Sunday, June 18, 2017

362. தோழி கூற்று

362. தோழி கூற்று
பாடியவர்: வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வெறிவிலக்கித் தோழி அறத்தொடு நின்றது. (வெறி = வெறியாட்டு).
கூற்று விளக்கம்: தலைவனின் பிரிவால் தலைவி உடல் மெலிந்தாள். அவள் உடல் வேறுபாட்டைக் கண்ட தாய், வேலனை அழைத்து தலைவியின் நோய்க்குக் காரணத்தை அறிந்துகொண்டு அதற்குப் பரிகாரம் செய்வதற்காக வெறியாட்டு நடத்துகிறாள். அங்கு உடனிருந்த தோழி, வெறியாட்டு நடத்துபவனை நோக்கி, “தலைவியின் நோய்க்குப் பரிகாரமாக நீ இடும் இப்பலியை, அந்த நோய்க்குக் காரணாமாகிய அவள் தலைவனின் மார்பும் உண்ணுமோ?” என்று கேட்டுத் தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள் (அறத்தொடு நின்றாள்).

முருகயர்ந் துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.

கொண்டு கூட்டு: முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேலசினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்.  பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடுசிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவிவணங்கினை கொடுத்தியாயின், அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே!

அருஞ்சொற்பொருள்: அயர்தல் = விளையாடுதல் (வெறியாட்டு எடுத்தல்); வேலன் = முருகனைப் போல வேடமிட்டு வேலைக் கையிலேந்திக் வெறியாட்டு நடத்துபவன்; முது = பேரறிவு; சினவல் = கோபித்துக்கொள்ளுதல்; ஓம்பல் = தவிர்த்தல்; அவிழ் = சோறு; மடை = பலி; மறி = ஆட்டுக்குட்டி; அணங்கிய = துன்புறுத்திய; சிலம்பு = மலை; சிலம்பன்= மலைக்குரியவன் (தலைவன்); தார் = மாலை; அகலம் = மார்பு.

உரை:  முருகனுக்கு வெறியாட்டு நடத்தும் அறிவு மிகுந்த  வேலனே, கோபம் கொள்வதைத் தவிர்ப்பாயாக.  உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். பல நிறங்ளையுடைய,  சிலவகையான  சோற்றையுடைய பலியோடு,  சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, இத்தலைவியினது மணமுள்ள நெற்றியைத் தடவி,  முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பாயானால், இவளைத் துன்புறுத்திய,  வானத்தை அளாவிய பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவனது,  ஒளிபொருந்திய மாலையை அணிந்த மார்பும், நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ?

சிறப்புக் குறிப்பு:  முது வாய் வேலன்என்பதற்கு  முதுமை வாய்ந்த வெறியாட்டு நடத்துபவன் என்று பொருள்கொள்ளலாம். முதுசொல் என்பதற்கு குறிசொல்லுதல் என்று பொருள். அதனால், “முது வாய் வேலன்என்பதற்குக் குறிசொல்லும் வாயையுடைய வேலன் என்றும் பொருள் கொள்ளலாம்.  நுதல் நீவிஎன்றது ஆட்டுக்குட்டியின் குருதி கலந்த மண்ணால் தலைவியின் நெற்றியைத் தடவுதல் மரபு என்பதைக் குறிப்பதாக உ. வே. சாமிநாத ஐயர் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

  

361. தலைவி கூற்று

361. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவு மலிந்தவழித் தோழி நன்காற்றினாய்என்றாட்குக் கிழத்தி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெறப்போகிறது. அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. “இதுவரை, தலைவனின் பிரிவை நீ நன்றாகப் பொறுத்துக்கொண்டிருந்தாய்என்று பாரட்டிய தோழியை நோக்கி, “அவர் மலையிலிருந்து வந்த காந்தளை வளர்த்தேன். நான் பிரிவைப் பொறுத்துக்கொள்வதற்கு அது மிகவும் உதவியாக இருந்தது. என் தாயும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தாள்என்று தலைவி மறுமொழி கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி அன்னைக்
குயர்நிலை உலகமுஞ் சிறிதால் அவர்மலை
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! அவர்மலை மாலைப் பெய்த மணம்கமழ் உந்தியொடு, காலை வந்த காந்தள் முழுமுதல்மெல் இலை குழைய முயங்கலும் இல் உய்த்து நடுதலும் கடியாதோள் அன்னைக்கு  உயர்நிலை உலகமும் சிறிது.

அருஞ்சொற்பொருள்: உயர்நிலை உலகம் = தேவருலகம்; உந்தி = ஆறு, ஓடிவரும் வெள்ளம்; முழுமுதல் = முழுச்செடி; ஆல்அசைச்சொல்.

உரை: தோழி!, நீ வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக!  தலைவருடைய மலையிலே, மாலைக் காலத்திலே பெய்த மழையால் பெருகி வந்தநறுமணம் கமழும் வெள்ளத்தோடு,  காலையிலே இங்கு வந்த காந்தளின்,  மெல்லிய இலையானது கசங்கும்படி நான் தழுவிக்கொள்ளுவதையும், அதன் கிழங்கை வீட்டில் கொண்டுவந்து நான் நடுவதையும், தடுக்காத தாய்க்குக் கைம்மாறாகக் கருதும் இடத்துஉயர்ந்த நிலையாகிய தேவருலகமும் சிறியதாகும்.


சிறப்புக் குறிப்பு: முதல்நாள் இரவு தலைவனுக்குரிய மலையில் பெய்த மழையினால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவந்தது. அந்த வெள்ளத்தில் மலர்களும் வந்ததால், அதுமணங்கமழ் உந்திஎன்று குறிப்பிடப்பட்டது. அந்த வெள்ளத்தில்காந்தள் செடி ஒன்று வேறோடு மிதந்து வந்தது. அது தலைவனின் மலையிலிருந்து வந்ததால், அதை எடுத்து, அதன் இலைகளைத் தலைவி தழுவிக்கொண்டாள். மற்றும், அந்தக் காந்தள் செடியின் கிழங்கை நட்டு அதை வளர்த்து வந்தாள். அவளுடைய செயல்களுக்கு அவள் தாய் ஆதரவாக இருந்தாள். காந்தள் செடி தலைவனுக்குரிய மலையிலிருந்து வந்ததால், அதைக் காண்பதும் கண்காணிப்பதும் அவளுக்குத் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்வதற்கு உதவியாக இருந்தது. அதைக் காணும் போதெல்லாம் தலைவனைக் காண்பதாகவே கற்பனை செய்துகொண்டு  தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருந்தாள்

360. தலைவி கூற்று

360. தலைவி கூற்று
பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன் சிறைப்புறத்தானாக வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது. (வெறி = வெறியாட்டு).
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் இரவில் சந்தித்துத் தங்கள் களவொழுக்கத்தைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவனோடு கூடி மகிழ்வதைத் தலைவி விரும்பினாலும், அவன் இரவில் வருவதால் அவனுக்கு இன்னல்கள் நேரலாம் என்பதை நினைத்து வருந்துகிறாள். இவ்வாறு, களவொழுக்கத்தைத் தொடர்வதைவிட, திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தினால் இன்பமாக இருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகளைத் தலைவன் மேற்கொள்ளவில்லை. இத்தகைய எண்ணங்களால் தலைவி  மிகவும் வருந்தி உடல் மெலிந்தாள். அவள் உடலில் தோன்றிய மாற்றங்களைக் கண்ட தாய், வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறாள். தன் நோயின் காரணத்தையும், அதற்கான பரிகாரத்தையும் வேலன் அறியாதவன் என்பதைத் தாய் அறிந்துகொள்ள வேண்டும் என்று தலைவி விரும்புகிறாள். ஒருநாள் இரவு, தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் வழக்கம் போல் வந்து, வீட்டின் வேலிக்கு வெளியே நிற்கிறான். அவன் வரவை உணர்ந்த தலைவி, “தலைவன் இனி இரவில் வராமலிருக்க வேண்டும். அதுவே என் விருப்பம்என்று தலைவன் காதுகளில் விழுமாறு தோழியிடம் கூறுகிறாள்.

வெறியென உணர்ந்த வேல னோய்மருந்
தறியா னாகுதல் அன்னை காணிய
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
இலங்குமலை நாடன் இரவி னானே.

கொண்டு கூட்டு: தோழி அரும்படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்வெறிஎன உணர்ந்த வேலன், நோய் மருந்து அறியான் ஆகுதல், அன்னை காணிய சாரல்
பிடிக் கை அன்ன பெருங்குரல் ஏனல்உண்கிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே சிலம்பின் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவினான், வாரற்க! தில்ல!

அருஞ்சொற்பொருள்: வெறி = வெறியாட்டு; படர் = நினைத்தல்; எவ்வம் = துன்பம்; உழத்தல் = வருந்துதல்; தில்லவிழைவுக் குறிப்பு; பிடி = பெண்யானை; கை = துதிக்கை; குரல் = கதிர்; ஏனல் = தினை; குளிர் = ஒருவகை இசைக்கருவி.
உரை: தோழி!  பொறுத்தற்கரிய நினைவால் உண்டாகும் துன்பத்தை அடைந்து, இன்று நாம் வருந்தினாலும், நமது நோயைத் தீர்க்கும் வழி வெறியாடுதல் என்று தெளிந்த வேலன், அந்நோயைத் தீர்ப்பதற்கு உரிய பரிகாரத்தை அறியாதவன் என்பதை, நம் தாய் அறிந்துகொள்ள வேண்டும். நம்மைக் காணும்பொருட்டு, மலைச்சாரலின் கண், பெண்யானையின் துதிக்கையைப் போன்ற, பெரிய கதிர்க் கொத்திலுள்ள தினையை, உண்ணுகின்ற கிளிகளை ஓட்டும், குறமகளின் கையிலுள்ளகுளிர்என்னும் கருவி, சிலம்பைப் போல ஒலிக்கின்ற, சோலைகள் விளங்கும் மலைநாடனாகிய தலைவன், இராக்காலத்தே, இங்கு வராமலிருக்க வேண்டும்.  அதுவே என் விருப்பம்.

சிறப்புக் குறிப்பு: என் விருப்பத்திற்கு இணங்கித் தலைவன் இரவில் வராமல் இருந்தால், என்னுடைய காமநோய் அதிகரிக்கும்; உடலில் மேலும் மாற்றங்கள் தோன்றும். அதனால் வெறியாட்டினால் பயன் எதுவும் இல்லை என்பதைத் தாய் உணர்வாள். பிறகு, என் நோயின் உண்மைக் காரணத்தைத் தாய் அறிந்துகொள்வாள். விரைவில் எனக்கும் தலைவனுக்கும் திருமணம் நடைபெறும்என்று தலைவி எண்ணுகிறாள்.

359.தோழி கூற்று

359.தோழி கூற்று
பாடியவர்: பேயனார்.
திணை: மருதம்.
கூற்று : பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது தானே புக்குக் கூடியது கண்டு தோழி பாணற்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையோடு சிலகாலம் இருந்தான். தன் தவறை உணர்ந்த பிறகு, தலைவியோடு மீண்டும் வாழ விரும்பி, பாணன் ஒருவனைத் தலைவியிடம் சென்று அவள் ஊடலைத் தீர்த்துவைக்குமாறு அனுப்பினான். தலைவி தலைவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளவில்லை. தன் மனைவிமீதும் தன் புதல்வனின்மீதும் மிகுந்த அன்புகொண்ட அத்தலைவன், தலைவி தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், வீட்டிற்குள் புகுந்து தன் புதல்வனோடு படுத்து உறங்குகிறான். இந்தக் காட்சியைக் கண்ட தலைவி, தன் ஊடல் தீர்ந்து, தலைவனைத் தழுவிக்கொள்கிறாள். இந்தச் செய்தியைத் தோழி பாணனுக்குக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்
குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்
புதல்வற் றழீஇயினன் விறலவன்
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே. 


கொண்டு கூட்டு: பாண! விறலவன் மாலை விரிந்த பசுவெண் நிலவின்குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப் பள்ளி யானையின் உயிர்த்தனன். நசையிற் புதல்வன் தழீஇயினன். புதல்வன் தாய் அவன்புறம் கவைஇயினள். கண்டிசின்! அம்ம! பண்புடைத்து!
அருஞ்சொற்பொருள்: கண்டிசின் = காண்பாயாக; அம்மவியப்பைக் குறிக்கும் இடைச்சொல்; சேக்கை = படுக்கை; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்; நசை = விருப்பம்; தழீஇயினன் = தழுவினான்; விறல் = வெற்றி; கவைத்தல் = அணைத்தல்.


உரை: பாண! வெற்றியையுடைய தலைவன், மாலை நேரத்தில், பரவிய இளைய, வெண்ணிறமான நிலவொளியில், குறுகிய கால்களையுடைய கட்டிலின்மேல் நறுமணமுள்ள மலர்கள் பரப்பிய படுக்கையில், யானையைப் போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, மிகுந்த விருப்பத்தோடு தன் புதல்வனைத் தழுவிகொண்டு படுத்திருந்தான். அப்பிள்ளையின் தாயாகிய தலைவி, அத்தலைவனது முதுகைத் அணைத்துக்கொண்டாள். தலைவியின் பண்புடைய செயலை எண்ணிப் பார்ப்பாயாக!

358. தோழி கூற்று

358. தோழி கூற்று

பாடியவர்: கொற்றனார்.
திணை: முல்லை.
கூற்று : தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறித் தலைவியைப் பிரிந்து சென்றான். அவன் பிரிவால் வருந்தும் தலைவியைக் கண்ட தோழி, “ இதோ பார்! முல்லைக் கொடிகள் அரும்பின; கார்காலம் வந்துவிட்டதுஉன் துன்பம் தீரப் போகிறது. உன் தலைவன் விரைவில் திரும்பிவந்துவிடுவான்என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே
எறிகண் பேதுற லாய்கோ டிட்டுச்
சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க
வருவேம் என்ற பருவம் உதுக்காண்
தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப்
பல்லான் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன முல்லைமென் முகையே.


கொண்டு கூட்டு: வீங்கு இழை நெகிழ விம்மி, ஈங்கு எறிகண் பேதுறல்! ஆய்கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும் நின் படர்சேண் நீங்க, வருவேம் என்ற பருவம் உதுக்காண்! முல்லை மென் முகை,  தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப் பல்லான் கோவலர் கண்ணிச் சொல்லுப அன்ன.

அருஞ்சொற்பொருள்: வீக்கம் = இறுக்கம்; இழை = அணிகலன்; நெகிழ்தல் = இளகுதல் (கழலுதல்); விம்மி = அழுது; பேதுறல் = அறிவு மயங்குதல்; ஆய்கோடு = ஆராய்கின்ற கோடுகள் (தலைவரைப் பிரிந்த பொழுது, சுவரில் ஒருநாளுக்கு ஒரு கோடு இட்டு, நாள்களைக் கணக்கிடுவது வழக்கிலிருந்தது.); படர் = துன்பம்; சேண் நீங்க = நெடுந்தூரம் போகும்படி  நீங்க (முற்றிலும் நீங்க); உதுக்காண் = அதோ பார்; பனிகூர் = குளிர் மிகுந்த; பல்லான் = பல பசுக்கள்; கோவலர் = இடையர்; கண்ணி = தலைமேல் சூடப்படும் மாலை.
உரை: இறுக்கமாக இருந்த அணிகலன்கள் நெகிழும்படி அழுது, இவ்வாறு நீர்த்துளிகளைச் சிந்தும் கண்களுடன்  மயங்கற்க!  தலைவர் சென்ற நாட்களைக் கணக்கிடுவதற்காகச் சுவரில் கோடுகளைக் கிழித்து, அச்சுவரைப் பற்றி நிற்கின்ற,  உனது துன்பம்,  நெடுந் தூரம் போகும்படி,  தான் திரும்பி வருவதாகத் தலைவர் கூறிய, கார்காலம் வந்ததைப் பார்! முல்லையின் மெல்லிய அரும்புகள்,  தலைவரைப் பிரிந்து தனிமையில் இருப்பவர்கள்  வருந்துதற்குக் காரணமாகிய குளிர்ச்சி மிகுந்த மாலைக்காலத்தில், பல பசுக்களை உடைய இடையர்கள் தம் தலையில் சூடிய  மாலைகளிலிருந்து, இப்பருவம் வந்ததை சொல்லுவதைப்போல் உள்ளன.
சிறப்புக் குறிப்பு: தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியர், அவர் பிரிந்து சென்ற நாட்களைக் கணக்கிடுவதற்குச் சுவரில் கோடுகளைக் கிழிப்பது வழக்கம் என்பது திருக்குறளிலும் கூறப்பட்டுள்ளது.
வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற    
நாளொற்றித் தேய்ந்த விரல்.                                              (குறள் - 1261)


பொருள்: அவர் பிரிந்துசென்ற நாட்களைக் கணக்கிடுவதற்காகச் சுவரில் கோடிட்டு, அக் கோடுகளைத் தொட்டுத்தொட்டு எண்ணியதால் என் விரல்கள் தேய்ந்து போயின. அது மட்டுமல்லாமல், அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்தன

357. தோழி கூற்று

357. தோழி கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி, கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் தாழ்த்திக்கொண்டு, களவொழுக்கத்தையே விரும்பித் தலைவியோடு பழகி வந்தான். ஒருநாள் அவன் தலைவியைக் காண்பதற்கு, அவள் வீட்டிற்கு வந்து வேலிக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறான். அவன் வரவை அறிந்த தோழி, தலைவியை நோக்கி, “ நீ தலைவனோடு பழகுவதற்குமுன், உன் தோள்கள் அழகுடையனவாக இருந்தனஎன்று தலைவன் காதில் கேட்குமாறு கூறுகிறாள்.

முனிபடர் உழந்த பாடில் உண்கண்
பனிகால் போழ்ந்து பணையெழில் ஞெகிழ்தோள்
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு
நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய
ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன்
ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை
மின்படு சுடரொளி வெரூஉம்
வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே. 

கொண்டு கூட்டு: முனிபடர் உழந்த பாடுஇல் உண்கண் பனிகால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ்தோள்  மெல்லிய ஆகலின், ஏனலம் சிறுதினை காக்கும் சேணோன்  ஞெகிழியின் பெயர்ந்த நெடுநல் யானை,  மீன்படு சுடரொளி வெரூஉம்வான்தோய் வெற்பன் மணாவா ஊங்கு மேவரத் திரண்டு  நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய.

அருஞ்சொற்பொருள்: முனிதல் = வெறுத்தல்; படர் = துன்பம்; பாடு = படுதல் (கண்படுதல், உறங்குதல்); உண்கண் = மை தீட்டிய கண்; கால் போழ்தல் = குறுக்கே வீழ்தல்; பணை = மூங்கில்; ஞெகிழ்தல் = மெலிதல்; மேவருதல் = விரும்புதல்; மன்னுதல் = பொருந்துதல், நிலைபெற்று உறுதியாக நிற்றல்; ஏனல் = தினை; சேணோன் = உயரமான பரணிலிருந்து தினைப்புனம் காப்பவன்; ஞெகிழி = கொள்ளி; மீன்படு சுடரொளி = வீண்மீன் விழுவதால் தோன்றும் ஒளி; வெரூஉம் = அஞ்சும்; வெற்பன் = குறிஞ்சி நிலத்தலைவன்; மணத்தல் = தழுவுதல்.


உரை:  வெறுக்கத்தக்க துன்பத்தால் வருந்தி, உறக்கமில்லாத, மைதீட்டிய உன் கண்களிலிலிருந்து வடியும் கண்ணீர்த் துளிகள் குறுக்கே வீழ்ந்து, மூங்கில் போன்ற அழகிய தோள்கள் தளர்ச்சி அடைந்து மெலிந்தன. அதனால், தினைப்புனத்தில் உள்ள அழகிய சிறிய தினையைக் காக்கின்ற, பரணின் மேலுள்ள குறவனது, கொள்ளிக் கட்டையைக் கண்டு, அஞ்சி ஓடிய  உயர்ந்த நல்ல யானை, விண்மீன் வீழ்வதனால் உண்டாகிய மிகுந்த  ஒளியைக் கண்டு அஞ்சுகின்ற, வானளாவிய மலையையுடைய தலைவன், உன்னைக்கூடி மகிழ்வதற்குமுன், உன் தோள்கள் காண்போர் விரும்பும்படி பருத்து,  இவை நன்றாகா அழகாக உள்ளன என்ற சொல்லைப் பெற்று, அவர்களால் பாராட்டப்பட்டன

Monday, June 5, 2017

356. செவிலி கூற்று

356. செவிலி கூற்று
பாடியவர்: கயமனார்.
திணை: பாலை.
கூற்று : மகட் போக்கிய (மகள் தன் காதலனுடன் உடன்போகியதால் வருந்திய) செவிலித்தாய் உரைத்தது.
கூற்று விளக்கம்:  தலைவி செல்வச் சிறப்புள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவள் மிகுந்த மென்மையானவள். அவள் தலைவனோடு பாலைநிலத்தில் உடன்போனாள். தலைவி நீரற்ற, வெப்பம் மிகுந்த பாலைநிலத்தில் செல்லும் வல்லமையை எவ்வாறு பெற்றாள் என்று செவிலித்தாய் வருந்துகிறாள்.

நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த
பாலும் பலவென உண்ணாள்
கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே. 

கொண்டு கூட்டு: ஏந்திய செம்பொன் புனைகலத்து அம்பொரிக் கலந்த பாலும் பலவென உண்ணாள்கோல் அமை குறுந்தொடித் தளிர் அன்னோள்நிழல் ஆன்று அவிந்த, நீர்இல் ஆரிடைக் கழலோன் காப்ப, கடுகுபு போகிஅறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெம் கலுழி தவ்வெனக் குடிக்கிய, தான் யாங்கு வல்லுநள் கொல்?
அருஞ்சொற்பொருள்: ஆன்று = அடங்கி; அவிந்த = மறைந்த; ஆரிடைஆர்+இடை = அரிய வழி; கடுகுபு = மிக விரைந்து; சுனை = நீரூற்று; அறுசுனை = நீரில்லாத சுனை; மருங்கு = பக்கம்; மறுகுபு = உலர்ந்து; வெவ்வெம்  = மிகுந்த சூடுள்ள; கலுழி = கலங்கிய; தவ்ஓசைக் குறிப்பு; குடிக்கிய = குடிக்க; வல்லுநள்வலிமை பெற்றவள்; கோல் = திரட்சி.
உரை:  கையில் ஏந்திய செம்பொன்னால் செய்த பாத்திரத்தில், அழகிய பொரியோடு கலந்த, பாலைக் கொடுத்தாலும், அது அதிகமாக உள்ளது என்று கூறி, உண்பதை மறுப்பாள். திரண்ட, சிறிய வளையல்களை அணிந்த, தளிரைப் போன்றவள் என்மகள். அவள், நிழல் அடங்கி அற்றுப் போன, நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்தில், வீரக்கழலணிந்த தலைவன் தன்னைப் பாதுகாக்க, விரைந்து சென்று, நீர்வற்றிய சுனையின் பக்கத்தில்,  உலர்ந்து, மிக்க வெப்பத்தையுடைய கலங்கிய நீரை,  நீர் வேட்கையால் தவ்வென்னும் ஓசையோடு குடிப்பதற்கு எங்கிருந்து வலிமை பெற்றாள்?

சிறப்புக் குறிப்பு:  ”செம்பொற் புனைகலத்து ஏந்தியபால்என்றது தலைவியின் குடும்பத்தினர் செல்வந்தர்கள் என்பதைக் குறிக்கிறது. இத்தகைய செல்வம் நிரம்பிய இல்லத்தில் இருந்தவள் பாலைநிலத்திற் செல்ல நேர்ந்ததே!என்பதை எண்ணிச்  செவிலித்தாய் வருந்துகிறாள் என்பது குறிப்பு. தளிரன்னோள்என்றது தலைவியின் மென்மையை குறிக்கிறது.

355. தோழி கூற்று

355. தோழி கூற்று 
பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி நொந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன், மழை பெய்கின்ற, இருள் மிகுந்த நள்ளிரவில் தலைவியைச் சந்திப்பதற்கு வருகிறான். ”இந்த நள்ளிரவில், இருளில், மழையில், நீ எவ்வாறு வந்தாய்?” என்று தோழி தலைவனை வியப்போடு கேட்கிறாள்.

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே.

கொண்டு கூட்டு: ஓங்கல் வெற்பபெயல் கண் மறைத்தலின் விசும்பு காணலை.
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலை.  எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று.
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்கு வந்தனையோ! வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? யான் நோகு.

அருஞ்சொற்பொருள்: ஓங்கல் = உயர்ந்த மலை; பெயல் = மழை; விசும்பு = ஆகாயம்; எல் = ஞாயிறு; சேறல் = செல்லல்; துஞ்சும் = உறங்கும்; பானாள் = நள்ளிரவு; நோகு = வருந்துகிறேன். வந்தனையோ, அறிந்தனையோ என்பவற்றில் உள்ளா ஓகாரம்  அசைநிலை. நோகோ என்பதில் உள்ளா ஓகாரம் இரங்கற் குறிப்பு. ஏகாரங்கள் அசைநிலை.
உரை: உயர்ந்த மலையையுடைய தலைவனே! மழை கண்ணை மறைப்பதால் ஆகாயத்தைக் காண முடியவில்லை. அம்மழை நீர் எங்கும் பரந்து ஓடுவதால், நிலத்தைக் காணமுடியவில்லை. கதிரவன் மறைந்ததால், இருள் மிகுதியானது. இந்நிலையில், பலரும் உறங்குகின்ற நள்ளிரவில், எங்ஙனம் வந்தாய்? வேங்கைமரத்தின் மலர் மணம் வீசுகின்ற, எமது சிற்றூரை, எங்ஙனம் அறிந்தாய்? உன் வருகையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

சிறப்புக் குறிப்பு: மழை பெய்ததால், ஆகாயத்தில் உள்ள விண்மீன்களின் ஒளியைக் காணமுடிவில்லை. அதனால், செல்லும் திசையை அறிய முடியவில்லை. நீர் பரவி ஓடுவதால், நிலத்தைக் காண முடியாததால், செல்லும் வழியைக் காண முடியவில்லை. தலைவன் வந்த நேரம் நள்ளிரவாகையால், ஊரில் அனைவரும் ஒலியின்றி உறங்குகிறார்கள். இவ்வாறு, இன்னல்கள் மிகுந்த சூழ்நிலையில் தலைவன் தலைவி இருக்கும் இடத்தை எப்படித் தேடி வந்தான் என்று தோழி வியப்படைகிறாள். ‘வேங்கை கமழும் எம் சிறுகுடிஎன்றது, ‘அவ்வேங்கை மலரின் மணத்தைக் கொண்டு எம் ஊரை அறிந்தாய் போலும்!என்று தோழி கூறுவதைக் குறிக்கிறது. இவ்வாறு, இன்னல்களை எதிர்கொண்டு, இரவில் வருவதைவிட, திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்துவது சிறந்தது என்பது குறிப்பு.  

354. தோழி கூற்று

354. தோழி கூற்று 
பாடியவர்: கயத்தூர் கிழார்.
திணை: மருதம்
கூற்று : பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரோடு சிலகாலம் தங்கி இருந்தான். இப்பொழுது தலைவியோடு மீண்டும் வாழ விரும்புகிறான். தலைவி, தலைவனின் செயலை வெறுத்து, அவனோடு  ஊடியிருக்கிறாள். தலைவன், தலைவியின் ஊடலைத் தீர்த்து வைக்குமாறு தோழியை வேண்டுகிறான்.  “உன் மனைவி, நீ அவளை விரும்பவில்லை என்று நினைக்கிறாள். அது உண்மையானால், நீ அவளை அவள் தந்தையிடம்  அழைத்துச் செல்வாயாக. ” என்று கூறித் தலைவனின் வேண்டுகோளைத் தோழி மறுக்கிறாள்.  

நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே.

கொண்டு கூட்டு: நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்தணந்தனை ஆயின் எம் அம் தண் பொய்கை எந்தை எம்மூர்க் கடும் பாம்பு வழங்கும் தெருவில்,  நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம் இல் உய்த்துக் கொடுமோ?

அருஞ்சொற்பொருள்: ஆர்தல் = உண்ணுதல் (இங்கு, ஆர்ந்தோர் என்பது நிரம்ப உண்டவர் என்ற பொருளில் வந்தது); தணத்தல் = பிரிதல்; தண் = குளிர்ச்சியான; உய்த்தல் = கொண்டு போதல்; அஞர் = துன்பம்; எவ்வம் = துன்பம்.
உரை: நீரில் நெடுநேரம் விளையாடினால் கண்களும் சிவக்கும். நிரம்ப உண்டவர்களின் வாயில் தேனும் புளிக்கும். அழகிய குளிர்ந்த நீர்நிலையையுடைய, எம் தந்தையின் ஊரில், கடுமையான நஞ்சையுடைய பாம்புகள் ஓடும் தெருவில், எங்களுடைய நடுங்குதற்குரிய மிகுந்த துன்பத்தை நீ முன்பு களைந்தாய். இப்பொழுது, நீ எம்மைப் பிரிவாதாக  இருந்தால், எம்மை எம்முடைய வீட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடுவாயாக.

சிறப்புக் குறிப்பு: குளிர்ச்சியாக, விளையாடுவதற்கு இனிமையாக இருக்கும் அருவியில் நெடுநேரம் இருந்தால் கண் சிவக்கும் என்பதும், நிரம்ப உண்டால் தேனும் புளிக்கும் என்பதும், “உன் மனைவி உனக்கு முதலில் இனியவளாக இருந்தாள். பின்னர் நெடுங்காலம் பழகியதால் உன்னால் வெறுத்தற்கு உரியவளானாள்என்று தோழி தலைவனிடம் கூறுவதைக் குறிக்கிறது. இதுபழகப் பழகப் பாலும் புளிக்கும்என்னும் பழமொழியைப் போன்றது. ”கடும் நஞ்சுடைய பாம்பைக் கண்டு முன்பு நாங்கள் அஞ்சிய பொழுது, நீ எங்கள் துன்பத்தைக் களைந்தாய்என்று கூறித் தோழி தலைவன் முன்பு தலைவியிடம் அன்பாக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறாள்.  

353. தோழி கூற்று

353. தோழி கூற்று
பாடியவர்: உறையூர் முதுகூற்றனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : பகற்குறி வந்து ஒழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின் கண் அன்னையது காவலறிந்து பின்னும் பகற்குறியே நன்று; அவ்விரவுக் குறியின்என்று பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது.
கூற்று விளக்கம்: தலைவன் பகலில் வந்து தலைவியோடு கூடி மகிழ்ந்தான். ஆனால், பகலில் தான் தலைவியைச் சந்திப்பதைப் பாலரும் அறியக்கூடும் என்பதை உணர்ந்த தலைவன், தான் அவளை இரவில் சந்திக்க விரும்புவதாகத் தோழியிடம் கூறினான். ஒருநாள், தலைவியைச் சந்திப்பதற்காக வந்து, தலைவன் தலைவியின் வீட்டுக்கு வெளியே நிற்கிறான். “தலைவன் உன்னை இரவில் சந்திக்க விரும்புகிறான். ஆனால், அன்னை நம்மைத் தழுவிக்கொண்டு உறங்குவதால் தலைவனை இரவில் சந்திப்பது இயலாதுஎன்று தலைவனின் காதுகளில் விழுமாறு தோழி கூறுகிறாள். தலைவன் பகலில் சந்திப்பதை விரும்பவில்லை. தலைவியால் இரவில் சந்திக்க முடியாது. இந்தச் சூழ்நிலையைத் தலைவன் புரிந்துகொண்டால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்ற நோக்கத்தோடு தோழி இவ்வாறு கூறுகிறாள். 

ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்
கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே
பாடின் அருவி ஆடுதல் இனிதே
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற்
பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல்லிற்
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ
அன்னை முயங்கத் துயிலின் னாதே. 


கொண்டு கூட்டு: பகல் கோடு உயர் நெடுவரைக் கவான் ஆர்கலி வெற்பன் மார்பு புணையாகபாடு இன் அருவி ஆடுதல் இனிது. இரவில் பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர்
நல் இல் அன்னை பின்னுவீழ் சிறுபுறம் தழீஇ முயங்க நிரை இதழ் பொருந்தாக்  கண்ணோடு, துயில் இன்னாது

அருஞ்சொற்பொருள்: ஆர்கலி = ஆரவாரம்; புணை = தெப்பம் (பற்றுக்கோடு); கோடு = மலையுச்சி; வரை = மலை; கவான் = மலைச்சாரல்; வெற்பன் = குறிஞ்சி நிலத்தலைவன்; பாடு = ஓசை; பின்னு = பின்னல்; சிறுபுறம் = பிடரி; தழீஇ = தழுவி; நிரை = வரிசை; இதழ் = இமை.

உரை: பகற் பொழுதில், உயர்ந்த சிகரங்களையுடைய நீண்ட மலைச்சாரலின் பக்கத்தில்,  இனிய ஓசையுடன் வீழ்கின்ற அருவியில், ஆர்வாரமுடைய குறிஞ்சி நிலத்தலைவனின் மார்பைத் தெப்பமாகக்கொண்டு நீராடுவது இனிது. இரவில், பஞ்சாலாகிய வெண்மையான  திரி எரிகின்ற விளக்கையுடைய நல்ல வீட்டில், நம் தாய், நம் பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி, அணைத்துக்கொண்டிருக்க, வரிசையாகிய இமைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாத விழிகளோடு,  நாம் தூங்குதல் துன்பம் தருவதாகும்.

352. தலைவி கூற்று

352. தலைவி கூற்று
பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் வருந்தும் தலைவி, “இந்த மாலைக்காலம் இவ்வளவு  துன்பத்தைத்  தரும் என்ற உண்மையைத் தலைவைரைப் பிரிந்திருக்கின்ற நாட்களில்தான் நான் உணர்கின்றேன்என்று கூறுகிறாள்.

நெடுநீ ராம்பல் அடைப்புறத் தன்ன
கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை
அகலிலைப் பலவின் சாரல் முன்னிப்
பகலுறை முதுமரம் புலம்பப் போகும்
சிறுபுன் மாலை உண்மை
அறிவேன் தோழியவர்க் காணா ஊங்கே.

கொண்டு கூட்டு: தோழி! நெடுநீர் ஆம்பல் அடைப்புறத்து அன்னகொடுமென் சிறைய, கூர் உகிர்ப் பறவை அகல் இலைப் பலவின் சாரல் முன்னிபகல் உறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுன் மாலை உண்மை, அவர்க் காணா ஊங்கு அறிவேன்.

அருஞ்சொற்பொருள்: நெடுநீர் = ஆழமான நீர்நிலை; அடை = இலை; கொடு = வளைந்த; சிறை = சிறகு; உகிர் = நகம்; கூர்உகிர்ப் பறவைஇது வௌவாலைக் குறிக்கிறது; முன்னி = நினைத்து; புலம்ப = தனித்திருக்கும்படி; சிறுபுன் மாலை = சிறுமை நிறைந்த துன்பம் தரும் மாலைக்காலம்; காணா ஊங்கு = காணாத காலத்தில்.
உரை: தோழி! ஆழமான நீரில் வளர்ந்த ஆம்பலின் இலையின் புறப்பக்கத்தைப் போன்ற, வளைந்த மெல்லிய சிறகையும், கூரிய நகங்களையும் உடைய வௌவால்கள், அகன்ற இலைகளையுடைய பலாமரங்கள் உள்ள மலைச்சாரலை நோக்கி, பகற்காலத்தில் தாம் தங்கி இருந்த பழைய மரத்தைவிட்டு விலகிப்போகும் சிறுமை நிறைந்த  மாலைக்காலம் உள்ளது என்பதை, அத்தலைவரைக் காணாத காலத்தில் உணர்கிறேன்.
சிறப்புக் குறிப்பு: தலைவனைக் காணாத பொழுது, மாலைக்காலத்தில் காமநோய் அதிகரிப்பதால், அவர்க் காணாவூங்கு மாலை உண்மை அறிவேன் என்று தலைவி கூறுகிறாள்தலைவனோடு இருக்கும் பொழுது, மாலைக்காலம் துன்பம் தருவதாக இல்லை. ஆனால், அவனைப் பிரிந்திருக்கும் நாட்களில் மாலைக்காலம் துன்பம் தருவதாக உள்ளது  என்ற கருத்து, திருக்குறளிலும் காணப்படுகிறது.
            மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
            காலை அறிந்த திலேன்.                                                       (குறள் – 1226)

பொருள்: கூடியிருந்த காலத்து இன்பம் தந்த மாலைப்பொழுது, பிரிவில் இத்துணைத் துன்பம் தரும் என்பதை என்னை மணந்த துணைவர் பிரியாத காலத்தில் அறிந்தேனில்லை.

351. தோழி கூற்று

351. தோழி கூற்று

பாடியவர்:
அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, "நமர் அவர்க்கு வரைவு நேரார் கொல்லோ?" என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. (நேரார் கொல்லோ = உடன்பட மாட்டாரோ; மலிந்தது = மகிழ்ந்து கூறியது)
கூற்று விளக்கம்: தலைவனின் உறவினர்கள் தலைவியைப் பெண்கேட்க வந்துள்ளார்கள். தன்னுடைய சுற்றத்தார் தன் திருமணத்திற்கு உடன்படுவார்களோ அல்லது உடன்பட மாட்டோர்களோ என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “நம் சுற்றத்தார் உன் திருமணத்திற்குச் சம்மதித்தனர்என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தோழி கூறுகிறாள்.

வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள்
அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த
ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென
உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு
உரிமை செப்பினர் நமரே விரியலர்ப்
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி
இன்னகை ஆயத் தாரோடு
இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே. 

கொண்டு கூட்டு: வளையோய்! நமரே விரைவுறு கொடுந்தாள் அளைவாழ் அலவன் கூர் உகிர் வரித்த ஈர்மணல் மலிர் நெறி சிதைய, இழும்என உரும் இசைப் புணரி உடைதரும். துறைவர்க்கு உரிமை செப்பினர். உவந்திசின்! விரி அலர்ப் புன்னை ஓங்கிய புலால் அம்  சேரிஇன்நகை ஆயத்தாரோடு இவ் அழுங்கல் ஊர் இன்னும் அற்றோ?

அருஞ்சொற்பொருள்: வளையோய் = வளையலை அணிந்தவளே; உவந்திசின் = மகிழ்ந்தேன்; கொடு = வளைந்த; தாள் = கால்; அளை = வளை; அலவன் = நண்டு; உகிர் = நகம்; வரித்தல் = கோடு கோடாகக் கீறுதல்; மலிர் = நீரூற்று; நெறி = வழி; சிதைதல் = அழிதல்; இழும் = ஒலிக்குறிப்பு; உரும் = இடி; புணரி = கடல் அலைகள்; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; நமர் = நமது உறவினர்; அலர்ந்த = மலர்ந்த; புன்னை = ஒருவகை மரம்; சேரி = தெரு; ஆயம் = மகளிர் கூட்டம்; அழுங்கல் =ஆரவாரம்.    
உரை: வளையலை அணிந்த தலைவியே! விரைந்து செல்லும் வளைந்த கால்களையுடைய, வளையில் வாழும் நண்டு, தன் கூரிய நகத்தினால் கீறிய, ஈரமுள்ள மணலையுடைய நீரிலுள்ள கோடுகள் அழியும்படி, இழுமென்னும் ஓசையுடன் கூடிய, இடி முழக்கத்தையுடைய அலைகள் மோதி உடைகின்ற துறையையுடைய தலைவருக்கு, நீ உரிமையானவள் என்று நம் சுற்றத்தார் உடம்பட்டுக் கூறினர். அதனையறிந்து நான் மகிழ்ந்தேன். விரிந்த மலர்களையுடைய புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள,  புலால் நாற்றத்தை உடைய சேரியில் உள்ள,  இனிய புன்னகை தவழும் மகளிர் கூட்டத்தோடு, இந்த ஆரவாரத்தையுடைய ஊர், இனியும் முன் போல் பழிச்சொற்களைக் கூறுமோ?


சிறப்புக் குறிப்பு: புன்னை மலரின் மணமும் புலாலின் நாற்றமும் ஒருங்கே வீசும் சேரி என்றது தலைவன் வரைவுக்கு உடம்படும் உறவினரும், அலர்கூறும் மகளிர் கூட்டமும் உடையது என்பதைக் குறிக்கிறதுநண்டுகள் தம் நகத்தால் கடற்கரையில் கீறிய கோடுகளை அலைகள் அழிப்பதைப் போல, திருமணம் முடிவு செய்யப்பட்டவுடன் ஊரார் கூறும் அலர் ஒழியும் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமமாகும்.