Sunday, November 20, 2016

274. தலைவன் கூற்று

274. தலைவன் கூற்று

பாடியவர்: உருத்திரனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று : பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள்தேடச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறான். தான் செல்லவிருக்கும் பாலைநிலத்தின் கொடுமைகள் அவன் மனக்கண் முன்னே தோன்றுகின்றன. அப்பொழுது, அவன் தன் நெஞ்சை நோக்கி, “நாம் செல்லப் போகும் காட்டு வழி கொடுமையனதுதான். அங்கு வழிப்பறிக் கள்வர்கள் இருப்பார்கள். தாகம் எடுத்தால் குடிப்பதற்குத் தண்ணீர்கூடக் கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தாலும், என் காதலியின் உடல் அழகை நினைத்துக்கொண்டு சென்றால், கொடுமையான காடும் இனியதாகும்.” என்று கூறுகிறான்.

புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க்
காசினை யன்ன நளிகனி யுதிர
விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும்
இன்னாக் கானமும் இனிய பொன்னொடு
மணிமிடை யல்குல் மடந்தை
அணிமுலை யாக உள்கினஞ் செலினே. 

கொண்டு கூட்டு: பொன்னொடு மணிமிடை அல்குல் மடந்தை அணிமுலை ஆகம் உள்கினம் செலின்புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅயின் காசினை அன்ன நளிகனி உதிர விடுகணை வில்லொடு பற்றி, கோடு இவர்புவருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்,
நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும் இன்னாக் கானமும் இனிய.

அருஞ்சொற்பொருள்: புறவு = புறா; புறத்தன்ன = முதுகைப் போன்ற; கால் = அடிமரம்; புன்கால் = மென்மையான அடிப்பக்கம்; உகாய் = ஒருவகை மரம்; காசு = மணி; நளி = செறிந்த; கோடு = உச்சி; இவர்தல் = ஏறுதல்; இவர்பு = ஏறி; வன்கண் = இரக்கமற்ற தன்மை; நார் = மரப்பட்டை; நசை= விருப்பம்; வேட்கை = பற்றுள்ளம்; நீர் வேட்கை = தாகம்; ஆகம் = மார்பு; உள்குதல் = நினைத்தல்.

உரை: (நெஞ்சே!) பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட அணிகலன்களை அணிந்த இடையை உடைய தலைவியின், அழகிய முலைகளை உடைய மார்பை  நினைத்துக்கொண்டு  சென்றால், புறாவின் முதுகைப் போன்ற மென்மையான  அடிப்பக்கத்தை உடைய உகாய் மரத்தின், மணியைப் போன்ற, செறிந்த பழங்கள் உதிரும்படி, விடுகின்ற அம்பை வில்லோடு பிடித்து, உயர்ந்த இடத்தின் மேல் ஏறி, வழியிலே வருபவரைப் பார்க்கும் ஆறலைக் கள்வர்,  தமது நீர் வேட்கையினால்  மரப்பட்டையை மென்று அந்த வேட்கையைத் தணித்துக் கொள்ளும் துன்பம் தருகின்ற காடும் நமக்கு இனியதாகும்.

273. தோழி கூற்று

273.  தோழி கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவரைப் பற்றிய செய்திகளைப்பாடல் 56 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : பிரிவரெனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லப் போகிறான் என்று நினைத்துத் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் பிரிந்து செல்ல எண்ணினாலும், அவன் பிரிந்து சென்றால் நீ இறந்துவிடுவாய் என்பதை எண்ணி, செல்வதைத் தவிர்ப்பான்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்கப்
பெருங்காட் டுளரும் அசைவளி போலத்
தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே
நொந்தனை யாயிற் கண்டது மொழிவல்
பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்
பறியா தேறிய மடவோன் போல
ஏமாந் தன்றிவ் வுலகம்
நாமுளே மாகப் பிரியலன் தெளிமே.

கொண்டு கூட்டு: அல்குறு பொழுதில், தாது முகைதயங்கபெருங்காட்டு உளரும் அசைவளி போலத் தண்ணிய கமழும் ஒள் நுதலோயேநொந்தனையாயின், கண்டது மொழிவல்! பெருந்தேன் கண்படு வரையில் முதுமால்பு அறியாது ஏறிய மடவோன் போல இவ்வுலகம் ஏமாந்தன்று!  நாம் உளேம் ஆகப் பிரியலன்; தெளிமே!

அருஞ்சொற்பொருள்: அல்கல் = இராக்காலம்; அல்குறு பொழுது = இருட்டும் நேரம்; தாது = பூந்தாது; முகை = அரும்பு; தயங்கல் = ஒளிசெய்தல்; உளர்தல் = தடவுதல்; வளி = காற்று; தண் = குளிர்ச்சி; கமழும் = மணக்கும்; கண்டது = நான் அறிந்தது; கண்படு = கண்ணில் படுகின்ற; மால்பு = கண்ணேணி (மூங்கிலின் கணுக்களைப் படிகள் போல் ஆக்கிச் செய்த ஏணி); மடவோன் = அறிவில்லாதவன்; ஏமாந்தன்று = ஏமாந்தது.
உரை:  இருட்டும் நேரத்தில், மகரந்தத்தையுடைய அரும்புகள் விளக்கமுற்று மலரும்படி,  பெரிய காட்டில் அம்மலர்களைத் தடவி வந்து, அசையும் மணம் கமழும் காற்றைப் போல, குளிர்ச்சியுடன் நறுமணம் வீசுகின்ற, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளே! நீ தலைவன் பிரிவான் என்று வருந்தினையாயின், நான் அறிந்ததைச் சொல்லுவேன்; கேட்பாயாக! பெரிய தேனடை  இருக்கும் மலைப் பக்கத்தில், அத்தேனடையைப் பெறும் பொருட்டு, பழைய கண்ணேணியின்மேல், அறியாமல் ஏறிய அறிவிலாதானைப் போல,  இந்த உலகமானது ஏமாந்தது; நாம் உயிரோடு இருக்கும்வரை,  தலைவன் உன்னைப் பிரிந்து செல்ல மாட்டான்; இதைத் தெளிவாயாக.
சிறப்புக் குறிப்பு: கண்ணேணி என்பது  மூங்கிலின் கணுவைக் கழிக்காமல் கால் வைக்கும்படி செப்பம் செய்து சார்த்தி அக்கணுவையே படியாகப் பயன்படுத்தும் ஏணியைக் குறிக்கிறது. முதுமால்பு என்பது பழைய மூங்கில் ஏணியைக் குறிக்கிறது. அதில் ஏறித் தேனடையைப் பறிக்க முயன்ற அறிவில்லாதவன்,  சிறிது ஏறிய பிறகு அவ்வேணியின் இயல்பு அறிந்து அஞ்சி, மீண்டும் இறங்கி ஏமாந்ததைப் போல், வெகுதூரத்தில் உள்ள நாட்டிற்குச் சென்று பொருள் தேட விரும்பிய தலைவன், தலைவியைவிட்டுப் பிரிந்தால் தலைவி உயிரிழக்கக்கூடும் என்பதையும்,  அதனால் தனக்கு வரும் துன்பத்தையும் அறிந்து செல்வதைத் தவிர்ந்தான். இங்கு, உலகம் என்றது தலைவனைக் குறிக்கிறது. ஏமாந்தது என்பது தான் முதலில் எண்ணியபடி செய்ய முடியாமல் பிரிவதைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது.  நாம் உளேமாகப் பிரியலன் என்றது, பிரிந்தால் தலைவி உயிர் நீங்குவள் என்பதைத் தலைவன்  உணர்ந்தமையைக் குறிக்கிறது.


272. தலைவன் கூற்று

272.  தலைவன் கூற்று

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார். இவர் ஒருசிறைப் பெயரினார் என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் நாஞ்சில் நாட்டைச் சார்ந்தவர்.  நாஞ்சில் வள்ளுவனைப் பாடுவதில் இவர் மிகுந்த விருப்பமுடையவர்.  இவர் புறநானூற்றில் ஒருபாடலும் (137),  குறுந்தொகையில் ஒருபாடலும் (272) நற்றிணையில் ஒருபாடலும் (121) இயற்றியுள்ளார். திணை: குறிஞ்சி.
கூற்று: கழறிய (இடித்துரைத்த) பாங்கற்குக் கிழவன் (தலைவன்) உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவி அவள் தமையன்மாரோடு இருக்கிறாள். அவர்கள் மிகவும் கொடியவர்கள். அதனால், தலைவியை மீண்டும் சந்திக்க முடியுமா என்ற எண்ணத்தோடு, தலைவன்  மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறான். அவன் நிலையைக் கண்ட தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? நீ இவ்வாறு இருப்பது சரி அன்று.” என்று கடிந்துரைக்கிறான். கடிந்துரைத்த தோழனுக்குத் தலைவனின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன வுண்கண்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே. 

கொண்டு கூட்டு: மாண்ட  வில்லுடை வீளையர், கல்லிடுபு எடுத்த நனந்தலைக் கானத்து, இனம்தலைப் பிரிந்த புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர் சிலைமாண் கடுவிசைக் கலை நிறத்து அழுத்திகுருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண்டன்ன உண்கண்  நாறிருங் கூந்தல் கொடிச்சி தோள்  தீண்டலும் இயைவது கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: மாண்ட = மாட்சிமைப்பட்ட (சிறந்த); வீளை = சீழ்க்கை (சீட்டி); இடுபு = இட்டு; நனம் தலை = அகன்ற இடம்; தலைப் பிரிதல் = கூட்டத்தைவிட்டுத் தனித்துப் பிரிதல்; புன்கண்துன்பம்; மடமான் = இளம் பெண்மான்; நேர்பட = நேரில் இருக்க; ஐயர் = தமையன்மார்; சிலை = ஒலி; மாண் = மிகுதல்; கடு விசை = மிகுந்த வேகம்; கலை = ஆண்மான்; நிறம் = மார்பு; வாளி = அம்பு; செங்கோல் வாளி = சிவந்த திரண்ட அம்பு; உண்கண் = மைதீட்டிய கண்; நாறும் = மணக்கும்; கொடிச்சி = குறிஞ்சி நிலப்பெண்.
உரை: நான் விரும்பும் பெண்ணின் தமையன்மார், தங்கள் சிறந்த வில்லோடு, சீழ்க்கை ஒலி எழுப்பிக்கொண்டு, கற்களை வீசியதால்,  அகன்ற இடத்தை உடைய காட்டில், தன் இனத்தினின்றும் பிரிந்து, துன்புறுகின்ற பெண்மான் எதிர்பட்டவுடன்,  ஒலி எழுப்பிக்கொண்டு மிகுந்த  வேகத்தோடு செல்கின்ற ஆண்மானின் மார்பில் சிவந்த திரட்சியை உடைய அம்பை அழுந்தச் செய்து, குருதியோடுகூடிய அந்த அம்பைப்  பிடுங்குவர். அந்த அம்பைப் போன்ற, ஒன்றை ஒன்று மாறுபட்டாற் போன்ற மைதீட்டிய  கண்களையும்,  மணம் வீசுகின்ற கரிய கூந்தலையும் உடைய, தலைவியினுடைய தோள்கள்,  மீண்டும் ஒருமுறை தழுவுவதற்குக் கிடைக்குமோ?

சிறப்புக் குறிப்பு: பெண்மானின் எதிரில் ஆண்மானைக் கொன்ற வல்லமை உடைய தமையன்மாரோடு இருக்கும் தலைவியை அடைவது அரிது என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான். குருதியோடு கலந்த சிவந்த அம்பு தலைவியின் சிவந்த கண்களுக்கு உவமை. தலைவியின் அம்பு போன்ற கண்கள் தன்னை வருத்துவதாகவும் தலைவன் கூறுகிறான். அவளோடு முன்பு பழகியதால் அவள் கூந்தலின் நறுமணம் அவனுக்கு நினைவுக்கு வருகிறது

271. தலைவி கூற்று

271. தலைவி கூற்று

பாடியவர்: அழிசி நச்சாத்தனார். அழிசி என்பவன் ஆர்க்காடு என்னும் ஊரைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டின் ஒருபகுதியை ஆண்டாதாகத் தெரிகிறது. இவர் அழிசியின் மகனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: மேற்கூறிய கூற்றைவிட , ”தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.” என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. தலைவனும் தலைவியும் சிலகாலமாகப் பழகிவந்தார்கள். தலைவன் நல்லவன் என்றும் நம்பிக்கைக்கு உரியவன் என்றும் தலைவி நினைத்தாள். ஒருநாள் அவனோடு கூடி இன்புற்றாள். அதன் பிறகு, தலைவனைக் காணவில்லை. ஆகவே, தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.  
அருவி யன்ன பருவுறை சிதறி
யாறுநிறை பகரு நாடனைத் தேறி
உற்றது மன்னு மொருநாள் மற்றது
தவப்பன் னாள்தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோயா கின்றே. 

கொண்டு கூட்டு: அருவி யன்ன பரு உறை சிதறி, ஆறு நிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றது மன்னும் ஒருநாள். மற்று அதுதவப் பல் நாள் தோள் மயங்கி வௌவும் பண்பின் நோய் ஆகின்று

அருஞ்சொற்பொருள்: பரு = பருத்த; உறை = மழைத்துளி; பகரும் = கொண்டு செல்லும்; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்; தேறி = தெளிந்து; உற்றது = கூடியது (மணந்தது); தவ = மிக; பல்நாள் = பல நாட்கள்; மயங்குதல் = வருந்துதல்; வௌவும் = கவ்வும்.

உரை: (தோழி!) அருவி கொட்டுவதைப் போல, மேகம் பருத்த மழைத்துளிகளைச் சிதறியதால்,  ஆற்றில் வெள்ளம் நிறைந்து ஓசையுடன் ஓடும் நாட்டை உடைய தலைவனை நல்லவன் என்று தெளிந்து, அவனோடு கூடி  இன்பமாக இருந்தது ஒருநாள்தான். அங்ஙனம் அவனோடு கூடி இன்புற்ற அந்த ஒருநாள் உறவு மிகப்பல நாட்கள், என் தோளை வருத்தி, என் அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையையுடைய துன்பத்தைத் தருகிறது.


சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் தலைவன் நாடன்என்று குறிப்பிடப்பட்டிருக்கிறான். நாடன் என்பது குறிஞ்சி நிலத்தலைவனைக் குறிக்கிறது. மற்றும், இப்பாடலில் அருவி குறிப்பிடப்பட்டிருப்பதால் தலைவனின் இடம்  மலை சார்ந்த இடம் என்று தோன்றுகிறது. முதற்பொருளாகிய நிலத்தின் அடிப்படையில் பார்த்தால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகத் தோன்றுகிறது. தலைவனைச் சிலகாலமாகக் காணததால் தன் வருத்தத்தைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள் என்று இப்பாடலின் பின்னணியைக் கற்பனை செய்வதற்கு இப்பாடல் இடமளிக்கிறது.

270. தலைவன் கூற்று

270. தலைவன் கூற்று

பாடியவர்: பாண்டியன் பன்னாடு தந்தான். இவன் பலநாடுகளை வென்று பாண்டியநாட்டோடு இணைத்ததாகக் கருதப்படுகிறது. இவன் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று : வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடன் இருந்து கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிப் பொருள் தேடச் சென்றான். அவன் கூறியது போலவே, அவன் கார்காலத்தில் பொருளோடு திரும்பிவந்தான். தான் பொருள் தேடுவதில் வெற்றி அடைந்ததால் மகிழ்ச்சியுடன், அவன் தன் மனைவியோடு படுக்கையில் இருக்கிறான். அப்பொழுது மேகம் மின்னலோடும் இடியோடும்கூடி மழை பெய்கிறது. தான் பொருள் தேடுவதில் வெற்றி பெற்றதாலும், கார்காலத்திற்கு முன்னரே திரும்பி வந்ததாலும், மனைவியோடு கூடி இருப்பதாலும் மகிழ்ச்சி அடைந்த தலைவன் மேகத்தை நோக்கி, “மழையே நீ நன்றாகப் பெய்வாயாகஎன்று வாழ்த்துகிறான்

தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ
டிவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே. 

கொண்டு கூட்டு: யாம் செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு, இவளின் மேவினம் ஆகிக், குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் நறுமென் கூந்தல் மெல் அணையேம்; பெருவான்! இனி தாழிருள் துமிய மின்னித் தண்ணென வீழ் உறை இனிய சிதறி ஊழின் கடிப்பு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்து வாழியோ!

அருஞ்சொற்பொருள்: தாழ் இருள் = தங்கியிருக்கின்ற இருள்; துமித்தல் = வெட்டுதல்; தண் = குளிர்ச்சி; வீழ் = விழும்; உறை = மழைத்துளி; ஊழின் = முறைப்படி; கடிப்பு = குறுந்தடி; இகு = இறக்கம், வீழ்ச்சி; வான் = மேகம்; செய்வினை முடித்த = செய்யும் தொழிலில் வெற்றிபெற்ர (பொருள் தேடுவதில் வெற்றி பெற்ற); செம்மல் = உள்ள நிறைவு; மேவுதல் = விரும்புதல்.

உரை: நாம்,  பொருள் தேடுவதில் வெற்றி பெற்று நிறைவுடன் கூடிய உள்ளத்தோடு,  தலைவியோடு விரும்பிக் கூடி , மலர்ந்த குறுகிய காம்பை உடைய அன்றலர்ந்த குவளை மலர் மணக்கும் தலைவியின் அழகிய கூந்தலாகிய மென்மையான படுக்கையில் உள்ளேம். ஆதலின், பெரிய மேகமே! இப்பொழுது,  தங்கிய இருள் கெடும்படி மின்னி, குளிர்ச்சி உண்டாகும்படி விழுகின்ற துளிகளுள் இனியவற்றைச் சிதறி, முறையாக  குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப் போல முழங்கி, பலமுறை இடித்து, மழையைப் பெய்து வாழ்வாயாக!

சிறப்புக் குறிப்பு: பொருள் தேடுவதில் வெற்றி அடைந்த தலைவன், தான் மேற்கொண்ட இல்லறத்துக்குரிய பொருள் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தான். மேலும், தலைவியோடு கூடியிருப்பதால்  இன்பமும் அடைந்தான்.  ஆகவே, மன நிறைவினால் மழையை வாழ்த்துகிறான்.

269. தலைவி கூற்று

269. தலைவி கூற்று

பாடியவர்: கல்லாடனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 260 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவி நெய்தல் நிலத்தில் வாழ்பவள். அவள் தந்தை ஒரு மீனவன். சுறாமீன் தாக்கியதால் உண்டாகிய புண்ணால் அவள் தந்தை பல நாட்கள் வீட்டில் தங்கினான். அவனுக்குப் பணிவிடை செய்வதற்காகத் தலைவியின் தாயும் வீட்டில் இருந்தாள். அதனால், தலைவனும் தலைவியும் பல நாட்கள் சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்நிலையில் தலைவன் ஒருநாள் வந்து தலைவியின் வீட்டுக்கு வெளியே மறைவான இடத்தில் நின்றான். அவன் முன்பு பலமுறை வந்து தலைவியைக் காணமுடியாமல் திரும்பிச் சென்றான். இன்றும் தலைவன் தன்னைக் காணாமல் போய்விட்டால் என்ன செய்வதென்று கவலைப்பட்ட  தலைவி, முன்பு தம் கூட்டத்திற்குத் தடையாக இருந்த தந்தையும் தாயும் இன்று வீட்டில் இல்லை என்பதையும் தன்னைச் சந்திப்பதற்கு இதுவே தக்க சமயம் என்பதையும் யாராவது  தலைவனிடம் சொல்லுவதற்காகத் தூது சென்றால் நான்றாக இருக்கும் என்று அவன் காதுகளில் விழுமாறு தோழியிடம் கூறுகிறாள்.

சேயாறு சென்று துனைபரி யசாவா
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும்
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனள் அதனால்
பனியிரும் பரப்பிற் சேர்ப்பற்
கினிவரி னெளியள் என்னும் தூதே. 

கொண்டு கூட்டு: ந்தையும் வயச்சுறா எறிந்த புண்தணிந்து, நீல்நிறப் பெருங்கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்புவிளை கழனிச் சென்றனள்; அதனால், ”பனியிரும் பரப்பின் சேர்ப்பற்கு இனிவரின் எளியள் என்னும் தூதே சேயாறு சென்று துனை பரி அசாவாது உசாவுநர்ப் பெறினே நன்று மன், தில்ல

அருஞ்சொற்பொருள்: சேயாறு = சேய் + ஆறு = நெடுவழி; துனை = விரைவு; பரிதல் = ஓடுதல்; அசாவாது = சோர்வுறாமல்; உசாவுநர் = ஆலோசனை கூறுவோர்; தில்லவிழைவுக் குறிப்பு; வயம் = வலிமை; தரீஇய = கொண்டு வருவதற்கு; உப்புவிளை கழனி = உப்பு விளைகின்ற அளம்; பனி = குளிர்; இரு = பெரிய; பரப்பு = அகன்ற இடம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத்தலைவன்.

உரை: (தோழி!) வலிமை உடைய சுறாமீன் தாக்கியதால் உண்டான புண் ஆறி,  மீண்டும் மீன் வேட்டை ஆடும் பொருட்டு, என் தந்தை நீல நிறத்தை உடைய பெரிய கடலுக்குப் போய்விட்டான்;  என் தாயும்,  உப்பை விற்று,  வெண்ணெல்லை வாங்கி வரும் பொருட்டு,  அவ்வுப்பு உண்டாகின்ற அளத்திற்குச் சென்றிருக்கிறாள்; அதனால், குளிர்ச்சியை உடைய பெரிய பரப்பாகிய கடற்கரையை உடைய நெய்தல் நிலத்தலைவனுக்கு,  இப்பொழுது இங்கே வந்தால் தலைவியை எளிதில் கண்டு மகிழலாம்என்ற தூது மொழியை, விரைந்து செல்வதற்கு வருந்தாமல், நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து சென்று, ஆலோசனை கூறுகின்றவரைப்  பெற்றால் மிகவும் நல்லதாகும். இதையே நான் விரும்புகிறேன்.


சிறப்புக் குறிப்பு: “வயச்சுறா எறிந்த புண்தணிந்து எந்தையும் நீனிறப் பெருங்கடல் புக்கனன்என்றது இதுவரைத் தலைவனைக் காணமுடியாமல் இருந்ததற்குக் காரணத்தைக் குறிப்பிடுகிறது. மற்றும், “நீனிறப் பெருங்கடல்என்றது தந்தை திரும்பிவருவதற்கு நேரமாகும் என்பதைக் குறிக்கிறது. தலைவன் வெகுதூரத்தில் இருப்பவனாகையால் விரைந்து செல்லும் தூதுவர் வேண்டும் என்று  தலைவி விரும்புகிறாள்.   தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்வதால், தூது செல்பவர் பிறர் அறியாமல் ஆராய்ந்து தான் சொல்ல வேண்டியதைச் சரியான முறையில் சொல்ல வேண்டும் என்பதற்காகஉசாவுநர்என்று குறிப்பிடுகிறாள்

268. தோழி கூற்று

268. தோழி கூற்று

பாடியவர்: கருவூர்ச் சேரமான் சாத்தனார். இவர் இயற்றியதாக ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தலைவன், நள்ளிரவிலும், இடியும் மழையும் இருந்தாலும் தவறாது வந்து தலைவியைச் சந்திக்கிறான். இருவரும் கூடி மகிழ்கிறார்கள். இவ்வாறு களவொழுக்கத்தைத் தொடர்வதைத் தலைவியும் தோழியும் விரும்பவில்லை. தலைவன் இரவில் வந்தால் அவனுக்குக் கொடிய விலங்குகளாலும் இடி, மழை போன்றவற்றாலும் இன்னல்கள் நேரிடலாம் என்று தலைவியும் தோழியும் அஞ்சுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், களவொழுக்கம் நீடித்தால், அது ஊராருக்குத் தெரியவரும். ஊராருக்குத் தெரிந்தால் அவர்கள் அலர் பேசுவார்கள். தலைவியின் பெற்றோருக்குத் தெரிந்தால் அவர்கள் அவளைக் கடுமையான காவலில் வைக்கலாம்தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டால் இந்த இன்னல்கள் எல்லாம் இல்லாமற் போகும். அதுவே சிறந்தது என்ற முடிவுக்குத் தலைவியும் தோழியும் வருகிறார்கள். தலைவனிடம் நேரிடையாகத் திருமணத்தைப் பற்றி பேச முடியாது. ஆகவே, ஒருநாள் இரவு, தலைவன் தலைவியின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் பொழுது, “தலைவன் வந்து உன் தோளைத் தழுவி, நீங்கள் இன்புற்றாலும், அவன் இவ்வாறு இரவில் வருவதில் பல இன்னல்கள் உள்ளனவே! அவனை வரச்சொல்லவும் தயக்கமாக இருக்கிறது. வந்தால் போகச் சொல்லுவதற்கும் தயக்கமாக இருக்கிறது.” என்று அவன் காதுகளில் விழுமாறு தோழி கூறுகிறாள். அவள் சொல்லுவதைக் கேட்டால் தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தோழியும் தலைவியும் நினைக்கிறார்கள்.

சேறிரோ எனச் செப்பலு மாற்றாம்
வருவி ரோஎன வினவலும் வினவாம்
யாங்குச் செய்வாங்கொல் தோழிபாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே. 

கொண்டு கூட்டு: தோழி! பாம்பின் பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்துநெடுமென் பணைத்தோள் அடைந்திசினோர். ”சேறிரோ எனச் செப்பலும் ஆற்றாம்; ”வருவிரோஎன வினவலும் வினவாம்யாங்குச் செய்வாங்கொல்?

அருஞ்சொற்பொருள்: சேறீரோ = செல்கின்றீரோ; செப்புதல் = கூறுதல்; ஆற்றாம் = இயலாதவராக இருக்கிறோம்; வினவுதல் = கேட்டல்; வினவாம் = கேட்க மாட்டோம்; யாங்கு = எவ்வாறு; கொல்அசைச்சொல்; பை = படம்; துமித்தல் = துண்டித்தல்; ஏறு = இடி; நடுநாள் = நள்ளிரவு; பணை = மூங்கில்.


உரை:    தோழி! படத்தை உடைய பாம்புகளின் பெரிய தலையைத் துண்டிக்கும் இடியோடு கூடிய, நடுஇரவு என்றுகூட எண்ணிப் பார்க்காமல், இங்கு வந்து, நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற உன் தோள்களைத் தழுவிய தலைவரிடம், ”செல்கின்றீரோ என்று,  சொல்லுவதற்கு வலிமை இல்லாதவர்களாக இருக்கின்றோம்.   ”சென்றால் மீண்டும் வருவிரோ என்று கேட்கவும் முடியவில்லை. என்ன செய்வது?

Sunday, November 6, 2016

267. தலைவன் கூற்று

267. தலைவன் கூற்று

பாடியவர்: காலெறி கடிகையார்.  இவர் இயற்பெயர் தெரியவில்லை. கரும்பின் அடிப்பாகம் மிகவும் இனிமையானதாக இருக்கும் என்பதைகரும்பின் காலெறி கடிகைக்கண் அயின்றன்னஎன்று இவர் இப் பாடலில் குறிப்பிட்டதால்  இவர்காலெறி கடிகையார்என்று அழைக்கப்பட்டார்இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று : மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும் என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது.

கூற்று விளக்கம்: முன்னோரைப் பின்பற்றித்  தானும் பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று தலைவன் நினைக்கிறான்பொருள் தேடச் செல்வதானால், தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டும். தலைவியோடு கூடியிருப்பதால் அவன் பெறும் இன்பத்தையும்  வாழ்க்கையின் நிலையாமையையும் எண்ணிப் பார்க்கிறான். பின்னர், தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதைத் தவிர்க்கிறான்.

இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே. 

கொண்டு கூட்டு: நாளும் உறல்முறை மரபின் கூற்றத்து, அறன்இல் கோள் நன்கு அறிந்திசினோர்இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெருவளம் ஒருங்கு உடன் இயைவது ஆயினும், கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன வால் எயிறு ஊறிய வசைஇல் தீநீர்க் கோல் அமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய ஆள்வினை மருங்கில் பிரியார்.

அருஞ்சொற்பொருள்: இரு = பெரிய: ஞாலம் = உலகம்; பயம் = பயன்; இயைவது = கிடைப்பது; கால் = அடிப்பக்கம்; எறிதல் = வெட்டுதல்; கடிகை = துண்டு; அயில்தல் = உண்ணுதல்; வால் = தூய்மை; எயிறு = பல்; வசை = குற்றம்; தீ = இனிமை; கோல் = திரட்சி; குறுமகள் = இளம்பெண் (தலைவி); ஒழிதல் = நீங்குதல்; ஆள்வினை = முயற்சி; மருங்கு = பக்கம்; நாளும் = நாள்தோறும்; உறல் = அடைதல் (வருதல்); கோள் = கொலை; அறனில் கோள் = இரக்கமின்றி உயிரைக் கொண்டு போவது; நற்கு = நன்கு; அறிந்திசினோர் = அறிந்தவர்கள்.

உரை: (நெஞ்சே!) நாள்தோறும், முறையாக வருகின்ற வழக்கத்தையுடைய கூற்றுவனின் இரக்கமில்லாத கொலைத்தொழிலை நன்றாக அறிந்தோர், பெரிய இடத்தை உடைய இவ்வுலகில் உள்ள பெரிய செல்வம் அனைத்தும் ஒருங்கே கிடைப்பதாயினும்,  கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டதைப் போல் சுவையை உடைய,  தூய்மையான பற்களில் ஊறிய குற்றமற்ற, இனிமையான நீரையும், திரண்ட சிறிய வளையல்களயும் உடைய,  இளைய தலைவி தனித்து இருக்க, பொருள்தேடும்   முயற்சியின் பொருட்டு, தாம் மட்டும் பிரிந்து செல்ல மாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு:    கூற்றுவனது கொலைத்தொழிலை அறிந்தவர், ”நாம் பிரிந்தால்  இருவருள் ஒருவர் உயிர் இழக்க நேரிடலாம். அதனால் மீண்டும் கூடுதல் இயலாது.“ என்று அஞ்சிப் பொருளுக்காகப் பிரிய மாட்டர்கள்.  இது வாழ்க்கை நிலையமையைப் பற்றிய சிந்தனையினால் பிரிவைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது. தலைவியின் வாயில் ஊறும் இனிய நீரை நினைத்து தலைவன் மகிழ்வது அவன் தலைவியிடம் பெறும் இன்பத்தைக் குறிக்கிறது. அவளைக் குறுமகள் என்று குறிப்பிட்டதால், தலைவி இளமைப் பருவம் உடையவளென்பது பெறப்படுகிறது.  இவ்வாறு தலைவன் கூறியது, ”இந்த இளமைப் பருவத்தில் நுகரும் இன்பத்தை இடையீடில்லாமல்  நுகராவிட்டால்  இது பின்னர் பெறுதற்கு அரியதாகும்என்னும் குறிப்பை உடையது. இது தலைவனின் இளமை நிலையாமையைப் பற்றிய சிந்தனையைக் குறிக்கிறது. ஆகவே, வாழ்க்கை நிலையாமை, தலைவியிடமிருந்து பெறும் இன்பத்தின் அருமை, இளமை நிலையாமை ஆகிய மூன்று சிந்தனைகளாலும் தலைவன் பிரிவைத் தவிர்த்தான்.


266. தலைவி கூற்று

266.  தலைவி கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 -  இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : வரையாது பிரிந்தவிடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்:  தலைவனும் தலைவியும் கூடிப் பழகினார்கள். திருமணத்திற்குமுன் பிரிந்து  சென்ற தலைவனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துகிறாள். பிரிந்து சென்ற தலைவன் ஒரு தூதுகூட அனுப்பவில்லையே என்று தோழியிடம் கூறுகிறாள்.

நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
றின்னா இரவின் இன்றுணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. 

கொண்டு கூட்டு: மறப்ப அரும் பணைத்தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர், புள்வாய்த் தூது நமக்கு ஒன்று உரையாராயினும், தமக்கு ஒன்று இன்னா இரவின் இன்துணையாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்

அருஞ்சொற்பொருள்: ஒன்றுதல் = பொருந்துதல்; படப்பை = தோட்டம்; வேங்கை = வேங்கை மரம்; பணை = பருத்த; மரீஇ = கூடி, தழுவி; துறத்தல் = பிரிதல்; வல்லியோர் = வல்லமை உடையவர்; புள் =  பறவை; வாய் = வாயிலாக.

உரை: (தோழி!),  மறத்தற்கரிய நம் பருத்த தோளைத் தழுவிய பிறகும், நம்மைப் பிரிந்து செல்லும் மனவலிமையையுடைய  தலைவர், பறவை வாயிலாக விடும் தூது மொழியை, நமக்கு அனுப்பாவிட்டாலும்,  தமக்குத் துன்பம் தரும் இரவில், இனிய துணையாக இருந்த,  தோட்டத்தில் உள்ள வேங்கை மரத்திற்குக்கூடத்  தூது மொழியை அனுப்புவதை மறந்தாரோ?

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், செய்தியை ஒலையில் எழுதி, அதைப் பறவையின் காலில் கட்டி அனுப்புவது வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.


பிரிவதற்குமுன், தலைவனும் தலைவியும் இரவு நேரங்களில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த வேங்கை மரத்தடியில் சந்திப்பது வழக்கம். இப்பொழுது, தலைவன் பிரிந்து சென்றதால், அவன் இரவில் தனிமையில் இருப்பான். அத்தகைய இரவு நேரங்களில், வேங்கை மரத்தடியில் தன்னோடு கூடி இருந்ததைத் தலைவன் எண்ணிப் பார்ப்பான் என்று தலைவி நினைக்கிறாள். ஆகவே, கூடி இன்புறுவதற்கு இடமளித்த அந்த வேங்கை மரத்திற்காவது தூது அனுப்பலாமே என்று தலைவி கூறுகிறாள்.  

265. தோழி கூற்று

265.  தோழி கூற்று

பாடியவர்: கருவூர்க்கதப் பிள்ளை. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 64 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரையாது பிரிந்த இடத்து, அவர் பிரிந்தது நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தானெனத் தோழி தலைமகட்குக் கூறியது.

கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவி யாரையோ அடிக்கடி சந்திக்கிற்றாள் என்பதை அறிந்த தாய்அவளை வீட்டிலில் காவலில் வைத்தாள். அதனால், தலைவனும் தலைவியும் சந்திக்க முடியவில்லை. தலைவியின் நிலையை உணர்ந்த தோழி, தலைவனைப் பார்த்து,
நீ  இன்னும் எவ்வளவு காலம் களவொழுக்கத்தைத் தொடரப் போகிறாய்?” என்று கேட்டாள். தலைவன் தன்னால் தலைவிக்கு இந்த நிலை வந்தது என்பதைக் குறித்து நாணினான். ”நான் இப்பொழுதே, திருமணத்திற்காகப் பொருள்தேடப் போகப் போகிறேன். நான் விரைவில் திரும்பிவந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்வேன்.” என்று கூறினான். ”தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத்தான் சென்றிருக்கிறான். அவன் விரைவில் வந்துவிடுவான். “ என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல இடன்விட்
டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை
யான்றனக் குரைத்தனெ னாகத்
தானா ணினனிஃ தாகா வாறே. 

கொண்டு கூட்டு: தோழி! காந்தள் அம் கொழுமுகை காவல் செல்லாதுவண்டுவாய் திறக்கும் பொழுதில், பண்டும் தாம் அறி செம்மைச் சான்றோர் கண்ட கடன் அறி மாக்கள் போல, இடன்விட்டு  இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்நின்னிலை யான் தனக்கு உரைத்தனென் ஆக, இஃது ஆகாவாறு, தான் நாணினன் நன்னர் நெஞ்சத்தன்.

அருஞ்சொற்பொருள்:  அம் = அழகிய; முகை = மொட்டு; கொழுமுகை = வளமான மொட்டு; காவல் = காத்திருத்தல்; தாம் அறி செம்மை = தாம் அறிந்த நடுநிலைமையுள்ள; கடன் = கடமை; தளை = கட்டு; ஏகல் = உயர்ச்சி; வெற்பன் = குறிஞ்சிநிலத் தலைவன்; நன்னர் = நல்ல; இஃது ஆகா ஆறு = இனி இக்களவொழுக்கம் நடைபெறாமல்.

உரை: தோழி! காந்தளின் அழகிய கொழுவிய அரும்புகள், தானாக மலரும்வரை காத்திருக்காமல், வண்டுகள் வாய் திறக்கும் சமயத்தில், மூடிய இதழ்களை, வண்டுகளுக்கு  இடம் கொடுத்துத் திறந்து மலர்கின்றன. அது , முன்பு தாம் அறிந்த நடுநிலைமை உடைய சான்றோரைக் கண்டவுடன், எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரின் செயலைப் போல் உள்ளது. அத்தகைய மலர்கள் உள்ள உயர்ந்த மலைகளை உடைய தலைவனிடம்,  உன் நிலையை, நான் எடுத்துரைத்தேன். உடனே, அவன் நாணம் அடைந்தான். இனி, இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி, அவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.


சிறப்புக் குறிப்பு: சான்றோரைக் கண்டவுடன் இடங்கொடுத்து அவரை வரவேற்கும் கடமையை உணர்ந்த மக்களைப்போல் காந்தள் மலர்கள் வண்டுகளுக்கு இடமளிக்கும் நாடு என்பது தோழி தலைவியின் நிலையைக் கூறியவுடன், தன் கடமையை  உணர்ந்து, நாணி, தலைவியை மணந்துகொள்வதற்குத் தலைவன் முன்வந்தான் என்பதை உள்ளுறை உவமமாகக் குறிப்பிடுகிறது.

264. தலைவி கூற்று

264. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனது பிரிவால் தலைவியின் உடலில் பசலை தோன்றியது. அதைக் கண்டு தோழி கவலைப் படுகிறாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி, “நான் தலைவனின் நட்பின் உறுதியை நன்கு அறிவேன். ஆகவே, நான் இந்தப் பிரிவைப் பொறுத்துக்கொள்வேன். என் உடலில் பசலை தோன்றினாலும், என் மன உறுதியால், இந்தப் பசலை நிலைத்து நிற்காமல் மறைந்து போய்விடும்.” என்று கூறுகிறாள்.

கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை
ஒலிநெடும் பீலி துயல்வர இயலி
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தக் காலும் பயப்பொல் லாதே. 

கொண்டு கூட்டு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகு கரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலி ஆடுமயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பு ஒல்லாது. 

அருஞ்சொற்பொருள்: கலி = இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம்; கெழீஇய = பொருந்திய; கான்யாறு = காட்டாறு; ஒலித்தல் = தழைத்தல்; இகுதல் = தாழ்தல்; இகுகரை = தாழ்ந்த கரை; பீலி = மயில்தோகை; துயல்வரும் = அசையும்; இயலி = நடந்து; அகவுதல் = கூவுதல்; நயத்தல் = விரும்புதல்; கேண்மை = நட்பு; பயந்தக் காலும் = பசலையைத் தந்தாலும்; பயப்பு = பசலை; ஒல்லாது = பொருந்தாது.

உரை: (தோழி!)  ஒலியுடன் பெய்கின்ற மழையுடன் பொருந்திய, காட்டாற்றின் தாழ்ந்த கரையில்,  தழைத்த நெடிய தோகை அசைய நடந்து, ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன், நம்மோடு விரும்பி உண்டாக்கிக் கொண்ட நட்பானது, நமக்குப் பசலையைத் தந்தாலும், அப் பசலை நம்முடன் பொருந்தாமல் மறைந்து போய்விடும்.

சிறப்புக் குறிப்பு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகுகரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலிஆடுமயில் அகவும் நாடன்என்றது, கார்காலம் வந்ததைத் தலைவன் உணர்வான் என்பதையும், ஆண்மயில் பெண்மயிலைக் கூவி அழைப்பதை கண்ட தலைவன், தலைவியை நாடி விரைவில் வருவான் என்பதையும் குறிக்கிறது. இதை இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகக் கருதலாம். மற்றும், முன்பு ஒலியுடன்கூடிப் பெய்த மழை இப்பொழுது காட்டாற்றில் வெள்ளமாக வருவதைக் கண்டு ஆண்மயில் பெண்மயிலை அழைக்கிறது என்றது தலைவன் முன்பு அன்போடு இருந்ததை நினைத்துத் தலைவி இப்பொழுது இன்புறுகிறாள் என்பதைக் குறிப்பதாகக் கருதலாம்.


நயந்தனன் கொண்ட கேண்மைஎன்றது  தலைவன் தலைவியை நாடிவந்து நட்பு கொண்டான் என்பதைக் குறிக்கிறது.  தலைவனுடைய உறுதியான நட்பைத் தலைவி நன்கு அறிந்தவளாகையால், தலைவன், விரைவில் தன்னை நாடி வருவான் என்று எண்ணுகிறாள். அதனால், தன் பசலை நிலைத்து நில்லாமல் மறைந்துவிடும் என்று தோழியிடம் கூறுகிறாள்