Sunday, November 20, 2016

273. தோழி கூற்று

273.  தோழி கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவரைப் பற்றிய செய்திகளைப்பாடல் 56 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : பிரிவரெனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லப் போகிறான் என்று நினைத்துத் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் பிரிந்து செல்ல எண்ணினாலும், அவன் பிரிந்து சென்றால் நீ இறந்துவிடுவாய் என்பதை எண்ணி, செல்வதைத் தவிர்ப்பான்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்கப்
பெருங்காட் டுளரும் அசைவளி போலத்
தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே
நொந்தனை யாயிற் கண்டது மொழிவல்
பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்
பறியா தேறிய மடவோன் போல
ஏமாந் தன்றிவ் வுலகம்
நாமுளே மாகப் பிரியலன் தெளிமே.

கொண்டு கூட்டு: அல்குறு பொழுதில், தாது முகைதயங்கபெருங்காட்டு உளரும் அசைவளி போலத் தண்ணிய கமழும் ஒள் நுதலோயேநொந்தனையாயின், கண்டது மொழிவல்! பெருந்தேன் கண்படு வரையில் முதுமால்பு அறியாது ஏறிய மடவோன் போல இவ்வுலகம் ஏமாந்தன்று!  நாம் உளேம் ஆகப் பிரியலன்; தெளிமே!

அருஞ்சொற்பொருள்: அல்கல் = இராக்காலம்; அல்குறு பொழுது = இருட்டும் நேரம்; தாது = பூந்தாது; முகை = அரும்பு; தயங்கல் = ஒளிசெய்தல்; உளர்தல் = தடவுதல்; வளி = காற்று; தண் = குளிர்ச்சி; கமழும் = மணக்கும்; கண்டது = நான் அறிந்தது; கண்படு = கண்ணில் படுகின்ற; மால்பு = கண்ணேணி (மூங்கிலின் கணுக்களைப் படிகள் போல் ஆக்கிச் செய்த ஏணி); மடவோன் = அறிவில்லாதவன்; ஏமாந்தன்று = ஏமாந்தது.
உரை:  இருட்டும் நேரத்தில், மகரந்தத்தையுடைய அரும்புகள் விளக்கமுற்று மலரும்படி,  பெரிய காட்டில் அம்மலர்களைத் தடவி வந்து, அசையும் மணம் கமழும் காற்றைப் போல, குளிர்ச்சியுடன் நறுமணம் வீசுகின்ற, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளே! நீ தலைவன் பிரிவான் என்று வருந்தினையாயின், நான் அறிந்ததைச் சொல்லுவேன்; கேட்பாயாக! பெரிய தேனடை  இருக்கும் மலைப் பக்கத்தில், அத்தேனடையைப் பெறும் பொருட்டு, பழைய கண்ணேணியின்மேல், அறியாமல் ஏறிய அறிவிலாதானைப் போல,  இந்த உலகமானது ஏமாந்தது; நாம் உயிரோடு இருக்கும்வரை,  தலைவன் உன்னைப் பிரிந்து செல்ல மாட்டான்; இதைத் தெளிவாயாக.
சிறப்புக் குறிப்பு: கண்ணேணி என்பது  மூங்கிலின் கணுவைக் கழிக்காமல் கால் வைக்கும்படி செப்பம் செய்து சார்த்தி அக்கணுவையே படியாகப் பயன்படுத்தும் ஏணியைக் குறிக்கிறது. முதுமால்பு என்பது பழைய மூங்கில் ஏணியைக் குறிக்கிறது. அதில் ஏறித் தேனடையைப் பறிக்க முயன்ற அறிவில்லாதவன்,  சிறிது ஏறிய பிறகு அவ்வேணியின் இயல்பு அறிந்து அஞ்சி, மீண்டும் இறங்கி ஏமாந்ததைப் போல், வெகுதூரத்தில் உள்ள நாட்டிற்குச் சென்று பொருள் தேட விரும்பிய தலைவன், தலைவியைவிட்டுப் பிரிந்தால் தலைவி உயிரிழக்கக்கூடும் என்பதையும்,  அதனால் தனக்கு வரும் துன்பத்தையும் அறிந்து செல்வதைத் தவிர்ந்தான். இங்கு, உலகம் என்றது தலைவனைக் குறிக்கிறது. ஏமாந்தது என்பது தான் முதலில் எண்ணியபடி செய்ய முடியாமல் பிரிவதைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது.  நாம் உளேமாகப் பிரியலன் என்றது, பிரிந்தால் தலைவி உயிர் நீங்குவள் என்பதைத் தலைவன்  உணர்ந்தமையைக் குறிக்கிறது.


No comments:

Post a Comment