Sunday, May 21, 2017

345. தோழி கூற்று

345. தோழி கூற்று 

பாடியவர்: அண்டர்மகன் குறுவழுதியார்.
திணை: நெய்தல்.
கூற்று : பகல்வந்து ஒழுகுவானைத் தோழி இரா வா என்றது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பகலில் சந்தித்துப் பழகிவந்தனர். அவர்கள் பகலில் சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. அதனால், தலைவி தலைவனை இரவில் சந்திக்க விரும்புகிறாள். தலைவி தன் விருப்பத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள். தோழி தலைவனை நோக்கி, "நீ இனி இரவில் வந்து தலைவியைச் சந்திக்கலாம்என்று கூறுகிறாள்.

இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர்
வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇத்
தங்கினி ராயின் தவறோ தெய்ய
தழைதாழ் அல்குல் இவள்புலம் பகலத்
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலியெம் சிறுநல் லூரே.

கொண்டு கூட்டு: தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி இழுமென ஒலிக்கும் ஆங்கண்பெருநீர் வேலி எம் சிறு நல் ஊர்இழையணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந்தேர்வரைமருள் நெடுமணல் தவிர்த்து நின்று, அசைஇ,  தழைதாழ் அல்குல் இவள் புலம்பு அகலத் தங்கினிராயின் தவறோ

அருஞ்சொற்பொருள்: இழை = அணிகலன் (இங்கு, தேரை அழகு படுத்துவதற்காகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பொற்படைகளைக் குறிக்கிறது.); இயல்வரும் = ஓடிவரும்; கொடுஞ்சி = தேரின் முன்பக்கத்தில் உள்ள தாமரை மொட்டுப் போன்ற கைப்பிடி; வரை = மலை; மருள் = உவமையுருபு; அசைஇ = தங்கி இளைப்பாறி; தெய்யஅசைநிலை; புலம்பு = தனிமை; தைஇய = பொருந்திய; தயங்குதல் = விளங்குதல்; திரை = அலை; இழும் = ஓசைக் குறிப்பு; பெருநீர் = கடல்.
உரை: தாழை பொருந்திய, விளங்கும் அலைகளையுடைய, வளைந்த கழியானது, இழும் என ஒலிக்கும். அவ்விடத்தில் உள்ள பெரிய கடலை வேலியாகயுடைய எமது சிறிய நல்ல ஊர் உள்ளது. பொற்படைகள் அணியப்பட்டு ஓடுகின்ற, கொடுஞ்சியையுடைய உமது  நெடிய தேரை, மலையையொத்த உயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு,  இங்கு இருந்து இளைப்பாறி, தழையுடை தாழ்ந்த அல்குலையுடைய இத்தலைவியின் தனிமைத் துன்பம் நீங்கும்படி, தங்குவீரானால், அது பிழையாகுமோ?

சிறப்புக் குறிப்பு: ஊருக்குள் தேர் வருமானால் ஊரார் அறிவர். அதனால் அலர் எழக்கூடும் என்பதனால், மணல்மேட்டிலேயே தேரை நிறுத்துமாறு தோழி கூறுகிறாள். ”தவறோ?” என்ற வினா, அவ்வாறு செய்வதையே தான் கருதியது என்று தோழி கூறுவதைக் குறிக்கிறது

No comments:

Post a Comment