Tuesday, May 9, 2017

339. தோழி கூற்று

339. தோழி கூற்று
பாடியவர்: பேயார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொற் சொல்லி வற்புறீஇயது. ( வற்புறீஇயது = வற்புறுத்தியது)
கூற்று விளக்கம்: தலைவனின் பிரிவால் தோன்றிய வருத்தத்தைத் தாங்க முடியாமல் தலைவி அழுதுகொண்டிருக்கிறாள். அதைக் கண்ட தோழி, “நீ தலைவனோடு அளவளாவிய காலத்தில் மகிழ்ச்சியோடு இருந்தாய்இப்பொழுது ஏன் அழுகிறாய்? தலைவன் திருமணத்திற்குப்  பொருள் தேடுவதற்காகக்தானே சென்றிருக்கிறான். நீ அழுவதை நிறுத்து. அவன் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்வான்.” என்று கடிந்து கூறுகிறாள்.

நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை
உறையறு மையிற் போகிச் சாரற்
குறவர் பாக்கத் திழிதரு நாடன்
மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க்
குவளை யுண்கண் கலுழப்
பசலை யாகா வூங்கலங் கடையே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நறை அகில் வயங்கிய நளிபுன நறும்புகைஉறை அறு மையின் போகிச் சாரல் குறவர் பாக்கத்து இழிதரு நாடன் மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்மாஇதழ்க் குவளை உண்கண் கலுழபசலை ஆகா ஊங்கலங்கடை
மன் இனிது.

அருஞ்சொற்பொருள்: நறை = மணம்; அகில் = ஒருவகை மரம்; வயங்குதல் = விளங்குதல்; நளிதல் = செறிதல்; புனம் = கொல்லை; உறை = துளி; மை = மேகம்; உறை அறு மை = நீர்த்துளிகள் இல்லாத மேகம்; பாக்கம் = பக்கத்திலுள்ள ஊர்கள்; மயங்குதல் = கலத்தல்; கோதை = மாலை; முயங்கல் = தழுவுதல்; மன்மிகுதிப் பொருளைக் குறிக்கும் இடைச்சொல்மா = கருமை; உண்கண் = மைதீட்டிய கண்கள்; கலுழ்தல் = அழுதல்; கடை = நிலை; ஊங்கு = முன்பு; ஊங்கலங்கடைஊங்கு+அல்+அம்+கடை = முன்பு இருந்த நிலை (இங்கு அல், அம் ஆகியவை சாரியை ஆகும்.); ஆகா ஊங்கலங்கடை = ஆவதற்கு முன்பு இருந்த நிலை.
உரை: தோழி! வாழ்க! புனத்தில் உள்ள மரங்களைச் சுட்டெரித்த பொழுது, அதிலுள்ள அகில் மரங்களிலிருந்து எழுந்த மணம் மிக்க புகை,  நீர்த்துளிகள் இல்லாத வெண்ணிறமான மேகத்தைப் போலச் சென்று, மலைச்சாரலிலுள்ள குறவர்களுடைய ஊரில், இறங்கும் நாட்டை உடைய தலைவன், பலவகையான மலர்கள் கலந்த மாலையை அணிந்த, உன் நல்ல மார்பைத் தழுவியது, கரிய இதழை உடைய, குவளை மலரைப் போன்ற உன்னுடைய  மைதீட்டிய கண்கள் அழும்படி  பசலை உண்டாவதற்கு முன்பு, மிகவும் இனியதாக இருந்தது.
சிறப்புக் குறிப்பு:     தினை விதைக்கும் பொருட்டுப் புனத்திலுள்ள மரங்களைக் குறவர்கள் எரிக்கும் பொழுது, அங்கிருந்த அகில் மரங்களும் எரிந்தன. மரங்களைச் சுட்டெரித்த போழுது தோன்றிய புகை, வெண்ணிறமாக அகில் மணத்தோடு மலைப்பக்கத்தில் இருந்த ஊர்களில் சென்று படிந்தது. மணமுள்ள புகை மலைப்பக்கத்தில் உள்ள ஊர்களில் படிந்தது என்றது, தலைவனின் செயல்கள் விரைவில் வெற்றிபெற்று, தலைவிக்கு இன்பமானதாக அமையும் என்பதைக் குறிக்கிறது.


No comments:

Post a Comment