Sunday, June 18, 2017

359.தோழி கூற்று

359.தோழி கூற்று
பாடியவர்: பேயனார்.
திணை: மருதம்.
கூற்று : பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது தானே புக்குக் கூடியது கண்டு தோழி பாணற்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையோடு சிலகாலம் இருந்தான். தன் தவறை உணர்ந்த பிறகு, தலைவியோடு மீண்டும் வாழ விரும்பி, பாணன் ஒருவனைத் தலைவியிடம் சென்று அவள் ஊடலைத் தீர்த்துவைக்குமாறு அனுப்பினான். தலைவி தலைவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளவில்லை. தன் மனைவிமீதும் தன் புதல்வனின்மீதும் மிகுந்த அன்புகொண்ட அத்தலைவன், தலைவி தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், வீட்டிற்குள் புகுந்து தன் புதல்வனோடு படுத்து உறங்குகிறான். இந்தக் காட்சியைக் கண்ட தலைவி, தன் ஊடல் தீர்ந்து, தலைவனைத் தழுவிக்கொள்கிறாள். இந்தச் செய்தியைத் தோழி பாணனுக்குக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்
குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்
புதல்வற் றழீஇயினன் விறலவன்
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே. 


கொண்டு கூட்டு: பாண! விறலவன் மாலை விரிந்த பசுவெண் நிலவின்குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப் பள்ளி யானையின் உயிர்த்தனன். நசையிற் புதல்வன் தழீஇயினன். புதல்வன் தாய் அவன்புறம் கவைஇயினள். கண்டிசின்! அம்ம! பண்புடைத்து!
அருஞ்சொற்பொருள்: கண்டிசின் = காண்பாயாக; அம்மவியப்பைக் குறிக்கும் இடைச்சொல்; சேக்கை = படுக்கை; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்; நசை = விருப்பம்; தழீஇயினன் = தழுவினான்; விறல் = வெற்றி; கவைத்தல் = அணைத்தல்.


உரை: பாண! வெற்றியையுடைய தலைவன், மாலை நேரத்தில், பரவிய இளைய, வெண்ணிறமான நிலவொளியில், குறுகிய கால்களையுடைய கட்டிலின்மேல் நறுமணமுள்ள மலர்கள் பரப்பிய படுக்கையில், யானையைப் போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, மிகுந்த விருப்பத்தோடு தன் புதல்வனைத் தழுவிகொண்டு படுத்திருந்தான். அப்பிள்ளையின் தாயாகிய தலைவி, அத்தலைவனது முதுகைத் அணைத்துக்கொண்டாள். தலைவியின் பண்புடைய செயலை எண்ணிப் பார்ப்பாயாக!

No comments:

Post a Comment