Sunday, November 20, 2016

271. தலைவி கூற்று

271. தலைவி கூற்று

பாடியவர்: அழிசி நச்சாத்தனார். அழிசி என்பவன் ஆர்க்காடு என்னும் ஊரைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டின் ஒருபகுதியை ஆண்டாதாகத் தெரிகிறது. இவர் அழிசியின் மகனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: மேற்கூறிய கூற்றைவிட , ”தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.” என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. தலைவனும் தலைவியும் சிலகாலமாகப் பழகிவந்தார்கள். தலைவன் நல்லவன் என்றும் நம்பிக்கைக்கு உரியவன் என்றும் தலைவி நினைத்தாள். ஒருநாள் அவனோடு கூடி இன்புற்றாள். அதன் பிறகு, தலைவனைக் காணவில்லை. ஆகவே, தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.  
அருவி யன்ன பருவுறை சிதறி
யாறுநிறை பகரு நாடனைத் தேறி
உற்றது மன்னு மொருநாள் மற்றது
தவப்பன் னாள்தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோயா கின்றே. 

கொண்டு கூட்டு: அருவி யன்ன பரு உறை சிதறி, ஆறு நிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றது மன்னும் ஒருநாள். மற்று அதுதவப் பல் நாள் தோள் மயங்கி வௌவும் பண்பின் நோய் ஆகின்று

அருஞ்சொற்பொருள்: பரு = பருத்த; உறை = மழைத்துளி; பகரும் = கொண்டு செல்லும்; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்; தேறி = தெளிந்து; உற்றது = கூடியது (மணந்தது); தவ = மிக; பல்நாள் = பல நாட்கள்; மயங்குதல் = வருந்துதல்; வௌவும் = கவ்வும்.

உரை: (தோழி!) அருவி கொட்டுவதைப் போல, மேகம் பருத்த மழைத்துளிகளைச் சிதறியதால்,  ஆற்றில் வெள்ளம் நிறைந்து ஓசையுடன் ஓடும் நாட்டை உடைய தலைவனை நல்லவன் என்று தெளிந்து, அவனோடு கூடி  இன்பமாக இருந்தது ஒருநாள்தான். அங்ஙனம் அவனோடு கூடி இன்புற்ற அந்த ஒருநாள் உறவு மிகப்பல நாட்கள், என் தோளை வருத்தி, என் அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையையுடைய துன்பத்தைத் தருகிறது.


சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் தலைவன் நாடன்என்று குறிப்பிடப்பட்டிருக்கிறான். நாடன் என்பது குறிஞ்சி நிலத்தலைவனைக் குறிக்கிறது. மற்றும், இப்பாடலில் அருவி குறிப்பிடப்பட்டிருப்பதால் தலைவனின் இடம்  மலை சார்ந்த இடம் என்று தோன்றுகிறது. முதற்பொருளாகிய நிலத்தின் அடிப்படையில் பார்த்தால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகத் தோன்றுகிறது. தலைவனைச் சிலகாலமாகக் காணததால் தன் வருத்தத்தைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள் என்று இப்பாடலின் பின்னணியைக் கற்பனை செய்வதற்கு இப்பாடல் இடமளிக்கிறது.

No comments:

Post a Comment