Sunday, July 23, 2017

377. தலைவி கூற்று

377. தலைவி கூற்று

பாடியவர்: மோசிக் கொற்றனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியை மண்ந்துகொள்வதற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான்தலைவனின் பிரிவால் தலைவி உடல் மெலிந்து காணப்பட்டாள். தன் தோற்றத்தில் உள்ள மாற்றங்களைக் கண்டு, தனக்காகக் கவலைப்பட்ட தோழியை நோக்கித் தலைவி, “ என் உடல் மெலிந்தாலும், நான் தலைவனின் நல்லியில்புகளை எண்ணிப் பிரிவைப் பொறுத்துகொண்டிருக்கிறேன். நீ ஏன் இவ்வாறு வருந்துகிறாய்?” என்று வினவுகிறாள்.
மலரேர் உண்கண் மாணலந் தொலைய
வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்றா கின்றே தோழியாற் றலையே
அறிதற் கமையா நாடனொடு
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. 
கொண்டு கூட்டு: தோழி! அறிதற் கமையா நாடனொடு செய்து கொண்டது ஓர் சிறுநல் நட்பு, மலர்ஏர் உண்கண் மாண்நலம் தொலைய வளைஏர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்று ஆகின்று; ஆற்றலையே.

அருஞ்சொற்பொருள்: ஏர் = போன்ற; உண்கண் = மை தீட்டிய கண்; மாண் = சிறந்த; தொலைய = நீங்க; வளையேர் = வளை ஏர் = வலையல்கள் பொருந்திய; நலம் = அழகு; மாற்று = பரிகாரம்.


உரை: தோழி! நம்மால் முழுமையாக அறிந்துகொள்வதற்கு முடியாத இயல்பினை உடையவன் தலைவன். அவனோடு  நாம் செய்துகொண்டது ஒரு சிறிய நல்ல நட்பு. அந்த நட்பு,  பூவைப் போன்ற  என்  மையுண்ட கண்களின் சிறந்த அழகு நீங்க, வளையையுடைய அழகிய மெல்லியதோள் நெகிழ்ந்ததன் மேலும், அத்துன்பங்கள் தீர்தற்குரிய பரிகாரமாக உள்ளது. அது கருதியே, அவன் பிரிவால் தோன்றிய வருத்தத்தை நான் பொறுத்துக்கொண்டிருக்கிறேன்.  ஆனால், நீ என் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவளாக இருக்கின்றாயே!

376. தலைவன் கூற்று

376. தலைவன் கூற்று

பாடியவர்: படுமரத்து மோசிக்கொற்றனார்.
திணை: நெய்தல்.
கூற்று : பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரியக் கருதிய தலைவன், தலைவியின் நல்லியல்புகளை நினைத்துப் பிரிவதைத் தவிர்த்தான்.

மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியிற்
சூருடை அடுக்கத் தாரங் கடுப்ப
வேனி லானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்குவெயிற் பொதிந்த தாமரை
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே. 

கொண்டு கூட்டு: மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில் சூருடை அடுக்கத்து  ஆரம் கடுப்பவேனிலானே தண்ணியள். பனியே வாங்குகதிர் தொகுப்ப, கூம்பி, ஐயென
அலங்குவெயிற் பொதிந்த தாமரை உள்ளகத்து அன்ன சிறு வெம்மையள். 

அருஞ்சொற்பொருள்: துன்னரும் = நெருங்குதற்கரிய; சூர் = அச்சம் தரும் தெய்வம்; அடுக்கம் = மலைச்சாரல்; பொதி =பொதிய மலை; ஆரம் = சந்தனம்; கடுப்ப = போல; வேனிலானே = வேனிற்காலத்தில்; ஐ என = அழகாக; அலங்குதல் = அசைதல்.

உரை: நிலைபெற்ற உயிர்களால் முழுதும் அறிய முடியாத, நெருங்குவதற்கரிய பொதிய மலையில், தெய்வங்களையுடைய பக்கத்தில் வளர்ந்த,  சந்தனத்தைப் போல, வேனிற்காலத்தில், தலைவி குளிர்ச்சியை உடையவள்.  பனிக்காலத்தில், தலைவிபகலில் தான் பெற்ற கதிரவனின் கதிர்கள் தனக்குள் மறையுமாறு குவிந்து, அழகாக, அசைகின்ற வெயிலை, உள்ளே வைத்துக் கொண்டிருக்கின்ற தாமரை மலரின் உள்ளிடத்தைப் போல், சிறிதளவு வெப்பமுடையவள்.

சிறப்புக் குறிப்பு: கோடைக்காலத்தில் குளிர்ச்சியாகவும், பனிக்காலத்தில் சிறிது வெப்பமாகமகவும்  இருந்து, தலைவி  எப்பொழுதும் தழுவுவதற்கு  இனிமையானவளாகையால், தன்னால் அவளைப் பிரிந்து பொருள் தேடச் செல்ல இயலாது என்று தலைவன் நினைக்கிறான்.


375. தோழி கூற்று

375. தோழி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் இருபொழுதும் மறுத்து வரைவு கடாயது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண்பதற்கு இரவில் வந்து, அவள் வீட்டிற்கு வெளியே நிற்கிறான். “இராக் காவலர்கள் பறையை முழக்குவர். அதனால், இரவில் தலைவர் வராமல் இருப்பது நல்லதுஎன்று கூறி, விரைவில் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தோழி, தலைவனை  மறைமுகமாக வற்புறுத்துகிறாள்.

அம்ம வாழி தோழி இன்றவர்
வாரா ராயினோ நன்றே சாரற்
சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்
திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை
பானாள் யாமத்துங் கறங்கும்
யாமங் காவலர் அவியா மாறே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! சாரல் சிறுதினை விளைந்த வியன்கண் இரும் புனத்து, இரவு அரிவாரின் தொண்டகச் சிறுபறைபானாள் யாமத்தும் காவலர் அவியாமாறு கறங்கும்இன்று அவர் வாரார் ஆயின் நன்று

அருஞ்சொற்பொருள்: சாரல் = மலைப்பக்கம்; வியன்கண் = அகன்ற இடம்; இரும்புனம் = பெரிய தினைப்புனம்; அரிதல் = அறுவடை செய்தல்; தொண்டகம் = குறிஞ்சிப் பறை; பானாள் = நள்ளிரவு; யாமம் = நடு இரவு; கறங்குதல் = ஒலித்தல்; அவிதல் = ஒடுங்குதல் (உறங்குதல்).

உரை: தோழி! நீ வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! மலைப்பக்கத்தில், சிறிய தினை விளைந்த அகன்ற இடத்தையுடைய பெரிய கொல்லையில், இராக்காலத்தே தினைக்கதிரை அரிபவர்களைப்போல,  இராக் காவலர்கள் தூங்காமல் இருப்பதால், தொண்டகமாகிய சிறிய பறையை, நடு இரவிலும் அடிக்கின்றனர். இன்று, தலைவர் வராமல் இருப்பது நல்லதாகும்.


சிறப்புக் குறிப்பு: பெரிய தினைப்புனமாகையால், அது இரவிலும் பகலிலும் அறுவடை செய்யப்படுகிறதுதினை விளைந்தது என்று குறிப்பிடுவதால், இனி, தலைவி தினைப்புனம் காக்கச் செல்லமாட்டாள் என்பதும், அதனால் தலைவனைப் பகலில் சந்திக்க இயலாது என்பதும் தெரியவருகிறது. இரவில் ஊர்க்காவலர்கள் குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகப் பறையை முழங்குவதால், தலைவனை இரவில் வரவேண்டாம் என்று தோழி கூறுகிறாள். ஆகவே, இனி, தலைவி தலைவனைப் பகலிலும் சந்திக்கமுடியாது; இரவிலும் சந்திக்க முடியாது. அதனால், திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று தோழி குறிப்பால் உணர்த்துகிறாள்.  இரவில், அறுவடை செய்யும் பொழுது, கொடிய விலங்குகள் அணுகாதிருப்பதற்காகக் குறிஞ்சிநிலத்திற்குரிய தொண்டகப்பறையை குறிஞ்சிநில மக்கள் முழக்குவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது.

374. தோழி கூற்று

374. தோழி கூற்று

பாடியவர்: உறையூர்ப் பல்காயனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பெண்கேட்க வந்துள்ளான். தலைவியின் பெற்றோரும் உறவினர்களும் தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விப்பதற்குச் சம்மதித்தனர். அதை அறிந்த தோழி, “உன்  விருப்பப்படியே, உனக்கு உன் தலைவனோடு திருமணம் நடைபெறப்போகிறது. உன்னுடைய களவொழுக்கத்தைத் தக்க சமயத்தில் நான் வெளிப்படுத்தியதால் (அறத்தொடு நின்றதால்) இது நிகழ்ந்ததுஎன்று தலைவியிடம் கூறுகிறாள்.

எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே. 

கொண்டு கூட்டு: எந்தையும் யாயும் உணரக் காட்டிஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்பநன்றுபுரி கொள்கையின் முடங்கல் இறைய, தூங்கணங் குரீஇ நீடு இரும் பெண்ணைத் தொடுத்த கூடினும் மயங்கிய, மையல் ஊர் ஒன்றாகின்று

அருஞ்சொற்பொருள்: ஒளித்த செய்தி = களவொழுக்கம்; கிளத்தல் = விளக்கிக் கூறுதல்; கெழு = பொருந்திய; வெற்பு = மலை; வெற்பன் = குறிஞ்சி நிலத்தலைவன்; தலைவந்து இரப்ப = பெற்றோர்களிடம் நேரில் வந்து பெண் கேட்டல்; புரிதல் = செய்தல்; ஒன்றாகின்று = ஒன்றுபட்டது; முடங்கல் = வளைதல்; இறை = சிறகு; குரீஇ = குருவி; பெண்ணை = பனை; மையல் = மயக்கம்.

உரை:  நம் தந்தையும் தாயும்  உணரும்படி,  நாம் இதுகாறும் மறைத்திருந்த களவொழுக்கத்தை,  நான் விளக்கமாகக் கூறி வெளிப்படுத்தினேன். அதன் பிறகு, மலைகள் பொருந்திய குறிஞ்சி நிலத்தலைவன், நம் பெற்றோர்களிடம் வந்து உன்னைப் பெண் கேட்டான். நமது பெற்றோரின் நன்மையைச் செய்யும் கொள்கையினால், திருமணம் உறுதியாகியது வளைந்த  சிறகையுடைய தூக்கணங் குருவி, உயர்ந்த பெரிய பனைமரத்தில் கட்டியிருந்த கூட்டைக் காட்டிலும், பலவகையான மயக்கத்தை அடைந்திருந்த, இந்த மயக்கத்தையுடைய ஊர், நம்மோடு ஒன்றுபட்டது.


சிறப்புக் குறிப்பு: தூக்கணங் குருவி தன் கூட்டைப் பல குச்சிகளாலும் நாராலும் பின்னிப் பிணைத்து அமைத்திருக்கும். அந்தக் கூட்டின் அமைப்பைப் புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்கள், அதைப் புரிந்துகொள்ள முடியாமல் கலக்கமுறுவர். தலைவியின் களவொழுக்கத்தைப் பற்றிய விவரங்களைப் புரிந்துகொள்ள முடியாத ஊர்மக்கள், தூக்கணங் குருவியின் கூட்டின் அமைப்பைப் புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்களைவிட அதிகமாக மயங்கிப் பலவகையிலும்  கலக்கமுற்றனர் என்று தோழி கூறுகிறாள். அவ்வாறு மயங்கிய  ஊர்மக்கள், தலைவியின் திருமணத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டு தலைவியின் குடும்பத்தினரோடு ஒன்றுபட்டனர் என்றும் தோழி கூறுகிறாள்.

373. தோழி கூற்று

373. தோழி கூற்று
பாடியவர்: மதுரைக் கொல்லம் புல்லனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : அலர் மிக்கவழித் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றி ஊர்மகளிரின் பழிச்சொற்கள் அதிகரிக்கத் தொடங்கியதால் வருந்திய தலைவியை நோக்கித் தோழி, “ உனக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள நட்பு என்றும் அழியாததுஎன்று கூறுகிறாள்.

நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடெவன் உடைத்தோ தோழி நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே. 

கொண்டு கூட்டு: தோழி! நீடுமயிர்க் கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை, புடைத் தொடுபு  உடைஇ, பூநாறு பலவுக்கனி காந்தளம் சிறுகுடிக் கமழும் ஓங்குமலை நாடனொடு அமைந்த நம் தொடர்பு, நிலம் புடைபெயரினும், நீர் தீப்பிறழினும்இலங்கு திரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் கேடு எவன் உடைத்து?

அருஞ்சொற்பொருள்: பிறழ்தல் = நேர் எதிராக மாறுதல்; கௌவை = பழிச்சொற்கள்; கடும்பல் = கூரிய பற்கள்; ஊகம் = கருங்குரங்கு; கறை = கறுப்பு நிறம்; ஏறு = விலங்குகளின் ஆண் (இங்கு, ஆண்குரங்கைக் குரங்கைக் குறிக்கிறது); புடை = பக்கம்; தொடுபு = தோண்டி.

உரை: தோழி! நீண்ட மயிரையும், கூரிய பற்களையும், கரிய விரல்களையும் உடைய ஆண் கருங்குரங்கு, பலாப்பழத்தின் பக்கத்திலே தோண்டியதால்,  அந்தப் பலாப்பழம் உடைந்து, மலரின் மணத்தைப் போல்  மணம் வீசுகிறது. அந்த மணம், காந்தளையுடைய அழகிய சிறிய ஊரில் பரவுகிறது.  அத்தகைய சிற்றூரில், ஓங்கிய மலையையுடைய நாடனோடு,  பொருந்திய நமது நட்பானது,  உலகம் தலைகீழாக  மாறினாலும், நீரும் தீயும் தம் இயற்கையினின்றும் மாறினாலும்,  விளங்குகின்ற அலைகளையுடைய பெரிய கடலுக்கு எல்லை தோன்றினாலும்,  கொடிய வாயையுடைய மகளிரது பழிச்சொற்களுக்கு அஞ்சி, எவ்வாறு கெடுதல் உடையதாகும்?


சிறப்புக் குறிப்பு: ஊரில் உள்ள மகளிர் கூறும் பழிச்சொற்கள், கேட்பவரின்  நெஞ்சைச் சுடுவதால், அச்சொற்களைக் கூறியவர்களின் வாயைவெவ்வாய்என்று தோழி கூறுகிறாள். குரங்கு தோண்டியதால் உடைந்த பலப்பழத்தின் மணம் ஊரெங்கும் பரவியது என்பது, ஊராரின் அலரால் தலைவனுக்கும் தலைவிக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது. இது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

372. தோழி கூற்று

372. தோழி கூற்று 
பாடியவர்: விற்றூற்று மூதெயினனார்.
திணை: நெய்தல்.
கூற்று : இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்பத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண்பதற்காக, இரவில், தலைவியின் வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறான். தோழி, “ இவ்வூரில் அலர் பெருகியதுஎன்று கூறி, விரைவில் தலைவன் தலைவியை மணந்துகொள்வது இன்றியமையாதது என்று கருத்தை வலியுறுத்துகிறாள்.

பனைத்தலைக்
கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர்பதங் கொள்ளா வளவை
அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே. 

கொண்டு கூட்டு: பனைத்தலைக் கருக்குடை நெடுமடல், குருத்தொடு மாய,
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் கணங்கொள் சிமையம் அணங்கும் கானல்,
ஆழி தலை வீசிய அயிர்ச் சேற்று அருவிக் கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை புலர்பதம் கொள்ளா அளவைஇவ் அழுங்கல் ஊர் அலர் எழுந்தன்று

அருஞ்சொற்பொருள்: வளி = காற்று; குப்பை = குவியல்; சிமையம் = சிகரம்; அணங்கும் = வருத்தும்; கானல் = கடற்கரைச் சோலை; ஆழி = கடல்; அயிர் = நுண்மனல்; சேறு = எருமண்; கூழை = கூந்தல்; எக்கர் = மணல்மேடு; குழீஇய = குவிக்கப்பட்ட; பதுக்கை = குவியல்; புலர்பதம் = காயும் பதம்; அளவை = சமயம்; அழுங்கல் = ஆரவாரம்.

உரை: பனையின் உச்சியிலுள்ள, கருக்கையுடைய நீண்ட மட்டையானது குருத்தோடு மறையும்படி, கடுமையான காற்றால் குவிக்கப்பட்ட,  உயர்ந்த வெண்மையான  மணற்குவியல்கள், தொகுதியான சிகரங்களையுடையனவாய், தனித்திருப்பவரை வருத்துகின்ற கடற்கரையில், கடல் அலைகள் கருமணல் பொருந்திய சேற்றை, அருவிபோல் கொண்டுவந்து சேர்க்கும். கூந்தலுக்கு இட்டுத் தேய்த்துக் குளிக்குமாறு மணல் மேட்டில் கடல் அலைகள் குவித்த  கருமண் குவியல் உலர்ந்து காயும் பக்குவத்தை அடைவதற்குமுன்,  இந்த ஆரவாரத்தையுடைய ஊரில், அலர் எழுந்தது.


சிறப்புக் குறிப்பு: செய்யுளில் அளவுக்குமேல் வரும் அசையுஞ் சீரும் கூன் எனப்படும். இச்செய்யுளில், பனைத்தலை என்பது கூன். அதனால், அது செய்யுளின் முதலடிக்கு முன்னே உள்ளது. பதுக்கை புலர்பதம் கொள்ளா அளவை அலர் எழுந்தன்று என்றது, தலைவன் வந்துசென்ற சுவடு மறைவதற்குள் அலர் எழுந்தது என்பதைக் குறிக்கிறது. சேறு என்றது கூந்தலிலுள்ள எண்ணெய்ப்பசை, சிக்கு முதலியன போகும் பொருட்டுப் பெண்கள் பழங்காலத்தில் தம் தலையில் தேய்த்துகொள்ளும் எருமண்னைக் குறிக்கிறது.

371. தலைவி கூற்று

371. தலைவி கூற்று
பாடியவர்: உறையூர் முதுகூற்றனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப்  பிரிந்து சென்றிருக்கிறான். அவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் உடல் மெலிந்து, பசலையுற்ற தலைவியை நோக்கி, “ நீ பொறுமையாக இருக்க வேண்டும்என்று கூறிய தோழிக்குத் தலைவியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும்
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழியது காமமோ பெரிதே.

கொண்டு கூட்டு: தோழி! மைபடு சிலம்பின் ஐவனம் வித்திஅருவியின் விளைக்கும் நாடனொடுகைவளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் மருவேன். அது காமமோ பெரிது.

அருஞ்சொற்பொருள்: பசப்பு ஊர்தல் = உடல் முழுதும் நிறம் குன்றுதல்; மை = மேகம் (இங்கு, கருமேகத்தைக் குறிக்கிறது.); சிலம்பு = மலை; ஐவனம் = மலைநெல்; மருவுதல் = பெறுதல், அடைதல்.

உரை: தோழி! கரிய மேகங்கள் வந்து தங்கும் மலைப்பக்கத்தில், மலைநெல்லை விதைத்து, அருவியின் நீரால் அவற்றை விளைவிக்கின்ற நாட்டையுடைய தலைவனின் பிரிவால், என்கைகளில் உள்ள வளைகள் நெகிழ்வதையும்,  உடம்பில் பசலை பரவுவதையும் அடையாமல் நான் பாதுகாத்துக்கொள்வேன். ஆயினும், அக்காமம் மிகவும் பெரிதாக உள்ளது.

சிறப்புக் குறிப்பு: தலைவன் வரும்வரை நீ பொறுத்திருக்க வேண்டும் என்று கூறிய தோழியை நோக்கித் தலைவி, “நான் பொறுத்துகொண்டு இருக்கத்தான் விரும்புகிறேன். இருந்தாலும், என் உடல் மெலிந்து பசலையுற்றது. இந்த வேறுபாடுகள் தலைவனின் பிரிவால் உண்டாகவில்லை. என் காமம் பெரிதாகையால் இவ்வேறுபாடுகள் நிகழ்ந்தனஎன்று கூறுகிறாள்.


மைபடு சிலம்புஎன்றது மேகங்கள் தாழ்ந்து மழை பெய்யும் மலை என்பதைக் குறிக்கிறது. மேகம் மழை பொழியும் என்பதை எதிர்பார்த்து ஐவனத்தை விதைத்தனர். அவர்கள் எதிர்பார்த்ததைப் போல் மழைபொழிந்து, அருவியில் நீர் பெருகி, ஐவனம் விளைந்தது. மேகம் மழை பொழியும் என்ற உறுதியைப் போல், பின்னர் நலம் விளையும் என்ற உறுதியால் தலைவியின் காமம் தோன்றியது என்பது குறிப்பு.

370. பரத்தை கூற்று

370. பரத்தை கூற்று

பாடியவர்: வில்லக விரலினார்.
திணை: . மருதம்.
கூற்று : கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் (பி-ம். புறத்துரைத்தாள்)என்பது கேட்டுப் பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பச்சொல்லியது.
கூற்று விளக்கம்: பரத்தை தலைவனை விடாமல் தன்னோடு இருத்திக் கொண்டாள் என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை, ”தலைவன் என்னிடம் வருவதும் வராமல் இருப்பதும் அவன் விருப்பத்தைப் பொறுத்ததுஎன்று தலைவியின் தோழியர்களுக்குக் கேட்கும்படி கூறுகிறாள்.

பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே. 

கொண்டு கூட்டு: பொய்கை ஆம்பல் அணி நிறம் கொழுமுகை வண்டு வாய் திறக்கும் தண்துறை ஊரனொடு இருப்பின் இரு மருங்கினம். கிடப்பின் வில்லக விரலின் பொருந்தி அவன் நல் அகம் சேரின் ஒரு மருங்கினம். 

அருஞ்சொற்பொருள்: பொய்கை = நீர்நிலை; ஆம்பல் = அல்லி; கொழுமுகை = மலரும் பருவத்தில் உள்ள அரும்பு; ஊரன் = மருத நிலத்தலைவன். மருங்கு = உடல்; கிடப்பின் = படுத்திருந்தால்; அகம் = மார்பு.

உரை:  நீர்நிலையில் உள்ள ஆம்பலின், அழகிய நிறத்தையுடைய, மலரும் பருவத்தில் உள்ள அரும்புகளில் வண்டுகள் மொய்த்து அவற்றின் இதழ்களைத் திறக்கும் குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய மருத நிலத்தலைவனோடு நாம் இருந்தால்,  இரண்டு உடல்களை உடையவர்களாக இருப்போம். அவன் மார்பைத் தழுவிக்கொண்டு படுத்து உறங்கினால்,  வில்லை இறுகப் பிடித்த விரல்களைப் போல் ஒன்றுசேர்ந்து ஓர் உடலை உடையவர்களாவோம்.

சிறப்புக் குறிப்பு: ஆம்பலின் அரும்புகளின் அழகாலும் செழிப்பாலும் ஈர்க்கப்பட்டு, தக்க சமயத்தில் தானாகவே வந்து மொய்த்து, வண்டுகள் அவ்வரும்புகளை வாய்திறக்கச் செய்வதைப் போல் தலைவன் தன் அழகையும் இயல்பையும் விரும்பித் தன்னிடம் வந்தான் என்று பரத்தை கூறுகிறாள். இது, இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமமாகும்.

Tuesday, July 11, 2017

369. தோழி கூற்று

369. தோழி கூற்று
பாடியவர்: குடவாயிற் கீரத்தனார்.
திணை: பாலை.
கூற்று : தோழி, கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.
கூற்று விளக்கம்: தலைன் தலைவியோடு உடன்போகச் சம்மதித்தான் என்பதை அறிந்த தோழி, “தலைவனுடன் செல்வாயாகஎன்று தலைவியிடம் கூறுகிறாள்.

அத்த வாகை அமலை வானெற்
றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக்
கோடை தூக்குங் கானம்
செல்வாந் தோழி நல்கினர் நமரே. 

கொண்டு கூட்டு: தோழி நமர் நல்கினர் அத்த வாகை அமலை வால் நெற்று அரிசி அரி ஆர் சிலம்பின் ஆர்ப்பகோடை தூக்கும் கானம் செல்வாம். 

அருஞ்சொற்பொருள்: நமர் = நம் தலைவர்; நல்குதல் = அன்பு காட்டுதல், அருள் செய்தல்; அத்தம் = பாலைவழி; வாகை = ஒருவகை மரம்; அமலை = ஒலி; வால் = வெண்மை; அரி = பரல்; அரிசி = உள்விதை; ஆர்ப்ப = ஒலிக்க; தூக்கும் = காற்று அலைக்கும்; கானம் = காடு.


உரை: தோழி! நம் தலைவர், நம்மீது அருள் செய்தார் (உடன்போகச் சம்மதித்தார்). ஆதலின்,  கடத்தற்கரிய பாலைவழியில் உள்ள வாகைமரத்தின்,  வெண்ணிறமான  நெற்றுக்கள், தம் உள்ளிருக்கும் விதைகளோடு, பரல்களை உள்ளீடாகக் கொண்ட  சிலம்பைப் போல் ஒலிக்குமாறு, மேல்காற்று அலைக்கின்ற, காட்டுவழியில் செல்வோமாக.

368. தலைவி கூற்று

368.  தலைவி கூற்று
பாடியவர்: நக்கீரனார்.
திணை: மருதம்.
கூற்று : வரைவுமலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குரிய முயற்சிகள் விரைவாக நடைபெறுகின்றன என்ற செய்தியைத் தோழி வழியாகக் கேள்விப்பட்ட  தலைவிஇதுவரை நான் என் அழகை இழந்து துன்புற்றேன். இனி, இடையீடின்றித் தலைவனோடு இன்பமாக இருக்கப் போகிறேன்என்று கூறுகிறாள்.

மெல்லிய லோயே மெல்லிய லோயே
நன்னாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற்
சொல்ல கிற்றா மெல்லிய லோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதில் நிலைமை முயங்குகம் பலவே. 

கொண்டு கூட்டு: மெல்லியலோயே! மெல்லியலோயேநல்நாள் நீத்த பழிதீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்  சொல்லகிற்றா? மெல்லியலோயே! சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கு  நாள்இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து  திண்கரைப் பெருமரம் போலத் தீதுஇல் நிலைமை பல முயங்குகம்.

அருஞ்சொற்பொருள்: மெல்லியலோய் = மெல்லிய இயல்பை உடையவளே; நீத்த = நீங்கிய; மாமை = அழகு; வன்பு = வலிமை; சொல்லகிற்றா = சொல்ல இயலாத; இடைப்படா = இடைவிடாமல்; நளிதல் = செறிதல்; நீத்தம் = வெள்ளம்.

உரை:  மெல்லிய இயல்பை உடையவளேமெல்லிய இயல்பை உடையவளே! நல்ல நாளில் நம்மை நீங்கிய நமது குற்றமற்ற அழகின் இயல்பை, நம் மனவலிமையால் பொறுத்துக்கொண்டிருந்தோமே அல்லாமல், அங்ஙனம் நீங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைச் சொற்களால், சொல்ல இயலாத நிலையில் இருந்தோம். சிறியோரும் பெரியோரும் வாழ்கின்ற ஊரில், நாள்தோறும் இடைவிடாமல் மிகுந்த வெள்ளம் வரும் கரையில்  உள்ள பெரிய மரத்தைப் போல,  தீங்கில்லாத நிலையிலிருந்து, பலமுறை தலைவரைத் தழுவுவோமாக.


சிறப்புக் குறிப்பு: நல் நாள்என்றது, தலைவனைக் கண்டு, கூடி மகிழ்ந்த நாளைக் குறிக்கிறது.  தன் அழகு மீண்டும் தன்னிடம் வந்து சேரும் என்பதால்  பழிதீர் மாமை என்றாள்.  வெள்ளத்தின் கரையிலுள்ள மரம் நீரால் குறைவின்றி வளம் பெறுவது போலத் தலைவனோடு இடையீடின்றி வாழும் வாழ்க்கையால் தான் இழந்த அழகைத் தலைவி பெறப்போகிறாள் என்பது குறிப்பு. தலைவியின் இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் வெள்ளம் பெருகிவரும் கரையில் உள்ள பெரியமரம் உவமை.  ”தீதில் நிலைமைஎன்றது அலர், மாமையை இழத்தல் முதலிய, தீங்குகள் இல்லாத நிலைமையைக் குறிக்கிறது.

367. தோழி கூற்று

367. தோழி கூற்று
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்.
திணை: மருதம்.
கூற்று -1: வரைவுணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது. (கழி உவகைமிகுந்த மகிழ்ச்சி; மீதூராமைமிகவும் அதிகமாகதபடி)
கூற்று -2: வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி, ஆற்றும் வகையால் ஆற்றுவித்தது.
கூற்று விளக்கம் - 1: தலைவன் திருமணம் செய்துகொள்ளப் போகிறான் என்ற செய்தியைத் தலைவிக்கு உணர்த்தும் தோழி, தலைவியின் மகிழ்ச்சி மிகவும் அதிகாமல் இருக்கும் பொருட்டு, “தலைவர் அன்பு காட்டாவிட்டாலும்  அவர் மலையைக் கண்டு ஆற்றி இருப்பாயாகஎன்று கூறுகிறாள்.
கூற்று விளக்கம் – 2: தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துவதால், வருந்திய தலைவியை  ஆற்றுவிப்பதற்காக, “தலைவர் அன்பு காட்டாவிட்டாலும்  அவர் மலையைக் கண்டு ஆற்றி இருப்பாயாகஎன்று தோழி கூறியது.

கொடியோர் நல்கா ராயினும் யாழநின்
தொடிவிளங் கிறைய தோள்கவின் பெறீஇயர்
உவக்காண் தோழி அவ்வந் திசினே
தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்
பூச லாயம் புகன்றிழி அருவியின்
மண்ணுறு மணியின் தோன்றும்
தண்ணறுந் துறுகல் ஓங்கிய மலையே. 

கொண்டு கூட்டு: தோழி! தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்  பூசல் ஆயம் புகன்று இழி அருவியின் மண்ணுறு மணியின் தோன்றும்தண் நறும்  துறுகல் ஓங்கிய மலை கொடியோர் நல்காராயினும் நின் தொடிவிளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்அவ்வந்திசின்உவக்காண்!

அருஞ்சொற்பொருள்: நல்குதல் = அன்போடு இருத்தல் ; யாழமுன்னிலை அசைச்சொல்; இறை = முன் கை, மணிக்கட்டு; கவின் = அழகு; உவக்காண் = அதோ பார்; அவ் வந்திசின் = அங்கே அருக; தொய்வு = நெகிழ்ச்சி; தொய்யல் மாமழை = நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழை; பூசல் = ஆரவாரம்; ஆயம் = மகளிர் கூட்டம்; புகன்று = விரும்பி; மண்ணுதல் = கழுவுதல்; துறுகல் = பாறை (குண்டுக்கல்).

உரை: தோழி! நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழை, பெய்யத் தொடங்கிவிட்டதுஅத்தலைவருடைய நாட்டிலுள்ள, ஆரவாரத்தையுடைய மகளிர் கூட்டம், விரும்பி நீராடுவதற்குப் புகுகின்ற அருவியினால் கழுவப்பட்ட நீல மணியைப் போலத் தோன்றுகின்ற, குளிர்ந்த, மணமுள்ள குண்டுக்கற்கள் பொருந்திய  உயர்ந்த மலையை, கொடுமையையுடைய தலைவர் உன்னிடம் அன்பு காட்டாவிட்டலும், வளையல்கள் விளங்கும் முன்கைகளையுடைய உன்தோள்கள் அழகு பெறும்வண்ணம், அங்கே வந்து  பார்ப்பாயாக!


சிறப்புக் குறிப்பு: திருமணத்தற்குக் காலம் நீட்டிப்பதால், அவர் அன்பு காட்டாவிட்டாலும் அவரது மலையைப் பார்த்து ஆற்றுவாயாகஎன்று தோழி கூறுவது பாடலின் கருத்துக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது, இரண்டாவது கூற்று, பாடலுக்குப் பொருத்தமானதாக உள்ளது

366. தோழி கூற்று

366. தோழி கூற்று

பாடியவர்: பேரிசாத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,“இவ்வேறுபாடு எற்றினான் ஆயது?” என்று செவிலி வினாவத் தோழி கூறியது. (எற்றினான் = எதனால்)
கூற்று விளக்கம்: தலைவியின் பெற்றோர்கள் அவளைக் காவலில் வைத்தார்கள். அதனால், அவளுக்குத் தலைவனைக் காணும் வாய்ப்பில்லை. தலைவனைக் காண இயலாததால், தலைவி மனம் வருந்தி, உடல் மெலிந்து காணப்படுகிறாள். அவள் தோற்றத்தில் மாற்றங்களைக் கண்ட செவிலித்தாய், தோழியை நோக்கி, “உன் தோழிக்கு என்ன ஆயிற்று? அவள் ஏன் இப்படிக் கவலையோடு காட்சி அளிக்கிறாள்?” என்று கேட்கிறாள். செவிலித் தாயின் வினாவுக்குத் தோழியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற்
சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ
வேறியான் கூறவும் அமையாள் அதன்தலைப்
பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த
வள்ளிதழ் நீலம் நோக்கி உள்ளகை
பழுத கண்ண ளாகிப்
பழுதன் றம்மவிவ் வாயிழை துணிவே. 

கொண்டு கூட்டு: பைங்கண் மாச்சுனைப் பல்பிணி அவிழ்ந்த  வள்ளிதழ் நீலம் நோக்கி, இவ் ஆயிழை உள் அகைபு  அழுத கண்ணள் ஆகி வேறு யான் கூறவும் அமையாள். அதன்தலை அவர் வயின்  துணிவு  பால் வரைந்து அமைத்தல் அல்லது சால்பு அளந்து அறிதற்கு யாம் யாரோ? பழுது அன்று. அம்ம!

அருஞ்சொற்பொருள்: பால் = ஊழ்வினை; சால்பு = தகுதி; அதன்தலை = அதற்கு மேலும்; பைங்கண் = பசுமையான இடம்; மா =பெரிய; சுனை = நீர்நிலை; அகைபு = வருந்தி; ஆயிழை = தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவள்.

உரை: பசுமையான இடத்தையுடைய பெரிய நீர்நிலையில் பல கட்டு அவிழ்ந்த, வளமான இதழ்களையுடைய நீலமலர் ஒன்றைப் பார்த்து, (அதைப் பறிக்க முடியாததால்),  தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த இத்தலைவி, நெஞ்சுள்ளே வருந்தி, அழுத கண்களோடு இருந்தாள்.  நான் வேறு ஒரு கருத்தைக் (இப் பூவைப் பறிக்க முடியாவிட்டால் வெறொரு பூவைப் பறித்துக்கொள்ளலாம் என்று) கூறவும் அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு, அங்கு வந்த ஒரு ஆண்மகனிடம் தனக்கு உதவுமாறு கேட்கத் துணிந்தாள். பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இது ஊழ்வினையினாலே வரையறுத்து முடிவு செய்யப்பட்டதே அன்றி, அத்தலைவரின் தகுதியை அளவிடுவதற்கு நாம் யார்? இந்தக் காதலில் குற்றம் ஒன்றும் இல்லை. நான் கூறுவதைக் கேட்பாயாக!


சிறப்புக் குறிப்பு: ”ஒருநாள், தலைவி அவள் ஒரு நீர்நிலையில் உள்ள பூவைப் பறிக்க விரும்பினாள். ஆனால், நீரில் இறங்கி அவளால் அந்தப் பூவைப் பறிக்க முடியவில்லை. அப்பொழுது, அங்கு வந்த ஆண்மகன் ஒருவன், அவளுக்கு அந்தப் பூவைப் பறித்துக் கொடுத்தான். அதுமுதல், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது, தன் காதலனைக் காணா முடியாமல் காவலில் வைக்கப்பட்டதால், அவள் வருத்தத்தோடு, உடல் மெலிந்து காணப்படுகிறாள்என்று விளக்கம் அளித்துத் தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி செவிலித்தாய்க்குத் தெரியப்படுத்தினாள் (அறத்தொடு நின்றாள்).  இவ்வாறு, ஊழ்வினையால், தலைவன் தலைவியைச் சந்தித்து, அவளுக்குப்   பூவைப் பறித்துக் கொடுத்து, அவர்கள் ஒருவரை காதலிக்க ஆரம்பிப்பது, “பூத்தரு புணர்ச்சிஎன்று அழைக்கப்படுகிறது

365. தோழி கூற்று

365. தோழி கூற்று
பாடியவர்: மதுரை நல்வெள்ளியார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?” என்று வினாய கிழவற்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகத் தலைவன் பொருள் தேடுவதற்குச் செல்ல விரும்புகிறான். நான் பொருளோடு திரும்பிவந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்வரை அவளால் என் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருக்க முடியுமா?” என்று கேட்ட தலைவனை நோக்கித் தோழி, “அவளால் அதுவரை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாதுஎன்றாள்.

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே. 

கொண்டு கூட்டு: துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவிதன்ணென் முரசின் இமிழிசை காட்டும்மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்கல் நாட ! நீ நயந்தோள் கண், கோடுஈர் இலங்குவளை நெகிழ,  நாளும் பாடுஇல கலிழ்ந்து, பனி ஆனா.

அருஞ்சொற்பொருள்: கோடு = சங்கு ; ஈர்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; பாடுஇல= கண்படுதல் இல்லாமல் ( உறங்காமல்); aஅனா = நீங்கா; கலிழ்தல் = அழுதல்; துன்னரும் = நெருங்குதற்கரிய; வரை = மலை; இமிழ்தல் = ஒலித்தல்; மருங்கு = பக்கம்; நாடன் = குறிஞ்சி நிலத்தலைவன்; நயந்தோள் = விரும்பப்பட்டவள்.


உரை: நெருங்குதற்கரிய நெடிய மலையிலிருந்து ததும்பி  வழியும் அருவியானது, தண் என்ற ஒலியையுடைய முரசைப்போல,  ஒலிக்கின்ற இசையை வெளிப்படுத்தும் பக்கத்தில்,  பலாமரங்கள் உள்ள, பெரிய மலையையுடைய குறிஞ்சி நிலத்தலைவனே! உன்னால் விரும்பப்பட்ட தலைவியின் கண்கள், சங்குகளை அறுத்துச் செய்த, விளங்குகின்ற வளையல்கள் நெகிழ,  நாள்தோறும் உறக்கம் இல்லாதனவாகி, அழுவதால், கண்ணீர்த் துளிகள் நீங்காமல் இருக்கும்.