபுத் தொடராக இருந்திருக்கலாம். ஆகவே, தான் பூப்பெய்தியதை அறிந்த தலைவி, இனி மூன்று நாட்களுக்குக் கணவனோடு உடலுறவுகொண்டு இன்பம் நுகரமுடியாது என்று எண்ணித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துவதாக இபாடலுக்குப் பொருள் கொள்ளலாம்.


பூப்பெய்தியதைத் தொடர்பு படுத்தாமலும் இப்பாடலுக்குப் பொருள் கொள்ளலாம்அதாவது, கணவன் தோளைத் தழுவி, இன்பமாக உறங்கிக் கொண்டிருந்த தலைவி, பொழுது விடிந்ததால், இனி கணவனைத் தழுவிகொண்டு உறங்கமுடியாதே என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் இப்பாடலுக்கு நேரடியாகப் பொருள் கொள்ளலாம்

156. தலைவன் கூற்று

156. தலைவன் கூற்று

பாடியவர்: பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (373) குறுந்தொகையில் ஒருபாடலும் (156) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: கழறிய (இடித்துரைத்த) பாங்கற்குக் (தோழனுக்குத்) கிழவன் (தலைவன்) அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது  மிகுந்த அன்போடு, எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறான். தலைவனின் நிலையைக் கண்ட தோழன்எப்போழுதும் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறாயே!” என்று தலைவனைக் கண்டிக்கிறான். அதற்குத் தலைவன் நீ கற்ற வேதங்களில், பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்கும் மருந்து இருந்தால் எனக்குக் கூறுக. இல்லையேல், நீ என்னைக் கடிந்துரைப்பதில் என்ன பயன்?” என்று கேட்கிறான்.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.

கொண்டு கூட்டு: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனேசெம்பூ முருக்கின் நல்நார் களைந்து, தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ? இது மயலோ?

அருஞ்சொற்பொருள்: செம்பூ = செந்நிறமான பூ; முருக்கு = புரச மரம்; நார் = பட்டை; கமண்டலம் = பிடியுள்ள செம்பு; படிவம் = விரதம்; படிவ உண்டி = விரத உணவு; கற்பு = கல்வி, நீதிநெறி; எழுதாக் கற்பு = வேதம்; மயல் = மயக்கம்.

உரை: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!  சிவந்த பூவையுடைய புரச மரத்தினது, நல்ல பட்டையை நீக்கிவிட்டு, அதன் தண்டோடு ஏந்திய, தாழ்கின்ற கமண்டலத்தையும் விரத உணவையுமுடைய, பார்ப்பன மகனே! வேதத்தையறிந்த உன்னுடைய சொற்களுள், பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய மருந்தும் உளதோ? அது இல்லாவிட்டல், நீ என்னைக் கடிந்துரைப்பது உன் அறிவின் மயக்கமோ!

சிறப்புக் குறிப்பு: கற்பு என்ற சொல்லுக்கு கல்வி அல்லது நீதிநெறி என்று பொருள் கொள்ளலாம். பழங்காலத்தில், வேதம் எழுதப்படாமல் வாய்வழியாக ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டதால், அதுஎழுதாக் கற்புஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

155. தலைவி கூற்று

155. தலைவி கூற்று

பாடியவர்:  உரோடகத்துக் கந்தரத்தனார்: இப்பெயர், ‘உரோடகத்துக் காரத்தனார்’, ‘ஊரோடகத்துக் கந்தரத்தனார்’, ‘ஒரோடகத்துக் கந்தரத்தனார்என்று பலவாறு பிரதிகளில் உள்ளது. உரைகடம்என்னும் பெயர் உள்ள மூன்று ஊர்கள் செங்கற்பட்டு அருகில் உள்ளதாகவும், ‘உரோடகம்என்பது அவற்றுள் ஒன்றன் திரிபாக இருக்கலாம் என்றும் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர் குறுந்தொகையில் ஒரு பாடலும் (155), அகநானூற்றில் மூன்று பாடல்களும் (23, 95, 191), நற்றிணையில் நான்கு பாடல்களும் (116, 146, 238, 306) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: தலைமகள் பருவங்கண்டு அழிந்து சொல்லியது.

கூற்று விளக்கம்:தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். ”கார்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லையே!” என்று தலைவி தோழியிடம் வருத்தத்தோடு கூறுகிறாள்.

முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான்
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி
மரம்பயில் இறும்பி னார்ப்பச் சுரனிழிபு
மாலை நனிவிருந் தயர்மார்
தேர்வரும் என்னும் உரைவா ராதே. 

கொண்டு கூட்டு: முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர்விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந்தன்று; மெழுகு ஆன்று, ஊது உலைப் பெய்த, பகுவாய்த் தெண்மணி, மரம்பயில் இறும்பின் ஆர்ப்பச் சுரன் இழிபு, மாலை நனிவிருந்து அயர்மார்;
தேர்வரும் என்னும் உரை வாராதே. 

அருஞ்சொற்பொருள்: முதை = பழைய; புனம் = கொல்லை, வயல்; ஆர்கலி = ஆரவாரம்; வட்டி = பனை ஒலையினால் செய்யப்பட்ட பெட்டி; போது = மலரும் பருவத்தில் உள்ள அரும்புபொதுளுதல் = நிறைதல்; பகுவாய் = பிளந்த வாய்; தெண்மணி = தெளிந்த ஓசையையுடைய மணி; பயிலல் = பிடித்தல் ( நெருங்குதல்); இறும்பு = சிறுகாடு; ஆர்ப்ப = ஒலிக்க; சுரன் = பாலை நிலம்; இழிபு = கடந்து; நனி = மிகுதி; அயர்தல் = செய்தல், விளையாடுதல்.

உரை: பழைய கொல்லையை உழுத, ஆரவாரத்தையுடைய உழவர்கள், காலையில் விதைக்கும் பொருட்டு விதையை எடுத்துச் சென்ற சிறிய பனையோலைப் பெட்டிகளில், விதைகளை விதைத்து விட்டு வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது மலர்களை நிறைத்துக் கொண்டுவரும் மாலைப்பொழுது வந்தது. மெழுகால் செய்த அச்சில் அமைத்து, ஊதுகின்ற கொல்லனுடைய உலையில்  பெய்து செய்யப்பட்ட  பிளந்த  வாயையுடைய தெளிந்த ஓசையையுடைய மணிகள், மரங்கள் நெருங்கி வளர்ந்த சிறிய காட்டில் ஒலிக்கும்படி, அரிய வழியைக் கடந்து, மாலைக்காலத்தில் அவருக்காக நல்ல விருந்து ஒன்றை நாம் அளிக்குமாறு  தலைவருடைய தேர் வருகின்றது என்ற சொல் இன்னும் வரவில்லையே.


சிறப்புக் குறிப்பு: முதைப்புனம் என்றது பழைய கொல்லையில் உள்ள மரங்களை வெட்டி விளைநிலமாக்கிய இடத்தைக் குறிக்கிறது. விதை விதைக்கும் காலம் என்றதால் கார்காலம் வந்தது என்பது தெரிகிறது.  பிரிந்து சென்ற தலைவர் திரும்பிவந்தவுடன் அவர் மகிழுமாறு அவருக்கு நல்ல விருந்து வைப்பது மரபு.

154. தலைவி கூற்று

154. தலைவி கூற்று

பாடியவர்: மதுரைச் சீத்தலைச் சாத்தனார். சாத்தனார் என்ற பெயருடைய இவர், சீத்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர்.  ஆகவே, இவர் மதுரைச் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டார்இவர் மதுரையில் கூல வாணிகம் (பல சரக்கு வாணிகம்) செய்துவந்ததால் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (154), நற்றிணையில் மூன்று செய்யுட்களும் (36, 127, 339), அகநானூற்றில் ஐந்து  செய்யுட்களும் (53, 134, 229, 306, 320), புறநானூற்றில் ஒருசெய்யுளும் (59)  இயற்றியுள்ளதாகத் தெரிகிறது. (சங்க இலக்கியம்ஆய்வுகளும் அட்டவணைகளும், பேராசிரியர். . சஞ்சீவி, காவ்யா பதிப்பகம், 2010)
திணை: பாலை.
கூற்று: பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து தலைமகள் தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் ஈட்டச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவால் தலைவி வருத்தோடு இருக்கிகிறாள். அப்பொழுது அவளுடைய தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, தோழியை நோக்கி என்னைவிட்டுப் பிரிந்து நெடுந்தூரத்தில் தங்கி இருக்கக்கூடிய வல்லமையை அவர் எப்படிப் பெற்றார்?” என்று கேட்கிறாள்.

யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின்
உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமையத்
திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்திற் குறுநடைப் பேடை
பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
அருஞ்சுர வைப்பிற் கானம்
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. 

கொண்டு கூட்டு: தோழி! பாம்பின் உரி நிமிர்ந் தன்ன உருப்பு அவிர் அமையத்து, இரை வேட்டெழுந்த சேவல் உள்ளிப் பொறிமயிர் எருத்திற் குறுநடைப் பேடை, பொறிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் தயங்க இருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பின் கானம் பிரிந்து சேணுறைதல் வல்லுவோர் யாங்கு அறிந்தனர்கொல்?

அருஞ்சொற்பொருள்: உரி = தோல்; நிமிர்தல் = மேலே எழுதல்; உருப்பு = வெப்பம்; அவிர் = ஒளி; அமையம் = காலம்; வேட்டு = விரும்பி; சேவல் = ஆண் பறவை (ஆண் புறா); உள்ளி = நினைத்து; எருத்து = கழுத்து; பேடை = பெண்பறவை (பெண் புறா); விரிகாய் = வெடித்த காய்; அம் = அழகிய; கவடு = மரக் கொம்பு (கிளை); தயங்கல் = ஓளிசெய்தல்; புலம்பு = தனிமை; கூஉம் = கூவும்; வைப்பு = இடம்; கானம் = காடு; சேண் = நெடுந்தொலைவு; உறைதல் = வாழ்தல், தங்குதல்.

உரை: தோழி, பாம்பினுடைய தோல் மேலே எழுவதைப்போல, வெப்பம் விளங்குகின்ற நண்பகல் வேளையில், இரையை விரும்பி மேலெழுந்து பறந்து சென்ற ஆண் புறாவை நினைத்து, புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுகிய நடையையும் உடைய, பெண்புறாவானது, பொரிந்த அடியையுடைய கள்ளியினது, வெடித்த காயையுடைய அழகிய கிளையில், விளங்கும்படி இருந்து, தனிமை தோன்றும்படி கூவுகின்ற, கடத்தற்கரிய வழியையுடைய இடமாகிய பாலை நிலத்தைக் கடந்து,  நெடுந்தூரத்தில் தங்குவதற்கு உரிய மனவலிமையைத் தலைவர் எவ்வாறு பெற்றார்?

சிறப்புக் குறிப்பு: பிரிவைப் பொறுத்துக் கொள்ளும் மனவலிமை தனக்கு இல்லாமல் இருக்கும்பொழுது தலைவர் மட்டும் பிரிவைப் பொறுத்துக்கொள்ளும் மனவலிமையை எங்ஙனம் பெற்றார் என்ற கருத்தில்யாங்கு அறிந்தனர்கொல்?” என்றாள்.

கானலின் தோற்றத்திற்குப் பாம்பு உரித்த தோல் மேல் எழுந்து தோன்றுவது உவமை.    பாலை நிலத்தைக் கடக்கும் போது அங்குள்ள காட்சிகள் தலைவன் தலைவியரிடையே இருக்க வேண்டிய அன்பை நினைவூட்டுவனவாக இருப்பதால், அவற்றைப் பார்த்த பிறகும், தன்னைத் தொடர்ந்து பிரிந்திருப்பதற்குத் தலைவருக்கு அதிக மனவலிமை வேண்டும் என்று தலைவி கருதுவதால், “பிரிந்து சேண் உறைதல் வல்லுவோர்என்றாள்.     பிரிந்து சென்ற ஆண்புறாவை நினைத்துப் பெண்புறா கூவுவதைக் கண்டு தன்னை நினைத்துத் தலைவியும் வருந்துவாள் என்பதைத் தலைவர் உணரக்கூடும் என்பது தலைவியின் கருத்தாகத் தோன்றுகிறது.

153. தலைவி கூற்று

153. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரையாது நெடுங்காலம் வந்தொழுகுகின்றுழி, “நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை? ‘‘என்ற தோழிக்கு, “அவர் வரவு நமக்கு ஆற்றாமைக்குக் காரணமாம்,” எனத் தலைமகள் கூறியது.  (வேறு படுத்தல் - இங்ஙனம் வருவதைத் தவிர்ப்பாயாக என்று கூறிப் பிரித்தல்.)
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துகிறான். இரவு நேரத்தில், தலைவியைச் சத்தித்து, களவொழுக்கத்தைத் தொடர்வதையே அவன் விரும்புகிறான். அதனால் வருத்தமடைந்த தலைவி, தோழியை நோக்கி, “இனிமேல் அவரை வரவேண்டாம் என்று சொல்லிவிடு.” என்று கூறுகிறாள். அதற்குத் தோழி, “அவர் ஏன் என்று கேட்டால் நான் என்ன காரணம் சொல்லுவேன்?” என்று தலைவியைக் கேட்கிறாள். தலைவி, “அவர் இப்படி இரவில் வந்தால், அவருக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்று எண்ணி நான் மிகவும் அஞ்சுகிறேன்.  அதுதான் காரணம்,” என்று கூறுகிறாள்.

குன்றக் கூகை குழறினும் முன்றிற்
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
அஞ்சுமன் அளித்தெ னெஞ்ச மினியே
ஆரிருட் கங்குல் அவர்வயிற்
சாரல் நீளிடைச் செலவா னாதே. 

 கொண்டு கூட்டு: குன்றக் கூகை குழறினும், முன்றிற் பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும் என் நெஞ்சம் அஞ்சும்; இனி,  ஆரிருள் கங்குல் அவர் வயின், சாரல் நீள் இடை, செலவு ஆனாது; அளித்து. 

அருஞ்சொற்பொருள்: கூகை = கோட்டான் (ஒரு வகை ஆந்தை); குழறுதல் = பறவை கூவுதல் ; முன்றில் = முற்றம், வீட்டின் முன்னிடம்; பல = பலா; இரு = கரிய; சினை = கிளை; கலை = ஆண் குரங்கு; உகளுதல் = தாவுதல், பாய்தல்; மன் = கழிவு (கழிந்தது என்ற பொருளில் வந்துள்ளது); அளித்து = இரங்கத் தக்கது; ஆர் இருள் = கடத்தற்கரிய இருள்; வயின் = இடம்; சாரல் = மலைப்பக்கம்; ஆனாது = குறையாது, நீங்காது.

உரை: முன்பெல்லாம்,  குன்றிலுள்ள கோட்டான் அலறினாலும், முற்றத்திலுள்ள பலாமரத்தின் கரிய கிளையிலிருந்து ஆண்குரங்கு தாவிக் குதித்தாலும் என் நெஞ்சம் அஞ்சும். அந்த அச்சமெல்லாம் போய்விட்டது.  இப்பொழுது,  மிகுந்த இருளையுடைய இரவில்மலைச்சாரலில் உள்ள நெடுவழியில், என் தலைவர் வந்துபோகும் பொழுது என் நெஞ்சம் தவறாமல் அவரிடமே  செல்லுகிறது. அது இரங்குதற்குரியது.


சிறப்புக் குறிப்பு: இரவில், காட்டு வழியில் தலைவன் வரும் பொழுதும், திரும்பிப் போகும்பொழுதும், அவனுக்கு ஏதாவது இன்னல்கள் நேருமோ என்ற அச்சத்தால், தலைவி அவன் நினைவாகவே இருப்பதால், “நெஞ்சம் செலவு ஆனாதேஎன்றாள்.

Tuesday, February 9, 2016

152. தலைவி கூற்று

152. தலைவி கூற்று

பாடியவர்: கிள்ளி மங்கலங் கிழார். இவர் குறுந்தொகையில் நான்கு பாடல்களை (76, 110, 152, 181) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், “நீ ஆற்றுகின்றிலை,” என்று நெருங்கிய (இடித்துரைத்த) தோழிக்குச் சொல்லியது.
   கூற்று விளக்கம்: தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்குக் தலைவன் காலம் தாழ்த்துகிறான். அதனால், தலைவி வருந்துகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, உனக்கும் தலைவனுக்கும் திருமணம் கண்டிப்பாக நடைபெறும்.  அதுவரை, நீ பொறுமையோடு இருக்கத்தான் வேண்டும்.”, என்று தலைவிக்கு அறிவுரை கூறுகிறாள். அதற்குத் தலைவி, என்னை இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவனோடு வாழ்வதின்  இன்றியமையாமையையும் அறியாதவர்கள்,”  என்று கூறுகிறாள்.


யாவதும் அறிகிலர் கழறு வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தே
யாமைப் பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே. 

கொண்டு கூட்டு: யாமைப் பார்ப்பின் அன்ன காமங் காதலர் கையற விடின்,  தாயில் முட்டை போல, உட்கிடந்து சாயின் அல்லது பிறிது எவனுடைத்து? கழறுவோர்
யாவதும் அறிகிலர்.

அருஞ்சொற்பொருள்: யாவதும் = சிறிதும்; கழறுதல் = இடித்துரைத்தல்; உட்கிடத்தல் = உள்ளத்துள் கிடத்தல்; சாய்தல் = மெலிதல்; யாமை = ஆமை; பார்ப்பு = குஞ்சு; கைகயறுதல் = செயலறுதல், முற்றும் கைவிடுதல்.

உரை: தாய்முகம் நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் குஞ்சைப்போலக் காமமும்  தலைவரைப் பலமுறைக் காண்பதால் வளரும் தன்மையையுடையதுஅவர், நாம் செயலறும்படி நம்மைப்  பிரிந்து கைவிட்டுவிட்டால்,  தாயில்லாத முட்டை கிடந்தபடியே அழிவது போல, காமம் உள்ளத்துள்ளே கிடந்து மெலிவதல்லாமல் வேறு என்ன பயன்? என்னை இடித்துரைப்போர், இதனைச் சிறிதும் அறியாதவர்கள்.

சிறப்புக் குறிப்பு: விரைவில் திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சியைத் தலைவன் செய்யும்படி அவனைத் தூண்டாமல் தன்னைக் இடித்துரைத்த தோழியைத் தன்னிடம் இருந்து வேறுபடுத்தி, அவள் தன் அருகே இருந்தாலும், அவளிடம் முன்னிலையில் கூறாமல் தலைவி படர்க்கையில் கூறியது முன்னிலைப் புறமொழிஎன்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 

தாயில்லாத முட்டை அந்தத் தாயால் அளிக்கப்படும் பாதுகாவல் இல்லாவிட்டால் குஞ்சாகமல் அழிந்துவிடுவதைப்போல, தலைவனால் உண்டான காமம், அவன் தன்னைத்  திருமணம் செய்துகொண்டு பிரியாமல் உடனிருந்து வாழாவிட்டால் பயனில்லாமல் போகும்  என்று தலைவி கருதுகிறாள்.