Sunday, May 31, 2015

31. மருதம் - தலைவி கூற்று

31. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: ஆதிமந்தியார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் சோழன் கரிகால் வளவனின் ஒரேமகள் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி:  ஒரு நாட்டியமாடும் ஆண்மகனைத் தலைவி காதலிக்கிறாள். அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக் காணாமல் வருந்தியதால், தலைவி உடல் மெலிந்தாள். அவள் கையில் உள்ள வளையல்கள் நெகிழ்ந்தன. தலைவியைப் பார்க்க வந்த தோழி, தலைவியின் வருத்தத்திற்குக் காரணம் என்னவென்று தெரியாமல் திகைக்கிறாள். தலைவி, “ என்னைப் பார். என் கையிலுள்ள வளையல்கள் நெகிழ்கின்றனவே என்று திகைக்கிறாயா? என்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நான் என் தலைவனைப் பிருந்திருப்பதுதான். நான் ஒர் நாட்டியம் ஆடும் பெண் என்று உனக்குத் தெரியுமல்லவா? என்னைப் போலவே என் தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான். சிலநட்களாக அவனைக் காணாததால், நான் அவனைப் பல இடங்களில் தேடினேன். ஆனால், அவனைக் காணவில்லை.” என்று கூறித் தன் காதலைத் தோழிக்குத் தெரிவிக்கிறாள்.

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. 

அருஞ்சொற்பொருள்: மள்ளர் = வீரர்; குழீஇய = குழுமியுள்ள (கூடியுள்ள) ; விழவு = விழா; தழீஇய = தழுவிய; துணங்கை = ஒருவகைக் கூத்து; யாண்டும் = எங்கும்; மாண் = மாட்சிமை; தக்கோன் = தகுதி உடையவன்; யான் = நான்; ஆடுகள மகள் = ஆடுகின்ற களத்திற்குரிய பெண் (நாட்டியம் ஆடும் பெண்) ; கோடு = சங்கு; ஈர்த்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; நெகிழ்தல் = நழுவுதல்; பீடு = பெருமை; குரிசில் =தலைவன்; ஆடுகள மகன் =ஆடுகளத்தில் உள்ள ஆண் ( நாட்டியம் ஆடும் ஆண்மகன்).

உரை: மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய என் தலைவனை வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்கள், ஆண்கள் மகளிரைத் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால் அவனைக் காணவில்லை. நான் ஒரு நாட்டியம் ஆடும் பெண். சங்கை அறுத்துச் செய்யப்பட்டு,  ஓளியுடன் என் கையில் விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும்  நாட்டியம் ஆடுபவன்தான்.

விளக்கம்: ஆட்டனத்தி என்ற ஒரு நடனமாடும் இளைஞனைச் சோழமன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி காதலித்ததாகவும், அவன் காவிரியாற்றுக் கரையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபொழுது, காவிரியில் தோன்றிய வெள்ளப்பெருக்கு அவனைக் கவர்ந்து சென்றதாகவும், அவனைக் காணாததால்ஆதிமந்தி அவனைப் பல இடங்களிலும் தேடி அலைந்ததாகவும், பின்னர் இருவரும் ஒன்று கூடியதாகவும் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பலகுறிப்புகள் காணப்படுகின்றன. ஆதிமந்தி தன் காதலனைக் காணததால் வருத்தப்பட்டுத் தேடி அலைந்ததாக, வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவர் அகநானூற்றுப் பாடல் 45-இல் குறிப்பிடுகிறார். ஆட்டனத்தியைக் காவிரியாறு கவர்ந்து சென்ற செய்தியை அகநானூற்றில் நான்கு பாடல்களில் (76, 222, 376, 396) பரணர் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் (வஞ்சின மாலை, வரிகள் 10- 15) சோழ மன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தியின் காதலனாகிய ஆட்டனத்தியைக் காவிரி கவர்ந்து சென்று கடலில் சேர்த்ததாகவும், கடல் ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக்கு மீட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.


இருபதாம் நூற்றாண்டில், சிறந்த கவிஞராக விளங்கிய கவியரசு கண்ணதாசன், ஆதிமந்தியின் வரலாற்றைஆட்டனத்திஆதிமந்தி காவியம்என்று ஒரு நூலாக இயற்றியிருக்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆதிமந்தியின் வரலாற்றைசேர தாண்டவம்என்ற பெயரில் ஒரு நாடகமாக இயற்றியுள்ளார். ஆட்டனத்திஆதிமந்தியின் காதலை மையமாக வைத்துமன்னாதி மன்னன்என்ற திரைப்படம் 1960- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

30. பாலை - தலைவி கூற்று

30. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்.  இவர் ஒரு பெண்பாற் புலவர்.  இவர் இயற்பெயர் நன்னாகையார். இவர் காஞ்சிபுரம் அருகில் உள்ள கச்சிப்பேடு என்ற ஊரைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறது. ஆகவே, இவர் கச்சிப்பேட்டு நன்னாகையார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் குறுந்தொகையில் எட்டுப் பாடல்கள் (30, 118, 172, 180, 192, 197, 287, 325)  இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவினால் தலைவி வருத்தமடைந்தாலும், அவள் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறாள். ஒருநாள் தலைவனைக் கனவில் காண்கிறள். கனவு உண்மையான நிகழ்ச்சிபோல் தோன்றியது. தலைவன் தன்னோடு படுக்கையில் இருப்பதாக நினைத்து அவனைத் தழுமுயல்கிறாள். ஆனால், அவள் தழுவியது தன் படுக்கையத்தானே தவிர தலைவனை அன்று என்பதை உணர்ந்த தலைவி, தன் நிலையை நினைத்து வருந்துகிறாள். தன் கனவையும் தன் வருத்தத்தையும் தலைவி தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.


கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே. 

அருஞ்சொற்பொருள்: கேட்டி = கேட்பாயாக; இசின் - முன்னிலை அசைச்சொல்; அல்கல் = இரவு; பொய்வலாலன் = பொய் கூறுவதில் வல்லமை பெற்றவன்; மெய் = உடல்; உறல் = அணைதல்; மரீஇய = தழுவிய; வாய் = உண்மை; தகை = தன்மை; மருட்டுதல் = மயக்கல்; ஏற்றல் = உணர்த்தல்; அமளி = படுக்கை; தைவரல் = தடவுதல்; சாய்தல் = வருத்துதல்; அளி = இரக்கம்.

உரை: தோழி, நீ வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக! பொய் கூறுவதில் மிகவும் வல்லமை பெற்ற என் தலைவன், என் உடலை அணைத்துத் தழுவியதாக நான் இரவில் கனாக் கண்டேன். அந்தப் பொய்யான கனவு உண்மையாக நடந்த நிகழ்ச்சிபோல் தோன்றியது. அந்தக் கனவு எனக்கு மயக்கத்தை உண்டாக்கியது. உடனே, உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன். தலைவன் என்னோடு படுத்திருப்பாதாக நினைத்து அவனைத் தடவினேன். நன்றாக விழிதுப்பார்த்த பிறகு,  நான் தொட்டுத் தடவியது என் படுக்கையைத்தானே ஒழிய தலைவனை அன்று என்று தெரிந்தது. வண்டுகள் வந்து விழுந்து வருத்திய குவளை மலரைப்போல் நான் மெலிந்து தனியள் ஆனேன். நான் இரங்கத் தக்கவள்.

விளக்கம்: ”பொய்வலாளன் என்றது, தான் கூறிய நாளில் வந்து தலைவன் திருமணம் செய்துகொள்ளாததைக் குறிக்கிறது..

29. குறிஞ்சி - தலைன் கூற்று

29. குறிஞ்சி - தலைன் கூற்று

பாடியவர்: ஒளவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15 – இல் காண்க.
பாடலின் பின்னணி: தலைவியைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் தலைவன் வந்திருக்கிறான். தலைவிக்குப் பதிலாக அங்கே தோழி வருகிறாள். “தலைவி வரவில்லையா?” என்று தலைவன் கேட்கிறான். “இனி, உன்னைச் சந்திக்கத் தலைவி வரமாட்டாள். நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள்என்று தோழி கூறுகிறாள். தலைவியைக் காண முடியவில்லையே என்ற வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தலைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் கருத்திற்கு உடன்பட்டுத் தலைவி வரவில்லையே. அவள் வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே! இப்பொழுது நான் என் செய்வேன்என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறுகிறான்.

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. 

அருஞ்சொற்பொருள்: நல்லுரை = நல் + உரை = நல்ல சொற்கள்; இகத்தல் = நீங்குதல்; புல்லுரை = புல் + உரை = பயனற்ற சொற்கள் ; தா = பரப்பு = மிகுதி; நீர்க்கேற்ற = நீர்க்கு ஏற்ற = நீரை ஏற்ற (உருபு மயக்கம்); பெயல் = மழை; பசுங்கலம் = பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம்; பூசல் = போராட்டம்; உயர் = உயர்ந்த ; கோடு = கிளை; மகவு = விலங்கின் குட்டி; மந்தி = பெண்குரங்கு.

உரை: நெஞ்சே, நல்ல செய்திகள் கூறப்படவில்லை. பயனற்ற சொற்களே மிகுதியாகக் கூறப்படுகின்றன. பெய்யும் மழையினால் நீர் நிரம்பி வழியும், பசு மண்ணாலாகிய பாத்திரத்தைப் போல,  உள்ளத்தினால் பொறுக்க முடியாத, ஆசை வெள்ளத்தில் நீந்திப் பெறுதற்கு அரியதை நீ பெற விரும்புகிறாய். உன்னுடைய போராட்டம் மிகவும் பெரியது. உயர்ந்த மரக் கொம்பில் உள்ள, குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைதி அடைவது போல, மனம் பொருந்த, உன் கருத்தைத் தழுவிக் கொண்டு, உன் வருத்தத்தைக் கேட்டு உன் குறையை நிறைவேற்றுவாரை,  நீ பெற்றால் அது மிகவும் பெருமைக்குரியது.


விளக்கம்: நல்லுரை என்றது தன் விருப்பத்திற்கு இணங்கி இரவில் தலைவி தன்னைச் சந்திக்க வருவாள் என்னும் செய்தியைக் குறிக்கிறது. புல்லுரை என்றது தலைவி இரவு நேரத்தில் வரமாட்டாள்; நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள்என்ற செய்தியைக் குறிக்கிறது. பசுங்கலம் நீரைத் தாங்க முடியாமல் இருப்பது, தலைவனின் உள்ளம் ஆசை வெள்ளத்தைத் தாங்க முடியாமல் தவிப்பதற்கு உவமை.

28. பாலை - தலைவி கூற்று

28. பாலை - தலைவி கூற்று 

பாடியவர்: ஒளவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15 – இல் காண்க.
பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் குறித்த காலத்தில் வராததால் தலைவி வருந்துகிறாள். தலைவியின்  வருத்தத்தை அறிந்த தோழி அவளைக் காண வருகிறாள். தலைவி தான் படும் துன்பத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. 

அருஞ்சொற்பொருள்: ஓரேன் = அறியேன்; பெற்றிகாரியமுறை; அலமரல் = சுழலல்; வளி = காற்று; அசைவளி = அசையும் காற்று; அலைப்ப = வருத்த; உயவு = வருத்தம், துன்பம்; துஞ்சுதல் = உறங்குதல்.
                                                                                                                                       
உரை: சுழன்று வருகின்ற தென்றல் காற்று எனக்குக் காம நோயைத் தந்து என்னை வருத்துகிறது. எனக்கு வருத்தத்தை தரும்  என்னுடைய நோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் இவ்வூர் மக்களை நினைத்து  நான் முட்டிக் கொள்வேனா? அவர்களைத்  தாக்குவேனா? அல்லது,  ஏதாவது ஒரு போலிக்காரணத்தை முன்வைத்து, ஆவென்றும் ஒல்லென்றும் கூச்சலிட்டு எல்லோரையும் கூப்பிடுவேனா?  என்ன செய்வது என்பதை அறியேன்.


விளக்கம்: தலைவி கூச்சலிட்டால் ஊர்மக்களிடையே அலர் எழும். அந்த அலரினால் தனக்கும் தலைவனுக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலைவி எண்ணுவதாகத் தோன்றுகிறது.

27. பாலை - தலைவி கூற்று

27. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார். இவர் குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும் ( 27, 44, 58, 130, 148, 149, 386), அகநானூற்றில் இரண்டு பாடல்களும் ( 45, 362), நற்றிணையில் மூன்று பாடல்களும் ( 70, 335, 348) பாடல்களும் இயற்றியுள்ளார். தன் சொந்த வாழ்க்கையில், வெள்ளிவீதியார் தன் தலைவனைவிட்டுப் பிரிந்திருந்தபொழுது தன் நிலையைக் குறித்து வருந்தி இப்பாடலை இயற்றியதாகக் கூறப்படுகிறது. இப்பாடலைப் பாடியவர் கொல்லனழிசி என்று கூறுவாரும் உளர்

பாடலின் பின்னணி: தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவி பசலை நோயுற்றாள். அந்தப் பசலை நோயால், தன் அழகு தனக்கும் பயனில்லாமல் தன் தலைவனுக்கும் உதவாமல் வீணாகிறது என்று தலைவி தன் தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே. 

அருஞ்சொற்பொருள்: ஆன் = பசு; தீ = இனிமை; உக்குதல் = வீணாகுதல்; என்னை = என்+ = என் தலைவன்; பசலை = காதலனின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதால் காதலியின் உடலில் தோன்றும் பொன்நிறம்; உணீஇயர் = உண்ண; வேண்டும் = விரும்பும்; திதலை = தேமல்; அல்குல் = இடை (இங்கு, உடலைக் குறிக்கிறது); மாமை = மேனி; கவின் = அழகு.

உரை: நல்ல பசுவின் இனிய பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போலதேமல் பொருந்திய என் உடலின் கருமை நிறத்தோடு கூடிய அழகை, எனக்கும் பயனளிக்காமல் என் தலைவனுக்கு இன்பம் பயக்காமல் பசலை நோய் உண்ண விரும்புகிறது.


விளக்கம்: கன்று உண்டபின் பாத்திரத்தை நிரப்பும் பசுவின் பால் போல, தலைவியின் அழகு அவளுக்கும் அவள் தலைவனுக்கும் பயனளிக்கிறது என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.

26. குறிஞ்சி - தோழி கூற்று

26. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: கொல்லனழிசி. இவர் அழிசி என்னும் ஊரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் நான்கு பாடல்களை (26, 138, 145, 240) இயற்றியுள்ளார். ஆனால், குறுந்தொகையில் உள்ள 26 – ஆம் பாடலை இவர் இயற்றவில்லை என்று கூறுவோரும் உளர்.

பாடலின் பின்னணி: தலைவியும் தலைவனும் சந்தித்தார்கள்; பழகினார்கள். தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான். ஆனால், அதற்கான எந்த முயற்சிகளிலும் அவன் ஈடுபடவில்லை. சில நாட்களாக அவன் தலைவியைச் சந்திக்கவும் வரவில்லை. ஆகவே, தலைவி, உண்ணாமல், உறங்காமல், மனம் வருந்தி, உடல் மெலிந்து காணப்படுகிறாள். தன் மகளின் உடல் நிலையைக் கண்ட தாய், தலைவிக்கு என்ன ஆயிற்று என்று வருத்தப்படுகிறாள். கட்டுவிச்சியை அழைத்து, தலைவியின் நிலைக்கு என்ன காரணம் என்று கேட்கிறாள். தலைவியின் நிலைக்குக் காரணம் தெய்வத்தால் வந்த குற்றம் என்று கட்டுவிச்சி கூறுகிறாள். அதைக் கேட்ட தோழி, “தலைவி ஒரு குறிஞ்சி நிலத்தலைவனோடு  காதல் கொண்டாள்; அவனோடு பழகினாள், அவர்கள் காதலைப் பற்றி அந்த மலையில் வாழும்  குரங்குக்கூடத் தெரியும். அந்தக் குரங்கு பொய் சொல்லாதுஎன்று கூறித் தலைவியின் களவொழுக்கத்தை அவளுடைய தாயாருக்குத் தெரிவிக்கிறாள். தோழி அறத்தொடு நின்றாள் என்பது அவள் செயலிலிருந்து தெரிகிறது.

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே. 

அருஞ்சொற்பொருள்: அற = முழுவதும்; கருங்கால் = கரிய அடிப்பக்கம்; வேங்கை = வேங்கை மரம்; மேக்கு = மேல்; சினை = கிளை; தோகை = மயில்; தகாஅன் = தகுதியற்றவன்; தேக்கொக்கு = தேன் + கொக்கு; கொக்கு = மாமரம்; எயிறு = பல்; துவர் = சிவப்பு; வரை = மலை; ஆடுதல் = விளையாடுதல்வன்மை = வலிமை; பறழ் = சில விலங்குகளின் குட்டிக்குப் பொதுப்பெயர்; கடுவன் = ஆண்குரங்கு.

உரை: அரும்புகள் அனைத்தும் மலர்ந்த, கரிய அடிப்பக்கத்தையுடைய வேங்கை மரத்தின்மேல் வளர்ந்த பெரிய கிளையில், இருந்த மயிலானது, அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போலக் காட்சி அளித்தது. அத்தகைய நாட்டை உடைய தலைவன், இவளுக்கு உரியவனாகும் தகுதி இல்லாதவன் என்பது போல, தலைவியின் நோய்க்குக் காரணம் தெய்வத்தால் வந்த குற்றம்தான் என்று கட்டுவிச்சி கூறினாலும், தேன் போன்ற இனிய மாங்கனியை உண்ணுகின்ற, முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் சிவந்த வாயையும் உடைய, மலைகளில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையாகிய, ஆண் குரங்கும், அந்தக் கொடியவனாகிய தலைவனை அறியும். தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை, தான் கண்டதில்லை என்று அந்த ஆண்குரங்கு பொய் சொல்லாது.


விளக்கம்: திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தலைவன் செய்யாமால் தலைவியைக் காத்திருக்கச் செய்து வருத்தியதால், அவனைத் தோழிகொடியவன்என்று குறிப்பிடுகிறாள்

25. குறிஞ்சி - தலைவி கூற்று

25. குறிஞ்சி - தலைவி கூற்று


பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 13 – இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருநாள், தலைவனும் தலைவியும் சந்தித்தார்கள். அப்பொழுது, தலைவன்  “நான் உன்னைக் கைவிட மட்டேன். விரைவில் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்”  என்று அவளுக்கு உறுதிமொழி கூறினான்அவன் கூறிய உறுதிமொழியை நம்பிய தலைவி அவனோடு கூடி மகிழச் சம்மதித்தாள். அதற்குப் பிறகு, அவனைக் காணவில்லை. அவனோடு கூடியிருந்தபொழுது அவன் உறுதிமொழி அளித்ததற்கு யாரும் சான்று இல்லையே என்று தன் தோழியிடம் கூறித் தலைவி வருந்துகிறாள்

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 

அருஞ்சொற்பொருள்: பசுமை = செழுமை; ஆரல் = ஒருவகை மீன் ; குருகு = நாரை, கொக்கு; மணத்தல் = கலத்தல்; ஞான்று = பொழுது, காலம்.

உரை: தலைவன் என்னோடு கூடியிருந்த பொழுது அதற்குச் சான்றாக வேறு ஒருவரும் அங்கு இல்லை. தலைவனாகிய கள்வன் மட்டுமே அங்கு இருந்தான். என் தலைவன் கூறிய உறுதி மொழிகள் பொய்யானால் நான் என்ன செய்வேன்? ஓடும் நீரில் வரும் ஆரல் மீனை உண்ணுவதற்காகப் பார்த்து நிற்கும், தினையின் அடியைப் போன்ற, சிறிய செழுமையான கால்களை உடைய, குருகு மட்டுமே அங்கே இருந்தது.


விளக்கம்: ஆரல் மீனை உண்ணும் குருகுபோல், தலைவன் தலைவியைக் கூடினான் என்பது உள்ளுறை உவமமாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் தன்னைத் தலைவன் கூடியதால் அவனைக்கள்வன்என்று தலைவி குறிப்பிடுகிறாள்.

24. முல்லை - தலைவி கூற்று

24. முல்லை - தலைவி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 19 – இல் காண்க.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் இளவேனிற்காலத்தில் (சித்திரை, வைகாசி மாதங்களில்) திரும்பி வருவதாகக் கூறிச்சென்றான். இப்பொழுது இளவேனிற்காலம் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக வேப்ப மரங்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன. ”தலைவன் வருவதற்குமுன் இந்த இளவேனிற் காலம் கழிந்துவிடுமோ? இன்னும் தலைவன் வரவில்லையே?” என்று தலைவி வருந்துகிறாள். தலைவனைப் பிரிந்திருப்பதால் வருத்தத்தோடு இருக்கும் தலைவியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத அவ்வூர் மக்கள் அவளைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே. 

அருஞ்சொற்பொருள்: கருங்கால் = கரு + கால் = கரிய கால்; ஒண் = ஒளி பொருந்திய; யாணர் = புது வருவாய்; என்னை = என்+ = என் தலைவன்; அயல் = அருகில்; வெண் = வெண்ணிறமான; கோடு = கொம்பு; அதவம் = அத்தி ; எழு = ஏழு (இங்கு, பல என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது); குழைதல் = இளகுபதமாதல் (வருந்துதல்); குளிறு = நண்டு; கல் - ஒலிக்குறிப்பு; அவ்வே = அவையே.

உரை: இளவேனிற் காலம் வந்ததால், கரிய அடிப்பக்கங்களை உடைய வேப்ப மரங்களின் ஒளி பொருந்திய பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன. என் தலைவன் வருவதற்கு முன்னரே இந்த இளவேனிற்காலம் கழிந்துவிடுமோ? ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த, வெண்மையான கிளைகளை உடைய அத்தி மரத்திலிருந்து விழுந்த ஒரு பழத்தைப் பல நண்டுகள் மிதித்துத்துக் குழைத்ததைப்போல், இவ்வூரில் உள்ள கொடிய மகளிருடைய நாக்கள்  என் காதலர் என்னைவிட்டுச் சென்றதால் அலர் கூறி ஒலித்தன.

விளக்கம்: பல நண்டுகள் மிதித்தால் நசுங்கிக் குழைந்த அத்திப் பழம்போல், அவ்வூர் மகளிர் பலரும் அலர்கூறி அவளை இழிவாகப் பேசியதால் தலைவியின் மனம் வருந்தியது என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்

Monday, May 18, 2015

23. குறிஞ்சி - தோழி கூற்று

23. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15 – இல் காண்க.
பாடலின் பின்னணி: தன் மகள் உடல் மெலிந்து வருத்தத்தோடு காணப்பட்டால், மகளின் நிலைக்குக் காரணம் என்ன என்றும் அவள் நலமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் தாய் சிந்திப்பது இயற்கை. சங்க காலத்தில், ஒருபெண் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது, தலைவனைச் சிலநாட்களாகக் காணமுடியாத சூழ்நிலை ஏற்படுமானால், அவனையே நினைத்து வருந்தி, உடல் மெலிந்து காணப்பட்டால், அவள் தாய், குறி சொல்லும் பெண்மணியை அழைத்துத் தன் பெண்ணின் நிலைமைக்குக் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வது வழக்கம். குறிசொல்லும் பெண்மணி முறத்தில் நெல், அரிசி முதலியவற்றை இட்டும், சோழிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டும் குறி கூறுவாள். இவ்வாறு குறி கூறுதலைகட்டுக் காணுதல்என்றும் குறி சொல்லும் பெண்களைகட்டுவிச்சிஎன்றும் சங்க காலத்தில் அழைத்தனர். பிற்காலத்தில் கட்டுவிச்சி குறத்தி என்றும் அழைக்கப்பட்டாள். கட்டுவிச்சி குறி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது தமிழ்க் கடவுளாகிய முருகனையும், முருகன் வாழ்வதாகக் கருதப்படும் மலைகளைப் பற்றியும் பாடுவது வழக்கம். இந்தக் கருத்தின் அடிப்படையில் ஒளவையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

தன் பெற்றோர்களிடம் வந்து முறையாகத் தன்னை மணந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைத் தலைவன் செய்வான் என்று எதிர்பார்த்துத் தலைவி காத்திருந்தாள். ஆனால், அவனைக் காணவில்லை. தன் காதலனைச் சில நாட்களாகக் காணாததால் தலைவி உண்ணாமல் உறங்காமல் இருந்து வருந்தி உடல் மெலிந்து காணப்பட்டாள். தலைவியின் நிலையைக் கண்ட  தாய், தன் மகளுக்கு ஏதோ நோய் வந்துவிட்டது என்று எண்ணுகிறாள். தன் மகளின் நிலையைப் பற்றிச் செவிலித்தாயோடு கலந்து ஆலோசிக்கிறாள். கட்டுவிச்சியை அழைத்துக் குறி சொல்லச் சொன்னால் தலைவியின் நிலைக்குக் காரணம் என்ன என்பது தெரியும் என்று இருவரும் முடிவு செய்கிறார்கள்.
ஒருநாள் கட்டுவிச்சி வந்தாள். அவள் குறிசொல்வதற்குமுன், முருகனையும் அவன் வாழ்கின்ற மலைகளையும் பற்றிப் பாடுகிறாள். தலைவியின் காதலன் வாழும் ஊரில் உள்ள மலையைப் பற்றி கட்டுவிச்சி பாடியவுடன், தலைவி புன்முறுவல் பூக்கிறாள். கட்டுவிச்சி மீண்டும் அந்த மலையைப் பற்றிப் பாடினால், தலைவியின் மகிழ்ச்சியைக் கண்டு, தலைவியின் செவிலித்தாயும் தாயும் அந்த மலையில் வாழும் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று தோழி எண்ணுகிறாள். ஆகவே, அந்த மலையைப் பற்றி மீண்டும் மீண்டும் பாடும்படித் தோழி கட்டுவிச்சியிடம் கூறுகிறாள்.

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. 

அருஞ்சொற்பொருள்: அகவல் = பாடுதல்; அகவன் மகள் = பாடும் பெண்மணி (கட்டு விச்சி); மனவு = சங்கு மணி.

உரை:  பாடும் பெண்மணியே! பாடும் பெண்மணியே! சங்கு மணியினால் ஆகிய மாலைபோல் உள்ள  வெண்மையான நல்ல நீண்ட கூந்தலை உடைய, பெண்மணியே! பாட்டுக்களைப் பாடுவாயாக; நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் பற்றிப்  பாடிய பாட்டை, மீண்டும் பாடுவாயாக.


விளக்கம்: சங்குமணி மாலை போன்ற கூந்தல் என்றது, கட்டுவிச்சி வயதில் முதிர்ந்து நரைத்த முடியுடைவளாக இருந்தாள் என்பதைக் குறிக்கிறது. ”அவர் குன்றம்என்று தோழி கூறியதில், அந்தஅவர்என்பது யாரைக் குறிக்கிறது என்ற ஆராய்ச்சியில் தாயும் செவிலித்தாயும் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையில் தோழி அவ்வாறு கூறினாள் என்று தோன்றுகிறது

22. பாலை - தோழி கூற்று

22. பாலை - தோழி கூற்று

பாடியவர்: சேரமானெந்தை.  சங்க இலக்கியத்தில், இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் உள்ள ஒருபாடல் (22) மட்டுமே காணப்படுகிறது. ஆனால், அகநானூற்றில் உள்ள 41 –ஆம் பாடலை எழுதியவரும் இவரே என்று உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் குறிப்பிடுகிறார். அகநானூற்றில் உள்ள 41-ஆம் பாடலை எழுதியவர் குன்றியனார் என்று வேறு சில நூல்கள் கூறுகின்றன.
பாடலின் பின்னணி: தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் உன்னை அழைத்துக் கொண்டுதான் செல்வார்என்று தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே. 

அருஞ்சொற்பொருள்: வார்தல் = ஒழுகல், வடிதல்; இவண் = இங்கே; சாரல் = மலைப்பக்கம் ; சிலம்பு = மலை; அணீ = அழகு; வலஞ்சுரி = கடம்பமரம்; மராஅம் = மரம்; வேனில் = கோடைக்காலம்; சினை = கிளை; கமழ்தல் = மணத்தல்; தேம் = நறுமணம்; ஊர்தல் = பரவுதல்; நுதல் = நெற்றி; ஒண்ணுதல் = ஒள்+நுதல் = ஒளி பொருந்திய நெற்றி.

உரை: நீர் வடியும் கண்களையுடைய தோழி ( தலைவியே!)! உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு யாரால் பிரிந்து செல்ல முடியும்?  கடம்ப மலரை உடைய கடம்ப மரங்கள், மலைப்பக்கத்திற்கு அழகு செய்கின்றன. வேனிற் காலத்தில் அந்த மலர்கள் மலர்வதால், அவற்றைத் தாங்கி நிற்கும் அழகிய கிளைகளும் மணம் உடையனவாக உள்ளன. அந்த மலர்களின் நறுமணம் போல் மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியை உடைய உன்னை உன் தலைவர் கூடவே அழைத்துச் செல்வார்.


விளக்கம்: வலஞ்சுரி மரம் என்பது கடம்ப மரத்தைக் குறிக்கிறது. கிளைகளுக்கு இயற்கையாக மணம் இருப்பதில்லை. கடம்ப மலர்களால் அந்த மரத்துக் கிளைகளும் மணம் பெறுகின்றன. அதுபோல், தலைவிக்குத் உறுதுணையாக இருக்கும் தலைவன் தலைவியினால்தான் சிறப்படைகிறான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.

21. முல்லை - தலைவி கூற்று

21. முல்லை - தலைவி கூற்று

பாடியவர்: ஓதலாந்தையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 12 –இல் காண்க.
பாடலின் பின்னணி: கார்காலம் ஆரம்பிக்குமுன் தான் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன்  கார்காலம் தொடங்கிய பிறகும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துவாள் என்று தோழி எண்ணுகிறாள். தலைவியோ, ”இந்தக் காட்டைப் பார்த்தால் கார்காலம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது. ஆனால், நான் அதை நம்ப மாட்டேன். இன்னும் கார்காலம் வரவில்லை. கார்காலம் வந்திருந்தால், என் தலைவர் இந்நேரம் திரும்பி வந்திருப்பார். அவர் பொய் கூறாதவர்.“ என்று தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.

அருஞ்சொற்பொருள்: ததைதல் = செறிதல்; கொடி = நீளம்; இணர் = கொத்து; இடுபு = இட்டு; புனைதல் = அணிதல்; கதுப்பு = கூந்தல்; கொன்றைஇங்கு சரக்கொன்றையைக் குறிக்கிறது; கானம் =காடு; கார் = கார் காலம் ; தேர்தல் = தெளிதல்; வழங்குதல் = சொல்லுதல்.

உரை: வண்டுகள் தேன் உண்ணுதற்கு வருமாறு, தழைகளின் இடையே நீண்ட, புதிய  சரக்கொன்றைப் பூங்கொத்துகள் செறிந்து மலர்ந்து,  உள்ளன. அவை பொன்னால் செய்த அணிகலன்களைத் தங்கள் தலைகளில் கோத்துக் கட்டிய, மகளிருடைய கூந்தலைப் போலத் தோன்றுகின்றன. புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய காடானது, இது கார்ப் பருவமென்று தெரிவித்தாலும்,  நான் அதை நம்பமாட்டேன்.  ஏனென்றால், என்  தலைவர் பொய் கூறாதவர்.


விளக்கம்: கொன்றை மலர்கள் நீண்ட கொத்துக்களாகக் கார்காலத்தில் மலரும் பூக்கள். இப்பாடலில் கொன்றை மரத்திற்கு மகளிரும், தழைக்கு அவர் கூந்தலும், பூங்கொத்திற்குப் பொன்னாலான அணிகலன்களும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.  


20. பாலை - தலைவி கூற்று

20. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: கோப்பெருஞ்சோழன்.            கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன்.  ஆனால் கிள்ளிவளவனுக்கும் கோபெருஞ்சோழனுக்கும் என்ன உறவு என்பது தெளிவாகத் தெரியவில்லை.  கோப்பெருஞ் சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது இவன் புறநானூற்றில் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும், குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது.  இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டது.  பகையின் காரணத்தால், தன் மக்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான்.  புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான்.  தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். இவனைப் பாடியவர்கள்: பிசிராந்தையார், புல்லாற்றூர் எயிற்றியனார், கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், பொத்தியார்.
பாடலின் பின்னணி: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறன். தன் காதலனைப் பிரிந்திருக்கும் தலைவியைக் காண அவள் தோழி வருகிறாள். தலைவன் பிரிந்து சென்றது அறிவுடைய செயல் அன்று என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே. 

அருஞ்சொற்பொருள்: அருள் = எல்லா உயிரினங்களிடத்தும் உண்டாகும் இயல்பான இரக்கம்; அன்பு = தொடர்பு உடையவர்களிட்த்து நாம் காட்டும் பாசம்; துறந்து = பிரிந்து; வயின் = இடம், ஏழாம் வேற்றுமை உருபு; உரவு = அறிவு, வலிமை; மடம் = அறியாமை.

உரை: தோழி!, அருளையும் அன்பையும் துறந்து, தம் துணைவியைப் பிரிந்து, பொருள் தேடும் பொருட்டு, சென்ற நம் தலைவர், அறிவுடையவராயின், அந்த ஆற்றலை உடைய அவர்  அறிவுடையவராகவே இருக்கட்டும். அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம், அறிவில்லாதவர்களாகவே இருப்போம்.

விளக்கம்: தன் காதலன் பொருள் தேடும் பொருட்டுத் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றதைத் தலைவி அறிவுடைய செயலாகக் கருதவில்லை. ஆகவே, வஞ்சப் புகழ்ச்சியாக, தன் காதலனை அறிவிற் சிறந்தவனாகக் கூறுகிறாள்.


இப்பாடலில், பாலைத்திணைக்குரிய உரிப்பொருளாகிய பிரிதலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் பாலைத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

19. மருதம் - தலைவன் கூற்று

19. மருதம் - தலைவன் கூற்று

பாடியவர்: பரணர்சங்க காலப் புலவர்களிலேயே மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர்பரணரால் பாடப்படுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில்பரணன் பாடினன்என்று ஒளவையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99).  பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 34 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், குறுந்தொகையில் 16 செய்யுட்களும், பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார்இவரால் பாடப்பட்டோர் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர்இவருடைய பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவைஇவர் கபிலரின் நண்பர்மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர். இவர் பதிற்றுப்பத்தில் கடல் பிறக்கோட்டிய வேல்குழு குட்டுவனைப் பாடியதற்கு, உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து சிலகாலம் வாழ்ந்து வந்தான். அவன் திரும்பி வந்தபொழுது, தலைவி அவன்மீது மிகுந்த கோபத்தோடு ஊடினாள். அவன்  தலைவிடம் தன் அன்பைத் தெரிவித்து அவளைத் தேற்றினான்.  ஆனால், அவள் பின்னும் தொடர்ந்து ஊடினாள்.  “இவள் தன் பழைய தன்மையிலிருந்து மாறி நம்மோடு உறவில்லாதவள் போல் இருக்கின்றாள்என்று தன் நெஞ்சை நோக்கித் தலைவன் வருந்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. 

அருஞ்சொற்பொருள்எவ்வி = ஒரு சிற்றரசன்; வறுந்தலை = வறிய தலை; புல்லென்று = பொலிவிழந்து; இனைதல் = வருந்துதல்; மதிமுன்னிலை அசைச் சொல்; மனை = வீடு; எல் = ஒளி; மௌவல் = முல்லை ; நாறுதல் = மணத்தல்; பல் = பல; இரு = கரிய.

உரை: வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் படர்ந்திருந்த முல்லைகொடியின் பூக்கள் மணக்கும் அடர்ந்த கரிய கூந்தலை உடைய  இவள் இனி நமக்கு என்ன உறவோ? ஆதலால், எவ்வி என்னும் வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணர்களின் தலைகள் பொன்னாலான பூக்கள் இல்லாமல் பொலிவிழந்து காணப்படுவதுபோல், நெஞ்சே, நீயும் இனி பொலிவிழந்து வருந்துவாயாக!

விளக்கம்: எவ்வி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநிலமன்னன். அவன் வேள் எவ்வி என்றும் அழைக்கப்பட்டான். அவன் பாணர்களுக்குப் பொன்னாலான பூக்களை அளித்து அவர்களை ஆதரித்து வந்ததாகத் தெரிகிறது. அவன் போரில் இறந்ததைக் கேட்ட புலவர் வெள்ளெருக்கிலையார், அவன் இறந்த செய்தி பொய்யாகட்டும் என்று விரும்புவதைப் புறநானூற்றுப் பாடல் 233—இல் காணலாம். வள்ளலாக விளங்கிய எவ்வி இறந்ததால், பாணர்கள் தங்கள் யாழை முறித்து எறிந்தனர் என்ற செய்தி அகநானூற்றுப் பாடல் 15-இல் காணப்படுகிறது.


இப்பாடலில், எவ்வி பாணர்களுக்குப் பொன்னாலான பூக்களை அளித்து அவர்களை ஆதரித்தது போல் , தலைவன் தலைவியோடு வாழ்ந்த காலத்தில், தலைவி அவனுடன் அன்போடும் அவனுக்கு ஆதரவாகவும் இருந்தாள் என்ற செய்தி உள்ளுறை உவமமாகக் கூறப்பட்டிருக்கிறது. இச்சிறிய பாடலில், ஒருவரலாற்றுக் குறிப்பையும், கருப்பொருளாகிய முல்லையையும் மருத்திணைக்குரிய ஊடலையும்  புலவர் இணைத்துக் கூறியிருப்பது இப்பாடலின் சிறப்பு