Monday, May 18, 2015

16. பாலை - தோழி கூற்று

16. பாலை - தோழி கூற்று

பாடியவர்: சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ.   இவன் முடிசூடிய மூவேந்தருள் ஒருவனாகச் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் விளங்கினான்.  இவன் புறநானூற்றில் 282 - ஆம் பாடலையும், அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்களையும் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379), குறுந்தொகையில் பத்துப் பாடல்களையும் (16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398), நற்றிணையில் பத்துப் பாடல்களையும் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகையில் பாலைக்கலி முழுவதையும் (1-35) இயற்றிய பெரும்புலவன். இவன் பாலைத் திணைப் பாடல்களை இயற்றுவதில் மிகுந்த புலமையுடையவனாக இருந்தான்.  இவன் பாடல்கள் அனைத்தும் இலக்கிய நயமும், கருத்துச் செறிவும் உடையவை. புறநானூற்றின் 11 - ஆம் பாடலில் புலவர் பேய்மகள் இளவெயினி இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
பாடலின் பின்னணி: பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான்தன்னைவிட்டுப் பிரிந்த சென்ற தன் காதலன் தன்னை நினைத்துக் கொண்டிருப்பானோ அல்லது மறந்திருப்பானோ என்று தலைவி வருந்துகிறாள். “அவர் சென்ற வழியில் ஆண்பல்லி தன் துணையாகிய பெண்பல்லியை அழைப்பதைக் கேட்டவுடன் அவருக்கு உன் நினைவு வரும். அவர் விரைவில் மீண்டும் உன்னிடம் வருவார்.” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே. 

அருஞ்சொற்பொருள்: பொன் = இரும்பு; புனை =; பகழி = அம்பு ; செப்பஞ்செய்தல் = ஒழுங்குபடுத்துதல்; கொண்மார் = கொள்வார்; உகிர் = நகம் ; நுதி = நுனி; பயிர்தல் =அழைத்தல்; அங்கால்அம்+கால் = அழகிய அடிப்பக்கம்; இறத்தல் = கடத்தல்.

உரை: தோழி, பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர், இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை சுத்தம் செவதற்காக,  அதை நக நுனியால் புரட்டுவதால் உண்டாகிய ஒலியைப் போல ஒலி எழுப்பும், சிவந்த கால்களை உடைய ஆண்பல்லியானது, தன் துணையாகிய பெண்பல்லியை அழைக்கும் இடமாகிய, அழகிய அடியை உடைய கள்ளிச் செடிகளோடு கூடிய பாலை நிலத்தைக் கடந்து (பொருள் தேடுவதற்காகச்) சென்ற தலைவர், என்னை நினைக்க மாட்டாரோ?

விளக்கம்: ஆண்பல்லி தன் துணையாகிய பெண்பல்லியை அழைக்கும் பாலை நிலத்தில் செல்பவர் அது கேட்டுத் தன் காதலியை நினைவு கொள்வார் என்பது உள்ளுறை உவமம்.


இப்பாடலில், பாலை நிலத்திற்குரிய முதற்பொருளாகிய பாலை நிலமும் கருப்பொருளாகிய கள்ளியும் வேடர்களும் கு றிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் பாலைத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

No comments:

Post a Comment