Tuesday, May 9, 2017

343. தோழி கூற்று

343. தோழி கூற்று
பாடியவர்: ஈழத்துப் பூதன் தேவன்.  
திணை: பாலை.
கூற்று : தோழி, கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். அவர்களுடைய திருமணத்திற்குத் தலைவியின் பெற்றோரின்  இணக்கத்தைப் பெற இயலாத நிலை தோன்றியது. ஆகவே, தலைவன் தலைவியோடு உடன்போவதாக முடிவு செய்தான். அவனுடைய முடிவு தோழிக்குத் தெரியும். “ இந்த நிலையில்  நீ உன்னுடய தலைவனோடு உடன்போவதே சிறந்த செயல். அவன் மிகவும் வலிமையும் ஆற்றலும் உடையவன். அவன் எத்தகைய பகையையும் வெற்றி பெறுவான். ஆகவே, நீ அஞ்சாமல், அவனோடு செல்வதைப் பற்றி எண்ணிப் பார்ப்பாயாக.” என்று கூறித் தோழி தலைவியை உடன்போக்குக்கு ஊக்குவிக்கிறாள்.

நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புலிப் பகுவா யேற்றை
வெண்கோடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே. 

கொண்டு கூட்டு: தோழி! மிகுவலி இரும்புலிப் பகுவாய் ஏற்றை நனைகவுள் அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென, வெண்கோடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை வாடுபூஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயருமாறு நினையாய்! வாழி!
 அருஞ்சொற்பொருள்: கவுள் = கன்னம்; அண்ணல் = தலைமைத் தன்மை பொருந்திய; இரும் = பெரிய; பகுவாய் = பிளந்த வாய்; ஏறு = விலங்குகளின் ஆண்; வெண்கோடு = வெண்ணிறமான கொம்பு; மறு = கறை; கொளீஇ = கொள்ள; விடர் = மலைப்பிளப்பு; முகை = குகை (இங்கு, மலையில் உள்ள பள்ளத்தைக் குறிக்கிறது.); கோடை = மேலைக்காற்று; ஒற்றுதல் = வீழ்த்துதல்.
உரை: தோழி!  மிக்க வலிமையும் பிளந்த வாயையும் உடைய  பெரிய ஆண்புலி,  மதநீரால் நனைந்த கன்னத்தையுடைய, தலைமை பொருந்திய யானையின் அழகிய முகத்தில் பாய்ந்தது. அப்புலி பாய்ந்ததால், அந்த யானையின் வெண்ணிறமான கொம்பு, புலியின் குருதியால் சிவந்த கறையைப் பெற்றது. மலைப் பள்ளத்தில் உள்ள,  மேலைக்காற்றால் வீழ்த்தப்பட்ட,  கரிய அடியையுடைய வேங்கை மரத்தின்,  வாடிய பூவையுடைய கிளையைப் போல புலி இறந்து கிடந்தது. அத்தகைய உயர்ந்த மலையையுடைய நாட்டுக்குரிய தலைவனுடன்,  உடன்போவதைப் பற்றி நீ எண்ணிப் பார்ப்பாயாக;  நீ வாழ்வாயாக!

சிறப்புக் குறிப்பு: பகுவாய்என்றது, புலி யானையைக் கொல்வதற்காகப் பாயும்பொழுது பிளந்த வாயை உடையதாக இருந்தது என்பதைக் குறிக்கிறது.  ”வெண்கோடு செம்மறுக் கொளீஇஎன்றது யானையின் கொம்பால் குத்தப்பட்டு புலி இறந்ததையும், புலி பாய்ந்ததனால் யானையின் வெண்ணிறமான கொம்பு செந்நிறமான கறையைப் பெற்றதே ஒழிய, யானைக்கு எவ்விதமான தீங்கும் விளையவில்லை என்பதையும் குறிக்கிறது.     வேங்கையின் மலர்கள் விழுந்து கிடப்பது, புலியின் வரியைப் போலத் தோன்றும் (குறுந்தொகை 47, 1-2) என்பதால், இறந்து கிடந்த புலிக்கு வேங்கை மரத்தின் கிளை உவமையாயிற்று. பாலை நிலத்தில் தலைவனோடு உடன்போனால் ஏதாவது தீங்கு விளையுமோ என்று தலைவி அஞ்சாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, “தலைவனது நாட்டிலுள்ள யானை, தன்னை எதிர்த்த, மிகுந்த வலிமையுடைய புலியைத் தான் எதிர்க்காமலே தன் கொம்பினால் வீழ்த்தியதைப் போல், அந்நாட்டுக்கு உரியவனாகிய தலைவனும் இடையூறுகளை எளிதில் வெல்லும் ஆற்றல் உடையவன்.” என்பதைக் குறிப்பால் உணர்த்தி, தலைவனோடு உடன்போவதற்குத் தலைவிக்குத் தோழி ஊக்கம் அளிக்கிறாள்.  

No comments:

Post a Comment