Sunday, May 21, 2017

349. தலைவி கூற்று

349. தலைவி கூற்று

பாடியவர்: சாத்தனார்.
திணை: நெய்தல்.
கூற்று : பரத்தைமாட்டுப் பிரிந்துவந்து தலைமகன் கேட்கும் அண்மையனாகத் தோழிக்குக் கிழத்தி கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரோடு சிலகாலம் இருந்தான். இப்பொழுது தலைவியோடு வாழ விரும்பித் தன் வீட்டுக்கு வந்து, உள்ளே வராமல் வீட்டுக்கு வெளியே நிற்கிறான். அவன் வரவை அறிந்த தோழி, “தலைவன் வந்தால், “நீ கவர்ந்த எம் பெண்மை நலத்தைத் திருப்பித் தாஎன்று கேட்போம்என்று அவன் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள்.   அதற்கு மறுமொழியாக, “ஒருவருக்குக் கொடுத்த பொருளை திரும்பப் பெறுவது, நம் உயிரை இழப்பதைவிடக் கொடியதுஎன்று தலைவி கூறுகிறாள்.

அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும்
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம்
கொள்வாம் என்றி தோழி கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்தவை தாவென் சொல்லினும்
இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. 

கொண்டு கூட்டு: தோழி!  “அடும்பு அவிழ் அணிமலர் சிதைஇ, மீன் அருந்தும் தடம்தாள் நாரை இருக்கும் எக்கர்த் தண்ணந் துறைவன் தொடுத்து, நம்நலம் கொள்வாம்என்றி! கொள்வாம்இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்துஅவை தாஎன் சொல்லினும்நம் இன்னுயிர் இழப்பு இன்னாதோ?

அருஞ்சொற்பொருள்: அடும்பு = ஒருவகைக் கொடி; அவிழ்தல் = மலர்தல்; தட = வளைந்த; தாள் = கால்; எக்கர் = மணல்மேடு; தண் = குளிர்ச்சியான; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; தொடுத்து = வளைத்து.
உரை: தோழி!  ”அடும்பங் கொடியில் மலர்ந்த அழகிய மலரைச் சிதைத்து,  மீனை உண்ணுகின்ற வளைந்த கால்களையுடைய நாரை தங்கியிருக்கின்ற மணல் மேட்டையுடைய, குளிர்ந்த நீர்த்துறைத் தலைவனை வளைத்து, நாம் இழந்த பெண்மை நலத்தைப் திரும்பப் பெறுவோம்என்று கூறுகின்றாய்!  சரி, அவ்வாறே செய்வோம்.  ஆனால், தாம் உற்ற வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி,  நம்மிடம் இரப்பவர் விரும்பிய பொருளைக் கொடுத்து, பிறகு, அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித் தருக என்று சொல்லுதலைக் காட்டிலும்,  நமது இனிய உயிரை இழத்தல், துன்பமுடையதாகுமோ? ஆகாது.

348.தோழி கூற்று

348.தோழி கூற்று

பாடியவர்: மாவளத்தனார்.
திணை: பாலை.
கூற்று : செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தன்னைவிட்டுப் பிரியப் போகிறான் என்பதைத் தலைவி உணர்ந்தாள். “அவர் பிரிந்து போவாரயின் உன் துன்பத்தைக் காணாது செல்வாரோ? அவர் உன்னைவிட்டுப் பிரிந்து செல்ல மாட்டார்என்று கூறித் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

தாமே செல்ப வாயிற் கானத்துப்
புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிந்த
சிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய்
இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற்
பூணக வனமுலை நனைத்தலும்
காணார் கொல்லோ மாணிழை நமரே.

கொண்டு கூட்டு: மாண்இழை! நமர் தாமே செல்பவாயின், கானத்துப் புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்தசிறு வீ முல்லைக் கொம்பின் இதழ் அழிந்து ஊறும் கண்பனி தாஅய்,
மதர் எழில் பூண் அக வனமுலை நனைத்தலும் காணார்கொல்?
அருஞ்சொற்பொருள்:; கானம் = காடு; புலம் = மேயும் இடம்; கோடு = கொம்பு; ஒழிதல் = தங்குதல்;  வீ = மலரிதழ்; தாஅய் = பரவி; இதழ் = கண்ணிமை; அழிந்து = கடந்து; பனி = துளி; மதர் = செருக்கு; அகம் = மார்பு; வனம் = அழகு; மாணிழை = மாண்+இழை = சிறந்த அணிகலன்களை அணிந்த பெண் (தலைவி); நமர் = நம் தலைவர்.
உரை: சிறந்த அணிகலன்களை அணிந்தவளே (தலைவி)! நம் தலைவர்,  நம்மைவிட்டுத் தாம் மட்டும் பிரிந்து செல்வாராயின், காட்டில், மேயும் இடத்தைத் தேடிச் செல்லும் யானையின் கொம்பில் முறிந்து ஒட்டிகொண்டிருக்கும் சிறிய மலரிதழ்களையுடைய முல்லைக் கொடியின் கிளைகளைப் போல, கண்ணிமையைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளிகள் பரவி, செருக்குடன் கூடிய அழகையுடைய, அணிகலன்களைத் தன்னிடத்தே கொண்டுள்ள, உன் மார்பிலே உள்ள அழகிய முலைகளை நனைப்பதைக் காணாரோ?

சிறப்புக் குறிப்பு: யானையின் கொம்பில் உள்ள முல்லைக் கொடியில் இருந்து, சிறிய முல்லை மலர்கள் கீழே உதிர்வதைப் போல், தலைவியின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வீழ்ந்தன. முல்லைக் கொடிகளை அழித்துத் தின்ற யானையின் கொம்பில் உள்ள முல்லைக்கொடியின் நிலையும் தலைவியின் நிலையும் ஒன்றேயாகும். அந்த முல்லைக்கொடி எந்நேரமும் யானையின் வாயில் புகலாம். அதுபோல், தலைவன் பிரிந்தால், தலைவியின் உயிர் எக்கணமும் பிரியலாம் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது

347. தலைவன் கூற்று

347. தலைவன் கூற்று
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார்.
திணை: பாலை.
கூற்று : பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது. (வலிக்கும்பொருள் தேட வேண்டுமென்று வற்புறுத்தும்; செலவு அழுங்குதல்பிரிதலைத் தவிர்த்தல். இது தலைவியைப் பிரிந்து செல்லாமை அன்று. இது தலைவியை ஆற்றுவித்துப் பின்னர் செல்வதைக் குறிக்கிறது.)
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிய எண்ணிய தலைவன் தன் நெஞ்சத்தை நோக்கி, ”தலைவியும் உடன் வருவாளாயின் நாம் பிரிதல் கூடும்" என்று கூறித் தலைவன் தான் செல்லுவதைத் தவிர்த்தான்.

மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்
குமரி வாகைக் கோலுடை நறுவீ
மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்
கான நீளிடைத் தானு நம்மொடு
ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே. 
கொண்டு கூட்டு: நெஞ்சம்! மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல்குமரி வாகைக் கோல் உடை நறுவீ மடமாத் தோகைக் குடுமியின் தோன்றும்கான நீள்இடை, இவள் தானும் நம்மொடு ஒன்று மணம் செய்தனள் எனின் நயந்த நின் துணிவு நன்றே
அருஞ்சொற்பொருள்: மல்குதல் = நிறைதல்; சுனை = குளம்; புலர்தல் = வற்றுதல்; நல்கூர்தல் = வறுமைப்படுதல் (இங்கு, வறண்டு இருப்பதைக் குறிக்கிறது.); சுரம் = பாலைநிலம்; முதல் = இடம்; குமரி = இளமை; வாகை = ஒருவகை மரம்; கோல் = கொம்பு; வீ = மலரிதழ்; மடம் = இளமை; மா = கருமை; தோகை = மயில்; குடுமி = உச்சிக் கொண்டை; கானம் = காடு; மணத்தல் = கூடுதல்; நயந்த = விரும்பிய.

உரை: நெஞ்சே!  முன்பு நீர் நிறைந்த சுனை வற்றியதால், வறண்ட பாலைநிலத்தில் வளர்ந்த, இளைய வாகைமரத்தின் நீண்ட கொம்பையுடைய  மணமுள்ள மலரிதழ்கள், இளமை பொருந்திய கரிய மயிலின் உச்சிக் கொண்டையைப் போலத் தோன்றும். அந்தப் பாலைநிலத்தில் உள்ள நீண்ட காட்டு வழியில்,  இத்தலைவி நம்மொடு ஒன்று சேர்ந்து வருவாளானால், பொருள் ஈட்ட விரும்பிய உன் துணிவு நன்மையுடையதே ஆகும்.

346. தோழி கூற்று

346. தோழி கூற்று

பாடியவர்: வாயில் இளங்கண்ணனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் பகலில் வந்து தலைவியைச் சந்திக்கிறான். ஆனால், பகற்பொழுதில் அவனால் அதிகநேரம் தலைவியோடு அளவளாவ முடியவில்லை. அவன் மாலை நேரத்தில் தலைவியைவிட்டுப் பிரிய வேண்டியதை நினத்து வருந்துகிறான். அவன் இரவில் வந்து தலைவியைக் காண விழைகிறான். தன் விருப்பத்தைத் தோழியிடம் சொல்ல விரும்புகிறான். ஆனால், அவனால் அதை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. தலைவன் சொல்ல விரும்புவதை அறிந்த தோழி, தலைவிக்கு அதை  உணர்த்தி, அவனை இரவில் சந்திப்பதற்கு உடன்படுமாறு கூறுகிறாள்.

நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப
மன்றம் போழு நாடன் தோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும்
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவும் ஆகா தஃகி யோனே.

கொண்டு கூட்டு: தோழி!  நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங்களிறு, குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப மன்றம் போழும் நாடன், காலை வந்து சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும்தினைப்புன மருங்கிற் படுகிளி ஓப்பியும், மாலைப் பொழுதில், நல்லகம் நயந்து தான் உயங்கிச் சொல்லவும் ஆகாது, அஃகியோன்.
அருஞ்சொற்பொருள்: நாகு = இளமை; பிடி = பெண்யானை; முளை = மூங்கில் முளை; நண்ணி = பொருந்தி; ஆர்த்தல் = ஆரவாரித்தல்; போழ்தல் = பிளத்தல்; தொடலை = மாலை; ஓப்புதல் = ஓட்டுதல்; அகம் = நெஞ்சம்; உயங்கி = வருந்தி; அஃகல் = சுருங்குதல் (சோர்வடைதல்).
உரை: தோழி! இளம் பெண்யானையை விரும்பிய,  மூங்கில் முளையைப் போன்ற வெண்மையான கொம்பையுடைய இளைய ஆண்யானை, மலையை அடைந்து, அங்குள்ள குறவர் ஆரவாரம் செய்ததால், ஊரில் உள்ள பொதுவிடத்தைப் பிளந்துகொண்டு ஓடும். அத்தகைய  நாட்டையுடைய தலைவன்,  பகலில் வந்து, சுனையில் மலர்ந்த குவளை மலர்களை மாலையாக உனக்குத் தந்தும்,  தினைக் கொல்லையில் வந்து வீழ்கின்ற கிளிகளை நம்மோடு சேர்ந்து ஓட்டியும், பிறகு வந்த மாலைக்காலத்தில்,  நல்ல நெஞ்சத்தில் ஏதோ ஒன்றை விரும்பி, வருந்தி, அக்கருத்தை வெளிப்படச் சொல்லவும் எழுச்சி பெறாமல், சோர்வடைகின்றான்.

சிறப்புக் குறிப்பு: இளம் பெண்யானையை விரும்பிய ஆண்யானை குன்றம் நண்ணும் என்றது உன்னை விரும்பிய தலைவன் ஊராரின் அலருக்கு அஞ்சி நம் மனையகத்தே இரவில் வருவான் என்ற குறிப்பை உணர்த்தியது.

345. தோழி கூற்று

345. தோழி கூற்று 

பாடியவர்: அண்டர்மகன் குறுவழுதியார்.
திணை: நெய்தல்.
கூற்று : பகல்வந்து ஒழுகுவானைத் தோழி இரா வா என்றது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பகலில் சந்தித்துப் பழகிவந்தனர். அவர்கள் பகலில் சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. அதனால், தலைவி தலைவனை இரவில் சந்திக்க விரும்புகிறாள். தலைவி தன் விருப்பத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள். தோழி தலைவனை நோக்கி, "நீ இனி இரவில் வந்து தலைவியைச் சந்திக்கலாம்என்று கூறுகிறாள்.

இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர்
வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇத்
தங்கினி ராயின் தவறோ தெய்ய
தழைதாழ் அல்குல் இவள்புலம் பகலத்
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலியெம் சிறுநல் லூரே.

கொண்டு கூட்டு: தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி இழுமென ஒலிக்கும் ஆங்கண்பெருநீர் வேலி எம் சிறு நல் ஊர்இழையணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந்தேர்வரைமருள் நெடுமணல் தவிர்த்து நின்று, அசைஇ,  தழைதாழ் அல்குல் இவள் புலம்பு அகலத் தங்கினிராயின் தவறோ

அருஞ்சொற்பொருள்: இழை = அணிகலன் (இங்கு, தேரை அழகு படுத்துவதற்காகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பொற்படைகளைக் குறிக்கிறது.); இயல்வரும் = ஓடிவரும்; கொடுஞ்சி = தேரின் முன்பக்கத்தில் உள்ள தாமரை மொட்டுப் போன்ற கைப்பிடி; வரை = மலை; மருள் = உவமையுருபு; அசைஇ = தங்கி இளைப்பாறி; தெய்யஅசைநிலை; புலம்பு = தனிமை; தைஇய = பொருந்திய; தயங்குதல் = விளங்குதல்; திரை = அலை; இழும் = ஓசைக் குறிப்பு; பெருநீர் = கடல்.
உரை: தாழை பொருந்திய, விளங்கும் அலைகளையுடைய, வளைந்த கழியானது, இழும் என ஒலிக்கும். அவ்விடத்தில் உள்ள பெரிய கடலை வேலியாகயுடைய எமது சிறிய நல்ல ஊர் உள்ளது. பொற்படைகள் அணியப்பட்டு ஓடுகின்ற, கொடுஞ்சியையுடைய உமது  நெடிய தேரை, மலையையொத்த உயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு,  இங்கு இருந்து இளைப்பாறி, தழையுடை தாழ்ந்த அல்குலையுடைய இத்தலைவியின் தனிமைத் துன்பம் நீங்கும்படி, தங்குவீரானால், அது பிழையாகுமோ?

சிறப்புக் குறிப்பு: ஊருக்குள் தேர் வருமானால் ஊரார் அறிவர். அதனால் அலர் எழக்கூடும் என்பதனால், மணல்மேட்டிலேயே தேரை நிறுத்துமாறு தோழி கூறுகிறாள். ”தவறோ?” என்ற வினா, அவ்வாறு செய்வதையே தான் கருதியது என்று தோழி கூறுவதைக் குறிக்கிறது

344. தலைவி கூற்று

344. தலைவி கூற்று

பாடியவர்: குறுங்குடி மருதனார்.
திணை: முல்லை.
கூற்று : பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். குளிர் மிகுந்த பனிக்காலம் வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. ஒருநாள், மாலை நேரத்தில் தலைவனைப் பற்றிய சிந்தனையோடு, மிகுந்த வருத்தத்தோடு தலைவி இருக்கிறாள். அவளைக் கண்ட தோழி, “தலைவர் விரைவில் வந்துவிடுவார். அவரை நினைத்து, நீ இப்படி வருந்துவது முறையன்றுஎன்று தலைவிக்கு அறிவுரை கூறுகிறாள். தோழியின் கூற்றுக்குத் தலைவியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைப் பனிக்கடுந் திங்கட்
புலம்பயி ரருந்த அண்ண லேற்றொடு
நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்
பால்வார்பு குழவி யுள்ளி நிரையிறந்
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை
அரும்பெறற் பொருட்பிணிப் போகிப்
பிரிந்துறை காதலர் வரக்காண் போரே.

கொண்டு கூட்டு: தோழி! தண்ணெனத் தூற்றும் துவலைப் பனிக்கடுந் திங்கள்புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு நிலம் தூங்கு அணல வீங்குமுலைச் செருத்தல் பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, ஊர்வயின் பெயரும் புன்கண் மாலைஅரும்பெறல் பொருள்பிணிப் போகிபிரிந்து உறை காதலர் வரக் காண்போர் மன்ற நோற்றோர்!
அருஞ்சொற்பொருள்: நோற்றோர் = தவம் செய்தோர்; மன்ற = நிச்சயமாக; தண் = குளிர்ச்சி; துவலை = நீர்த் துளிகள்; திங்கள் = மாதம்; அருந்துதல் = உண்ணுதல்; அண்ணல் = தலைமைத் தன்மை பொருந்திய; ஏறு = விலங்குகளின் ஆண் (இங்கு, காளையைக் குறிக்கிறது); தூங்குதல் = தொங்குதல்; அணல் = அலைதாடி (பசுவின் கழுத்தில் நீளமாகத் தொங்குகின்ற சதை); செருத்தல் = எருமை, பசு இவற்றின் மடி (இங்கு பசுவிற்கு ஆகுபெயராக வந்தது.); வார்தல் = ஒழுகுதல்; குழவி = கன்று; நிரை = பசுக்கூட்டம்; இறந்து = நீங்கி; புன்கண் = துன்பம்.
உரை: தோழி! குளிர்ச்சி உண்டாகும்படி,  வீசுகின்ற பனித்துளிகளையுடைய  கடுமையான குளிருள்ள மாதத்தில், மேய்ச்சல் நிலத்தில் உள்ள பயிரைத் தின்று, தலைமை பொருந்திய எருதோடு,  நிலத்தளவு தொங்கும் அலைதாடியோடு, பால் ஒழுகும் பருத்த முலைக்காம்புடன் கூடிய மடியையுடைய பசுக்கள்,  தம் கன்றுகளை நினைத்து, தம்மோடு சேர்ந்து மேயும் ஆநிரைகளைவிட்டு  நீங்கி, ஊரினிடத்தே,  மீண்டு வருகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக்காலத்தில், பெறுதற்கரிய பொருள்மேல் பற்றுக் கொண்டு,  தம்மை முன்பு பிரிந்து சென்ற தலைவர்கள்,  திரும்பிவருவதைக் காணும் மகளிர், நிச்சயமாகத் தவம் செய்தவராவர்.

சிறப்புக் குறிப்பு: பசுக்கள் தம் கன்றுகளை நினைத்து மாலைநேரத்தில் ஊருக்குத் திரும்பிவருவதைக் கண்ட தலைவி, தன்னை நினைத்துத் தலைவர் இன்னும் வரவில்லையே என்று கூறுவது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம் ஆகும்

Tuesday, May 9, 2017

343. தோழி கூற்று

343. தோழி கூற்று
பாடியவர்: ஈழத்துப் பூதன் தேவன்.  
திணை: பாலை.
கூற்று : தோழி, கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். அவர்களுடைய திருமணத்திற்குத் தலைவியின் பெற்றோரின்  இணக்கத்தைப் பெற இயலாத நிலை தோன்றியது. ஆகவே, தலைவன் தலைவியோடு உடன்போவதாக முடிவு செய்தான். அவனுடைய முடிவு தோழிக்குத் தெரியும். “ இந்த நிலையில்  நீ உன்னுடய தலைவனோடு உடன்போவதே சிறந்த செயல். அவன் மிகவும் வலிமையும் ஆற்றலும் உடையவன். அவன் எத்தகைய பகையையும் வெற்றி பெறுவான். ஆகவே, நீ அஞ்சாமல், அவனோடு செல்வதைப் பற்றி எண்ணிப் பார்ப்பாயாக.” என்று கூறித் தோழி தலைவியை உடன்போக்குக்கு ஊக்குவிக்கிறாள்.

நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புலிப் பகுவா யேற்றை
வெண்கோடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே. 

கொண்டு கூட்டு: தோழி! மிகுவலி இரும்புலிப் பகுவாய் ஏற்றை நனைகவுள் அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென, வெண்கோடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை வாடுபூஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயருமாறு நினையாய்! வாழி!
 அருஞ்சொற்பொருள்: கவுள் = கன்னம்; அண்ணல் = தலைமைத் தன்மை பொருந்திய; இரும் = பெரிய; பகுவாய் = பிளந்த வாய்; ஏறு = விலங்குகளின் ஆண்; வெண்கோடு = வெண்ணிறமான கொம்பு; மறு = கறை; கொளீஇ = கொள்ள; விடர் = மலைப்பிளப்பு; முகை = குகை (இங்கு, மலையில் உள்ள பள்ளத்தைக் குறிக்கிறது.); கோடை = மேலைக்காற்று; ஒற்றுதல் = வீழ்த்துதல்.
உரை: தோழி!  மிக்க வலிமையும் பிளந்த வாயையும் உடைய  பெரிய ஆண்புலி,  மதநீரால் நனைந்த கன்னத்தையுடைய, தலைமை பொருந்திய யானையின் அழகிய முகத்தில் பாய்ந்தது. அப்புலி பாய்ந்ததால், அந்த யானையின் வெண்ணிறமான கொம்பு, புலியின் குருதியால் சிவந்த கறையைப் பெற்றது. மலைப் பள்ளத்தில் உள்ள,  மேலைக்காற்றால் வீழ்த்தப்பட்ட,  கரிய அடியையுடைய வேங்கை மரத்தின்,  வாடிய பூவையுடைய கிளையைப் போல புலி இறந்து கிடந்தது. அத்தகைய உயர்ந்த மலையையுடைய நாட்டுக்குரிய தலைவனுடன்,  உடன்போவதைப் பற்றி நீ எண்ணிப் பார்ப்பாயாக;  நீ வாழ்வாயாக!

சிறப்புக் குறிப்பு: பகுவாய்என்றது, புலி யானையைக் கொல்வதற்காகப் பாயும்பொழுது பிளந்த வாயை உடையதாக இருந்தது என்பதைக் குறிக்கிறது.  ”வெண்கோடு செம்மறுக் கொளீஇஎன்றது யானையின் கொம்பால் குத்தப்பட்டு புலி இறந்ததையும், புலி பாய்ந்ததனால் யானையின் வெண்ணிறமான கொம்பு செந்நிறமான கறையைப் பெற்றதே ஒழிய, யானைக்கு எவ்விதமான தீங்கும் விளையவில்லை என்பதையும் குறிக்கிறது.     வேங்கையின் மலர்கள் விழுந்து கிடப்பது, புலியின் வரியைப் போலத் தோன்றும் (குறுந்தொகை 47, 1-2) என்பதால், இறந்து கிடந்த புலிக்கு வேங்கை மரத்தின் கிளை உவமையாயிற்று. பாலை நிலத்தில் தலைவனோடு உடன்போனால் ஏதாவது தீங்கு விளையுமோ என்று தலைவி அஞ்சாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, “தலைவனது நாட்டிலுள்ள யானை, தன்னை எதிர்த்த, மிகுந்த வலிமையுடைய புலியைத் தான் எதிர்க்காமலே தன் கொம்பினால் வீழ்த்தியதைப் போல், அந்நாட்டுக்கு உரியவனாகிய தலைவனும் இடையூறுகளை எளிதில் வெல்லும் ஆற்றல் உடையவன்.” என்பதைக் குறிப்பால் உணர்த்தி, தலைவனோடு உடன்போவதற்குத் தலைவிக்குத் தோழி ஊக்கம் அளிக்கிறாள்.  

342. தோழி கூற்று

342. தோழி கூற்று

பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : செறிப்பறிவுறுக்கப்பட்டான் வரைவின்கட் செல்லாது, பின்னும்வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி வரைவு கடாயது.
கூற்று விளக்கம்: தலைவியை அவள் பெற்றோர் காவலில் வைத்துள்ளார்கள். இனி, நீ அவளைக் காண்பது அரிது.” என்று தோழி தலைவனிடம் கூறினாள். அதற்குத் தலைவன், “நான் தொடர்ந்து அவளைச் சந்திக்க விரும்புகிறேன்பகலில் சந்திக்க முடியாவிட்டால், இரவில் சந்திப்பேன். ஆனால், எனக்கு உன் உதவி தேவை.” என்று தோழியிடம் கூறுகிறான். தலைவனின் கூற்றுக்கு மறுமொழியாகத் தோழி, “ இனியும் களவொழுக்கத்தைத் தொடர்வதைத் தலைவி விரும்பவில்லை. ஆகவே, நீ விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது.” என்று கூறுகிறாள்.

கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.


கொண்டு கூட்டு: கலை கைதொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்காவல் மறந்த கானவன், ஞாங்கர்கடியுடை மரம்தொறும் படுவலை மாட்டும் குன்ற நாட! பைஞ்சுனைக் குவளைத் தண்தழை இவள் ஈண்டு வருந்த, ”நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயம் தலைப்படாஅப் பண்பினை எனின் தகுமோ?
.
அருஞ்சொற்பொருள்: கலை = ஆண்குரங்கு; பெரும்பழம் = பலாப்பழம்; கானவன் = வேடன்; ஞாங்கர் = பின்னர்; கடி = பழத்தின் மணம்; நயந்தோர் = விரும்பியவர்; புன்கண் = துன்பம்; பயம் = பயன்; தலைப்படுதல் = மேற்கொள்ளுதல்.
உரை: ஆண்குரங்கு தன்கையால் தோண்டிய,  மணம் கமழ்கின்ற சுளைகளையுடைய பலாப்பழத்தை, காப்பதற்கு மறந்த வேடன், அதன்பின், பழத்தின் மணமுடைய  மரங்கள்தோறும் குரங்குகள் அகப்பட்டுக்கொள்ளுமாறு வலையை மாட்டிவைக்கும், மலையையுடைய நாட!  பசுமையான நீர்நிலையில் மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டிய, குளிர்ச்சியான தழையுடையை அணிந்த இத்தலைவி,  இங்கே துன்பத்திலிருக்க,  உன்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும் நல்வினைப் பயனைப் பெறுவதற்கான செயல்களை மேற்கொள்ளாதவனாக நீ இருப்பது உனக்குத் தகுமோ?


சிறப்புக் குறிப்பு: நயந்தோர் (விரும்பியவர்கள்)” என்று பன்மையில் கூறினாலும், இங்கே அது தலைவியைத்தான் குறிக்கிறது. பலாப்பழங்களைக் காவல் காப்பாதற்கு கானவன் மறந்த பொழுது, அவை குரங்குகள் உண்ணுவதற்கு எளிதாக இருந்தது. கானவன், இப்பொழுது வலைகளை மாட்டிப் பலாப்பழங்களை பாதுகாப்பதால், இனிமேல் குரங்குகள் அப்பழங்களை உண்ண முடியாது. அதுபோல், முன்பு களவொழுக்கத்தில் தலைவியைக் கூடி மகிழ்வது தலைவனுக்கு எளிதாக இருந்தது. இப்பொழுது, அவள் காவலில் வைக்கப்பட்டதால், இனிமேல் தலைவன் தலைவியைக் காண்பது அரிதாகும். இது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமமாகும்.

341. தலைவி கூற்று

341. தலைவி கூற்று
பாடியவர்: மிளைகிழார் நல்வேட்டனார்.
திணை: நெய்தல்.
கூற்று : பருவவரவின்கண் வேறுபடுமெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்தது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துவாள் என்று கவலைப்பட்ட தோழிக்கு, “அவர் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடித்தபின் வருவார் என்ற நம்பிக்கையால், நான் மனவலிமையோடு அவர் பிரிவைப் பொறுத்துக்கொண்டு அவர் வரும்வரை உயிர் வாழ்வேன்.” என்று தலைவி கூறுகிறாள்.

பல்வீ பட்ட பசுநனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச்
சினையினி தாகிய காலையுங் காதலர்
பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவ தன்றென
வலியா நெஞ்சம் வலிப்ப 

வாழ்வேன் தோழியென் வன்க ணானே.

கொண்டு கூட்டு: தோழி! பல்வீ பட்ட பசுநனைக் குரவம்பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிக்கொளாஅச் சினை இனிதாகிய காலையும் காதலர் பேணாராயினும், பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று என வலியா நெஞ்சம் வலிப்ப என் வன்கணான் வாழ்வேன்!
அருஞ்சொற்பொருள்: வீ = பூ; நனை = அரும்பு; குரவம் = குரா மரம்; புன்கு = புன்க மரம்; பொழில் = சோலை; கொளாஅ = கொண்டு; சினை = கிளை; பேணுதல் = பாதுகாத்தல்; கண்ணுதல் = கருதுதல்; கடவது = தவறுவது; வலிதல் = துணிதல்; வன்கண்மனத்திண்மை.
உரை: தோழி! பல மலர்களையும் பசுமையான அரும்புகளையும் உடைய குராமரமும், நெற்பொரியைப் போன்ற பூக்களையுடைய புன்க மரமும் சேர்ந்து சோலை அழகாக உள்ளது. இம் மரங்களின் கிளைகள் கண்ணுக்கு இனியவையாகக் காட்சி அளிக்கின்றன. இத்தகைய அழகிய காலத்திலும், தலைவர் நம்மை பாதுகாக்கவில்லை என்றாலும், பெரியோர் தம் உள்ளத்திலே நினைத்த வீரச்செயலைச் செய்து முடிக்கத் தவறுவது இல்லை என்று எண்ணி,  முன்பு துணிவில்லாமல் இருந்த என் நெஞ்சம், பின்னர் துணிவு பெற்றது. அந்தத் துணிவினால், நான் உயிர் வாழ்வேன்.
சிறப்புக் குறிப்பு: நம்மிடம் அன்புடைய தலைவர், தாம் மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்காவிட்டாலும் குறித்த காலத்தில் திரும்பிவருவார்.” என்று தலைவி முதலில் நினைத்தாள். பின்னர், “அவர் தான் மேற்கொண்ட பணியைச் செய்து முடித்த பிறகுதான் வருவார். அதனால், நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.” என்று முடிவு செய்தாள்.  அவ்வாறு முடிவு செய்தாலும் தலைவன் பிரிவைப் பொறுத்துக்கொள்வதற்கு மனவலிமை வெண்டுமாதலால். “தலைவர் மீது எனக்குள்ள நம்பிக்கையால் மனவலிமை பெற்றேன். அதனால் நான் உயிர் வாழ்வேன்.” என்று தலைவி கூறுகிறாள்.
குரவமும் புன்கும் இளவேனிற் காலத்தில் மலரும் மலர்கள் என்ற செய்தி ஐங்குறுநூற்றின் இளவேனிற் பத்து என்ற பகுதியில் உள்ள பாடல்கள் 344 மற்றும் 347 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவரோ வாரார் தான்வந் தன்றே
நறும்பூங் குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே!                            (ஐங்குறுநூறு – 344)
பொருள்: நறுமணம் கொண்ட பூக்களையுடைய குரா மரமானது பயந்துள்ள செய்த பாவை போன்ற பூக்களைக் கொய்யும் பருவமான இளவேனிலும் வந்ததே! அவரோ, இன்னும் வாராதிருக்கின்றனரே!

அவரோ வாரார் தான்வந் தன்றே
எழிற்றகை இளமுலை பொலிய
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே!                                    (ஐங்குறுநூறு – 347)


பொருள்: எழிலின் தகைமை எல்லாம் ஒருங்கே பொருந்திய என் இளைய முலைகள் பொலிவு அடையும்படியாக, பொரிபோலும் பூக்களையுடைய புன்கினது தளிர்களை அணிகின்ற இளவேனிற்பொழுதும் இதோ வந்தது. அவர் இன்னும் வந்தாரல்லர்!

340. தலைவி கூற்று

340. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : இரவுக்குறி (இரவிலே தலைவனும் தலைவியும் சந்திப்பதற்காகக் குறிக்கப்பட்ட இடம்) உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது.
கூற்று விளக்கம்: இப்பாடலில், இரவுக்குறியைப் பற்றிய செய்தியோ, அல்லது தலைவி தலைவனை இரவிலே சந்திப்பதற்குத் தலைவி  மறுப்பதைப் பற்றிய செய்தியோ இல்லை. ஆகவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்று பொருத்தமானதாகத் தோன்றவில்லை. தலைவன் மீது காதல் அதிகமாகும் பொழுது தன் நெஞ்சு அவனிடமும், அவனைப் பிரிந்து வருந்தும் பொழுது மீண்டும் தன்னிடமும் தன் நெஞ்சு வந்து அலைவதாகத் தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள். இதுவே இப்பாடலில் உள்ள கருத்து.

காமங் கடையிற் காதலர்ப் படர்ந்து
நாமவர்ப் புலம்பி னம்மோ டாகி
ஒருபாற் படுதல் செல்லா தாயிடை
அழுவ நின்ற அலர்வேய் கண்டல்
கழிபெயர் மருங்கி னொல்கி யோதம்
பெயர்தரப் பெயர்தந் தாங்கு
வருந்துந் தோழியவ ரிருந்தவென் நெஞ்சே. 

கொண்டு கூட்டு: தோழி! அவர் இருந்த என் நெஞ்சு, காமங் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகிஒருபாற் படுதல் செல்லாது ஆயிடை அழுவம் நின்ற அலர்வேய் கண்டல்கழிபெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் பெயர்தர, பெயர் தந்தாங்கு வருந்தும்!

அருஞ்சொற்பொருள்: கடைதல் = மிகுதல்; கடையின் = மிகுந்தால்; படர்ந்து = நினைத்துச் சென்று; புலம்பின் = வருந்தினால்; ஆயிடை = அவ்விடம், அக்காலத்து; அழுவம் = கடற்பரப்பு; அலர் வேய் = மலர்கள் பொருந்திய; கண்டல் = தாழை; ஒல்கி = சாய்ந்து; ஓதம் = வெள்ளம்.

உரை: தோழி!, நம் காதலர் இருந்த என் நெஞ்சுகாமம் மிகுந்தால் அவரை நினைத்து அவரிடம் செல்லுகிறது.  நாம் அவரைப் பிரிந்து வருந்தும் பொழுது நம்மிடம் திரும்பி வந்துவிடுகிறதுகடற்கரையில் வளர்ந்து நின்ற மலர்களையுடைய தாழை, கழியின் பக்கம் அலை வரும்பொழுது அப்பக்கமாகச் சாய்ந்து, அந்த அலை கடலின் பக்கம் திரும்பிச் செல்லும்பொழுது தானும் கடற்பக்கம் சாய்கிறது. இருபக்கமும் சாயும் தாழையைப்போல், என் நெஞ்சு என் தலைவரிடமும் என்னிடமும் மாறிமாறி அலைந்து வருந்துகிறது.

339. தோழி கூற்று

339. தோழி கூற்று
பாடியவர்: பேயார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொற் சொல்லி வற்புறீஇயது. ( வற்புறீஇயது = வற்புறுத்தியது)
கூற்று விளக்கம்: தலைவனின் பிரிவால் தோன்றிய வருத்தத்தைத் தாங்க முடியாமல் தலைவி அழுதுகொண்டிருக்கிறாள். அதைக் கண்ட தோழி, “நீ தலைவனோடு அளவளாவிய காலத்தில் மகிழ்ச்சியோடு இருந்தாய்இப்பொழுது ஏன் அழுகிறாய்? தலைவன் திருமணத்திற்குப்  பொருள் தேடுவதற்காகக்தானே சென்றிருக்கிறான். நீ அழுவதை நிறுத்து. அவன் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்வான்.” என்று கடிந்து கூறுகிறாள்.

நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை
உறையறு மையிற் போகிச் சாரற்
குறவர் பாக்கத் திழிதரு நாடன்
மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க்
குவளை யுண்கண் கலுழப்
பசலை யாகா வூங்கலங் கடையே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நறை அகில் வயங்கிய நளிபுன நறும்புகைஉறை அறு மையின் போகிச் சாரல் குறவர் பாக்கத்து இழிதரு நாடன் மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்மாஇதழ்க் குவளை உண்கண் கலுழபசலை ஆகா ஊங்கலங்கடை
மன் இனிது.

அருஞ்சொற்பொருள்: நறை = மணம்; அகில் = ஒருவகை மரம்; வயங்குதல் = விளங்குதல்; நளிதல் = செறிதல்; புனம் = கொல்லை; உறை = துளி; மை = மேகம்; உறை அறு மை = நீர்த்துளிகள் இல்லாத மேகம்; பாக்கம் = பக்கத்திலுள்ள ஊர்கள்; மயங்குதல் = கலத்தல்; கோதை = மாலை; முயங்கல் = தழுவுதல்; மன்மிகுதிப் பொருளைக் குறிக்கும் இடைச்சொல்மா = கருமை; உண்கண் = மைதீட்டிய கண்கள்; கலுழ்தல் = அழுதல்; கடை = நிலை; ஊங்கு = முன்பு; ஊங்கலங்கடைஊங்கு+அல்+அம்+கடை = முன்பு இருந்த நிலை (இங்கு அல், அம் ஆகியவை சாரியை ஆகும்.); ஆகா ஊங்கலங்கடை = ஆவதற்கு முன்பு இருந்த நிலை.
உரை: தோழி! வாழ்க! புனத்தில் உள்ள மரங்களைச் சுட்டெரித்த பொழுது, அதிலுள்ள அகில் மரங்களிலிருந்து எழுந்த மணம் மிக்க புகை,  நீர்த்துளிகள் இல்லாத வெண்ணிறமான மேகத்தைப் போலச் சென்று, மலைச்சாரலிலுள்ள குறவர்களுடைய ஊரில், இறங்கும் நாட்டை உடைய தலைவன், பலவகையான மலர்கள் கலந்த மாலையை அணிந்த, உன் நல்ல மார்பைத் தழுவியது, கரிய இதழை உடைய, குவளை மலரைப் போன்ற உன்னுடைய  மைதீட்டிய கண்கள் அழும்படி  பசலை உண்டாவதற்கு முன்பு, மிகவும் இனியதாக இருந்தது.
சிறப்புக் குறிப்பு:     தினை விதைக்கும் பொருட்டுப் புனத்திலுள்ள மரங்களைக் குறவர்கள் எரிக்கும் பொழுது, அங்கிருந்த அகில் மரங்களும் எரிந்தன. மரங்களைச் சுட்டெரித்த போழுது தோன்றிய புகை, வெண்ணிறமாக அகில் மணத்தோடு மலைப்பக்கத்தில் இருந்த ஊர்களில் சென்று படிந்தது. மணமுள்ள புகை மலைப்பக்கத்தில் உள்ள ஊர்களில் படிந்தது என்றது, தலைவனின் செயல்கள் விரைவில் வெற்றிபெற்று, தலைவிக்கு இன்பமானதாக அமையும் என்பதைக் குறிக்கிறது.