Monday, May 18, 2015

18. குறிஞ்சி - தோழி கூற்று

18. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகள் பாடல் 13-இல் உள்ளன.

பாடலின் பின்னணி: ஒருநாள் இரவு, தலைவன் தலைவியைக் காணவருகிறான். அவளோடு இருந்து, திரும்பிச் செல்லும் வழியில் தோழியைச் சந்திக்கிறான். தோழி, “தலைவியின் காதல் நோய் மிகவும் பெரிது. அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே, அவளை நீ விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.” என்று தலைவனிடம் கூறுகிறாள்.


வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. 

அருஞ்சொற்பொருள்: வேரல் = சிறு மூங்கில்; வேர் = மூலம்; கோள் = குலை; பல = பலா; சாரல் = மலைப்பக்கம்; செவ்வி = ஏற்ற சமயம், பருவம் ; மதிமுன்னிலை அசைச் சொல்; அறிந்திசினோர் = அறிந்தவர்; கோடு = மரக்கொம்பு; தூங்கல் = தாழ்தல், தணிதல்; தொங்குதல்; தவ = மிகுதி.

உரை: மலை நாடனே! உன் நாட்டில், சிறு மூங்கில்களாலாகிய வேலி உள்ள இடத்தில், வேரிலே பழக்குலைகளை உடைய பலா மரங்கள் செறிந்திருக்கின்றன. மலைப்பக்கத்தில் உள்ள பலாமரத்தின் சிறிய கொம்பில், பெரிய பழம் தொங்கியது போல, இத்தலைவியினது, உயிரானது மிகச் சிறியது; ஆனால், இவள் காமநோய் மிகப் பெரிது; அதை அறிந்தவர் யார்? உன்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. ஆகவே, அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பருவத்தை உடையவனாகுக! அதாவது, விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வாயாக!

விளக்கம்: இப்பாடலில் முதற் பொருளாக மலைப்பக்கமும், கருப்பொருளாக பலாவும் மூங்கிலும், உரிப்பொருளாக தலைவன் தலைவியின் புணர்தலும்  குறிப்பிடப்பட்டிருப்பதால் இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில் குறிஞ்சி நிலத்தில் காணப்படும் இயற்கைக் காட்சிகளோடு தலைவன் தலைவியின் காதலை புலவர் இயைத்துக் கூறுகிறார். தலைவனுடைய ஊரில், வேரில் பழுக்கும் வேர்ப்பலா மரங்கள் மூங்கில் வேலியுடன் பாதுகாப்பாக உள்ளன. அந்தப் பழங்கள் வேரில் பழுப்பதால், அவை பார்வைக்கு மறைவாகவும், கீழே விழுந்து உடைந்து சிதறும் வாய்ப்பு இல்லாதனவாகவும் உள்ளன. ஆனால், தலைவியின் ஊரில் மலைப்பக்கத்தில் உள்ள பலா மரங்களில் கொம்புகளில் பழுக்கும் பலா மரங்கள் உள்ளன. அந்த மரங்களுக்கு பாதுகாப்பாக வேலி இல்லை. அந்த மரத்துப் பழங்கள், கொம்புகளிலிருந்து கீழே விழுந்து உடைந்து சிதறக் கூடியவை. தலைவனின் காதல் வேலிக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வேர்ப்பலாவின் பழம் போன்றது. அவன் பாதுகாப்பானவன். அவன் செயல் யாருக்கும் தெரியாது. ஆனால், தலைவியின் காதலோ சிறிய கிளையில் இருந்து தொங்கும் பாதுகாப்பில்லாத பெரிய பலாப்பழத்தைப் போன்றது. பாதுகாப்பில்லாததால் அவளை வேறு ஒருவர் திருமணம் செய்துகொள்ளக் கூடும். பழத்தின் சுமை தாங்காமல் சிறிய கிளை முறிவதைப் போல் அவள் இறக்கவும் கூடும். முதிர்ந்த பழம் கீழே விழுந்து சிதறினால் அதன் மணம் பரவுவதைப் போல், அவளுடைய காதலைப் பற்றிய அலர் ( பழிச்சொல்) ஊரில் பரவத் தொடங்கலாம்இத்தனை கருத்துகளையும் உள்ளுறை உவமமாக இச்சிறிய பாடலில் புலவர் குறிப்பிட்டிருப்பது  அவருடைய கற்பனை வளத்திற்கும் புலமைக்கும் சிறந்த சான்று.

இப்பாடலில் ஒரு இறைச்சிப் பொருளும் உள்ளது. தலைவியின் காதல் கனிந்து முதிர்ந்த பழம் போன்றது என்றது அவள் தலைவனிடத்தில் கொண்ட அன்பின் முதிர்ச்சியை காட்டும் இறைச்சிப் பொருள்.   

.

2 comments: